×

‘வசிஷ்டனே புனைந்தான் மௌலி’

இறையற்ற இதிகாசமான ராமாயணம் வடமொழி, தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பட்டொளி வீசி பரிணமிக்கின்றது.வெவ்வேறு மொழிகளில் இராமன் கதை விவரிக்கப்பட்டிருந்தாலும், கவிச்சக்ரவர்த்தியான கம்பன் பாடிய செந்தமிழ் `ராம’ கதையே முதலிடம் பிடித்து முந்துகின்றது.

அம்புவியில் ராமகதை
ஆயிரம்பேர் சொன்னாலும்
கம்பனது காவியம்போல்
காணக் கிடைக்காது!
என்று பாடிப் பரவுகின்றனர் கவிஞர் பெருமக்கள்.

வள்ளுவன், இளங்கோ, கம்பன் என்று கால வரிசைப்படி பலர் நம் செம்மொழிச் செந்தமிழுக்கு அணி சேர்த்திருந்தாலும்,
கம்பனையே முன்னணியில் முகம் காட்ட வைக்கின்றார் பாரதியார்!

‘கல்வி சிறந்த தமிழ் நாடு! - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு!
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை!
உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!
கம்பன் இசைத்த கவியெலாம் நான்!

மேற்கண்டவாறு மிதமிஞ்சிய ஆனந்தக்
களிப்பில் கம்பரசத்தைக் குடித்தவாறு ஆனந்தக் கூத்தாடுகிறார், அமரகவி பாரதி!
வெயிற்கேற்ற நிழல் உண்டு! வீசு தென்றல் காற்றுண்டு!
கையில் கம்பன் கவி உண்டு! கலசம் நிறைய அமுதுண்டு
- என்கின்றார் கவிமணி தேசிக விநாயகம்.

கம்ப சூத்திரம், கம்ப சித்திரம், கம்ப நாடகம் என்றெல்லாம் கம்பன் காவியராமாயணம் புகழ்ப்பட மொழியப்படுகிறது. பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலாக பரந்தாமனின் அவதாரக்கத்தையைக் கம்ப நாட்டாழ்வார் காவியமாக வடித்துள்ளார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோல் முடிமணியாக விளங்கும் முடிசூட்டு விழாப் பாடல் ஒன்றின் இலக்கியச்
சுவையை இக்கட்டுரையில் நாம் காண்போம்.

‘ஒன்றை நினைக்கின் அது ஒழித்திட்டு ஒன்றாகும்’ என்று ஒளவையார் பாடுகின்றார். தசரதன் விரும்பிய நாளில் ராமபிரானின் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதானே! குறித்த நாளிலிருந்து பதினான்கு ஆண்டுகள் தள்ளியே முடிசூட்டு விழா நடைபெற்றது.

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச
விதைசெறி குழலி ஓங்க

வெண்ணெய் மன் சடையன் தங்கள்
மரபுனோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி!

கம்பன் விழாக்கள், பட்டிமன்றங்கள் மூல மாதப் பலரும் அறிந்த பிரபலமான இப்பாடலில் பட்டாபிஷேகத்தில் யார் பங்கேற்றனர்? என்னென்ன செயல்களை மேற்கொண்டனர் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரியணையில் ராஜா ராமனாக மகுடம் தரிக்கப்போகிறான் காவியநாயகன் ராமபிரான்!

ஆகவே, ராமநாமமே உயிர் மூச்சாகக் கொண்ட அனுமன் அரியணையை அன்பு மேலிடத் தாங்குகிறான். வாலி கையடையாகத் தந்த வாலிமகன் அங்கதன் உடைவாளை ஏந்தியபடி சிங்கா தளத்தின் முன்பு காவலாக நிற்கின்றான். இலக்குவன், சத்ருகுணன் பெண்சாமரம் வீசிய படி பட்டாபிஷேக வைபவத்தில் பங்கேற்கின்றனர்.

பெண்கொற்றக் குடையை ஏந்தி நிழல் பரப்பினான் பரதன்.
இராமபிரானுக்கு அருகில் பெருமிதம் பொங்க அமர்ந்துகொண்டிருந்தான்
நறுமணக் கூந்தல் முடித்த சீமாட்டி சீதாதேவி குலகுருவான வசிஷ்ட முனிவர் மணி மகுடம் சூட்டினார்.

மேற்சொன்ன பாடலில் அனுமன் அங்கதன், பரதன், இலக்குவன், சத்ருக்குனன், சீதாதேவி, வசிஷ்ட முனிவர் என அனைவர் பங்கேற்பும் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் மிக முக்கியமான ராமன் பெயர் குறிப்பிடப் படவில்லை. மாப்பிள்ளையை விட்டுவிட்டு மணவிழாக் கோலம் நிகழ்வதுபோல அனைவரையும் பெயர் மறக்காமல் கூறி முக்கியமான ராமபிரான் பெயரையே கம்பர் மறந்து விட்டாரே என்கின்றனர் பலர்.

‘கம்பன் ஏமாந்தான்’ என்று பாடமுடியுமா என்ன?
தகுந்த ஒரு காரணம் கருதியே இப்பாடலில் தெரிந்தும் இராமபிரான் பெயரைத் தெரிவிக்க மறுத்திருக்கிறார் கம்பர் என்கின்றனர் காவிய விரிவுரையாளர்கள்.
விரிவுரையாளர்களின் விளக்கத்தைப் பார்க்கலாமா? செல்வந்தர் ஒருவரின் கல்யாண விருந்தில் என்னென்ன பரிமாறப்பட்டன என்று ஒருவர் விவரித்தால் பாயசம், பருப்பு, வடை, அவியல், பாதாம் அல்வா, உருளை வறுவல் என ஒரு பெரிய பட்டியலையே ஒப்பிப்பார். ஆனால் மிக முக்கியமான சாதத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார். ஏனென்றால் அன்னம் இருந்தால்தான் விருந்தே நடைபெறும். அதுபோல் அரியணை அமர்வதால்தானே மற்றவரின் செயல்கள் நடைபெற்றன.

எனவே, இன்றியமையாமை கருதித்தானே பெறப்படும் என்றும் இலக்கணம் கருதி ராமர் பெயரைக் கம்பர் குறிப்பிடவில்லை. இரண்டாவது காரணம் ராமர் பட்டாபிஷேகம் நளை என்று அறிவித்ததால்தானே கூனியால் கலகம் மூண்டது. எனவே எச்சரிக்கையாக ‘ராமர்’ பெயரை விட்டு விட்டார் கம்பர்.மூன்றாவது காரணம் ‘அரியணை அனுமன்தாங்க’ என்னும் போதே ‘அமர்பவர் ராமபிரான்தான்’ என்பது உறுதியாகிவிடுகின்றதே. மூன்று காரணங்களும் ஏற்கக்கூடியதே என்றாலும் முக்கியமான காரணத்தை காவிய ஆசிரியர் கம்பர் பின்னொரு பாடலில் புலப்படுத்துகிறார்.

மூவுலகத்தினரும் மகிழ்ந்தார்களாம் ராமருக்கு மகுடம் சூட்டப்பெற்றபோது! மகிழ்ந்தது மட்டுமல்ல. தம் ஒவ்வொருவர் தலையிலும் ஒளி மிகுந்த அம் மகுடம் விளங்குவதாகவே உணர்ந்தனராம். ஆகவே ‘ராமன்’ என்ற தனி ஒரு மன்னனுக்கு மகுடாபிஷேகம் நடக்கவில்லை. மக்களாட்சி தொடங்கிவிட்டது.

ராமராஜ்யம் மலர்ந்துவிட்டது என்பதைக் குறிக்கவே ‘வசிஷ்டனே புனைந்தான் மௌலி’ என்பதோடு கம்பர் நிறுத்திக்கொண்டார்.
தனி ஒரு பெயரைத் தவிர்த்ததின் காரணம் அதுவே எனப் புரிந்துகொள்ள உதவும் பாடல் பின்வருமாறு கம்பரால் பாடப் பெறுகிறது.

‘சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திருநகர் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை
ஒத்த மூஉலகத்தோர்க்கும் உவகையில் உறுதி உன்னின்
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஏத்தது அத்தாம மோலி!

மணிமகுடம் மூவுலகத்தினர் தலை மீதும் மின்னுவதால் ராமர் பெயரைக் காரணம் கருதி சொல்லாமல் விடுத்தார்கவியரசர் கம்பர் எனப் புரிந்துகொண்டு கம்பரை வாழ்த்துவோம்! தன்னிகரற்ற அவர் தமிழ்ப் புலமைக்குத் தலைவணங்குவோம்!

‘பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளி வைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : Vasishtane ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?