சுபகிருது ஆண்டிலாவது உலகம் சுபநிலைக்குத் திரும்புமா?

2. தெளிவு பெறுஓம்

?சுபகிருது ஆண்டிலாவது உலகம் சுபநிலைக்குத் திரும்புமா?

- ஆர். விநாயகராமன்,திசையன்விளை.

நிச்சயமாகத் திரும்பும். சுபகிருது என்ற வார்த்தைக்கே நன்மையை விளைவிக்கக் கூடிய என்றுதான் பொருள். அத்துடன், இந்த வருடத்திற்கான வெண்பா பாடல் ஆனது எந்த தீங்கும் ஏற்படாமல் நாட்டு மக்கள் அனைவரும் சிறப்புற்று வாழ்வார்கள் என்ற கருத்தினை வெளிப்படுத்துகிறது. சுபகிருது ஆண்டிற்கான கிரகநிலையும் இதையே உறுதிசெய்வதால் உலகம்

சுபநிலைக்குத் திரும்பும் என்பது நிச்சயம்.

?திருமணத்திற்கு முன்பே பெண்கள் பொட்டு வைத்துக்கொண்டும், பூ வைத்துக்கொண்டும் இருந்தார்கள். கலர்புடவை கட்டினார்கள். ஆனால், கணவன் இறந்த பிறகு அதை அகற்றுவது எந்த விதத்தில் நியாயம்?

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

விவாதத்திற்கு உரிய வினாவினை எழுப்பியிருக்கிறீர்கள். பூவும், பொட்டும் கணவனுக்கு உரியது, கணவன் உயிருடன் இருக்கும் பெண்கள் மட்டுமே இவற்றை சூடிக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டால், திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் இவற்றை அணியக்கூடாதா என்ற கேள்வி எழும். திருமணம் ஆகாமல், காலமெல்லாம் கன்னியாக வாழும் பெண்கள் பூவையும், பொட்டையும் வைத்துக்கொள்ளலாம் எனும்போது, இந்த செயலுக்குள் கணவன் எங்கிருந்து உள்நுழைந்தான் என்பதே உங்கள் கேள்வி. அதே போல் விவாகரத்து ஆன பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் கூட பூவையும், பொட்டையும் வைத்துக் கொள்கிறார்கள்.

ஆக, கணவனுக்கும் பெண்கள் பூ மற்றும் பொட்டு வைத்துக்கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. திருமணம் ஆன பெண்கள் தனது நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதோடு கூடுதலாக நெற்றியின் வகிட்டிலும் குங்குமத்தை இட்டுக்கொள்கிறார்கள்.நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்பவர்கள்கூட நெற்றிவகிட்டினில் குங்குமத்தை இட்டுக்கொள்கிறார்கள். ஆக, கணவனுக்கும் நெற்றிவகிட்டினில் வைத்துக்கொள்ளும் கூடுதல் பொட்டிற்கும் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது என்ற கருத்தினை முதலில் மனதில் நிறுத்திக் கொள்வோம். கணவனை இழந்த பெண்கள் யாரும் நெற்றி வகிட்டினில் குங்குமம் வைத்துக்கொள்வதில்லை என்பது கண்கூடு.

பெண்களின் வயதிற்கும், பூ, பொட்டு வைத்துக் கொள்வதற்கும் சம்பந்தமுண்டா என்று யோசித்தால் நிச்சயமாக இல்லை என்பது தெளிவாகிறது. இந்தச் செயல்களுக்கு தர்மசாஸ்திரம் சொல்லும் விதிமுறைகள் என்ன என்பதையும் நம் விவாதத்தில் சேர்த்துக்கொள்வோம். ஆண்களுக்கு பிரம்மச்சரியம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு நிலைகள் உண்டு. ஹிந்து தர்மத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு நேரடியாக சந்நியாச அதிகாரம் கிடையாது.

பெண்களுக்கு கன்னிகை, சுமங்கலி ஆகிய இரண்டு நிலைகளும், அதற்கு அடுத்தபடியாக கணவனை இழந்தோருக்கு கைம்பெண் என்ற நிலைகள் மட்டுமே உண்டு. இவற்றில் முதல் இரண்டு நிலைகளுக்கு உரிய அடையாளச் சின்னங்களாக வண்ண வண்ண ஆடைகள், அலங்காரங்கள், விதவிதமான உணவுகள் என வகைப்படுத்தி வைக்கப்பட்டன. சுமங்கலி நிலைக்கு கூடுதலாக தாம்பூலம் தரித்தல் என்ற விதியும் உண்டு. இந்த இரண்டு நிலைகளையும் கடந்து, கணவனை இழந்த கைம்பெண்ணிற்கு மட்டுமே சந்நியாச அதிகாரம் வந்து சேர்கிறது.

சுமங்கலியாக வாழுகின்ற பெண், தனது கணவன் உயிருடன் இருக்கும் வரை, தான் விரும்பினாலும் சந்நியாச யோகத்தை அடைய இயலாது. கன்னிகை நிலையில் இருக்கும் பெண்ணும் ஹிந்து தர்மத்தின்படி நேரடியாக சந்நியாச யோகத்தைப் பெற இயலாது. ஆக, ஒரு பெண் சந்நியாச யோகத்தை கடைப்பிடித்து அதன் மூலமாக முக்திக்கு வழி தேட முயற்சிக்க வேண்டுமென்றால் அதற்கு அவள் கணவனை இழந்த கைம்பெண்ணாக இருந்தால் மட்டு மே முடியும்.

ஒரு ஆண்மகன் சந்நியாசி ஆனால் எந்த கோலத்தில் வாழ வேண்டுமோ, அதே விதிமுறைகள்தான் சந்நியாச யோகத்தினை மேற்கொள்ளும் பெண்ணிற்கும் சொல்லப்பட்டுள்ளது. மொட்டைத்தலை, திருநீறு, காவி வஸ்திரம், சந்தனம் முதலான வாசனைப் பொருட் களைத் துறத்தல், புஷ்ப மாலைகளை அணியாதிருத்தல் (சந்நியாசிகளுக்கு புஷ்ப மாலை அணிவிக்கக் கூடாது), உணவுக்கட்டுப்பாடு போன்றவை அந்த நிலைக்கு உரிய அடிப்படை விதிகள்.

ஒரு பள்ளிக்குச் செல்லும் மாணவன் எவ்வாறு அந்தப் பள்ளியில் தரப்படும் சீருடையை அணிந்துகொள்ள வேண்டியது கட்டாயமோ, அவ்வாறே சந்நியாச யோகத்தினை மேற்கொள்வோரும் இந்த அடையாளங்களை சீருடையாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். சந்நியாச யோகத்தினை அடையும் தகுதி கணவனை இழந்த கைம்பெண்ணிற்கு மட்டுமே உண்டு என்பதால் அவர்கள் இந்தக் கோலத்தினை மேற்கொள்ளலாம். அதாவது, சந்நியாச மார்க்கத்தின் மூலமாக இறைவனின்பால் பக்திகொண்டு முக்தி தேட விரும்பும் பெண்களுக்கு மாத்திரமே இந்த கோலம் விதிக்கப்பட்டுள்ளதே தவிர, கணவனை இழந்த எல்லா கைம்பெண்களும் இந்த கோலத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு.

இளம்வயதில் விபத்தில் கணவனைப் பறிகொடுத்த பெண்ணை, ஆசாபாசத்தைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தவறு. கணவனின் மீது மரியாதை இருந்தாலும், இளம்வயதில் கைம்பெண் கோலத்திற்கு ஆளாகும் பெண், தனது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கடமையை கையில் எடுத்துக்கொள்ளும்போது, அவளால் சந்நியாச யோகத்திற்குள் நுழையமுடிவதில்லை. பந்தபாசத்தினை முற்றிலுமாகத் துறந்து இல்லற தர்மத்தில் இருந்து வெளியில் வருகின்ற அதிகாரம் கைம்பெண்ணுக்கு மட்டும்தான் உண்டு.

அவ்வாறு இல்லற தர்மத்தைத் துறக்க எந்த ஒரு கைம்பெண் விரும்புகிறாரோ, எந்த ஒரு பெண் சந்நியாசத்தை ஏற்றுக்கொள்ள விழைகிறாரோ அவர் மட்டும் அதற்குரிய விதிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதே சரி. ஆக, கணவனை இழந்த பெண்கள் பூவையும், பொட்டையும் வைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதே அன்றி இந்த விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது, பந்தபாசத்தை விடாதவரை அவர்கள் அவ்வாறு பூவையும், பொட்டையும் வைத்துக்கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை என்பதே உங்கள் கேள்விக்குரிய விளக்கமான பதில் ஆகும்.

?த்ரிஜேஷ்டை என்றால் என்ன? த்ரிஜேஷ்டை ஆகாது என்றும் சொல்கிறார்களே, அதற்கான விளக்கம் என்ன?

- கிரிபிரசாத், மடிப்பாக்கம்.

ஆனிமாதத்தினை சாந்திரமானத்தில் ஜேஷ்ட மாதம் என்று அழைப்பர். இந்த ஜேஷ்ட மாதம் என்பது வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஆனி மாத அமாவாசை வரை உள்ள காலம் மட்டுமே. இந்த ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்) அதே ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி) ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் வைகாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஆனி அமாவாசை வரை உள்ள காலத்தில் திருமணம் செய்யக் கூடாது. சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல்.

இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். ஒரு சிலர் இதையே தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாது பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு. த்ரிஜேஷ்டை அதாவது மூன்று ஜேஷ்டைகள் இணையக்கூடாது என்றுதான் ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. இதில் கேட்டை நட்சத்திரத்தையும், ஜேஷ்டா நட்சத்திரம் என்று அழைப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், மற்றொரு தலைச்சன் பெண்ணிற்கும் ஆனி மாதத்தில் திருமணம் செய்ய இயலாது. இது போன்ற ஜேஷ்டை என்ற வார்த்தையின் பொருள் உணர்ந்து அதற்கேற்றாற்போல் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று ஜேஷ்டைகள் இணையக்கூடாது என்பதையே த்ரிஜேஷ்டை ஆகாது என்று சொல்கிறார்கள்.

?அனைத்து ஆலயங்களிலும் மடப்பள்ளி என்ற ஒரு இடம் இருக்கிறது. பக்தர்களாகிய நம்மை அந்த இடத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. விசாரித்ததில் இறைவனுக்கு அங்குதான் நைவேத்யம் தயார் செய்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். அத்தனை புனிதமான இடத்தினை மடப்பள்ளி என்று அழைப்பது ஏன்?

- தமிழ்செல்வன், ஆத்தூர்.

மடையன் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டிருப்பதால் இந்த சந்தேகம் நம் மனதில் எழுகிறது. சுத்தம் எது, அசுத்தம் எது என்று பொருள்களைப் பிரித்து அறியக்கூடிய பக்குவமும், கைப்பு (கசப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்று அழைக்கப்படும் அறுசுவைகளின் வேறுபாட்டினையும் ஒவ்வொரு உணவுப் பொருளின் குணத்தினையும் அதனால் விளையும் நன்மை, தீமைகளையும் முறையே அறிந்தவனை மடையன் என்று அழைப்பார்கள். முறையாகக் கற்றறிந்த சமையல் கலைஞர் என்று பொருள் கொள்ளலாம். பல்வேறு சமையல் கலைஞர்களை வழிநடத்துபவரை மடைத்தலைவன் என்ற வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுவதை சங்க இலக்கியங்களில் காணமுடியும். படையினை வழிநடத்துபவன் படைத்தலைவன் அல்லது தளபதி என்று குறிப்பிடப்படுவதைப் போல், சமையல் கலையை முற்றிலுமாக குறையின்றி கற்றறிந்தவரை மடைத்தலைவன் என்று சொல்வார்கள்.

குறிப்பாக இவர்கள் `மடி’ என்று சொல்லப்படுகின்ற சுத்தம், ஆசாரம் ஆகியவற்றை கடைப்பிடித்து சமைப்பவர்களாக இருப்பார்கள். இவ்வாறு மிகுந்த மடியுடன், அதாவது ஆசாரத்துடன் சுத்தமாக சமைக்கப்படுகின்ற பொருட்களை இறைவனுக்கு நைவேத்யம் செய்வதால் அந்த இடம் மடைப்பள்ளி என்று அழைக்கப்பட்டு

நாளடைவில் மடப்பள்ளி ஆகிவிட்டது. இந்த மடைப்பள்ளி என்பது தமிழ் வார்த்தையே ஆகும்.

?எத்தனை சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. மனநிம்மதியும் இல்லை. ஜாதகம் பார்த்தால் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் உள்ளது, முன்னோர்கள் வழிபாடு செய்யவும் என்று அடிக்கடி சொல்கிறார்கள். முன்னோர் வழிபாடு என்றால் என்ன? சாதாரண நிலையில் உள்ள மக்கள் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்க முடியுமா?

- என். ராமநாதன், கள்ளக்குறிச்சி.

பெற்றவர்களுக்கு வருடந்தோறும் தவறாமல் சிராத்தம் என்று அழைக்கப்படும் திவசத்தினை சரிவரச்செய்ய வேண்டும். அதேபோல், பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் விரதம் இருந்து சமைத்த உணவினை படையலிட்டு வழிபட்டு காகத்திற்கு உணவு வைத்த பின்பு விரதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே முன்னோர் வழிபாடு என்று அழைக்கப்

படுகிறது. தந்தை இல்லாதவர்கள் மட்டுமே இதனைச் செய்ய இயலும்.

தந்தை உயிருடன் இருந்து தாயார் மட்டும் இல்லாதவர்கள் இந்த அமாவாசை விரதத்தினை கடைப்பிடிக்க இயலாது. அதேநேரத்தில் தாயார் உயிருடன் இருந்தாலும், தந்தை இல்லாதவர்கள் கண்டிப்பாக அமாவாசை தோறும் விரதம் மேற்கொண்டு மேற்சொன்னவாறு உணவினைப் படையலிட்டு வணங்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினர் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், கிரகணம் மற்றும் புண்ணியகாலங்களிலும் தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.

சில பிரிவினர் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை, தக்ஷிணாயண காலத்தில் வருகின்ற முதல் அமாவாசை ஆன ஆடி அமாவாசை, உத்தராயண சமயத்தில் வருகின்ற முதல் அமாவாசை ஆன, தை அமாவாசை ஆகிய நாட்களிலும் ஒருசிலர், மாசி மகம் வருகின்ற நாட்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவார்கள். இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது.

இதுபோக காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் செல்லும் நாள் எந்த நாளாக இருந்தாலும் அங்கே அந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதனை சிறப்பு வழிபாடாக கணக்கில் கொள்ளலாம். இந்த தர்ப்பணம், திவசம் முதலானவற்றை புரோகிதர்களின் துணைகொண்டு செய்ய வேண்டும். வீட்டினில் அமாவாசை நாட்களில் படையலிட்டு வணங்கும்போது, புரோகிதரின் துணை அவசியமில்லை.

இவ்வாறு பிரதி வருடந்தோறும் தவறாமல் தன்னை பெற்றவர்களுக்கு திவசம் செய்தும், அமாவாசை தோறும் தவறாமல் படையலிட்டு வணங்கி வருவதுமே முன்னோர் வழிபாடு ஆகும். இதனைச் சரிவர செய்பவர்களின் வீட்டில் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் வம்சம் தழைக்கும், செல்வ வளம் பெருகும், மனதில் நிம்மதி என்பது நிறைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

Related Stories: