நாகம் வழிபட்ட கயிலாயநாதர்

வேலூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அணைக்கட்டு தாலுக்காவில் பாக்கம் என்னும் கிராமத்தில் அருள்மிகு “உமாமகேஸ்வரி உடனுறை கயிலாயநாதர்” கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். தற்போது பெங்களுரில் அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய சித்தர் ஒடுக்கத்தூர் மகான் அவர்கள் தங்கி வழிபாடு செய்த ஆலயம், இது. கோவில் அருகில் ‘‘உத்திர காவிரி” என்னும் நதி இருக்கிறது. காசியில் இருக்கும் கங்கை நதியானது, தெற்கு புறமாக கைலாயநாதர் கோவிலை தொட்டு வடக்கு புறமாக செல்கிறது. இது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. ரம்பைக்கும், ஊர்வசிக்கும் சாபவிமோசனம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.கயிலாயநாதரை வழிபடும் நாகம்: நாகம் (சர்ப்பம்) ஒன்று தினமும், கயிலாயநாதரை தரிசித்து வருகிறது. இந்த நாகம், அவ்வளவு எளிதில் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை. அப்படி சிலருக்கு காட்சி தரும் நாகம், சிவஹரி என்னும் பக்தருக்கு விஸ்வ ரூபத்தில் அதாவது, நாகத்தின் வால் தரையில் படும்படியும், தலை வானத்தை நோக்கி படம் எடுத்து காட்சி தந்துள்ளது நாகம். இந்த நாகம் கயிலாயநாதருக்கு காவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாகத்தை நேரில் கண்ட பக்தர்: ஒரு பிரதோஷ தினத்தன்று கோயிலின் மதில் சுவற்றின்  மீது நாகம் வந்துகொண்டிருந்தது. அப்போதுதான் முதல் முதலில் நாகத்தை பார்த்தேன். அதன் பிறகு அடிக்கடி என் கண்களில் நாகம் தென்பட ஆரம்பித்தது. இரவு சுமார் 11.30 மணி அளவில், கோவிலின் உள்ளே முழு நீள நான்கரை முதல் ஐந்து அடியில் நாகத்தை கண்டேன். இந்த கோயிலுக்கு நான் வந்த பின்னர் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும்  பல மாற்றங்களை என்னுள் கண்டேன். மேலும், பணம் சேர்த்து வைத்து வீடு ஒன்றை கட்டினேன். அதில் குடியேற முடியாமல் அவதிப்

பட்டேன். கயிலாயநாதரை வேண்டிக் கொண்டேன் தடைவிலகி குடியேறினேன் என்றார் யோகானந்தம் என்னும் பக்தர்.   

சிதிலமடைந்த கைலாய நாதர் திருக்கோவில்: சித்தர் ஒடுக்கத்தூர் மகான் சென்ற பின், இத்தலம் பூஜிக்கப்படாமல் கோவில் சிதிலமடைந்துவிட்டது. அதன் பிறகு மக்கள் இங்கு வர அச்சப்பட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்தக்கோயில்  இருப்பதே தெரியாமல் போய்விட்டது. தை பொங்கலன்று மட்டும் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், இவ்வூரில் வசித்துவரும் கலைச்செல்வி என்னும் பக்தையின் கனவில் தோன்றிய கயிலாயநாதர், தனக்குக் கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். தன் கனவில் தோன்றிய கயிலாயநாதர் பற்றியும், கோயில் கட்டும்படி உத்தரவிட்டதையும் கிராம மக்களுக்கு கலைச்செல்வி தெரிவித்தார். இதனையடுத்து, ஊர் மக்களோடு இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார், கலைச்செல்வி. 15 ஆண்டு காலமாக கயிலாயநாதரை பராமரித்தனர். ஊர் மக்களால், கிட்டத்தட்ட 65 லட்சம் செலவில், கோயிலின் கருவறை, விமானம் ஆகியவை அமைக்கப்பட்டது. இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற இந்த புண்ணிய திருத்தலத்தின் திருப்பணி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.கைங்கரியம் செய்ய விரும்பும் அன்பர்கள் இந்த எண்ணில் (8695875868) தொடர்பு கொள்ளலாம்.  

Related Stories: