×

தெய்வீகத் தேவாரமும் திருத்தைப்பூசமும்

தைப்பூசம் 18-1-2022

தைப்பூசத் திருநாள் என்பது ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் தமிழர்களின் புகழ்பெற்ற விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இத்தை மாதமானது ‘பூசாமாதம்’ என்று குறிக்கப்படுகின்றது. இம்மாதத்தில் வரும் தைப்பூசம் என்பது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் சிறப்புடைய நாள் ஆகும். வானில் காணப்படும் இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பூச நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரமாய் அமைந்துள்ளது.

தைப்பூசத் திருநாள் சிவ வழிபாட்டிற்கும் முருக வழிபாட்டிற்கும் உரிய நன்னாள் ஆகும். மேலும், தைப்பூசத் தினத்தில்தான் இந்த உலகம் தோற்றம் பெற்றது எனவும் கருதப்படுகின்றது. முன்னொரு காலத்தில் பதஞ்சலி முனிவரும் திருமாலும் சிவபெருமானின் அருளினைப் பெற விரும்பினர். அதற்கான தவத்தினை மேற்கொண்டு இறைவனை வேண்டி நின்றனர். அவர்களின் தவத்தினைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் இத் தைப்பூச நன்னாளில் சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடித் திருமாலுக்கும் பதஞ்சலி முனிவர்க்கும் தரிசனம் தந்தார். தில்லைச் சிற்றம்பலத்தில் இருந்து தில்லைக் கூத்தனுக்கு இறைத்தொண்டுகள் பல புரிந்த இரணியவர்மன் என்னும் மன்னன் இறைவனின் திருக்காட்சியைக் கண்டு ஆனந்தம் பெற்ற நாள் தைப்பூசத் திருநாளே ஆகும். இத்திருநாள் சிவபெருமான் உறைந்தருளும் திருக்கோயில்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதனைத் தேவாரத் திருப்பதிகங்கள் எடுத்துரைக்கின்றன.

தமிழர்களின் வழிபாட்டு மரபில் தைப்பூசம் மிகச் சிறப்பு மிக்கதாய் இருந்தது என்பதனைத் திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப்பாடல் ஒன்று விளக்கியுரைக்கும். தேவார மூவர்களுள் முதல்வராகப் போற்றப்படும் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்னும் நோக்கில் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த சிவநேசச் செட்டியார் என்பவர் பூம்பாவை என்ற தன் மகளை வளர்த்து வந்தார். ஒருநாள் தோட்டத்தில் இறைவனுக்கு மலர் பறிக்கச் சென்ற பொழுது அப்பெண் பாம்பு தீண்டி இறந்து விட்டாள். சிவநேசச்செட்டியார் அந்தப் பூம்பாவையின்  சாம்பலை ஒரு கலயத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.

 பின்னொரு நாளில் திருமயிலைக்குத் திருஞானசம்பந்தர் வருகை தந்த பொழுது அதனைத்  திருஞானசம்பந்தரிடம் ஒப்படைத்தார். பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ‘மட்டிட்ட புன்னையங்கானன் மடமயிலை’ எனத் தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத்தில் திருமயிலையில் நடைபெறும் திருவிழாக்களை விளக்கியுரைப்பார் திருஞானசம்பந்தார். திருவாதிரை, திருவோணம், பங்குனி உத்திரம், வசந்த விழா, கார்த்திகை விளக்கீடு போன்ற திருநாள்களைக் குறிக்கும்பொழுது தைப்பூசத் திருவிழாவினையும் எடுத்துரைக்கின்றார். மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ? என வினவும் வண்ணம் அமைந்த அப்பாடல்,

“மைப்பூசு மொன்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் காபலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஓண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைபூசங் காணாதே போதியோ பூம்பாவாய்” (தேவாரம்)

- என்பதாகும். இதனுள் தைப்பூசத் திருநாளில் மகளிர் பொங்கல் இட்டு இறைவனை வழிபடும் மரபினைப் பின்பற்றினர் என்னும் குறிப்பானது நிறைந்து காணப்படுகின்றது.
சிவபெருமான் உகந்துறையும் திருக்கோயில்களுள் சிறப்பிடம் பெற்றது திருவிடைமருதூர் என்பதாகும். திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னனுடன்  தொடர்புடைய தலம் ஆகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு மிருகங்களை வேட்டையாடச் சென்றான். அவ்வேட்டையில் மன்னனின் மனம் தோய்ந்து விட, மாலை நேரமானது முடிந்து இரவு வந்து விட்டது. அந்நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும்போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஓர் அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இந்நிகழ்வானது மன்னன் அறியாது நடந்திருந்தாலும் அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது.

இறந்த அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக் கொண்டது. சிறந்த சிவ அடியவனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரிடம் தன்னை  இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எவ்வாறு செல்வது என எண்ணிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தின் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கி விட்டன.

அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓகை உளம் தேக்கும் வரகுணன் ஆம் தென்னவன்கண் சூழ்பழியைப் போக்கும் இடைமருதில் பூரணமே” என்று போற்றி உள்ளார். இத்தகைய சிறப்புடைய திருவிடைமருதூர் இறைவனின் திருவருளைப்பெற மிகச் சிறந்த நாள் தைப்பூசத் திருநாள் ஆகும். தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைத் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான்.

பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து திருவிடைமருதூரில் உள்ள பூசத் தீர்த்தத்தில் நீராடிய பின் புண்ணியவான் ஒருவன் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகின்றது. எனவேதான், திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடும்பொழுது விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர், வானவர், ஏனோர்கள் வந்து கூடித் தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் எனப் புகழ்ந்துரைப்பார். இதனை விளக்கும் பாடல்,

“வருந்திய மாதவத்தோர்
வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச
மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புக்கீரே” ( 2: 56: 5)

- என்பதாய் அமைகின்றது. மேலும் திருஞானசம்பந்தர் தனது முதற் திருமுறையிலும் இத்தலத்துக் கொண்டாடப்படும் தைப்பூசத்திருநாளை போற்றி வழிபடுவார். திருவிடைமருதூர் என்னும் இத்தலம் மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகளைக் கொண்டமைந்ததாகும் இத்தகைய சோலைகளில் மலர்ந்து மணம் கமழும் மலர்களில்  வண்டுகள் அமர்ந்து ரீங்காரம் செய்யும். இத்தகைய இயற்கை வளம் நிறைந்த திருவிடைமருதூர் என்னும் இத்தலத்தில்  உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்கி நிற்பர். இவ்வாறு அனைவராலும் வணங்கப்படும்படி இத்தலத்தில் இறைவன் பொலிவும் அழகும் உடையவனாய்  எழுந்தருளி விளங்குகின்றான் எனக் குறிப்பார்.

இதனை விளக்கும் பாடல்,
“வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய
ஈச னுறைகின் றவிடை மருதீதோ” (1: 32: 5 )

- என்பதாய் அமைகின்றது. இப்பாடலுள்ளும் தைப்பூச நன்னாள் சுட்டப்படுவதனை அறிக. திருநாவுக்கரசர் திருவிடைமருதூர் இறைவனைப் பாடுங்கால் இத்தலத்து உறைகின்ற இறைவனாகப்பட்டவன் வண்டுகள் உறைகின்ற  வன்னியும், மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தனாய் இருப்பவன். எட்டுத் திசைகளுக்கும்  தலைவனாகியவன். அத்தகைய இறைவனை வணங்கினால் நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும்.

மண்ணுலகை உண்ட திருமாலும் மலரடி காண இயலாத,  விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகனும் வியன்முடி காண இயலாத தன்மை உடையவனாகிய சிவபெருமானே மாமருதூரில் இருப்பவன் ஆவான். இத்தகைய சிறப்புகளை உடைய இறைவனை வணங்கி அவன் அருள்பெற பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருவிடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியைத் தைப்பூச நன்னாளில் வழிபட்டு இருத்தலைக் கண்டு, புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோமாக   வணங்கி நிற்கின்றோம்;! எனக் குறிப்பிட்டுரைக்கின்றார். திருநாவுக்கரசரின் இத்தகைய கூற்றிற்குச் சான்றாதாரமாய்,

“பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மானிடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே”. (5: 14: 1)
என்ற பாடல் அடிகள் அமைகின்றன. இவ்வாறு திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் போற்றப்பெற்ற  திருவிடைமருதூர், தைப்பூசநாள்விழாவில் சிறந்திருந்ததனை இதன்வழி அறிய முடிகின்றது. தேவாரத்தின் பிறிதோர் பாடலும் தைப்பூசத்திருநாளின் பெருமையினை எடுத்துரைக்கின்றது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சிறப்புடைய தலங்களுள் ஒன்று திருவலஞ்சுழி என்பதாகும். காவிரிநதி வலஞ்சுழித்துச் செல்லும் இடத்து இத்தலம் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

காவிரி இத்தலத்துக்கு அருகில் ஓடி வந்து பாதாளத்தில் வீழ்ந்து விட்டதை ‘ஏரண்டர்’ என்னும் முனிவர் இறங்கி வெளிப்படச் செய்யக் காவிரி மேலே வலம் சுழித்து எழுந்தமையால் ‘வலஞ்சுழி’ எனப் பெயர்பெற்றது எனவும் குறிக்கப்படுகிறது. இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலம் எனவும் போற்றப்படுகின்றது. இத்தலத்து இறைவன் அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவன். வெண்டலையில் இரந்து உண்பவன். இத்தகைய இறைவன் நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் ஆற்றல் உடையவன் எனக் குறித்துரைப்பார் திருஞானசம்பந்தர்.  இவ்வாறு இத்தலத்து இறைவனைப் பாடும் பொழுது திருஞானசம்பந்தர்   தைப்பூசத்திருநாளின் சிறப்பினை எடுத்துரைப்பார். இத்தகைய பாடல்...

“பூச நீர்பொழி யும்புனற்
பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி
கொள்வ திலாமையே” (2: 2: 6)    
 - என்பதாய் அமைகின்றது.

திருநாவுக்கரசர் தென்புத்தூர்க்கரை இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ள பதிகம் ஒன்று பூசத்திருநாளின் சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. இவ் உலக உயிர்களை இறையருள் பெறா வண்ணம் தடுத்து நிறுத்துவது மும்மலங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை எனப் பெறும் குற்றங்கள் ஆகும். இவற்றின் பிடியில் அமிழ்ந்திருக்கும் ஆன்மாவானது அவற்றின்று மீள்வதற்கு இறைத்திருவருள் ஒன்றே வழியாகும். எனவே மனித மனத்தினைப் பிடித்திருக்கும் குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை நீக்கம் செய்யக் கூடிய அருளாற்றல் நிறைந்தவன் தென்புத்தூரின்கண் உள்ளவனாகிய ஈசனே ஆவான்.

அவன் என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனாய் அமர்ந்திருக்கின்றான். அத்தகைய இறைவன்  தைப்பூசத்திருநாளில் நீராடல் செய்பவன். அந்நாளில் தன்னை வழிபடும் அடியார்களுக்கு அருள் தந்து காப்பவன் என்று சொல்ல எனக்குப் பெரும் இன்பமாயிற்று எனக் குறிப்பிடுகின்றார் திருநாவுக்கரசர்.

“மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே” (5: 62: 8)

இவ்வாறு தேவார அருளாளர்களால் பாடிப் பரவப் பெற்ற திருத்தைப்பூசத் திருநாள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய சிவபெருமானின் அருட்திறத்தினை அடியவர்பொருட்டு கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் உடையதாகும். இத்தகைய தைப்பூச நன்னாள் வருகின்ற தைத்திங்கள் ஐந்தாம்நாள் செவ்வாய்க்கிழமை (18 - 1 - 2022 ) அன்று வருகின்றது. அந்நன்னாளில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து ஈசனின் பேரருளையும் முருகப் பெருமானின் திருவருளையும் பெற்று உயர்வோமாக!

முனைவர் மா. சிதம்பரம்

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!