×

தை மாதத்தின் சிறப்பு

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்

மாதங்களில் “தை” மாதத்திற்கென்று ஓர் விசேஷ புகழ் உண்டு! அது என்னவென்பதை அனைவரும் அறிந்து கொண்டால், அதை ஏன் நாம் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்என்பது தெரியும்; புரியும்!! தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை மாதத்தின் பெருமையாகும்!! அப்போதுதான் பித்ருக்கள் உலகின் கதவும் திறக்கப்படுகிறது.

மெய்ஞானத்தில் சூரியன்!

தேவர்கள், மகரிஷிகள், கந்தவர்கள் மற்றும், தட்சிணாயன இரவுக் காலத்தில் யோக நிலையில் இருந்த சித்த மகா புருஷர்கள், தங்கள் சமாதி நிலையினை விடுத்து,  சூரிய பகவானைப் பூஜிக்கும் புனித மாதம் தை!! தனது ஸ்வர்ண மயமான தேரில், கருடனின் மூத்த சகோதரரான “மாதலி” தேரினைச் செலுத்த, சூரியன்,  வலம்வர ஆரம்பிக்கும் மாதமாதலால், தினகரனை அனைத்து உலகினரும் கொண்டாடி, விசேஷமாகப் பூஜிக்கின்றனர், இந்தத் தை மாதத்தில்.

சூரிய பூஜை!

உலக சரித்திரத்தில, “வேத காலம்'' எனக் கூறப்படும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, உலகின் பல நாடுகளிலும், சூரியனை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளதை, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். மக்கள் உயிர்வாழ அவசியமான ஒளி (வெளிச்சம்), மழை, விளைச்சல், உயிர்ச்சத்து, பகல் பொழுது ஆகிய அனைத்தையும் அளிக்கும் பகலவனை, “சூரிய தேவதை”யாக எகிப்து, ரோம, கிரேக்க சாம்ராஜ்யங்கள், பாரஸீகம் (தற்போதைய ஈரான்) ஆகிய அனைத்து நாடுகளிலும்கூட, மக்கள் பூஜித்து வந்ததற்கு சென்றகால சரித்திரத்தில்  சான்றுகள் ஏராளமாக உள்ளன.

பாரத மக்களும், சூரிய பகவானைக் காலங்காலமாகப் பூஜித்து வருகின்றனர். காயத்ரி, மகா மந்திரத்தின் அதிதேவதையாகவும், நாம் அளிக்கும் ஆண்டுத் திதிகள், மற்றும் மாத, மகாளயபட்சம், கிரகணகாலப் பூஜைகள் ஆகியவற்றின் பலன்களை அந்தந்த மூதாதையர்களுக்கு (பித்ருக்கள்) கொண்டு சேர்ப்பதால், பித்ருகாரகர் எனவும் ஆராதித்து வருகின்றனர்.
ரிக், அதர்வண வேதங்களிலும், ஆதித்ய ஹ்ருதயத்திலும், புராதன ஆயுர் வேத நூல்களிலும் சூரியனின் பெருமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலலைகளினால் அரிக்கப்பட்ட பரந்து, விரிந்த பிரம்மாண்டமான “சுமேரியா” என அப்போது அழைக்கப்பட்ட, தற்போதைய ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து, தமிழகம் பிளவுபடுவதற்கு முன்பே தமிழ் மக்கள், சூரியனுக்கு பொங்கலிட்டு பூஜித்து வந்ததற்கு சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சான்றுகளைத் திரட்டி நமக்கு அளித்துள்ளனர். அக்காலத்தில், ஏராளமான தமிழ் மக்கள், தங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் குடும்பம், குடும்பமாக தமிழகம் நோக்கிக் கால்நடையாக வந்து, தற்போதைய தமிழ் பூமியில் குடியேறியதை சரித்திரம் விவரித்துள்ளது.

சுமேரியாவில், சுவர்ணம் (தங்கம்), நவரத்தினங்கள் ஆகியவற்றை வர்த்தகம் செய்து வளமாக வாழ்ந்த காரணத்தினால், அங்கிருந்த தமிழர்கள் “நகரத்தார்” (City Dwellers) என மக்களிடையே தனிப் புகழும் மரியாதையும் பெருமையும் பெற்றுத் திகழ்ந்தனர். அப்போதும் அவர்கள் பொங்கல் படையிலிட்டு, சூரியனைப் பூஜித்து வந்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தில்....!

பூம்புகாரைத் தலைநகரமாகக் கொண்டு, தமிழகம் விளங்கிய நாட்களில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்ற இந்திர விழாவின்போது, சூரியனை வழிபட்டு வந்ததை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் விவரிக்கிறது! அதனையே “மகர சங்கராந்தி” என இன்றும் நாம் கொண்டாடி வருகிறோம்.

விஞ்ஞானத்தில் சூரியன்!

சூரியனைப் பற்றிய பல ரகசியங்களை, “சூரிய சித்தாந்தம்'' எனும் புகழ் பெற்ற பழைய நூல் விளக்குகின்றது. Vibgyor  எனக் குறிப்பிடப்படும், “வயலட்”, “இன்டிகோ”, “புளு”, “கிரீன்” (பச்சை), மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வர்ணக் கலவை, சூரியனிடமிருந்துதான் நமக்குக் கிடைக்கிறது, இந்த வர்ணங்களுக்கும், நம் சரீரத்தின் அனைத்து பாகங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு!! நமது இதயம், இரத்தம், இரத்த ஓட்டம், சர்மம் (Skin) ஆகியவை ஆரோக்கியமாக இயங்குவதற்கு சூரியனின் சக்தியே காரணமாகும் என்பதை “சரகர் சம்ஹிதை” எனும் பண்டைய ஆயுர்வேத நூல் விளக்கியுள்ளது.

நமது வான மண்டலத்தில் ராகு, கேது ஆகிய இரு நிழல் கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும், பூமியும் சூரியனை,சதா வலம் வந்துகொண்டேயிருக்கின்றன. பருவங்கள் மாறுவதும்,  பயிர்கள் செழிப்பதும், பருவம் தவறாது மழை பொழிவதும், சூரியனின் நிலைகளைக் கொண்டே நிகழ்கின்றன!! இவ்விதம், மனித சமூகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் சூரியனை, தைமாதத்தில் விசேஷமாக பூஜித்து வருகிறோம். சூரியன் - தனுர் ராசியிலிருந்து, மகர ராசிக்கு மாறி அந்த ராசியில் சஞ்சரிப்பதால், தை மாதத்தை மகர மாதம் என ஜோதிடம் போற்றுகிறது.

சூரியன்,மகர ராசியில் பிரவேசிக்கும் புண்ணிய தினத்தில், புதுப் பானையில், பொங்கலிட்டு, சூரிய பகவானை வழிபட்டு நமது நன்றியினைச் செலுத்துகிறோம். பாரதம் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்ட நாடாகும்! ஆதலால், விளைபொருட்களான மஞ்சள், கரும்பு மற்றும் அழகிய, வாசமிகும் மலர்களால் அலங்கரித்த புதுப் பானையில், தோஷம் எதுவுமில்லாத முகூர்த்த நேரத்தில், சூரியனுக்கு நைவேத்தியம் செய்து, பூஜித்து, கற்பூர ஆரத்தி எடுத்து நமஸ்கரிக்கிறோம்.

கோ பூஜை!

நமது விவசாயத்திற்கு உறுதுணையாக நின்று, உழைக்கும் காளை மாடுகள், பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றையும் மறுநாள், நீராட்டி, மலர்களால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் இட்டு, உணவளித்து, பூஜித்து, நமது நன்றியைச் செலுத்துகிறோம். இதனையே மாட்டுப் பொங்கல் எனக் கொண்டாடுகிறோம். காலங்காலமாக பெரியோர்களைப் பூஜிப்பதும்,  வணங்குவதும் தமிழ் மக்களின் மரபாகும். ஆதலால், மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம்  பெரியோர்களையும், முதியோர்களையும் தேடிச் சென்று, வணங்கி அவர்களது ஆசியைப் பெறுகிறோம். இந்தத் தினத்தையே “காணும்பொங்கல்” என அழைக்கிறோம்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி