மங்கலம் பொங்கும் பொங்கல்

தமிழர் தம் பண்டிகையான பொங்கல், நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.  மார்கழியின் இறுதிநாள் போகிப்பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது  இந்திரனுக்குரிய நாளாகும். இதில் பழையன கழிதலும் புதியன புகுவதும்  கொள்ளப்படும். தை முதல் நாள் பெரும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இது சூரிய வழிபாட்டுக்கு உரிய நாளாகும். தை  இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் என்று அழைக்கப் படுகிறது. அன்று  மாடுகளுக்குப்பொங்கல் இட்டுப்பூசிக்கின்றனர். மாடுகளுக்கு நோய் நொடிகள்  தாக்காதிருக்கவும், அவை விருத்தியாகவும், உறுதியுடன் உழைக்கும் வல்லமை  பெறவும் தெய்வங்களிடம் பிரார்த்திக்கப்படுகிறது. மாடுகளை ஊர் வலமாக  ஓட்டிச்சென்று வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வீட்டினுள் நுழையும் போது  ஓர் உலக்கையைத் தாண்டி வரும்படிச் செய்கின்றனர். மாடுகளோடு தொற்றிக்கொண்டு  வரும் தீய சிறு தெய்வங்கள் உலக்கையைத் தாண்டி வருவதில்லை என்பதால் இப்படிச்  செய்கின்றனர்.

நான்காம் நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல்  விழாவாகும். இதை “பூ” நோன்பி என்பர். இந்நாளில் மக்கள் கட்டுச்சாதங்களைக்  கட்டிக்கொண்டு ஊருக்கு அருகிலுள்ள ஆற்றங்கரை, மலைச்சாரல், முதலிய  இடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பர். ஐந்தாம் நாள்  வேட்டைக்குச்செல்வர்.காட்டிலுள்ள தெய்வங்கள் தமக்கு வழி காட்டி நல்ல  வேட்டையைத் தரவேண்டுமென்று பிரார்த்திப்பர். இது மலையக்கிராமங்களில்  சிறப்புடன் கொண்டாடப்படும்.காலையில், மேளதாளம் முழங்க கிராம தெய்வங்களைவழிபட்டுப் பொங்கலிட்டு வேட்டைக்குச்செல்வர். மாலையில் வேட்டையை  முடித்துக்கொண்டு திரும்புவர்.

மாலையில் பெண்கள் ஒன்று கூடி  வேட்டைக்குச்சென்று வெற்றியுடன் திரும்புவர்களை ஆரத்தியெடுத்து வரவேற்பர். காலப்போக்கில் வேட்டைத் திருவிழா ஆலயத்திருவிழாக்களோடு இணைந்ததையும் காண்கிறோம். ஆலயங்களில், இது காணும் பொங்கலன்றே இப்போது நடத்தப்படுகிறது. காட்டில் சென்று ெபாங்கல் வைத்து வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தைச்சமைத்து காட்டகத்து தெய்வங்களை வழிபடுவதும் சில இடங்களில் உள்ளது.

மந்தைவெளிப் பொங்கல் மாட்டுப்பொங்கலன்று,  மந்தை வெளிப்பொங்கல் என்பது வைக்கப்படும். மேய்ச்சலுக்குச்செல்லும் மாடுகள் உச்சி வெயிலில் படுத்து ஓய்வெடுக்க உண்டாக்கப்பட்ட இடமே மந்தை வெளி  எனப்படும். மந்தவெளியில் ஊர்மக்கள் அனைவரின் சார்பாகவும் பொங்கல் வைத்து  வழிபடுவர். மாலையில், எல்லா மாட்டு மந்தைகளையும் இங்கே கூடச்செய்து வழிபாடு  செய்வர். இங்கு வைக்கப்படும் பொங்கல் மந்தைவெளிப்பொங்கலாகும். கொங்கு  நாட்டில் இப்படி பொங்கல் வைப்பது பல இடங்களில் காணப்படுகிறது.

 - பரிமளா        

Related Stories: