உழவர் திருநாள்

அறுவடைக் காலம் மகிழ்ச்சிக்குரிய காலம். வளர்ந்து நிற்கும் பருவப்பெண்ணையும் செழித்து  நிற்கும் நெற்பயிரையும் ஒப்பிட்டு மகிழ்வது தமிழ் இலக்கிய மரபு.

“பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா

பருவம் கொண்ட பெண்ணைப் போலே

நாணம் என்ன சொல்லம்மா”

என்று பாடுவார் கவிஞர்.  

நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்து, வயலும் வயல் சார்ந்த நிலமும் ‘மருத நிலம்’ என்று தொல்காப்பியம் கூறும்.

உழவுக்கும் உழவர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது இஸ்லாமிய வாழ்வியல். இறைநம்பிக்கையாளர்களுக்கு உவமை சொல்லும்போதுகூட பயிரின் வளர்ச்சியைக் கொண்டே உவமை

கூறுகிறான் இறைவன்.

“ஒரு பயிர்; அது முதலில் குருத்தை வெளிப்படுத்தியது. பின்னர் அதை வலுப்படுத்தியது. பின்னர் அது பருத்தது. பிறகு அது தன் தண்டின் மீது செவ்வனே நின்றது. விவசாயிகளை அது மகிழ்விப்பதற்காக..” (குர்ஆன் 48:29)

மண்ணுக்குள் புதைக்கப்படும் விதைகள் வெடித்து முளைத்து வருவது இறைவனின் சான்றுகளில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறுகிறது வேதம். நிலம், மண், மழை, விதை, விவசாயம் தொடர்பாக இறைவேதத்தில் ஏராளமான அருள் வசனங்கள் உள்ளன.இறைத்தூதர் அவர்களும் விவசாயிகளின் வாழ்வு முன்னேற பல அருமையான திட்டங்களைச் செயல்படுத்தினார். நபிகளார் மதீனாவுக்கு வந்ததும் செய்த முதல் வேலை, வழிபாட்டிற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டியது. அடுத்து அவர் செய்தது, மதீனா மார்க்கெட் எனும் சந்தையை உருவாக்கியது.“கிராமத்து விவசாயிகளுக்கும் நகரத்து வியாபாரிகளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் கூடாது” என்று கூறி, உழவர்கள் நேரடியாகத் தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு வழியமைத்துத்  தந்தார்.  உழவர் சந்தையை உலகில் முதலில் உருவாக்கியவர் உத்தம நபிகளார் அவர்கள்.அறுவடைக் காலத்தில் விவசாயிகளின் கடமை என்ன? அதையும் திருவேதம் கூறுகிறது.

“அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களைப் புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் இறைவனுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்.”(குர்ஆன் 6:141)அந்தப் பங்கு எவ்வளவு என்பதும், இறைவனின் அந்தப் பங்கை எத்தகைய ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதையும் மார்க்கச் சட்ட நூல்கள் விரிவாகக் குறிப்பிடுகின்றன.அறுவடைக் காலத்தில் மிகச் சிறந்த விளைபொருட்களை அளித்ததற்காக  இறைவனுக்கே நன்றி செலுத்துவோம். அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: