இந்த வார விசேஷங்கள்..

11.1.2022 - செவ்வாய்க்கிழமை -

பௌமாஸ்வினி -

பௌமன் என்றால் செவ்வாய் கிரகத்தைக்  குறிக்கும். செவ்வாய்க்கிழமை அன்று அஸ்வினி நட்சத்திரம் வந்தால் அந்த தினம் “பௌமாஸ்வினி” என்று வழங்கப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ  லட்சுமி நாராயணரை வணங்குவது சாலச் சிறந்தது. செவ்வாய் தோஷம் இருந்து திருமணத்தடை உள்ளவர்கள் இந்த அஸ்வினி நாள்  விரதமிருந்து, செவ்வாய் பகவானை வணங்க திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். அன்றைய தினம் பானகம் வைத்து லட்சுமி நரசிம்மரை வணங்கி நரசிம்ம மந்திரத்தை ஓதினால் மனதில் நினைத்த எண்ணங்கள் அத்தனையும் நிறைவேறும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும், விபத்து கண்டங்கள் இருந்தாலும், ரத்த சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் இந்த விரதம் இருக்கதீர்ந்துவிடும்.

11.1.2022 - செவ்வாய்க்கிழமை -

கூடாரைவல்லி

மார்கழி மாதத்தில் கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27வது  பாசுரம்,“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை ஆரம்பிக்கும்போது ஆண்டாள்,“நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்று பலவிதமான பொருட்களை இந்த விரதத்தில் பயன்படுத்துவதில்லை என்று சங்கல்பித்து கொள்ளுகின்றாள். அதைப் போலவே,“மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று அலங்காரம் செய்வதும் இல்லை என்று ஆரம்பத்திலேயே சொன்னாள்.

இந்தப்  பாசுரத்தில்,“மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்வோம்” என்று எல்லோரையும் வைத்துக்கொண்டு, இன்று நாங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்து சாப்பிடுவோம் என்று சொல்வதிலிருந்து.,  இது நோன்பு நிறைவேறிய நாளாகக் கருதி கொண்டாடுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை  வழிபடுகின்ற பொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, கீழ்க்கண்டவாறு திருநாமத்தைச் சொல்லி வாழ்த்தி வழங்குவார்கள்,

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்

பதங்கள் வாழியே.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமானுஜர் ஆண்டாள்  கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வண்ணம் நூறு அண்டா வெண்ணெயும் நூறு அண்டா அக்கார அடிசிலும் மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் கூடாரை வல்லி அன்று 108 பாத்திரத்தில்  வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும். நாம்  அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய் விட்டு செய்த சர்க்கரைப் பொங்கல்)  வைத்து ஆண்டாளை வணங்க  நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரை வல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

13.1.2022 - வியாழக்கிழமை -

போகிப்பண்டிகை

போக்கி பண்டிகை என்பதே போகிப்பண்டிகை ஆகியது. போகி என்பது  இந்திரன் பெயர். அவருக்கான பண்டிகை என்றும் சொல்லலாம். இந்த தினத்தில் எல்லா வைணவ கோயில்களிலும் திருப்பாவை முடிந்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். அந்தத்  திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது சிறப்பு. அதே நேரத்தில் இது போகி என்பதால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல வீடுகளை தூய்மையாக்கும் பணி  நடைபெறும். தேவையற்ற பொருளை நெருப்பில் எரித்து விடுவர்.கடந்த கால துன்பகரமான எண்ணங்களை எல்லாம் நெருப்பிலிட்டு பொசுக்கி புத்துணர்ச்சியுடன் தை மாதத்தை ஆரம்பிக்கும் மார்கழியின் கடைசி நாள் போகி.

போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக் கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங் குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி  வணங்குவர். அன்று  போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.பிறகு அனைவரும் உண்டு களிக்க வேண்டும்.

13.1.2022 - வியாழக்கிழமை -

வைகுண்ட ஏகாதசி

மார்கழி வளர்பிறை ஏகாதசியை “வைகுண்ட ஏகாதசி” என்று சொல்லு வார்கள். அன்று ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்டத்தின் கதவுகள் திறக்கும். சில காரணங்களால், கார்த்திகை மாதத்தில்  திருவரங்கம், திருவாலி திருநகரி போன்ற சில தலங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது. ஆனால் மற்ற எல்லா தலங்களிலும் இன்றைய நாள்தான் வைகுண்ட ஏகாதசி திருநாள். இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாளில் விரதமிருந்து, பெருமாள் கோயிலுக்குச் சென்று,  துளசி மாலையை சமர்ப்பித்து, எம்பெருமானை வணங்குவதன் மூலமாக, இக பர சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். 14.1.22 அன்று காலை கூர்ம துவாதசி வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை துவாதசி பாரணை செய்ய வேண்டும்.

14.1.2022 - வெள்ளிக்கிழமை-

மாதப்பிறப்பு - மகர சங்கராந்தி -

தை பொங்கல்

உத்தராயண புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு. பொங்கல் பண்டிகை. சூரிய நாராயணனுக்கு பொங்கலிட்டு வணங்க வேண்டும். பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை.

உத்தராயண புண்ணிய காலமான தைப்பொங்கல் அன்று பாலில்  புத்தரிசி  பொங்கல் போட்டு  சூரிய பகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி தூப  தீபம் காட்டி வழிபட வேண்டும். இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமைதியும் கிடைக்கும்.பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்தரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.மண் பாண்டத்தின் பெருமையைச் சொல்வதற்காகவே அறுவடைத் திருநாளில், புது மண் பானை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவேண்டும்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது  மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு.

Related Stories: