ராகு, கேது தோஷ நிவர்த்திக்கு கண்ணமங்கலம் இரட்டை சிவாலயம்

பரிகாரம் செய்ய பக்தர்கள் திரளுகின்றனர்

கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரஈஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு காசி விசாலாட்சியம்மன் சமேத காசிவிஸ்வநாதர் இரட்டை சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலை உபயதாரர்கள் உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவரும் விழாக்குழுவினருமான சி.கே.என்.சரவணன் சிறப்பாக பராமரித்து வருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் கடந்த 09-07-2014 அன்று உபயதாரர்களால் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கண்ணமங்கலத்தில் இருந்து படவேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கண்ணமங்கலத்தில் இருந்து 15நிமிடத்தில் சென்று விடலாம். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை கண்ணமங்கலத்தில் இருந்து பஸ்வசதியும், 24மணிநேரமும் ஆட்டோ வசதியும் உள்ளது. இந்த கோயிலில் பூஜைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் 48அடி உயர தீபகம்பம் உள்ளது. 750அடி கொள்ளளவு கொண்ட இந்த தீபகம்பத்தில் செம்பினால் ஆன தீப கொப்பரையில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயில் ராகு கேது தோஷங்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ராகு, கேது பூஜைகளையும் செய்து வழிபடுகின்றனர். மேலும், கோயில் வளாகத்தில் கடன் தீர்த்த விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், பைரவர் போன்றவர்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளது. மேலும், இங்கு நவக்கிரகங்களுக்கான தனிசன்னதி இல்லாததே இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலின் தலவிருட்சமாக மாமரம் அமைந்துள்ளது. மேலும் இங்கு வில்வமரம், ருத்ராட்சம், வன்னி, நாகலிங்கம், மகாவில்வம், மகிழமரம், பாரிஜாதம், புன்னை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட 10 வகையான ஆன்மிக மரங்கள் உள்ளன.

இந்த கோயிலுக்கு வந்து செல்பவர்களுக்கு குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்புகள், திருமணம் போன்றவை கைக்கூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களை விட மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இக்கோயிலில் மாதம்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் மகாசிவராத்திரி காலங்களிலும், கார்த்திகை மாதத்தின் வரும் தீபத்தின் போதும் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும், பல நறுமணமிக்க பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகங்களும், பல்வேறு வண்ண வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களும் நடக்கிறது. இதனிடையே தற்போது பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் 63 நாயன்மார்களின் கற்சிலைகளும், நடராஜர் சமேத சிவகாமிசுந்தரி கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏகாம்பரஈஸ்வரர் கோயிலில் உள்ள 63 நாயன்மார்கள் கும்பாபிஷேகம் நாளை (23ம்தேதி) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: