செங்கதிர்த் தேவன்

மகாகவி சுப்ரமண்ய பாரதியார் வடமொழியில் அமைந்த சூரிய காயத்திரி மந்திரத்தை, “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என மொழிபெயர்த்து சூரியவழிபாட்டினை நாளும் மேற்கொண்டார். உலக நாடுகளில் தோன்றிய பல்வேறு மதங்கள் தங்களின் முக்கிய தெய்வங்களுள் ஒன்றாகப் போற்றியது சூரியனைத்தான். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய நாகரீகத்தில் வழிபடப் பெற்ற தெய்வங்களின் வரிசையில் முக்கிய தெய்வமாகத் திகழ்ந்தது ஆதவனே. சூரியக்கடவுளை அவர்கள் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு பெயர்களிலும் குறிப்பிட்டு வணங்கினர். கெப்ரி, ரீ ஹோராக்தி, அமுனர், எனப் பல வடிவங்க ளோடு போற்றப் பெற்றாலும் சூரிய வட்டத்தை ஏட்டன் எனக் குறிப்பிட்டனர். ஏட்டன் எனும் தெய்வமே அரசவையின் ஆளுமைத் தெய்வமாகும். உலக அளவில் சூரிய தேவனின் மிகப்பழமையான உருவங்கள் எகிப்து நாட்டில்தான்

கிடைக்கின்றன.

மனித உடலும் கழுகுத் தலையும், அத்தலை மேல் சூரிய வட்டமும் திகழும் ரீ ஹோராக்தி எனும் சூரிய தெய்வத்திற்கு ஒரு பெண் உணவுப் பொருள்கள், பழரசங்கள், மலர்கள், நீர் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து அர்ப்பணம் செய்து நிற்க அவளை அத்தெய்வ சூரிய வட்டத்திலிருந்து மலர்களைப் பொழிந்து ஆசிர்வதிக்கும் அரிய ஓவியக் காட்சி எகிப்து நாட்டு பிரமிடு ஒன்றில் காணப் பெறுகின்றது.ஏட்டன் எனும் சூரிய வட்டத்துடன் திகழும் சூரியக் கடவுளுக்கு துதகாமன் எனும் எகிப்திய அரசன் தன் மனைவியுடன் திராட்சை ரசம் அடங்கிய குவளைகளை கையில் ஏந்தியவாறு மலர்களுடன் கை உயர்த்தி அர்ப்பணம் செய்ய சூரியக் கடவுளான ஏட்டன் தன் கிரணக் கைகளால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் அருள் வழங்கும் அரிய காட்சிகள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் கிடைத்துள்ளன. இந்த சூரிய வழிபாடுகளைத்தான் நாம் மகரசங்கராந்தி, தைத்திருநாள், பொங்கல், உத்தராயண புண்ணிய காலம், தை விஷு எனப் பல பெயர்களில் கொண்டாடுகிறோம்.

ஒராண்டில் நான்கு விஷு புண்ணியகாலங்கள் வருகின்றன. சித்திரை முதல்நாள், ஆடி முதல் நாள், ஐப்பசி முதல் நாள், தை முதல் நாள் இவை நான்கும் மிக முக்கியமான நாட்களாகும். சூரிய அயனப் பாதையில் சித்திரை முதல் நாளில் மையப்புள்ளியில் இருக்கும் சூரியன் வட திசை நோக்கி நகர்ந்து ஆடி முதல் நாளில் வட கோடியில் நிற்பான். அன்று தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். அன்று தெற்கு நோக்கி நகரும் சூரியன் ஐப்பசி முதல் நாளில் மீண்டும் அயனப் பாைதயின் மையப்புள்ளிக்கு வருவான். அங்கிருந்து தெற்கு நோக்கி நகரும் சூரியன் தை முதல் நாளில் தென் கோடியை அடைந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்குவான். அந்த நகர்தல்தான் உத்தராயணம் என்பதாகும். அந்த உத்தராயண புண்ணிய நாளில் தான் நாம் சூரிய தேவனுக்கு உயர்வுடைய அனைத்துப் பொருள்களையும் அன்னத்தோடு அர்ப்பணிக்கின்றோம். புத்தரிசியில் செய்த பொங்கலை அன்னப்பலியாக இடுகின்றோம்.

சைவர்கள் சூரிய தேவனை சிவ சூரியன் என்பர். வைணவர்கள் சூரியனை சூரிய நாராயணன் என்பர். திருக்கோயில்கள் அனைத்திலும் உத்திராயண புண்ணிய நாளான தை முதல் நாளில் 108 அல்லது 1008 கலசங்களில் புனித நீரைக் கொண்டு நீராட்டுவது குறித்து பல நூறு கல்வெட்டுக்கள் பேசுகின்றன.சிவாலயங்களில் கருவறையைச் சுற்றி அமைந்து அட்ட பரிவாரங்கள் எனும் எட்டு முக்கிய தெய்வங்கள் வரிசையில் கீழ்திசையில் சூரியனுக்கு முக்கிய இடமுண்டு. சூரியதேவன் இல்லாத சிவாலயங்கள் இருக்க முடியாது. பல்லவர் காலந் தொட்டு தமிழ் நாட்டில் எடுக்கப் பெற்றுள்ள சிவாலயங்களில் எழில் மிகுந்த சூரிய தேவனின் சிற்பங்கள் இடம்பெற்று திகழ்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயத்தில் மிக உயரமான ஆழகிய பல்லவர் கால சூரியனின் திருமேனி இடம் பெற்றுள்ளது. திருச்சிராப்பள்ளி கிழக்குடை வரையிலும் மிகப் பிரம்மாண்டமான பல்லவர் கால சூரியனின் திருமேனி காணப்பெறுகின்றது. சோழ அரசர்கள் கல்லிலும், செம்பிலும் ஆதித்தனின் உருவங்களைக் கோயில்களில் இடம் பெறுமாறு செய்தனர்.முதற் குலோத்துங்க சோழன் கும்பகோணத்திற்கு அருகே காவிரியின் வட கரையில் சூரியனார் கோயில் எனும் ஊரில் சூரியனுக்கென தனித்த ஆலயம் ஒன்றினை எடுப்பித்தான். அதற்கு ‘குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலயம்’ எனப் பெயரும் இட்டான். சாயா, உஷா ஆகிய தேவியர் இருவருடன் இங்கு சூரிய பகவான் திகழ்கின்றார்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீரன் திருமண்டபத்தின் கோஷ்ட மாடத்தில் ஒரு அரிய சூரியனின் திருமேனியுள்ளது. உலோகத்தில் வடிக்கப் பெற்றது போன்ற வேலைப்பாடமைந்த இக் கற்சிற்பத்தில் ஒளிபட்டதுடன் நான்கு திருமுகங்கள், எட்டுக் கரங்கள், உடலில் ஒரு பாதி பெண் உரு ஆகியவற்றுடன் இவ்வடிவம் இருக்கும். மாடத்திற்கு மேலாக சோழர்கால எழுத்தில் ‘அர்தநாரி சூரியன்’ என எழுதப்பெற்றுள்ளது. எனவே அர்த்த நாரீஸ்வரரான சிவபெருமான் இங்கு சிவ சூரியனாக உமையவள் பாகத்துடன் காட்சி தருகின்றார்.

இதே போன்று நான்கு திருமுகங்கள், எட்டுக் கரங்கள் ஆகியவற்றுடன் திகழும் சூரியனின் திருமேனிகள் தில்லைக் கோபுரங்களிலும், திருவண்ணாமலை கோபுரத்திலும் கோஷ்ட தெய்வமாக காட்சி நல்குகின்றன. கும்பகோணம் நாகேஸ்வரன் திருக்கோயில் எனப்பெறும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் பிரகாரத்தின் ஈசான திக்கில் தனித்த சூரியன் ஆலயம் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிதம்பரம் (தில்லை) தெற்கு இராஜ வீதியை ஒட்டி செப்பகுழுநீர் கோயில் என்ற சிற்றாலயம் உள்ளது. அங்கு முன் மண்டபத்தில் அரிதினும் அரிதான சூரியனின் திருமேனி ஒன்று இடம் பெற்றுள்ளது. ஒரு சக்கரம், ஏழு குதிரைகளை தேராக ஸ்ரீ பீடம் விளங்க அத்தேரினை அருணன் செலுத்துகின்றான்.

தேர்மேல் சூரிய பகவான் தன் இரு தேவியர்களைான சாயா, உஷா சகிதராக நின்ற வண்ணம் காட்சி நல்குகின்றார். நிற்கின்ற பெருமானுக்கு பின்புறம் ஒளிவட்டமும் ஈரடுக்கு, தாமரை மலரும் காணப்பெறுகின்றன. செவ்வாய், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன், இராகு, கேது, சந்திரன், ஆகிய தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. வெளி அடுக்கான தாமரை இதழ்களில் மேஷம் முதல் பன்னிரண்டு இராசிகளுக்கு உரிய உருவங்கள் உள்ளன. கோள்களையும், இராசிகளையும் உள்ளடக்கிய சூரிய பகவானின் இத்திருமேனி அரிதினும் அரியதாகும்.

தஞ்சாவூரில் உள்ள ஒரு நடராஜரின் செப்புத் திருமேனி அரியதாக காட்சி நல்குகின்றது. ஆடவல்ல நடராஜரின் திருவாசி என்பது பிரபஞ்சம் என்பதைக் காட்டுவதாகும். அதில் எரியும் தீச்சுடர்கள் பிரபஞ்ச வெளியில் ஒளிரும் அண்டங்களாகும். பொதுவாக எல்லா நடராஜர் திருவடிவங்களிலும் தீச்சுடர்களை மட்டுமே காணலாம். ஆனால் இங்கு நாம் தஞ்சையில் காணும் திருமேனியின் பிரபாவளியில் தீச்சுடர்களுடன் ஒரு புறம் வானத்தில் மிதந்து செல்லும் சூரியனும் மறுபுறம் சந்திரனும் காணப் பெறுகின்றனர்.

ஒரு காலை மடித்து, ஒரு காலை பின்புறம் நீட்டிய நிலையில் ஒரு கையை உயர்த்தி ஈசனை போற்றும் நிலையில் ஒளிவட்டத்துடன் இச் சூரியன் மிதந்து செல்கின்றான்.கங்கை கொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் சிவாலயம் கங்கை கொண்ட இராஜேந்திர சோழனால் எடுக்கப் பெற்ற பெருங்கோயிலாகும். இக்கோயிலில் அப்பெருவேந்தன் வென்ற  பிற நாடுகளிலிருந்து ெகாண்டு வந்த பல தெய்வத்திருமேனிகளை பிரதிஷ்டை செய்துள்ளான். அதில் ஒரு திருமேனியாக சானுக்கிய நாட்டிலிருந்து செளரபீடம் எனும் சூரிய பீட மொன்றினையும் கொண்டு வந்துள்ளான். ஏழு குதிரைகள் பூட்டிய தேராக பீடம் விளங்க அதில் எட்டுத் திசைபாலகர்கள், எட்டு கோன்கள் உருவங்களோடு திகழ பீடத்தில் மேற்பாகம் அலர்ந்த தாமரை மலராகவுள்ளது. இதுவும் ஒரு அரிய சூரியனின் திருவடிவமாகும்.

தஞ்சாவூர் அரண்மனை நுலகமான சரஸ்வதி மகாலில் அரிய ஒரு வண்ணப்படம் உள்ளது. பெருவட்டமாக சூரியவட்டம் சுடர்களுடன் எரிந்துகொண்டிருக்க  வட்டத்தின் நடுவே ஒரு சக்கரத்துடன் உள்ள தேரும், ஏழுகுதிரைகளும், தேரோட்டும் அருணனும் காணப்பெறுகின்றனர். தேரின் மேல் சாயா, உஷா சகிதராக சூரியன் அமர்ந்துள்ளார்.

சூரியனுக்கு வெளியே நாற்திசைகளிலும் குடைபிடிப்போர் சாமரம் வீசுவோர், வேதம் ஓதுவோர், எக்காளம், மத்தளம், சங்கு போன்ற இசைக் கருவிகளை இசைப்போர் காணப்பெறுகின்றனர். இவ்வாறு ஊர்வலத்தோடு சூர்யத்தேர் பவனி வருகின்றது உத்தராயண நகர்வில் செல்லத் தொடங்கும் சூரியத் தேரினை தைத் திருநாளில் வணங்கி அருள் பெறுவோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: