×

ஜாதகம் காட்டும் தீமையை நீக்கிக் கொள்வது எப்படி?

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 14

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

இன்று ஜோதிடம் ஒரு சில முக்கியமான காரணங்களுக்காகவே பெரும் பாலும் பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமான விஷயம் திருமணப் பொருத்தம் பார்ப்பது.திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது, என்னைப் பொறுத்தவரையில் சில தவிர்க்கமுடியாத கேள்விகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் விஷயம். எந்த விஷயத்தையும் நாம் நடை முறையை ஒட்டியும், தர்க்கரீதியாகவும் அணுகினால் தான் சரியான விடை கிடைக்கும்.

திருமணப் பொருத்தம் பார்க்காது  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லது பெரியவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று நினைத்து செய்த திருமணங்கள், ஏதோ ஒரு விதத்தில் தோல்வி அடைகின்றன என்பதைப் பார்க்கின்ற பொழுது, ஒழுங்காக திருமணப் பொருத்தம் பார்த்து செய்திருந்தால் இப்படிப்பட்ட இடர்பாடு வந்திருக்காது என்று ஒரு
முடிவுக்கு வரலாம்.

ஆனால், நன்கு திருமணப் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் சில அதே மாதிரியான விளைவுகளை சந்திக்கின்ற பொழுது பல கேள்விகள் எழுகின்றன அல்லவா? என்ன சமாதானம்?

1. பொருத்தம் பார்த்து செய்தும் விதி விளையாடுகிறது. விதி ஜோதிடரை விட சாமர்த்தியமாக வேலை செய்கிறது.
2. பொருத்தம் சரியாகப்  பார்க்கவில்லை
3. ஜாதகம் சரியில்லை. பிழை இருக்கிறது.
4.சரியான ஜோதிட பொருத்தம் பார்க்கவில்லை.

இந்த ஜாதகத்தை இந்த ஜாதகத்தோடு சேர்த்து இருக்கக் கூடாது. என்றெல்லாம் இதற்கு சமாதானம் சொல்லலாம். ஜோதிடர்கள் சாஸ்திர அடிப்படையில் தங்களுக்கு தெரிந்த வரையில் பொருத்தம் பார்த்து கொடுக்கிறார்கள். அதை நம்பி திருமணம் செய்கிறார்கள். அது இயல்பாக நன்றாகப் போகின்ற பொழுது, எந்தப் பிரச்னையும் வரு வதில்லை. ஆனால் ஒரு சில ஜாதகங்கள், எதிரிடை விளைவுகள் தருகின்றபோது, திருமணப் பொருத்தம் பார்ப்பது குறித்து  சில குழப்பங்கள் வருகின்றன.

ஜோதிடக் கேள்வி பதில் பகுதிகளில், பெரும்பாலான கேள்விகள் திரு மணத்  தோல்விகள் மற்றும் மறுமணம் குறித்தே இருக்கின்றன. “நாங்கள் ஜோதிடரிடம் காட்டினோம். பொருத்தம் பார்த்துத்தான் செய்தோம். ஆனாலும் விவாகரத்தில் போய் நிற்கிறது.” “ஒரு வருடத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய ஆபத்து நேர்ந்து விட்டது. என்ன செய்வது?”- போன்ற கேள்விகள் தான் எழுகின்றன. நடந்து முடிந்த பிறகு, பெரும்பாலான ஜோதிடர்கள், “பொருத்தம் பார்த்தது சரி இல்லை. இந்த தசையில் நீங்கள் திருமணமே செய்து இருக்கக் கூடாது” என்று
சொல்லுகின்றார்கள்.

“தகுதியான ஜோதிடரிடம் காட்டி பொருத்தம் பார்த்து திருமணம் செய் யவும்” என்று சொல்லுகின்றார்கள். தகுதியான ஜோதிடர்கள் யார்? எப்படித்  தீர்மானிப்பது? என்பதில் நமக்கு
பெரும் குழப்பம் வந்துவிடுகிறது.  இப்பொழுது ஒரு சாமானிய மனிதன் தன்னுடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு பொருத்தம் பார்ப்பதற்கு யாரிடம் செல்வது? எப்படிப்  பொருத்தம் பார்ப்பது? என்கின்ற குழப்பம் நேருகிறது. இதற்கெல்லாம் ஜோதிடர்கள் கூடி முடிவெடுக்க வேண்டும்.  

சூட்சுமமான விதிகள் இருக்கின்றன. இப்படித்தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக விளக்கினாலும் நடைமுறையில் எத்தனை சதவீதம் பலன் தரும்? ஒரு ஊரில் ஒரு நாளைக்கு 500 பேராவது திருமணப் பொருத்தத்திற்கு வருகின்ற பொழுது ஊருக்கு 4 ஜோதிடக்காரர்கள் என்ற அளவில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஜோதிடர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவு பேரும் தகுதியானவர்களா  என்றும் ஒரு சிந்தனை.

ஆனால், அடிப்படை ஜோதிட விஷயம் என்ன என்று சொன்னால், நீ என்ன தான் பொருத்தம் பார்த்தால் கூட  அது அமைகிறபடிதான்  அமையும். அப்படியே பொருத்தம் பார்த்து “வேண்டாம்” என்றாலும் சேர்ப்பார்கள். “சேர்க்கலாம்” என்று சொன்னால், பணம், அழகு என்று ஏதாவது ஒன்று இடித்து சேர விடாமல் செய்யும். இதை ஆய்வு செய்கின்ற பொழுது, இன்னொரு விஷயமும் நான் கவனித்துப்  பார்த்தேன்.

ஓரளவு திருமண பொருத்தம் உடைய ஜாதகங்கள், தங்களுடைய குணாதி சயங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொண்டு கஷ்டப்படுவதைப்  பார்த்திருக்கின்றேன். “இந்த ஜாதகங்களை யார் சேர்த்து வைத்தார்கள்?இப்படி ஏடாகூடமாக இருக்கின்றது” என்று நினைத்த ஜாதகங்கள், நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியந்திருக்கிறேன். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். என்னதான் ஜாதகங்கள் சில விஷயங் களை சுட்டிக் காட்டினாலும் கூட, வாழ்வது என்பது அவ ரவர்கள் கையிலே தான் இருக்கின்றது.

1. தன்னை அறிதல் என்பது ஜாதகம் காட்டும் வாழ்க்கை.
2. அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழுதல் என்பது அவரவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை.

ஜாதகத்தில் காட்டிய சில விஷயங்களில் தன்னால் மாற்றிக்கொள்ள முடியாவிட்டால், தான் நினைத்தது போல வாழ முடியாத ஒரு நிலை வந்து விடுகின்றது. அடுத்து இன்னொரு விஷயம்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”  “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது  சரியான வார்த்தை தான். எத்தனை தான் போராடினாலும், அவரவர் கிரக நிலைக்கு தகுந்த கணவன் மனைவி தான்  அமைவார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதன் பலாபலன்களை அனுசரித்து வாழ்வது என்பது அவரவர்கள் மன நிலையைப் பொறுத்த விஷயமாக தான் இருக்கிறது. அதை அப்படியே அனுசரித்து வாழ்ந்து விட்டால் எப்படிப்பட்ட மனைவி இருந்தாலும் கூட வாழ்ந்து விட முடிகிறது.

அப்படி வாழ்ந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். காரணம் கிரகங்கள் வாழ்க்கை முழுவதுமே ஒருவரை வாட்டி வதைப்பது கிடையாது. கவியரசு கண்ணதாசன்சொன்னது போல, “யாருக்கும் ஒரு காலம் உண்டு. அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” அந்தப் பொறுமை உடையவர்கள் பூமியை ஆள்கிறார்கள் என்பது ஜாதகத்திற்கும் பொருந்தும்.பொறுமை இழப்பதும், தன்னுடைய தவறான குணத்தை திருத்திக் கொள்ளாமல் இருப்பதும், என உள்ளவர்களுக்கு   ஜாதகத்தில் என்ன கெட்ட பலன் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதை விட கூடுதலாகவே  கெட்ட பலன்  நடந்து விடுகிறது  என்பதையும் நான் பார்த்து இருக்கிறேன்.

ஜாதக  ரீதியாக நாம் இந்தப் பெண்ணுக்கு இந்த அமைப்புள்ள  கணவன் அமையலாம் என்று ஜாதகப் பொருத்தத்தை பார்க்கலாம்.  அப்படிப்பட்ட வாழ்க்கைதான் எப்படி சுற்றினாலும்  கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய நண்பர் தன்னுடைய அண்ணன் மகனுக்கு ஒரு வரன் பார்த்தார். எப்பொழுதுமே நான் நேரடியாக ஜாதக பலன்களை யாருக்கும் சொல்வது கிடையாது. அவர் பொருத்தம் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது செய்யலாம் என்று ஜோதிடர் சொன்னதாகச்  சொன்னார். நான் அப்பொழுது அவரிடம் சொன்னேன்.

“இதோ , பாருங்கள். நீங்கள் இதற்குமேல் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தப் பெண்தான் அந்தப்  பையனுக்கு அமைய வேண்டும் என்று சொன் னால், ஏதோ ஒரு விதத்தில் யாராவது வந்து சொல்லி அமைத்துத் தந்து விட்டு போய்விடுவார்கள். விதிக்கு இந்த  விஷயங்களை எல்லாம் சொல்லியா தர வேண்டும்? ஏதோ ஒரு விதத்தில் யாரோ கொடுத்து விட்டுப் போய்விடுவார்கள். அது நடந்துவிடும். அதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதுதான் நம்முடைய பிரச்னையாக இருக்க வேண்டும். இது நடக்காது என்று விதி முடிவெடுத்தால்  ஏதோ ஒரு விதத்தில் இது தடைபட்டு விடும்.  நீங்கள் காரியங்களைப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றேன்.

காரணம், அந்த ஜாதகத்தின் கிரக நிலைக்கும் அந்தப் பெண்ணின் கிரகநிலை அமைப்புக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. ஒரு வாரம் கழித்து நண்பர் வந்து சொன்னார்.
“அந்தப் பெண் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவள் வேறு ஒரு பையனோடு சென்றுவிட்டாள்”  என்று அந்தப் பெண்ணின் தகப்பனார் தன்னுடைய வீட்டுக்கு வந்து சொன்னதாகச் சொன்னார். அப்போது தான் சொன்னேன். “இது நம்மால் ஆகின்ற காரியம் இல்லை. விதி  யாரைச்  சேர்த்து வைக்க வேண்டுமோ, அவர்களை  நீங்கள் எத்தனைத்  தடுத்தாலும் சேர்த்து வைத்து விடும். யாரை பிரித்து வைக்க வேண்டுமோ  அவர்களைப்  பிரித்து வைத்துவிடும்.

நாம் இயன்ற அளவு நம்முடைய முழுமையான திறனோடு, இதனை  எதிர் கொள்வதில் தான் நம்முடைய வெற்றியும் சந்தோஷமும் இருக்கிறது.  ஜாதக குழப்பங்களை விட மனக்குழப்பங்கள் தான் அதிக பங்கு வகிக்கும். ஜாதகத்தில் உள்ள குழப்பங்களை  நகர்த்தி வைத்து விட முடியாது. ஆனால் மனக் குழப்பங்களை நம்மால் தீர்த்துக் கொள்ள முடியும்” என்று அவருக்கு நான் சொன்னேன். பிறகு நல்ல முறையில் அந்த பையனுக்கு கல்யாணம் நடந்து முடிந்தது.

இது எனக்கு தெரிந்து  பலர் வாழ்விலே நடந்திருக்கிறது. ஆகையினால் நீங்கள் எங்கே சுற்றினாலும் உங்களுக்குரிய மனைவி அல்லது கணவன் உங்கள் ஜாதகத்தில் அமைந்திருக்கிறது என்பது சர்வ நிச்சயம். 7ம் இடம் என்பது மனைவியையும் குறிக்கக் கூடிய விஷயம். அதே 7ம் இடம் என்பது மாரக ஸ்தானம் என்பதையும் மறந்து விடக்கூடாது. அது நட்புக்குரிய ஸ்தானம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. காரணம் அந்த இடத்தில்  மனைவியை மட்டும் நான் தேட முடியாது. ஆனால் மனைவியும் அந்த ஸ்தானத்தில் உண்டு.

நான் பரீட்சார்த்தமாக 35, 40 ஆண்டுகள் நன்கு வாழ்ந்த சில தம்பதிகளின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தேன். அப்படிப் பார்க்கும் பொழுது தான் மேலே சொன்ன பல விஷயங்கள் எனக்கு தெரியவந்தன. எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம் இடம், குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், 12ம் இடம் என்று சொல்லப்படுகின்ற சயன ஸ்தானம், எட்டாம் இடம் என்று சொல்லப்படுகின்ற மாங்கல்ய ஆயுள் ஸ்தானம், 3ம் இடம் என்று சொல்லப்படுகின்ற தைரிய வீரிய ஸ்தானம், 5ம் இடம் என்று சொல்லப்படுகின்ற காதல், பூர்வ புண்ணிய ஸ்தானம் இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் லக்னத்தோடு  தொடர்பு கொண்டு ஒருவருடைய திருமண வாழ்க்கையை தீர்மானித்து விடுகின்றன.

என்னுடைய நண்பர் ஒருவர் வெகுகாலம் தனக்கு அழகான பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. கடைசியில் அவர் பார்வையில் அழகாக இல்லாத ஒரு பெண்ணைத்  திருமணம் செய்து கொண்டார். நல்ல பெரிய குடும்பத்தில் இருந்து வந்த பொறுப்பான பெண்மணி அவர். வீட்டு வேலைகளில் சுறுசுறுப்பு. மாமியார் மாமனாரை கவனித்துக் கொள்வதில் நல்ல தனித்திறன். ஆனால் நம்முடைய நண்பருக்கு  அந்தப் பெண்ணின் மீது பெரிய ஈடுபாடு இல்லாமலேயே காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது.

அந்தக் குழந்தை பிறந்தது குறித்து கூட அவருக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இருப்பதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில வருடங்களில் நிலைமை மாறியது. தன்னுடைய மனைவியை போல் தனக்கு வேறு ஒரு நல்ல துணைவி கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை நடைமுறையில் புரிந்து கொண்டார். இவரை அந்தப் பெண்மணி கவனித்துக்கொள்வது, வீட்டைத்  தூய்மையாக வைத்துக் கொள்வது, குழந்தையை நன்கு கவனித்துக் கொள்வது, அற் புதமாக சமைப்பது , கோயிலுக்குத்  தவறாமல் செல்வது, தனக்குரிய நல்ல நட்பு வட்டத்தை
ஏற்படுத்திக் கொண்டு எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவது, என்று பல பல திறமைகள் அந்தப் பெண்மணியிடம் இருந்ததால், நண்பருக்கு மிக்க மகிழ்ச்சி.  

அவருக்கு ஈடுபாடு வந்துவிட்டது. என்ன காரணம்? ஜாதகம் கெடுக்க நினைத்ததை, அந்தப் பெண்மணி தன்னுடைய பொறுமையாலும், நேர்மறையான அணுகுமுறையால் கெடுத்துக்கொள்ளாமல் இருந்தது தான் காரணம்.

(இதம் சொல்வோம்!)

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா