×

ஜாதகத்தில் நவகிரக தோஷமா?: சொல்லவேண்டிய எளிய வழிபாடும் மந்திரங்களும்

ஜாதகத்தில் பற்பல தோஷங்கள் இருக்கும். எல்லா தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. நவகிரகங்கள் நாம் செய்த வினையின் காரணமாக அந்தந்த இடத்தில் அமர்ந்து அதற்கான பலனைத்  தருகின்றன. நல்ல கிரகங்கள் என்றும் கெட்ட கிரகங்கள் என்று எதுவும் கிடையாது. அந்தந்த கிரகங்கள் தங்களுக்கு இடப்பட்ட பணியைச் செய்கின்றன. நல்லது செய்தால் நல்ல பலன்கள், கெட்டது செய்தால் தீய பலன்கள் நடைபெறுகின்றன. இதை வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழியைக்கொண்டு மிக எளிதாகச் சொல்லி விடுகின்றார்கள்.

உண்மை அதுதான். ஒவ்வொருவருக்கும் வருகின்ற துயரங்கள்  பெரும்பாலும் அவர்களாகவே வரவழைத்து கொள்ளுகின்ற துயரங்கள். இப்படிப் பட்ட துயரங்களில் இருந்து விடுபடவும், நன்மை அடையும் அந்தந்த கிரகங்களின் அதிதேவதையை வணங்கலாம். அந்தந்த கிரகங்களின்  காயத்ரி மந்திரங்களை சொல்லி பாராயணம் செய்யலாம்.

1. சூரிய தோஷம்

சூரியதசை ஆறு வருடங்கள் நடைபெறும். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் 3ம் சூரியனுடைய நட்சத்திரங்கள். சூரிய தசை அல்லது சூரிய புத்தி உள்ளவர்கள்,தினசரி அல்லது குறைந்த பட்சம்  ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சப்தமியும் ஞாயிறும் சேர்ந்த நாள் சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். அன்று காலையில் விரதம் இருந்து, கிழக்கு நோக்கி அமர்ந்து, சூரிய நாராயணனை பூஜை செய்ய வேண்டும்.  சிவந்த தாமரை மலர்களை வைத்தும்  கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு வைத்தும்  சூரிய காயத்ரியை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

நவகிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனை வழிபட்டு, சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர். சத்ருக்களை அண்டவிடாமல் இருக்கவும், வெற்றியை நமக்கு வரவழைத்துக் கொடுக்கவும் இந்தச் சூரிய காயத்ரி மந்திரம் நமக்கு உகந்ததாக அமையும். சூரியனுக்குரிய தலங்களை சென்று வழிபடுவதாலும் சூரிய தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்.

1.ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
2.ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத்


சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற் சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப் படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.

2. சந்திர தோஷம்
 
மனோகாரகன் சந்திரன். சந்திரன் கெட்டால் மனம் கெடும். ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களும் சந்திரனுக்கு உரியது. ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனநிலை பாதிக்கும்.ஞாபக மறதி ஏற்படும். தாயுடன் மனஸ்தாபம், அல்லது தாயின் உடல்நிலை பாதிப்பு , நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத்தடை போன்றவை ஏற்படும். சந்திர தசை 10 வருடங்கள். சந்திர தசை அல்லது சந்திர புத்தி உள்ளவர்கள் அல்லது ஜாதகத்தில் சந்திரன் பலவீனமான நிலையில் இருப்பவர்கள் சோமவாரத்தில் விரதமிருந்து அம்பிகையை வணங்கலாம்.

திங்கட்கிழமைதோறும் அல்லது முழு நிலவு நாளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, ஐந்து விளக்குகளில் நெய் ஊற்றி, தீப மேற்ற வேண்டும். பின்பு சிவபெருமானையும் சந்திர பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும். நிவேதனமாகால் சாதம் படைக்க வேண்டும். வெள்ளை அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அன்னதானத்திற்கு அரிசியையும் தானம் வழங்குவது போன்ற செயல்களால் நாம் சந்திரனின் நல்லாசிகளை பெற முடியும். சந்திரனுடைய காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் சந்திரனால் வரக்கூடிய தோஷங்களை நீக்கிக் கொள்ளலாம்.

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திரஹ் ப்ரசோதயாத்


தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள் புரியுமாறு வேண்டுகிறேன்”.

3. செவ்வாய் தோஷம்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் முதலிய மூன்று நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். செவ்வாய் தசை 7 வருடங்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் செவ்வாய் பகவானை வணங்கலாம். ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும். 7ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தாம்பத்திய வீரியம் அதிகம் இருக்கும். காம சிந்தனைகள் அதிகரிக்கும். அதிக கோபத்தோடு பேசுவார்கள். அதீத தாம்பத்தியம் ஆசை உண்டாக்கும். மண விரிசலையே உண்டு பண்ணும் சூழல் உருவாகும். இது பொது விதி. விதி விலக்குகள் நிறைய உண்டு.

அனுசரித்து பலன் சொல்ல வேண்டும். 8ம் இடத்தில் செவ்வாய் என்பது மாங்கல்ய ஸ்தானம் மற்றும் ஆயுளை குறிக்கக் கூடியது ஆகும். ஆயுளைக் குறைக்கும் அல்லது ஆயுளை பங்கம் பண்ணும். ஆனால் விதி விலக்குகள் நிறைய உண்டு. பாதிப்பு தரும் சில நிலைகளை தகுந்த ஜோதிடர் மூலம் அறிந்து  நிவர்த்தி செய்து கொள்ளவும். செவ்வாய் பகவானின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமைகளில் பூஜை அறையில் முருகப்பெருமானுக்குத் தீபமேற்றி, தீப, தூபங்கள் சமர்பித்து, முருக பெருமானுக்குரிய மந்திரத்தையும், செவ்வாய் பகவானுக்குரிய 108 போற்றி, காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அவரின் அருளைப் பெற்றிடலாம்.

செவ்வாய் காயத்ரி மந்திரம்: ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்


4. புதன் தோஷம்

ஆயில்யம்,கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் புதனுக்குரிய நட்சத்திரங்கள். புதன் பகவானுக்கு ‘‘சவும்யன்” என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும். புதன் கெட்டால் புத்தி கெடும். தாய்மாமன் உறவு கெடும். நரம்பு கோளாறுகள் ஏற்படும்.  புதனுடைய தசா காலம் 17 ஆண்டுகள். புதன் தசை நடப்பவர்கள் அல்லது புத்தி நடப்பவர்கள் புதன் தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ள புளியோதரை படைத்து புதன்கிழமை புதன் ஹோரையில்  (காலை 6 முதல் 7 மணி வரை) புதனுடைய காயத்ரி மந்திரத்தை 24 முறை ஜெபித்து மகாவிஷ்ணுவை வழிபடலாம்.

பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.இதனால் புத தோஷம் நீங்கி விஷ்ணு பகவானின் அருளோடு, சிறந்த அறிவையும் கல்வியையும் பெறலாம்.

புதன் மந்திரம்:
ப்ரிங்கு கலிகா ச்யாம் ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்


புதன் காயத்ரி மந்திரம்:
ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே சுக
ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத: பிரசோதயாத்


5. குரு தோஷம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குரு பகவானுக்கு உரிய நட்சத்திரங்கள். குருவினுடைய தசா காலம் 16 ஆண்டுகள்.  குருதசை புக்தி  நடப்பவர்கள், முல்லை மலர்களால்அர்ச்சனை செய்ய வேண்டும். வியாழக்கிழமை கொண்டைக் கடலை தயிர்சாதம் படைத்து குரு பகவானை வணங்கலாம். குருவாக நினைக்கக்கூடிய தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர் மற்றும் மகான்களை தரிசனம் செய்வதன் மூலமாகவும் பூரண அருள் பெறலாம். இதனால்  தன தான்ய விருத்தி மற்றும் ஞானம் கிடைப்பதற்கு குருவினுடைய அருள் துணை புரியும். புத்ர பாக்கியம் கிடைப்பதற்கும் குருவினுடைய அருள் கிடைக்கும்.

ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’


என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

6. சுக்கிர தோஷம்

பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரத்துக்கு உரிய சுக்கிரனுக்குரிய ஆண்டுகள் 20 ஆண்டுகள். ஒருவன் மிக சந்தோஷமாக  இருக் கிறான்  என்று சொன்னால் அவனுக்கு “சுக்கிர தசை அடிக்கிறது” என்றெல்லாம் சொல்லுவார்கள். சுக்கிரன் மிகச்சிறந்த செல்வத்தையும், கலைகளையும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும், ஆடம்பரமான வாகனங்களையும், நல்ல வீட்டையும் தரக்கூடியவர். இந்த சுக்கிர திசை சுக்கிர புத்தி நடப்பவர்கள் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.நெய் கலந்த வெள்ளை அன்னம் படைத்து சுக்கிர காயத்ரியை 24 முறை  பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட வேண்டும். சுக்கிரனுடைய பரிபூரண அருளோடு களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர்
அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்


இந்த மந்திரத்தை தினம்தோறும் கூறுவதன் பயனாக சுக்கிரனால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை துதித்து வழிபடுவதால் சுக வாழ்வைப் பெறலாம்.

7. சனிதோஷம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் சனி பகவானுக்குரிய நட்சத்திரங்கள். சனிதசை கொடுமையான திசை என்று சொல்லுவார்கள். சனி தசை மட்டுமல்ல சனி புத்தி நடப்பவர்கள், ஏழரைச் சனி, கண்ட சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலிய நிலையில் இருப்பவர்களும், சனிக்கிழமை அன்று விரதமிருந்து, சனி பகவானை வணங்க வேண்டும். கருங்குவளை மலர் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மலர். எள் கலந்த சாதம் படைக்கவேண்டும். சனி காயத்ரியை தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். இதுதவிர சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமாகவும் பெருமாளை  வழிபடுவதன் மூலமாகவும்  சனியினுடைய தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்.

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!

சனி பகவானின் சுலோகத்தையும் சொல்லலாம்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

8. ராகு தோஷம்

திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் ராகு பகவானுக்குரிய நட்சத்திரங்கள். ராகு திசை 18 ஆண்டுகள். ராகு தசை, ராகு புத்தி உள்ளவர்கள் மற்றும் ஜாதகரீதியாக ராகு பகவானால் பாதிக்கப்பட்டவர்கள்,  கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ராகு தோஷம் நிவர்த்தியாக, மந்தாரை மலர்களால் ராகு பகவானை பூஜிக்க  வேண்டும். உளுந்து கலந்த  அன்னத்தைப் படைக்கவேண்டும். ராகுவினுடைய காயத்ரியை 27 முறை தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக ராகு பகவானின் பரி பூரண அருளைப் பெறுவதோடு சர்ப்ப தோஷ நிவர்த்தி பெறலாம். திருமணத் தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்


(நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.) பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை ஜபித்தால் ராகுதோஷம், நாகதோஷம் விலகும்.  வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு  சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வர லாம். பலன் உண்டு.

9. கேது தோஷம்

கேது ஞான காரகன். முதல் நட்சத்திரமே கேதுவினுடைய நட்சத்திரம் தான். அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று  நட்சத்திரத்துக்குரிய கேது பகவான் 7 ஆண்டுகாலம் தசையை நடத்துவார். இவர் செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டவராக (செம்பாம்பு) இருக்கிறார். எனவே ஒரு மனிதனுக்கு மிக அதிக செல்வத்தையும், ஞானத்தையும் கொடுப்பவராகவும் அதே நேரத்தில் மிகுந்த கஷ்டங்களையும், சோதனைகளையும் ஏற்படுத்தக்கூடிய கிரகமாக இருக்கிறார்.கேது திசை, கேது புத்தி உள் ளவர்கள், கேது பகவானை திங்கட்கிழமை விரதமிருந்து பல்வகை மலர்களை தூவி சித்திரான்னங்களை படைத்து வணங்க வேண்டும். 27 முறை கேது காயத்ரி மந்திரம் சொல்லி பாராயணம் செய்யவேண்டும். கேதுவுக்குரிய தேவதையான விநாயகப் பெருமானை வணங்குவதன் மூலமாக கேது பகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் துதித்து வருபவர்களுக்கு, வேத, வேதாந்த அறிவு உண்டாகும். மெய் அறிவைப் பெறலாம். பிரச்னைகளை வெல்லும் தைரியம் பிறக்கும். வியாதிகள் நீங்கும். பராக்கிரமம் உண்டாகும். செவ்வாய், சனிக்கிழமைகளில் இம்மந்திரத்தை துதிப்பதாலும் முழுமை யான பலன் கிடைக்கும்.

Tags : Navagraha Doshama ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி