×

நெகிழ்வான மார்க்கம்..!

வழிபாடுகளை நிறைவேற்றுவதற்குத்  தூய்மை கட்டாயம். குளித்து அல்லது அங்கத் தூய்மை செய்து  தூய்மையாக்கிக் கொள்வதற்குத் தண்ணீர் இன்றியமையாதது.தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. தண்ணீர் எங்குமே கிடைக்கவில்லை. தண்ணீர் இருந்தாலும்  கடுமையான குளிர், உடற் காயம், நோய் போன்ற காரணங்களால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை. இப்போது என்ன செய்வது?வழிபாடுகளை விட்டுவிடலாமா? கூடாது. இஸ்லாமிய வாழ்வியல் இதற்கொரு மாற்றுவழியைக் கூறுகிறது. தூய்மையான மண்ணால் சுத்தம் செய்துகொள்ளுங்கள் என்கிறது மார்க்கம். மண்ணால் செய்யப்படும் தூய்மைக்குத் “தயம்மும்” என்று பெயர்.

இரண்டு தோழர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். தொழுகை நேரம் நெருங்கி விட்டது. இருவரிடமும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை.அக்கம் பக்கம் முழுவதும் தேடிப் பார்த்தார்கள். எங்குமே தண்ணீர் இருப்பதற்கான தடயமே தென்பட வில்லை. ஆகவே இருவரும் தயம்மும் செய்து தொழுகை யை நிறைவேற்றினார்கள்.தொழுகையை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தொலைவு வந்தவுடனே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. தொழுகை நேரம் இன்னும் முடிவடையவில்லை.ஒரு தோழர், “இப்போதுதான் தண்ணீர் கிடைத்து விட்டதே. மீண்டும் அந்தத் தொழுகையை நிறைவேற்றுவதுதான் சரி” என்று தீர்மானித்துத் தண்ணீரால் அங்கத் தூய்மை செய்துகொண்டு மீண்டும் தொழுதார்.இன்னொரு தோழர், “ஏற்கனவே தொழுதது போதும். மீண்டும் அதே தொழுகையைத் தொழத் தேவையில்லை” என்று அமைதியாக இருந்துவிட்டார்.

பிறகு இருவரும் இறைத்தூதரிடம் வந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தார்கள்.நபியவர்கள், தொழுகையைத் திருப்பித் தொழாதவரைப் பார்த்து, “நீங்கள் நபிவழியை(சுன்னத்தை) அடைந்து கொண்டீர்கள். முதலில் தொழுத தொழுகையே போதுமானது” என்றார்.தண்ணீரால் அங்கத் தூய்மை செய்து, மீண்டும் தொழுதவரைப் பார்த்து,“உமக்கு இரண்டு நன்மைகள் உண்டு (தயம்மும் செய்து ஒரு முறை தொழுதாய். அதே தொழுகையைத் தண்ணீர் கிடைத்த பிறகு மீண்டும் தொழுதாய். ஆகவே இரண்டு நன்மைகள்)” என்று கூறினார்கள்.இரண்டு செயல்களையுமே நபிகளார் அங்கீகரித்து விளக்கம் அளித்தார்கள்.இஸ்லாமிய வாழ்வியல் மிகுந்த நெகிழ்வுத் தன்மை உடையது என்பதற்கு இந்த நிகழ்வு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி