×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

ராமாயணத்திலும் ஒரு பரிட்சித்

அயோத்தியில், இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த பரிட்சித்து எனும் அரசர், ஆட்சி செய்து கொண்டிருந்தார். (பாகவதத்தில் வரும் பரிட்சித்து, பாண்டவர்களின் சந்திர குலத்தைச் சேர்ந்தவர். இந்தப் பரிட்சித்து ஸ்ரீராமர் அவதரித்த சூரிய குலத்தைச் சேர்ந்தவர். அவர் வேறு; இவர் வேறு. பெயர்களை வைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) ஒருசமயம்... பரிட்சித்து வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றார். ஒரு மிருகம், அவர் கையில் அகப்படாமல் ஓடி விட்டது. அதைத் துரத்திக்கொண்டு தன்னந்தனி ஆளாகக் குதிரையில், வெகுதூரம் போய் விட்டார் பரிட்சித்து; மிருகம் அகப்படவில்லை.

மன்னரைப் பசியும் தாகமும் வருத்தின.அப்போது மன்னரின் பார்வையில், ஒரு தோப்பு தெரிந்தது. அடர்ந்திருந்த அத்தோப்பில், ஒரு குளம் இருந்தது. அதில் மலர்ந்திருந்த தாமரைப்பூக்களின் வாசமும் அழகும் மன்னரை இழுத்தன.மன்னர்தோப்பில் நுழைந்து குளத்தில் இறங்கினார்; நீர் குடித்துக் களைப்பைத் தீர்த்துக் கொண்டார். குதிரையும் நீர் குடித்துக் கரையேறியது. மன்னர், சில தாமரைப் பூக்களைத் தண்டோடு பறித்துக் கரையில், குதிரைக்கு உணவாகப் போட்டார்.

குதிரை அத்தண்டுகளைத் தின்னத் தொடங்கியது. கரையில் உட்கார்ந்திருந்த மன்னர், அப்படியே தரையில் படுத்தார். அதே நேரத்தில்...ஓர் இனிமையான பாடல், மன்னரின் காது களைத் தீண்டியது. அவர் ஆச்சரியப்பட்டார்; ‘‘இந்தக் காட்டில் மனித நடமாட்டமே இல்லை. ஆனால் பாட்டு கேட்கிறதே! எப்படி?’’ என்று ஆலோசித்த மன்னர் திரும்பிப் பார்த்தார்.ஈடு இணை சொல்ல முடியாத அழகோடு, பூக்களைப் பறித்தபடியே பெண் ஒருத்தி பாடிக் கொண்டிருந்தாள். மன் னர் பார்ப்பதை அறிந்த அவள், மெள்ள நடந்து வந்து மன்னரின் எதிரில் நின்றாள். அவளைப் பார்த்த அரசர், ‘‘பெண்ணே! யார் நீ? யாருக்கு உரியவள்?’’ எனக் கேட்டார்.

அதற்கு வந்தவள், ‘‘மன்னா! நான் ஒருகன்னிகை’’ என்று மட்டும் பதில் சொன்னாள்.மன்னர் முகம் மலர்ந்தது; ‘‘பெண்ணே! நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’’என்றார்.

கன்னிகை, ‘‘மன்னா! நீங்கள் ஒருவாக்குறுதி தந்தால், நான் உங்களைக் கணவராக ஏற்பேன். மற்றபடி வேறு எந்த முறையாலும் நீங்கள் என்னை, மனைவியாக்கிக்கொள்ள முடியாது!’’  என்றாள்.  ‘‘என்ன வாக்கு தர வேண்டும்? சொல்!’’என்றார் மன்னர். ‘‘என் கண்ணில் படும்படியாகத் தண்ணீரைக் காண்பிக்கக்கூடாது’’ என்றாள் கன்னிகை.‘‘கவலைப்படாதே! உன் பார்வையில் தண்ணீர் படாதவாறு, நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று வாக்குறுதி தந்தார் மன்னர். பிறகென்ன? மன்னருக்கும் கன்னிகைக்கும் காந்தர்வத் திருமணம் நடந்தது. தம்பதிகள் அங்கேயேகாட்டில் இருந்தார்கள்.அந்த நேரத்தில், மன்னரைத் தேடிக்கொண்டிருந்த அவரது படைகள், அங்கே வந்து சேர்ந்தன. மன்னர் தன் மனைவியையும்அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு பல்லக்கில் ஏறி அரண்மனை திரும்பினார்.

அங்கும் அரசர், அந்தப்புரத்திலேயே அரசியுடன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தார்; ஏராளமான பணிவிடைப் பெண்களைப் பணியில் அமர்த்தி, அரசியின் பார்வையில் தண்ணீர் படாதவாறு பார்த்துக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். பணிவிடைப் பெண்களும் ஒரு சொட்டு தண்ணீர்கூட, அரசியின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் எந்த நேரமும் அரசரையும் அரசியையும் சுற்றிவந்து, மிகுந்த எச்சரிக்கையோடு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

பணிப்பெண்களின் அந்த நடவடிக்கைகள், பிரதான மந்திரிக்கு சந்தேகத்தை உண்டாக்கின. அவர் பணிப்பெண்களிடம், ‘‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டார். 'அரசியின் பார்வையில் சொட்டுத்தண்ணீர் கூடப் படாதபடி, மன்னர் எங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். அதனால் இங்கே யாரும் தண்ணீர் கொண்டு வராதபடி நாங்கள், எச்சரிக்கையாகக் காவல்செய்து வருகிறோம். ஏனென்று தெரியவில்லை. அரசரின் கட்டளை அபூர்வமாக இருக்கிறது’’ எனப் பணிவிடைப் பெண்கள் பதில் சொன்னார்கள். மன்னரின் நடவடிக்கைகள் மந்திரிக்குச்சந்தேகத்தை ஊட்டின. அதன் காரணமாக அந்த மந்திரி ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்ததைப்போல அங்கிருந்து வெளியேறி, ஒரு காட்டை உண்டாக்கினார்.

அந்தக் காட்டில், தண்ணீரே இல்லை; ஏராளமான மரங்கள் இருந்தன; மலர்கள், பழங்கள், கிழங்குகள் என வகைவகையாக இருந்தன. இத்தனைக்கும் மேலாக அக்காட்டின் நடுவில், முத்துக்கள் வலைபோல மூடியிருக்கும் - சுவை மிகுந்த நீர் நிறைந்த (பார்வையில் படாத) ஒரு குளமும் உருவாக்கப்பட்டது.இப்படிப்பட்ட ஓர் அமைப்பைச் செய்து முடித்தார் பிரதமமந்திரி. அதன் பிறகு அவர், மன்னரைத் தனிமையில் சந்தித்து, ‘‘மன்னா!  ஓர் அற்புதமான காடு இருக்கிறது. அதில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் அங்கு தண்ணீர் மட்டும் இல்லை. நீங்கள் அரசியோடு அங்குபோய் சந்தோஷமாக இருக்கலாம்’’ என்றார்.

மன்னர் மறுக்கவில்லை; அரசியையும் அழைத்துக்கொண்டு அந்தக் காட்டிற்குப் போய்விட்டார். அங்கே ஒரு விபரீதம் காத்திருந்தது, அரசருக்குத் தெரியவில்லை. மன்னரும் அவர் மனைவியுமாகக் காட்டில் சந்தோஷ மாக இருந்தார்கள். ஒருநாள் காட்டில் மனைவியுடன் சுற்றிக்கொண்டிருந்த மன்னர், பசியாலும் தாகத்தாலும் துவண்டுபோனார். எதிரில் ஒரு முல்லைக்கொடி பந்தல் தெரிந்தது. மனைவியுடன் மன்னர் அப்பந்தலில் நுழைந்து உட்கார்ந்தார். (பிரதம மந்திரியின் ஏற்பாட்டின்படி உண்டாக்கப்பட்ட, முத்து வலைகளால் மூடப்பட்டிருந்த குளத்தின் கரையில்தான், மன்னரும் அவர் மனைவியும் உட்கார்ந்தார்கள்.)

என்னதான் முத்து மாலைகளால் மூடப்பட்டிருந்தாலும் அங்கு வீசிய சிலுசிலுப்பான காற்றும், குளத்தின் கரையில் அவ்வப்போது வந்து மோதும் சிறுசிறு அலைகளாலும் அங்கு குளம் இருந்ததை உணர்ந்தார் மன்னர்; தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கை மறந்தார். விளைவு?மன்னர் தன் மனைவியிடம், ‘‘ தேவி!நீ இந்தக் குளத்தில் இறங்கு!’’ என்றார். அரசியும் உடனே இறங்கினாள்.ஆனால், அவள் மீண்டும் வெளிப் படவே இல்லை.

மன்னர் திகைத்தார்; குளத்தில் இறங்கித் தேடினார். பலன் இல்லை. குளத்து நீரை முழுவதுமாக வெளியேற்றி, மறுபடியும் தேடினார். ஊஹும்! பலன் பூஜ்யம்தான்.அப்போது மன்னரின் பார்வையில் குளத்தில் இருந்த வளையும் அதன் வாசலில் இருந்த ஒரு தவளையும் தெரிந்தன. அதைப் பார்த்ததும் மன்னருக்கு அடக்க முடியாத கோபம் வெளிப்பட்டது. அதன் காரணமாக ஒரு கட்டளையும் வெளியிடப்பட்டது; ‘‘உலகத்தில் உள்ள தவளைகள் எல்லாவற்றையும் கொல்ல வேண்டும். இனிமேல் என்னிடத்தில் ஏதாவது காரியத்திற்காக வருபவர்கள், ஏராளமான தவளைகளைக் கொன்று அவற்றைக் காணிக்கைாக எடுத்துவந்து எனக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்!’’ என மன்னர் கட்டளையிட்டார்.

அரச கட்டளை ஆயிற்றே! கேட்க வேண்டுமா? கண்ட இடங்களில் எல்லாம் தவளைகள் கொல்லப்பட்டன. அகப்படாமல் தப்பிப் பிழைத்த தவளைகள் எல்லாம் நடுங்கிப்போய், மண்டூக (தவளை) அரசரிடம் முறையிட்டன.அவைகளின் துயரத்தைத் தீர்ப்பதற்காக, மண்டூக அரசர் ஒரு தவசியைப்போல வேடம் போட்டுக்கொண்டு (தவளைகளைக் கொல்லும் பரிட்சித்து) மன்னரிடம் போனார்.போனதும் மன்னரிடம், ‘‘ பரிட்சித்து மன்னா! நீ கோபத்திற்கு வசப்படாதே! இரக்கம்கொள்! நிரபராதிகளான தவளைகளை நீ கொல்லுதல் முறையல்ல. தர்மசீலனே! கோபத்தை நன்றாக அடக்கிக்கொள்!

‘‘தர்ம-அதர்மங்களை அறியாத மக்களின் செல்வச் சிறப்பும் தவச்சிறப்பும் அழிந்து போகின்றன. இதை மனதில் பதிய வைத்துக்கொள்! தவளைகளைக் கொல்வதால், உன் கோபம் தணியாது.அதர்மத்தை நீ செய்யாதே! தவளைகளைக் கொல்வதால், உனக்கு என்ன பயன்?’’ என்று அறிவுரை சொன்னார்.மண்டூக ராஜாவின் அந்த வார்த்தைகள், பரிட்சித்து மன்னரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவ்வார்த்தைகள், விருப்பமான மனைவியை விட்டுப் பிரிந்ததால் உண்டான துயரத்தைப் பரிட்சித்திற்கு மேலும் அதிகப்படுத்தின.

பரிட்சித்திடம் இருந்து கோப வார்த்தைகள் வெளிப் பட்டன; ‘‘ நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன். தவளைகளையெல்லாம் கொல்லுவேன். கெட்ட எண்ணமுள்ள இந்தத் தவளைகளால், என் மனைவியானவள் அழிக்கப்பட்டாள். இதனால் எல்லா விதங்களிலும் தவளைகளை நான் கொல்ல வேண்டும். அறிவாளியான நீ என்னைத் தடுக்கக் கூடாது’’ என்றார் அவர். மன்னரின் தீவிரமான வாரத்தைகளைக் கேட்ட மண்டூக ராஜனுக்குப் பொறிகளும் மனமும் கலங்கின. அவர் பரிட்சித்தைப் பார்த்து, ‘‘மன்னா! தயை செய்! நான் ஆயு என்னும் பெயர் பெற்ற மண்டூக ராஜன்.

உனக்கு மனைவியாக இருந்தவள் பெயர் ‘சுசோபனை’. அவள் என் மகள் தான்.’’‘‘அவளுடைய தீய நடவடிக்கையால் தான், இவ்வாறு தீமை விளைந்தது. அவளால் இதற்கு முன் பல அரசர்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள்’’ என்ற உண்மையான காரணத்தை விரிவாகச் சொன்னார்.அதைக் கேட்டதும் பரிட்சித்து, அடுத்து ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘அப்படியா? உன் மகளான அவளை நான் விரும்புகிறேன். எனக்கு அவளை நீ கொடுக்க வேண்டும்’’ என்றார். (அப்படிச் செய்தால்,தவளைகளை நான் கொல்ல மாட்டேன்- என்பது பொருள்).

பரிட்சித்தின் நிந்தனையை,மண்டூக ராஜா ஏற்றுக் கொண்டார். உடனே தன் மகளான சுசோபனையை மன்னரிடம் ஒப்படைத்தார். அத்துடன் மகளைப் பார்த்து, ‘‘பெண்ணே! இனி நீ தவறு செய்யாதே! இந்த மன்னருக்கு மனைவியாக இருந்து பணிவிடை செய்!’’ என்றார்.அப்போதும் மண்டூக மன்னருக்குக் கோபம் அடங்க வில்லை; ‘‘சுசோபனை! மகளே! உன்னுடைய பொய்யான ஒழுக்கத்தால், பல அரசர்களை நீ வஞ்சித்திருக்கிறாய். இதனால்,வேத வல்லுனர்களுக்குத் தீங்குசெய்யும் குழந்தைகள், உனக்கு உண்டாகும்’’ எனச் சாபமிட்டார்.

அதே நேரத்தில்,தவளை இனத்தை மரணப்பிடியிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்ற மனத் திருப்தியும் மண்டூக ராஜாவிற்கு இருந்தது. பரிட்சித்து மன்னரோ,மனைவி திரும்பக் கிடைத்ததில் மூவுலக ஆட்சியையும் அடைந்ததைப்போல, ஆனந்தக் கண்ணீர் வடித்தார்; வார்த்தைகள் தடுமாறின. அவர், மண்டூக ராஜாவைப் பூஜித்து, ‘‘ நீங்கள் எனக்கு அருள்புரிந்ததற்கு நன்றி! நன்றி!’’ என்றார்.மன்னரிடமும் மகளிடமும் விடைபெற்று, மண்டூக ராஜா திரும்பினார். மிகுந்த மகிழ்ச்சியோடு பரிட்சித்து மன்னரும் மனைவியை அழைத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார்.

(தொடரும்)

பி.என்.பரசுராமன்

Tags :
× RELATED சுந்தர வேடம்