×

அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-90

‘‘இருநாழி கொண்டு’’

‘‘நாழி’’ என்பது நெல், அரிசி போன்ற பொருட்களை அளக்கும் பாத்திரமாகும். தற்கால அளவையில் ஒரு படி எனலாம். இது ஒன்றே கால்கிலோவாகும். இருநாழி என்பது இரண்டரை கிலோவாகும். தலபுராண தகவல்படி இருநாழி நெல் கொண்டு உலக உயிர்களுக்கு அதாவது மானுடர்களுக்கு உணவுப்பஞ்சம் நீங்க விதை நெல் அளித்தருளினார். இந்த விதை நெல்லானது ஒரு மா நிலமளவிற்கு விதைத்தால் ஒரு ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மூன்று வேளை ஒரு வருடத்திற்கு பசிப்பிணி இன்றி வாழ உதவும். அதோடு மட்டுமின்றி வரக்கூடிய வருடத்திற்கும் ஒரு நாழி நெல்லை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் மக்கள் ஆண்டுதோறும் உணவுப்பஞ்சமின்றி வாழ வழிவகுத்தார்.

இறைவன் முதன் முதலில் இறைவி கேட்டதற்கிணங்கி உலக உயிர்கள் உய்ய நெல்லை உருவாக்கித் தந்தார். இதையே திருமுறை வித்து இன்றியே விளைவு செய்குவான் என்கிறது. வித்தின்றி விளைவு செய்வதையே அபிராமி பட்டர் இங்கு குறிப்பிடுகின்றார். இறைவனுக்கு நன்றி தெரிவிக்க முதன் முதலில் அளந்த அளவைக்கு ‘‘சிவ’’ என்று பெயரிட்டனர். சிவ என்ற சொல்லானது நெல் அளக்கும் பாத்திரத்தின் பெயராகும். அளவைபாத்திரத்தின் வடிவமும் சிவலிங்கபாணத்தை போன்றே அமைந்திருக்கும். இதையே கிராமப்புறங்களில் நிமிர்ந்த மரக்கா கவிழ்ந்த சிவம் மகிழ்ந்த மக்கள் என்பர். அபிராமி பட்டர் காலத்தில் இவ்வழக்கை அறிந்தோ இரு நாழி கொண்டு’’ என்று குறிப்பிடுகிறார்.

‘‘நாழி’’ என்பதற்கு இருபத்தி நான்க நான்கு நிமிடம் என்பது பொருள். சைவ யோகத்தில் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சி பயிற்சி 12+24+12 என்ற மாத்திரை அளவுள்ள மூச்சு இழத்தல் (பூரகம்) மூச்சை அடக்கல் (கும்பகம்), மூச்சை விடுதல் (ரேசகம்) என்ற வழக்கின்படி உடலில் உள்ள உயிரை வெளியில் செல்ல ஒட்டாமல் காத்து நிற்கின்ற பண்பிற்கு ‘‘இருநாழி’’ என்பர். இது ஒரு கலைச் சொல். இந்்த மூச்சு பயிற்சியை அமிர்த ப்ராணாயாமம் அமிர்த கும்பம், அமிர்த கடம், என்று குறிப்பிடுவர். திருக்கடையூரின் என்றும் இளமையுடன் இறவாமல் இருக்கின்ற மார்கண்டேயர் மூச்சில் சிவபெருமானை நிறுத்தி வழிபட்டார். அப்போது தான் கூற்றை சிவபெருமான் உதைத்தார். இதயே திருமூலர் காற்றை பிடிக்கும் கணக்காளர்க்கு கூற்றை உதைக்கும் குறி அதுவாமே என்று கூறுவதிலிருந்தும் அறியலாம்.

‘‘ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு’’ என்பது மூச்சின் அளவைக் குறித்தது. இது துறவற அறமாகும். இல்லறத்தார்க்கு உணவுக்கு நெல்லையும், துறவறத்தார்க்கு உயிர்காக்க மூச்சு பயிற்சி யோகத்தையும் வழங்கினார் சிவம் என்கிறார், பட்டர்.திருக்கடவூர் தலவரலாற்றின் படி இவ்யோகத்தை பிரம்மாவிற்கு தட்சிணாமூர்த்தி உபதேசித்தருளினார் என்கிறது. இவ்வத்துணை நோக்கையும் மனதில் கொண்டே ‘‘இருநாழி கொண்டு’’ என்று குறிப்பிட்டார். இல்லறத்தார் ப்ராணாயாமம் ஒருநாழி என்றும், 4+8+12, துறவறத்தார் ப்ராணாயாமம் 12+24+12 என்ற மாத்திரை அளவுக்கு சைவ சாத்திரம் என்ற ஆகமத்தின் ‘‘யோக பாதம்’’ தனித்தனியே ப்ராணாயாமத்தை குறிப்பிடுகிறது. அதன் வழி பட்டர் ‘‘இருநாழி’’ என்ற வார்தையால் ஒன்று நெல்லையும் மற்றொன்று மூச்சையும் குறிப்பிட்டார்.

‘‘அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்’’

அண்டம் என்பது பூமியில் வசிக்கும் உயிரினங்களை குறித்தது. அவை உய்வு பெறும் பொருட்டு மனம், வாக்கு காயத்தை இயக்கி செய்யும் செயலே அறம் எனப்பட்டது. ‘‘அறம்’’ என்பது ஒரு கலைச் சொல். செயலே அதன் விளைவு சார்ந்து அறம் என்றும் பாவம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பாவம் என்பது எந்த செயலில் விளைவானது அதை செய்பவருக்கோ அல்லது சார்ந்தோர்க்கோ. முக்காலத்திற்கும் துன்பத்தை விளைவாக தருமோ அது பாவம். எந்த செயலின் விளைவானது அது தொடர்பானவர்க்கு கடந்த நிகழ்வு, எதிர் என முக்காலத்திலும் இன்பத்தையே பயனாக விளைவிக்குமோ அதற்கு அறம் என்று பெயர் என்ற பொதுவான இலக்கணம் இருந்தாலும் எண்ணிக்கை சார்ந்து, அது அனுபவிக்கும் காலம் சார்ந்து, செய்யப் படும் நோக்கம் சார்ந்து சில செயல்களின் விளைவு பாவமாக இருந்தாலும் அறம் என்றும், அறமாக இருந்தாலும் பாவம் என்றும் தர்ம சாத்திரங்களால் வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் ஆன்ம விடுதலை (வீடுபேறு) பெறும் பொருட்டு செய்யப்படும் அனைத்தும் அறமாம்.

இந்த அறமானதை வேதம், ஆகமம், ஸ்மிருதிகள் போன்றன எது அறம், எது அறமில்லாதது, எது பாவம் என்பதை அதுவே முடிவாக வரையறை செய்கிறது. இதையே ‘‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’’ 79, பரமாகம பத்ததியே என்ற வார்த்தைகளால் நன்கு அறியலாம். அதில் மிக முக்கிய இரண்டும் அறம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று இல்லறம், இரண்டு துறவறம்.

உமையம்மையானவள் காஞ்சியிலே இல்லறத்தை வளர்ப்பதற்காகவும், காசி, திருவையாறு போன்ற இடங்களில் துறவறத்தை செய்பவனாயும் இருக்கின்றாள். அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்தினி என்று திகழ்வதிலிருந்து இதை உணரலாம். இதையே பட்டர் துறவறத்தை வளர்க்கும் விஷ்ணுவடிவான தர்ம சம்வர்தினியை ‘‘வெங்கட்பணி அணை மேல்துயில் கூறும் விழுப்பொருளே என்கிறார். துறவரம் என்பது துறவும், அடக்கமும், தூய்மையும், தவமும் ஆச்சாரமும் என உணர்க.

துன்பத்தில் துவளும் உயிர்களுக்கு அதை நீக்கவும், இன்பத்தைப் பெறவும், அதை பெருக்கவும், முக்தி அடையவும், ஞானம் பெறவும் செய்கின்ற செயல் யாவும் ‘‘உய்ய’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிட்டார். உலக உயிர்கள் அனைத்தும் மேற்கண்ட நால்வகை பயனை அடைய அறநூல் வழி செய்ய வேண்டிய காலம், இடம், நிகழ்வு சார்ந்து அமைந்த பண்புடைய செயல் அறம் அதையே ‘‘அண்டமெல்லாம் உய்ய அறம் செயும்’’ என்கிறார்.

‘‘உன்னையும் போற்றி’’

போற்றுவது என்பது ஒரு செயல் அதை மூன்று பொருளில் பயன்படுத்துகிறார்.உண்மையான தன்மை அதன் உயர்வு கருதி பயன் கருதாது போற்றுவது என்பது வேத ஆகமங்கள் இறைவனை குறித்து அதன் உண்மைத் தன்மையை விளக்கி கூறுவதாகும். உயர்வு நவிற்சி இல்லாமல் இயல்பு நவிற்சியால் குறிப்பிடுவதை ‘‘போற்றி’’ என்றும் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அதை நிறைவேற்றுபவரை ஆதாயம் கருதி வாழ்த்துவது. தேவை கருதியும், ஆசை கருதியும் அதை தீர்ப்பவரை அவ்வாறு இல்லாவிடினும் பெய்யாக பெரும் நோக்குடன் போற்றுவது. இது இழிவுச் சிறப்பு என்பதாகும்.

இத்தகைய புகழ்ச்சி என்பது அபிராமி பட்டர் காலத்தில் செல்வந்தர்களை நாடி சென்று அவர்களிடத்தில் இல்லாத பண்புகளையும் உள்ளதாக கூறி பாடி போற்றி தேவையை நிறைவு செய்து கொள்வது அக்கால வழக்கில் வறுமை சார்ந்த அறிஞர்களிடம் இருந்தது. அப்படி செல்வந்தர்களை பாடியும், ஆசையும் தேவையும் நிறைவேறுவதும் உண்டு, நிறைவேறாது போவதுமுண்டு. இப்படி போற்றுவது என்பது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உயர்ந்த பயனை தரவல்லதல்ல. அதற்கு மாறாக ஒரு சிறிது காலம் மட்டும் தேவையையும் ஆசையையும் பூர்த்தி செய்யும் அழிவுறும், குறைவுறும் நெல், பணம், துணி, மணி, ஆடு, மாடு, பூமி இது போன்று உலகியல் சார்ந்த பொருட்களையே பயனாக பெறுவதற்காக போற்றுவதாகும். இது இழிவு பண்பு தான் ஒன்றை அடையும் பொருட்டு ஆசை கருதி அந்த ஆசையை நிறைவேற்றுபவரை அதை அடைவதற்காகப் புகழ்வது.    

அபிராமி பட்டர் மானுடரையும், கடவு ளையும் தான் போற்றியதாக குறிப்பிடுகின்றார். அதில் மானுடரை போற்றுவதை இழிவாகவும், கடவுளை போற்றுவதை உயர்வாகவும் கருதுவதால் அது இரண்டையும் செய்யும் நிலைமை தனக்கிருப்பதை குறிப்பிட்டு வருத்தப்படுகின்றார். கடவுளை தவிர யாரையும் போற்றக் கூடாது என்று மனதில் நினைக்கின்றார். இதை ‘‘பரமென்று உனை அடைந்தேன்’’-88. சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்’’- 51 என்பதனால் இறைவியை போற்றுவதையும், நாலும் குடில்கள் தோறும் ‘‘பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர்’’-67. ஆசைக்கடலுள் அகப்பட்டு’’- 32.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?