சிற்பமும் சிறப்பும்-லிங்கம் சுமந்த சிவனின் அருட்கோல வடிவம்

ஆலயம்: மூவர் கோயில், கொடும்பாளூர், புதுக்கோட்டை மாவட்டம்

காலம்: வேளிர் குல சிற்றரசர் பூதி விக்கிரம கேசரி (10-ஆம் நூற்றாண்டு)

‘கொடும்பாளூர்’  என்ற ஊர்பெயரை கேட்டவுடனே பொன்னி யின் செல்வனும்,  வானதியும் நினைவுக்கு வருவார்கள்.பேரரசர் ராஜராஜ சோழனின்  மனைவி வானதி கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி.‘வானதி’ என்னும் வானவன் மாதேவி தான், பேரரசர்  இராஜராஜ சோழனின்  ஒரே மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் தாயார்.பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை, சோழநாட்டுத் தெற்கு எல்லை, என இவ்விரண்டு நாட்டையும்  இணைத்த பெரு வழியில் (இன்றைய திருச்சி-மதுரை சாலை) அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் (இருங்கோ வேள்) தலைநகராக விளங்கியது.

தொன்மை வாய்ந்த நகரான கொடும்பாளூரை ‘கொடும்பை’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.உறையூரில் தங்கயிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றபோது அந்நெடிய வழியில் முதலில் கடந்ததாகக் குறிப்பிடப் பெறுவது ‘கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்’ என்ற இடமாகும்.

“கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்

பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய

அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்”

(காடு காண் காதை, 71-73)

இந்த இடத்திற்குச் சென்ற பிறகு, சிவபெருமானின் திரிசூலம் போன்று அந்த வழியில் மூன்று தடங்கள் பிரிந்து சென்றதாகவும் அவற்றில் வலப்பக்க வழியாக மதுரை நோக்கி அவர்கள் பயணம் செய்தனர் என்றும் இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.இப்பகுதியை ஆட்சி செய்த இருக்குவேளிர், சோழர் ஆட்சியில் செல்வாக்கு மிகுந்த சிற்றரசர்களுள் ஒருவராவார். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் அவர்களுடன் இணைந்து பெரும்பங்காற்றினர்.சோழ மன்னர்களும், கொடும்பாளூர் இருக்கு வேளிர்களும் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொண்டு தமது உறவை வலுப்படுத்திக்கொண்டனர்.

அறுபத்திமூன்று  நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனாரின் பிறப்பிடம் கொடும்பாளுர் ஆகும்.இவ்வளவு வரலாற்றுச்சிறப்பு மிக்க கொடும்பாளூரை ஆண்ட வேளிர்குல அரசனான பூதிவிக்கிரமகேசரி (பொ.யு.10-ஆம் நூற்றாண்டு) என்பவரால் ‘மூவர் கோயில்’ என்னும் மூன்று அழகிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

பூதிவிக்கிரமகேசரி, மூவர் கோயிலில் நடுக்கோயிலைத் தன் பெயராலும், மற்ற இரு கோயில்களைத் தன் மனைவியரான ‘அனுபமா’( முதலாம் பராந்தக சோழனின் மகள்), ‘கற்றளி’ என்ற இருவரின் பெயராலும் எடுப்பித்தான் என்று கூறப்படுகிறது. வேளிர் குலத்தினரின் பராக்கிரமப் போர் பங்களிப்புகள் பற்றி மூவர் கோயிலில்  நடுக்கோயிலின் சுவரில் கிரந்த கல்வெட்டு

தெரிவிக்கிறது.

மூன்று கற்றளிகளும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளி விட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை.  நாகர பாணியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இரண்டு கற்றளிகள் தற்போது முழுமையாகக் காணப்படுகின்றன. மற்றொன்றின் தரைப்பகுதி கட்டுமானம் மட்டுமே உள்ளது. நடுக்கோயிலில் மட்டுமே சிவலிங்கம் இன்று உள்ளது.

இம்மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்று, மண்டபங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் எஞ்சியுள்ளன.இக்கோயில்களின் கிரீவ, தேவகோட்டங் களில் அமைந்துள்ள அர்த்தநாரி, ஆடல்வல்லான், காலாரி, ஹரிஹரன், முருகன், வீணாதரர், கல்யாணச்சுந்தரர், கங்காதரர், உமாமகேசுவரர், பிட்சாடனர் போன்ற சிற்பங்களின் எழிலும் கலையம்சமும்

கண்டோர் களிப்புறும் வண்ணம்  நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.

லிங்கம் சுமந்த சிவன் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நாயகன் சிவலிங்கத்தை தன் தோளின் மீது சுமந்து வரும் காட்சி இடம்பெற்றிருந்தது.அக்காட்சியை அப்படத்தின் இயக்குநர் நடுக்கோயிலின் கிரீவ கோட்டத்தில் அமைந்துள்ள இந்த சிற்பத்தைக் கண்டு தான் அமைத்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.காளையின் தலையில் தன் வலது முன் கரத்தை அமர்த்தியும்,  தன் வலத்தோளில் லிங்கத்தை ஏந்தி வலது பின்கரத்தால் பிடித்தபடியும், இடது பின் கரத்தில் மானைத் தாங்கியும், இடது முன் கரத்தில் வரத முத்திரையுடனும், வலக்காலை மடக்கியும், இடக்காலில் குத்திட்டபடியும் அமர்ந்தவாறு காணப்பெறும் சிவனின் இந்த அருட்கோல வடிவம் தனிச்சிறப்புடையதாகும்.

“தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்

தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்

தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்

தன்மேனி தானாகும் தற்பரம் தானே”

(திருமந்திரம் - 1750,  திருமூலர்)

வேளிர்களின் இவ்வழகு கலைக்கோயில்கள் மத்திய தொல்லியல் துறையினரால் இன்று சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.

செய்தி: படங்கள்: மது ஜெகதீஷ்

Related Stories: