அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

386. வ்யவஸாயாய நமஹ (Vyavasaayaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை - துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)உத்தானபாதன் என்ற அரசனுக்கு இரு மனைவிகள். மூத்தவள் சுநீதி, இளையவள் சுருசி. சுநீதியின் மகன் துருவன், சுருசியின் மகன் உத்தமன். உத்தானபாதன் தனது இரண்டாவது மனைவியான சுருசியிடமும் அவளது மகனான உத்தமனிடமுமே அதிக அன்பு செலுத்தி வந்தான்.

ஒருநாள் தந்தையின் மடியில் அமர விரும்பி, துருவன் சென்றபோது, மாற்றாந்தாயான சுருசி அவனைத் தடுத்தாள். “நீ காட்டுக்குப் போய் தவம் புரிந்து என் மகனாக வந்து பிறந்தாலே ஒழிய இவர் மடியில் அமர உனக்குத் தகுதி கிடையாது!” என்று சொல்லி விட்டாள்.

அழுதுகொண்டே தனது தாய் சுநீதியிடம் வந்தான் துருவன். நடந்தவற்றை அறிந்துகொண்ட சுநீதி, நிதானமாக, “மகனே வருந்தாதே! சித்தி நல்ல விஷயம் தான் கூறி இருக்கிறாள். நீ திருமாலைக் குறித்துத் தவம் புரி. அதன்பின் இந்தத் தந்தையின் மடி என்ன? அதைவிடப் பெரிய ஸ்தானத்தையே உனக்குத் திருமால் அருள்வார்!” என்றாள்.துருவனும் தவம்புரிவதற்காக வனம் சென்றான். நாரதரின் திருவருளால் திருமாலைத் தியானிக்கும் முறையையும் அவரைக் குறித்த மந்திரத்தையும் அறிந்து கொண்டான். அதன்பின் கடுந்தவம்புரிந்து அதன் பலனாகத் திருமாலைத்

தரிசித்தான் துருவன்.

அப்போது துருவனிடம் திருமால், “குழந்தாய்! உன் பக்திக்குப் பரிசாக முக்தி அளிக்க உள்ளேன். ஆனால் அதற்கு முன்பு நீ உனது நகரத்துக்குத் திரும்பச் சென்று முடிசூட்டிக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும். அதன்பின் வானில் உயர்ந்து நிற்கும் ஒரு பதவியை அடைவாய். உன்னை உலகமே அண்ணாந்து பார்த்துக்

கொண்டாடும். அதன்பின் என்னை வந்தடைவாயாக!” என்றார்.

“அது என்ன பதவி?” என்று கேட்டான் துருவன். அப்போது திருமால், துருவனுக்குத் தான் வழங்க உள்ள பதவியின் சீர்மை பற்றி விளக்கினார். ஸ்ரீமத் பாகவத புராணத்தில் திருமால் துருவனிடம் சொல்வதாக வரும் ஸ்லோகங்கள் இவை:

“நான்யை: அதிஷ்டிதம் பத்ர யத் ப்ராஜிஷ்ணு: த்ருவ க்ஷிதி:

யத்ர க்ருஹ ருக்ஷ தாராணாம் ஜ்யோதிஷாம் சக்ரம் ஆஹிதம்”

“‘துருவ’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான (துருவ) பதவியை உனக்கு அளிக்க உள்ளேன். இதுவரை யாரும் அந்தப் பதவியை அடைந்ததில்லை. நவகிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் அதனுடன் சேர்த்து உறுதியாகக் கட்டப் பட்டுள்ளன. நானே அந்த துருவப் பதவியில் ஆதார மையமாக இருந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தையும் தாங்கி வருகிறேன். இப்போது அந்த ஸ்தானத்தை எனது பக்தனான உனக்கு அருள்கிறேன்.”

“மேட்யாம் கோ சக்ரவத் ஸ்தாஸ்னு: பரஸ்தாத் கல்ப வாஸினாம்

தர்மோக்னி: கச்யப: சுக்ரோ முனயோ

யே வனௌகஸ:

சரந்தி தக்ஷிணீ க்ருத்ய ப்ரமந்தோ யத் ஸதாரகா:”

“தூணில் கட்டப்பட்ட மாடுகளைப் போல், தர்ம தேவதையும், நட்சத்திரங்களும், அக்னி தேவனும், ஏழு பெரும் முனிவர்களும் அந்த துருவ ஸ்தானத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆதார மையமான பதவியில் நீ இனி வீற்றிருப்பாயாக.”

திருமால் அருளியபடி நகருக்குத் திரும்பிய துருவன் முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டு விட்டு, அதன்பின் துருவ பதவியை அலங்கரித்து, இன்றளவும் உலகமே வியந்து அண்ணாந்து பார்க்கும் படி ஓங்கி உயர்ந்து விளங்கிக்கொண்டிருக்கிறான். அனைத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் கோள்களும் அந்த துருவ ஸ்தானத்தையே தமக்கு ஆதார மையமாகக் கொண்டு, அதனோடு கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

இத்தகைய ஸ்தானத்தைத் தனது அருளால் துருவனுக்குத் திருமால் அருளினார். எனினும் இயற்கையில் அந்த துருவ ஸ்தானத்தில் துருவ மூர்த்தியாகத் திருமாலே இருக்கிறார். அவரிடம் தான் மொத்தப் பிரபஞ்சமும் கட்டப்பட்டு அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கிவருகிறது. அவரின் கருணையால் துருவன் என்ற சிறுவன் அப்பதவியைப் பெற்றான்.ஆக, மொத்தப் பிரபஞ்சமும் தன்னிடம் கட்டப்பட்டிருக்கப் பெற்ற ஆதார மையமான திருமால் ‘வ்யவஸாய:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வ்யவஸாய:’ என்றால் ஆதார மையம் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 386-வது திருநாமம்.“வ்யவஸாயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலே ஆதார மையமாக இருந்து அவர்களை நல்வழியில் வழிநடத்திச் செல்வார்.

387. வ்யவஸ்தானாய நமஹ (Vyavasthaanaaya namaha)

அசோக வனத்தில் அரக்கிகள் மத்தியில் ராமனைப் பிரிந்து துயருற்று இருக்கும் சீதையைக் கண்ட அநுமனின் நெஞ்சில் அலைமோதிய எண்ணங்களை வால்மீகி பகவான் சுந்தர காண்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

“மான்யா குருவிநீதஸ்ய லக்ஷ்மணஸ்ய

குருப்ரியா

யதி ஸீதாபி துக்கார்த்தா காலோ ஹி துரதிக்ரம:”

“அன்னை மகாலட்சுமியின் வடிவமான இந்த சீதா தேவியே இப்படித் துயரப்படுகிறாள் என்றால், காலம் யாராலும் வெல்ல முடியாதது என்பது மெய்யாகிவிட்டதே. உலகையே காக்கும் ராமன், லக்ஷ்மணன் ஆகிய இருவரும் உடன் இருந்த போதும், இவள் அபகரிக்கப்பட்டிருக்கிறாள் என்றால், நிச்சயமாக தெய்வத்தை விடக் காலத்துக்கு வலிமை அதிகமாக இருக்குமோ!” என்று கருதி இவ்வாறு கூறுகிறார் அனுமன்.(மனிதர்களுக்குத் தொடர்ச்சியான கஷ்டங்கள் வந்தால், ‘நேரம் சரியில்லை’, ‘இது நமக்குக் கஷ்ட காலம்’ என்று காலத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிப் புலம்புவதை நாம் பார்த்திருப்போம்.)

ஒன்பது வித இலக்கண நூல்களைக் கசடறக் கற்ற மகா பண்டிதரான அநுமன் தான் கூறிய இவ்வார்த்தையைப் பற்றி மீண்டும் யோசித்துப் பார்த்தார். “திவ்ய தம்பதியான திருமாலும் திருமகளும் கூடக் காலத்தின் வசத்துக்கு உட்பட்டவர்கள் என்று நாம் கருதி விட்டோமே! ஆனால் வேதாந்தங்களும் வேதாந்திகளும் தெளிவாக, இறைவனும் இறைவியும் காலத்துக்கு அப்பாற்

பட்டவர்கள் என்று கூறுகிறார்களே!” என்று யோசித்தார் அநுமன்.

மேலும், “வெறும் கால வேறுபாட்டாலேயே துன்பமோ இன்பமோ வந்துவிடும் என்றால், நாம் செய்யும் நற்செயல்களுக்குப் பயனே இல்லாமல் போய்விடும். நமது முன்வினைகளுக்கு (பாப - புண்ணியங்களுக்கு) ஏற்றபடி தான் காலம் துன்பமோ இன்பமோ ஏற்படுத்துமே ஒழிய, காலம் தானாகவே அவற்றை உண்டாக்காது!” என்றும் உணர்ந்தார் அநுமன்.“முன் வினைகளால் துன்பம் நேர்கிறது என்றாலும், திருமாலும் திருமகளும் முன்வினைகளுக்கு (பாப புண்ணியங்களுக்கு) அப்பாற்பட்டவர்களாகவே உள்ளார்கள். அப்படியிருக்க, சீதைக்கோ ராமனுக்கோ எப்படித் துயரம் ஏற்படும்? உண்மையில் அவர்களுக்குத் துக்கம் என்பதே கிடையாது. உலகைக் காக்க மனித வடிவம் எடுத்து வரும்போது, மற்றவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் அல்லர் என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காக, துன்பத்தால் நலிவது போலவும், இன்பத்தால் மகிழ்வது போலவும் நாடக நடிகர்கள் போல் அபிநயம் செய்கிறார்கள்.

அந்த அபிநயத்தால் நானும் மயங்கி விட்டேன். அதனால் தான் சீதையின் துன்பத்தைக் கண்டு அதைக் காலத்தின் கோலம் என்று கூறி விட்டேன். திருமாலும் திருமகளும் காலத்துக்கோ இன்ப-துன்பங்களுக்கோ உட்பட்டவர்கள் அல்லர். காலத்தைத் தங்கள் வசத்தில் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்!” என்று சமாதானம் சொல்லிக் கொண்டு தெளிந்தாராம்

அநுமன்.

எனவே அவதார நிலையில் காலத்துக்கு வசப்பட்டவன் போல் இறைவன் தன்னைக் காட்டிக் கொள்வது வெறும் நடிப்பேயாகும். உலகைப் படைத்தல், அழித்தல் உள்ளிட்ட செயல்களைக் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் இறைவன் செய்வதால், அந்த விஷயத்தில் காலத்துக்குக் கட்டுப்படுகிறாரா இறைவன் என்ற கேள்வி எழலாம். இல்லை! நிச்சயமாக இல்லை! உலகைப் படைக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும், அழிக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும் கூட ஒரு விளையாட்டாகவே இறைவன் செய்கிறானே ஒழிய, இறைவன் என்றுமே காலத்தின் வசத்தில் இருப்பவன் அல்லன். காலம் தான் அவனது கட்டுப்பாட்டில் உள்ளது.

“யதாயத்தம் ஜகச்சக்ரம் காலசக்ரம் ச சாச்வதம்

பாது வ: தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண:”

என்று தேசிகன் கூறுவதற்கேற்ப, காலச் சக்கரத்தைத் தனது கட்டுப்பாட்டில் திருமால் வைத்திருக்கிறார். நிமிடம், முகூர்த்தம், பகல், இரவு, வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்ட காலத் தத்துவத்துக்கு ஆதாரமாக இருப்பவர் திருமால்.காலத்துக்கு அப்பாற்பட்டவரான திருமாலின் அருளைப் பெற்றதால்தான் துருவனின் புகழ் காலம் கடந்து இன்றளவும் உலகில் நிலைபெற்றிருக்கிறது. துருவ நட்சத்திரமாக அவன் காலாகாலத்துக்கும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறான்.

காலத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதால், திருமால் ‘வ்யவஸ்தான:’ என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 387-வது திருநாமம். “வ்யவஸ்தானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் பொன்நாளாய் அமையத் திருமால் அருள்புரிவார்.

388. ஸம்ஸ்தானாய நமஹ (Samsthaanaaya namaha)

அடியேனுடைய குருவான டாக்டர் ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் மதுரையில் பிரபல பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பயின்று வந்த சமயத்தில், அவரது நண்பர் ஒருவர் அதே கல்லூரியில் கட்டடப் பொறியியல் பயின்று வந்தார். அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் இது. தனியுரிமை கருதி அவருக்குத் திரு.ராமு என்று நாம் பெயர் வைத்துக் கொள்வோம்.ராமு மிகச்சிறந்த அறிவாளி, உழைப்பாளி. 1960களில் பொறியியல் கல்லூரியில் இடம்பெறுவது என்பது சாமானியமான விஷயமே அல்ல. ஆனால் ராமுவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. “எனக்கு அறிவு இருக்கிறது, நான் உழைக்கிறேன், எனக்கு நல்லது நடக்கிறது.

இதற்குமேல் கடவுள் என்ற மூன்றாவது நபர் எதற்கு?” என்று அடிக்கடி அவர் கேட்பாராம்.ஒருமுறை கருணாகராச்சாரியாரிடம் ராமு, “எத்தனையோ பேர் ஆபத்தில் தவிக்கிறார்கள். உங்கள் கடவுள் ஏன் வந்து காப்பதில்லை?” என்று கேட்டார். அதற்குக் கருணாகராச்சாரியார், “இறைவனின் நாமத்தை வாயாரச் சொல்லி அழைத்தால் நிச்சயம் இறைவன் வந்து காப்பான். ஒருவன் மரத்தில் இருந்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த திருமாலும் திருமகளும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவன் அம்மா என்று கத்திக்கொண்டு விழுந்தால் மகாலட்சுமி காக்க வேண்டும் என்றும், அப்பா என்று கத்திக் கொண்டு விழுந்தால் திருமால் காக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். ஆனால் அவனோ ஐயோ என்று சொல்லிக் கொண்டு விழுந்தான். இப்படி நாம் இறைவனை அழைக்காமல் இருந்து விட்டு, இறைவனைக் குறை சொல்லலாமா?” என்று கேட்டார்.

ஆனாலும் ராமு இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “உனக்கும் எனக்கும் ஆபத்து வரும் போது இறைவன் காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம்!” என்று சொல்லி விட்டார்.

ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் சென்னை ரயில் நிலையத்தில் கருணாகராச்சாரியார் சுவாமிகள் ராமுவைச் சந்திக்க நேர்ந்தது. ராமு தலைக்கு மொட்டை அடித்திருந்தார். கருணாகராச்சாரியார் ராமுவிடம் சென்று விசாரித்த போது, “கருணாகரா! நீ சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் எனக்குப் பின்னால்தான் புரிந்தது. நான் இப்போது மாறிவிட்டேன்!” என்றார்.

“என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார். அப்போது ராமு இடைப்பட்ட காலத்தில் தனக்கு நிகழ்ந்தவற்றைச் சொன்னார்.

“கருணாகரா! நான் கட்டடப் பொறியியல் கற்றுத் தேர்ந்த பின், பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டி வந்தேன். அவற்றுள் ஒரு கட்டடத்தின் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், மூன்றாவது மாடிக்கு மேல் நின்றுகொண்டு, கட்டட மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டே பின்நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தேன். தவறி விழுந்து விட்டேன். அந்த ஒரு நொடியில் என் உயிரே போய் விட்டது என எண்ணிய நான், ‘மதுரா!’ என்று உரத்த குரலில் அழைத்தேன். என் மனைவியின் பெயர் மதுரா. அதை எண்ணித் தான் அழைத்தேன்.

ஆனால் கருணாகரா! அப்போது மணல் லாரி ஒன்று அவ்வழியே வந்தது. சரியாக அந்த லாரியில் உள்ள மணல்மேல் விழுந்தேன். ஒரு காயம் கூட இல்லாமல் தப்பித்தேன். இதில் வியப்பு என்னவென்றால், அந்த லாரியின் முகப்பில் ‘மதுரா லாரி சர்வீஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த லாரி ஓட்டுநர் வட இந்தியர். அவரது பெயர் என்ன என்று பின்னர் விசாரித்த போது, ‘மதுராநாத்’ என்று சொன்னார்.

எங்கள் மதுரையில் கோவில் கொண்டுள்ள மதுரவல்லித் தாயாரான மகாலட்சுமியும், அந்த மதுரவல்லிக்கு நாதனான கூடல் அழகருமே வந்து காப்பாற்றினார்களோ என்று தான் எண்ணத் தோன்றியது. ஐயோ என்று கத்தியபடி மரத்தில் இருந்து விழுந்தவன் பற்றி நீ சொன்ன கதை தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

நாம் எத்தனை தான் முயற்சிகள் எடுத்தாலும், எவ்வளவுதான் கவனமாகச் செயல்பட்டாலும், நமக்கும் அப்பாற்பட்டு உலகில் பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் கைகூடி முழு வெற்றி பெறுவதற்கு இறையருள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை என உணர்ந்தேன். அதனால்தான் நான் அடுத்து கட்டவுள்ள கட்டிடத்தின் பணிகள் நன்றாக நிறைவடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்!” என்று சொன்னார் ராமு.

கருணாகராச்சாரியார், “அடியேன் அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். அழைத்தால் நிச்சயம் வருவான் இறைவன். மேலும், எல்லோரும் இறைவனிடம் வந்து தான் தீர வேண்டும். அவன் தான் அனைவருக்கும் முடிவான புகலிடம். எந்த முயற்சிகளுமே செய்யாமல் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அடியேன் சொல்லவில்லை. ஆனால், நம் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் கைகூடி வருவதற்கு இறையருள் தேவை. அலுவலகத்தில் எழுத்தரிடம் காரியம் ஆகவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் போகிறோம். அவரிடமும் ஆகவில்லை என்றால் மேலாளரிடம் போகிறோம். யாரிடமும் ஆகவில்லை என்றால் அனைவருக்கும் மேல் அதிகாரியாக இருக்கின்ற இறைவனின் உதவியையே நாடியாக வேண்டும். அவன் அன்றி ஓரணுவும் அசையாது!” என்றார்.

மேலும், “பொறியாளர்கள் கூட்டம் போட்டால், அதற்குப் பொறியாளர்கள் தான் வருவார்கள். மருத்துவர்கள் கூட்டம் போட்டால், அதற்கு மருத்துவர்கள்தான் வருவார்கள். வக்கீல்கள் கூட்டம் போட்டால், அதற்கு வக்கீல்கள் தான் வருவார்கள். ஆனால் இறைவனைப் பற்றிப் பேசும் போது, அதைக் கேட்க இவர்கள் எல்லோரும் வருவார்கள். ஏனெனில் அவனே அனைவருக்கும் இறுதிப் புகலிடம்!” என்றும் கூறினார் கருணாகராச்சாரியார்.

சிறுவனான துருவன், தனக்கு வேறு புகலே இல்லாத நிலையில் திருமாலே தனக்குப் புகல் என உணர்ந்து அவர் திருவடிகளைப் பற்றினான். இன்றளவும் துருவ பதவியில் நிலைத்திருக்கிறான் அல்லவா?இப்படி எல்லோருக்கும் இறுதிப் புகலிடமாக இருப்பதால், திருமால் “ஸம்ஸ்தான:” என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 388-வது திருநாமம். நாமும் தினமும் “ஸம்ஸ்தானாய நம:” என்று சொல்லி வந்தால், திருமால் நமக்கு எல்லா விதங்களிலும் அடைக்கலம் தந்தருள்வார்.

389. ஸ்தானதாய நமஹ (Sthaanadhaaya namaha)

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியையும், அதன் அனைத்து விளக்கவுரைகளையும் மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தார் மணவாள மாமுனிகள். திருவரங்கத்தில் சிறப்பான முறையில் அதைக் காலட்சேபமாகச் சீடர்களுக்கு உபதேசமும் செய்து வந்தார் அவர். ‘விசதவாக் சிகாமணி’ என்று போற்றப்பட்டார்.உறவினர்கள் வீட்டில் நடக்கும் ஜனன மரணச் செய்திகளால் ஏற்படும் தீட்டு அவரது காலட்சேபங்களுக்கு இடையூறாக இருந்ததால், அனைத்து உறவுகளையும் துறந்து துறவறம் மேற்கொண்ட மகான் அவர். திருவாய்மொழியை விளக்கும் கைங்கரியம் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்தையும் துறந்த துறவியாகிறார் என்றால் ஆழ்வார்களின் அமுதத் தமிழில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும்?

இந்நிலையில், அவரது வாக்கு சாதுரியத்தையும், திருவாய்மொழியில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானத்தையும் கண்டு வியந்த அரங்கன், மணவாள மாமுனிகளின் பெருமையை உலகுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.அதனால் அரங்கன், “நாளை முதல் பெரிய திருமண்டபத்தில் நான் கேட்டு மகிழும்படி மணவாள மாமுனிகள் வந்து திருவாய்மொழியின் விளக்கவுரையான ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் நூலைக் காலட்சேபமாகக் கூற வேண்டும்!” என்று நியமித்து அருளினார்.

திருமாலின் ஆணையைச் சிரம் மேல் கொண்டு ஏற்றார் மணவாள மாமுனிகள். தனது அனைத்து உற்சவங்களையும் ஒத்தி வைத்தார் அரங்கன். தன்னுடைய ஆதிசேஷ சிம்மாசனத்தை மணவாள மாமுனிகளுக்கு அளித்தார். ஆசனத்தின் மேல் மாமுனிகளை அமர்த்தி, அதற்குக் கீழே சீடனாக அரங்கன் நின்று கொண்டார்.ஒரு வருட காலத்துக்கு இப்படி மணவாள மாமுனிகள் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கான விளக்கவுரையை முழுமையாக வழங்க, “இது கங்கை வெள்ளமோ? கங்கையில் புனிதமாய காவிரி வெள்ளமோ?” என்று வியந்தபடி அடியார்கள் அதைக் கேட்க, அரங்கனும் ஸ்ரீதேவி பூதேவியோடும், கருடன், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் உள்ளிட்ட பரிவாரங்களோடும் ஆனந்தமாக அதை அனுபவித்து அருளினார்.

ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று விளக்கவுரையை மாமுனிகள் நிறைவு செய்தார். அப்போது சிந்தித்த அரங்கன், “ராமனாகவும் கண்ணனாகவும் நான் அவதாரம் செய்தபோது கூட வசிஷ்டர், சாந்தீபனி போன்ற குருமார்கள் கிடைத்தார்கள். ஆனால் அந்த முனிவர்கள் யாருக்குமே இந்த மணவாள மாமுனிகளுக்கு இருக்கும் பெருமை இல்லை. அதனால் இவருக்கு மிக உயர்ந்த ஒரு ஸ்தானத்தை வழங்க வேண்டும்!” என்று கருதினார்.

அதனால் அரங்கநாயகம் என்று பெயர் கொண்ட ஐந்து வயது அர்ச்சகச் சிறுவனாக அரங்கனே வடிவம் பூண்டு அவ்விடத்துக்கு வந்தார். மாமுனிகள் முன்னே அச்சிறுவன் கைகூப்பி நின்று,

“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம்”

என்ற ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்.

அதுவே மாமுனிகளின் தனியனாக (வணக்கப் பாடலாக) ஆனது.இன்றளவும் மாமுனிகள் அரங்கனின் குரு என்றே போற்றப்படுகிறார். இன்றளவும் கோவில்களில் மணவாள மாமுனிகள்

அரங்கன் அவருக்கு அளித்த ஆதிசேஷ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஆக, தமிழ் வேதத்துக்குத் தொண்டாற்றிய மாமுனிகளுக்கு இத்தகைய உயர்ந்த

ஸ்தானத்தை அருளினார் அரங்கன்.அவ்வாறே இளம் வயதில் கடுந்தவம் புரிந்த  துருவனுக்குத்  துருவப் பதவி என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை அருளினார் திருமால். அவரது திருவடிகளில் யார் சரணாகதி செய்தாலும், அவர்களுக்கு வைகுண்டப் பதவி என்ற உயர்ந்த ஸ்தானத்தையே அருளுகிறார்.

இதை,

“சரணம் ஆகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்

மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”

என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

‘த:’ என்றால் கொடுப்பவர். ‘ஸ்தான-த:’ என்றால் ஸ்தானத்தைக் கொடுப்பவர். தன் அடியார்களுக்கு உயர்ந்த ஸ்தானங்களை அருளுவதால், திருமால் ‘ஸ்தானத:’

என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 389வது திருநாமம்.“ஸ்தானதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கும் உயர்ந்த ஸ்தானத்தைத் திருமால் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: