குருவருள் கூட்டுவிக்கும்!

?என் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆதரிக்க யாருமில்லை. நானும் எனது மனைவியும் பிள்ளைகள் இன்றி தனிமையில் கஷ்டத்துடன் இருக்கிறோம். எனது சகோதரி மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் ஆதரவின்றி இருக்கிறார். நாங்கள் அவருக்கு துணையாகவும் அவர் எங்களுக்கு துணையாகவும் இருப்பார் என்ற

நம்பிக்கையில் இறுதிநாட்களை அவருடன் கழிக்கலாம் என எண்ணுகிறோம். உங்கள் ஆலோசனை தேவை.

- அசோகன், பெங்களூரு.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நீங்கள் வாழ்வின் எஞ்சிய காலத்தை உங்கள் சகோதரி மகளுடன் சென்று கழிக்கலாம். மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் அவர் உங்களுக்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பார். மேலும் உங்களுக்கு உரிய கௌரவம் என்பதும் கிட்டும். உங்கள் ஜாதகப்படி மரியாதை குறைவான இடத்தில் ஒரு பொழுது கூட இருக்கமாட்டீர்கள் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குருவின் அமர்வுநிலை இருப்பதால் உங்கள் துணைவியாரின் ஆலோசனையையும் கேட்டுக் கொள்ளுங்கள். அவரது ஆலோசனை உங்களை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும். உங்கள் சகோதரியின் மகள் வசிக்கும் இடம் சிவ ஸ்தலம் என்பதால் நீங்கள் தினமும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கும் ஏதுவாக இருக்கும். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவனை தரிசித்த பின் ஓரமாக அமர்ந்து நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜபித்து தியானம் செய்து வாருங்கள். வருகின்ற 29.03.2022-குப் பின் நீங்கள் உங்கள் சகோதரியின் மகளுடன் சென்று வசிக்க ஏதுவான காலமாக அமையும். உங்கள் எண்ணப்படி காலம் முழுவதும் சிவபெருமானின் திருத்தலத்தில் வசித்து மோட்சத்திற்கு வழி  தேட இயலும்.

?எனது தங்கை மகனுக்கு கடந்த நான்கு வருடங்களாக பெண் தேடிக் கொண்டிருக்கிறோம். தகுந்த வரன் கிடைக்கவில்லை. இடையில் மூன்று ஆண்டு களுக்கு முன் பையனின் தாய் காலமாகிவிட்டதால் வரன் தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. திருமணத்தடை காரணமாக நெருங்கிய உறவினர்களின் விமர்சனங்களால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- ராஜசேகர், வேலூர்.

உறவினர்களின் விமர்சனங்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். விமர்சனம் செய்பவர்கள் யாரும் முன்னின்று செயல்படப்போவதில்லை. மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷபராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கை மகனின் ஜாதகப்படி தற்போது குருதசையில் சுக்ர புக்தி என்பது நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன் இருவருமே வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார்கள். அத்துடன் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி சனி ஆறில் அமர்ந்திருப்பதும், களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு என நான்கு கிரஹங்களின் இணைவும் கடுமையான தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் ஜென்ம லக்னத்தில் தனித்து அமர்ந்திருக்கும் கேதுவின் நிலை ஒருவிதமான விரக்தியை அவரது மனதில் தோற்றுவித்திருக்கும். நீங்கள் முதலில் இவரது மனதை மாற்றவேண்டியது அவசியம். அவரது மனதில் உள்ள சஞ்சலங்கள் முழுமையாக நீங்கிய பிறகு வரன் பார்க்கத்  துவங்குங்கள். அவர் எங்கே வசிக்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்கள் தங்கை மகனை வியாழன்தோறும் அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று நவகிரஹ குருவிற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். குருவின் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.

?எனது மகன் ஐஏஎஸ் தேர்வு எழுதி மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். எப்படியாவது கலெக்டர் ஆகி நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர். இந்த முறை அவர் தேர்வில் வெற்றியடைந்து பதவியில்

அமர்வாரா? நல்லதொரு வழியைக் காட்டுங்கள்.

- கோபிக்கண்ணன், திருவாரூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மீன

 லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்துவருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியும் கேதுவும் இணைந்திருக்கின்றன. அத்துடன் ஜென்ம லக்னாதிபதி குருவும் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் ஆட்சிப் பலத்துடன் அமர்ந்திருப்பதால் உங்கள் மகனால் தன்னுடைய லட்சியத்தை அடைய இயலும். விடாமல் தொடர்ந்து முயற்சித்து வரச் சொல்லுங்கள். மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல், அடுத்தவர்களுடைய விமர்சனங்களையும் பெரிதாக எண்ணாமல் முழு மூச்சுடன் தனது இலக்கினை நோக்கி பயணிக்கச் சொல்லுங்கள். அவரது முயற்சிக்கு பெற்றோர் ஆகிய நீங்களும் பக்கபலமாக துணை நில்லுங்கள். அவர் தீவிர விநாயகர் பக்தர் என்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திங்கள் மற்றும் சனிக்கிழமை நாட்களில் காலை வேளையில் ஸ்நானம் செய்துவிட்டு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை 21 முறை சொல்லி வழிபட்டு பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். 25.02.2023 வாக்கில் அவரது லட்சியத்தில் வெற்றி பெற்றுவிடுவார்.

“விக்னேஸ்வர மஹாபாஹா ஸர்வ லோக நமஸ்க்ருதா

மயாரப்தம் இதம் கர்மா நிர்விக்னம் குருமே ப்ரபோ.”

?என் மகன் தனியார் கம்பெனியில் டிரைவர் ஆக பணிபுரிகிறார். வருமானம் குறைவு. மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் ஆகிய எங்களுக்கும் அவர்தான் சாப்பாடு போட வேண்டும். நான் ஒரு மாற்றுத் திறனாளி. வயதானவன். எனக்கு வருமானம் கிடையாது. என் மகனுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையுமா?

நல்வாழ்விற்கு வழிகாட்டுங்கள்.

- ராஜேந்தர், சென்னை.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்துவருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளது நல்ல நிலையே. அவர் டிரைவர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சுயமாக தொழில் செய்து சம்பாதிக்க இயலும். தண்ணீர் கேன் சப்ளை, ஜூஸ் கடை, தேநீர் கடை முதலான தொழில்களை செய்ய இயலும். அவரது தொழிலுக்கு குடும்பத்தினர் ஆகிய நீங்களும் ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் குடும்பத்தில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும். அவர் காலத்திற்கும் அடிமைத் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நல்ல நேரம் என்பது துவங்கி உள்ளது. ராகு தசை முடிந்து அடுத்து வரவுள்ள குருதசையும் நல்ல யோகத்தினைத் தரும்.

அவருடைய ஜாதகத்தில் தன ஸ்தானத்தில் சனியும் லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் ஆட்சிப் பலம் பெற்றிருப்பதோடு பாக்ய ஸ்தானத்தில் குருவும் அமர்ந்திருப்பதால் 2024ம் ஆண்டு முதல் சுயதொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும். சிறிய அளவிலான முதலீட்டுடன் சுயதொழில் செய்ய முயற்சிக்கச் சொல்லுங்கள். திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் உங்கள் மகனை அருகிலுள்ள நாகாத்தம்மன் ஆலயத்திற்குச் சென்று அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். வரும் 2022ம் ஆண்டின் துவக்கத்திலேயே சுயதொழில் தொடங்கி வெற்றிப்பாதையில்

அடியெடுத்து வைப்பார்.

?என் ஜாதகம் சரியா என்றே தெரியவில்லை. நான் பிறந்தது முதல் எனக்கு அனைத்து ஜோதிடர்களும் கூறிய எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஜோதிடரும் 15 நாட்கள், 48 நாட்கள் என்று கூறி கூறி பணமும் கால விரயமும் ஆனதுதான் மிச்சம். ஏதும் உருப்படியாக இல்லை. 2019ம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் என் மனைவி இரண்டு பெண் குழந்தைகளோடு என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். நான் வேறு திருமணம் செய்து கொள்வது சரியா, இல்லையா? சரியான தீர்வு கூறுங்கள்.

- ரவி, செம்பனார்கோவில்.

ஒரு பெண்ணாகிய உங்கள் மனைவிக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை கூட உங்களுக்கு உங்கள் மீது இல்லை. இரண்டு பெண் குழந்தைகளுடன் உங்களைவிட்டு பிரிந்து சென்றிருக்கிறார் என்றால் அவர் தன் மீது எத்தனை நம்பிக்கை வைத்து இந்த முடிவை எடுத்திருப்பார்? ஆனால் 55 வயதைக் கடந்த நீங்களோ உங்களுக்கு ஒரு துணை தேவை என்ற எண்ணத்தில் வேறு திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். முதலில் அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் ஔவையார். கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறப்பை இறைவன் நமக்கு தந்திருக்கிறான் எனும்போது அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து முயற்சி செய்யாமல் ஜோதிடர்கள் மீது குற்றம் சுமத்துவதால் பயன் இல்லை. எவன் ஒருவன் தனது கடமையைச் செய்கிறானோ அவனுக்கு மட்டுமே கிரஹங்கள் தனது பணியினைச் செய்யும். இறைவனின் அருளும் கிடைக்கும். கடமையைச் செய்யாமல் தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்று எண்ணுபவர்களை

கடவுளாலும் காப்பாற்ற இயலாது.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்துவருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் உச்ச பலத்தோடு சஞ்சரிப்பதால் சுகவாசியாக வாழ நினைக்கிறீர்கள். ஆனால் 12ம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரஹங்களின் இணைவு உங்கள் எண்ணத்திற்கு எதிரான பலனைத் தந்து கொண்டிருக்கிறது. தொழில் ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டில் சனியின் ஆட்சி பலமும் சந்திரனின் இணைவும் நற்பலனையே தரும். ஆனால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வேலையை எதிர்பார்க்காமல் உங்களால் சுயதொழில் செய்ய இயலும். உணவு சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்வது முன்னேற்றத்தை தரும். புதன்கிழமை நாளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை சாற்றி வழிபடுங்கள். ஆலய வளாகத்தில் அமர்ந்து அமைதியாக சிந்தித்து பாருங்கள். நீங்கள் எந்த விதத்தில் தவறு செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும். தவறினை உணர்ந்து அதனை சரிசெய்ய முயற்சியுங்கள். வேறு திருமணம் செய்யும் எண்ணத்தை விடுத்து மனைவி மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் அருளால் எல்லாம்

நல்லபடியாக நடக்கும்.

Related Stories: