அம்மா வந்தார்..!

அஸ்மா சற்றே நிம்மதியற்றுக் காணப்பட்டார். மகளைப் பார்க்க அம்மா வருகிறார்.  ‘அம்மா வருகிறார்’ என்றால் எல்லா மகள்களும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆனால் அஸ்மா சற்றுக் குழப்பத்தில் இருந்தார். அதற்குக் காரணம் இருந்தது. இறைத்தூதரின் சத்திய அழைப்பை ஏற்று, அஸ்மா  முஸ்லிமாகியிருந்தார். ஆனால் அவருடைய தாய் முஸ்லிமாகவில்லை.ஏக இறைவனை ஏற்காத, முஸ்லிமல்லாத தாய் வரும்போது ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட, முஸ்லிமான மகள் அந்தத் தாயை வரவேற்கலாமா? அன்பு செலுத்தலாமா? உபசரிக்கலாமா?இதுதான் அஸ்மாவுக்கிருந்த குழப்பம்.

“அம்மாவை அன்புடன் வரவேற்க வேண்டும்...நன்கு உபசரிக்க வேண்டும்” என்று அவருடைய பாச உணர்வு துடித்தது. இன்னொரு புறம், இறைவனை ஏற்காத  தாயை- அவர் என்னதான் தாய் என்றபோதிலும் எப்படி உபசரிப்பது என்று அவருடைய ஈமானிய உணர்வு தடுத்தது.இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்த அஸ்மா, தமது சஞ்சலத்தைத் தீர்க்கும் ஒரே வழி, இறைத்தூதரிடமே இதுபற்றிக் கேட்டு

விடுவதுதான் என்று தீர்மானித்தார்.“இறைத்தூதர் அவர்களே...! என்னைப் பார்க்க என் தாய் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை...அவரை வரவேற்கலாமா? அன்பு செலுத்தலாமா?”

நபிகளார்(ஸல்) புன்னகையுடன் கூறினார்: “ஆம். நீ உன் தாயார் மீது அன்பு செலுத்த வேண்டும். அவரை உபசரிக்க வேண்டும். அவரிடம் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்.”

அஸ்மா அகமகிழ்ந்தார். “முஸ்லிமல்ல” என்பதால் அவர் தாய் இல்லை என்று ஆகிவிடுவாரா? தாய், தாய்தான் என்பதை நபிகளார் (ஸல்) அழகாக  உணர்த்திவிட்டார்.

அம்மா வந்தார். வரவேற்று உபசரித்தார் அஸ்மா. திருக்குர்ஆன் கூறுகிறது:

“பெற்றோர் நலனைப் பேணவேண்டு மென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம்

அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.”

(குர்ஆன் 31:14)

அதே சமயம் “இணைவைக்கும்படி பெற்றோர் நிர்பந்தித்தால் அந்த விஷயத்தில் அவர்கள் பேச்சை ஏற்றுக்கொள்ளாதே. மற்றபடி இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்” என்றும் இறைவன் அறிவுறுத்தியுள்ளான். (குர்ஆன் 31:15)

- சிராஜுல்ஹஸன்

நம்பினோருக்கு இழப்பில்லை

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் துறவி ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். துறவியிடம் அவர், எனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்குள் எப்போதும் போராட்டம், தகராறுதான். நிம்மதியே இல்லை. ஏன் என்று தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் சிந்தித்தபின், துறவி அவரிடம் சொன்னார். ‘‘உங்களுக்குள் ஒருவராக கடவுள் மறுபிறவி எடுத்திருக்கிறார். அவரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதுதான் உங்கள் சிக்கல் அனைத்திற்கும் காரணம்.’’ இதைக்கேட்ட நிறுவனத்தலைவருக்கு ஒரே மகிழ்ச்சி. அப்படியா? அவர் யார் என்று சொல்லி விடுங்களேன். முனிவர் சொன்னார்,

‘நீங்கள் ஒவ்வொருவரும் அவரைத்

தேடினால் கண்டுகொள்வீர்கள்.

இச்செய்தி அந்த நிறுவனத்தில் பணிபுரிவோர் மத்தியில் புயலாக வீசியது. ஒவ்வொரு வரும் மற்றவர்களில் யார் கடவுள் என்று தேடத்தொடங்கினார்கள். மற்றவர்களிடம் உள்ள நல்ல பண்புகளைத் துருவித் துருவிப் பார்த்தார்கள். அவர்களிடம் உள்ள குறைகளைத் தேடிக்கொண்டிருப்பதை விட்டு விட்டார்கள். யாரும் யார் மீதும் பழி போடுவதை விட்டு விட்டனர்.  சில நாட்களில் நிறுவனத்தில் அமைதி நிலவிற்று. ஒருவருக்கொருவரிடம் அன்பும், நட்பும் மலர்ந்தன. பகைமையும், பொறாமையும் மறைந்தன. நிறுவனம் வளர்ச்சி கண்டது. ஆனால் அந்தக் கடவுளின் அவதாரம் யார் என்று கண்டுபிடித்தார்களா? என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா? நாம் எல்லோரும் கடவுளின் அவதாரம்தானே! மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களை கண்டுபிடிப்போம். பாராட்டுவோம்.

‘‘ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம். நற்பயிற்சியைப் பெற்றுக்கொள்வர்.

வைகறையில் அவரைத் தேடுவோர் அவரது

பரிவைப் பெற்றுக்கொள்வர். திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர் அதனால் நிறைவு பெறுவர். வெளிவேடக்காரர் அதனால் தடுக்கி விழுவர். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீதித்தீர்ப்பைக் காண்பர். தங்களின் நேர்மையான செயல்களை ஒளிபோலத்

தூண்டிவிடுவர். பாவியர் கண்டனத்தைத்

தட்டிக்கழிப்பர். தங்கள் விருப்பத்திற்கு  ஏற்பச் சாக்கு போக்குகளைக் கண்டுபிடிப்பர். அறிவுள்ளோர் பிறருடைய கருத்துக்களைப் புறக்கணியார். பெருமையும், இறுமாப்பும் கொண்டோர் அச்சத்தால் பின்னடைவர். எண்ணிப்பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனிலே போகாதே. ஒரே கல்லில் இருமுறை தடுக்கி விழாதே. தடங்கலற்ற வழியை

நம்பாதே; உன் பிள்ளைகளிடமிருந்தும்

உன்னைக் காப்பாற்றிக்கொள். உன் செயல்கள் அனைத்திலும் உன்னையே நம்பு; இவ்வாறு

கட்டளைகளைக் கடைப்பிடிப்பாய். திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நட. ஆண்டவரை நம்புவோருக்கு இழப்பு

என்பதே இல்லை.’’ - (சீராக் 32: 13-24)

நற்பண்பு மரணமில்லாமல் பெருவாழ்வுக்கு அழைத்துச்செல்கிறது. தீய ஒழுக்கம் மனிதனை மரணத்துக்கான பாதையில் அழைத்துச் செல்கிறது. நற்பண்புகளுடன் வாழ்கிறவனுக்கு மரணம் இல்லை. தீய ஒழுக்கம் உள்ளவர் நடைபிணம். நற்பண்பு உடையவர் மனம் களங்கம் இல்லாததாக உள்ளது. நற்பண்பு ஒரு மனிதனை உயர்த்தி மாற்றியமைத்து தெய்வீக நிலையை அடையச் செய்கிறது. தீமை செய்வதை நிறுத்துங்கள். நல்லதையே செய்யத் தொடங்குங்கள். உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: