மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயில்

திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி என்னும் திருத்தலத்தில் ‘‘மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயில்’’ எழிலுற அமைந்துள்ளது. சுமார் பத்து ஏக்கர் நிலப் பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சந்நதி சிறிய அளவில் உள்ளது. ஆலய வளாகத்தின் மேற்குப் பகுதியில் தனிச் சந்நதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச்

சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் அமைக்கப்பட்ட தொடக்க காலத்தில், இந்த ஆலயத்தில் இறைவனுக்கு சிலை எதுவும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பின்னர் பக்தர்கள் சேர்ந்து பூரண, புஷ்கலையுடன் சாஸ்தா உருவங்களை அமைத்து வழிபட்டனர். மிகவும் பழமையான கோயில் இது. இத்திருக்கோயில் உருவானதே ஒரு சுவையான வரலாறு. பாண்டிய மன்னர்களின் நல்லாட்சி காலத்தில், தென்காசி மலையான் தெருவில் இறை வழிபாட்டிலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கிய திருமலை என்ற சிவனடியார் என்பவர் வாழ்ந்து

வந்தார். வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதி அருணாப்பேரி எனப்பட்டது. மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்தனர்.

இங்கே மழைக்காலங்களில் மட்டும் விதைத்து அறுவடை செய்யும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டுவந்தன. திருமலை சிவனடியாரும் இந்தப் பகுதியில் மழைப் பயிரான எள்செடியை பயிரிட்டுவந்தார்.

ஒருமுறை ‘ஆடி’ மாதம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தான் பயிரிட்டிருந்த நிலத்தில் அபரிமிதமாக விளைந்திருந்த எள்ளினை அறுவடை செய்த திருமலை தம்பதியினர். அவற்றைக் காய வைப்பதற்காக குவியல் குவியலாக களத்தில் குவித்து வைத்தனர். கடுமையான வெய்யில் காரணமாக எள் கூடு வெடித்து களத்தில் கிடந்தது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. காயப்போட்டிருந்த எள் அனைத்தும் மழையில் அடித்துச் செல்லும் நிலை உண்டானது.

இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த தம்பதியினர் என்ன செய்வது என்று அறியாமல் மிகுந்த கவலையோடு அழுது புலம்பினர். அப்போது இடியும் மின்னலுமாக மழை விரைந்து வருவதற்கான அறிகுறி உண்டான போது, ‘‘எள்ளுக்குள் மழைத் தண்ணீர் வராமல் இருக்க எள் குவியலைச் சுற்றிலும் மண்ணால் அணைகட்டு’’ என்று வானவெளியில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஆள் அரவம் இன்றி காணப்படும் இந்த வெட்ட வெளியில் குரல் மட்டும் கேட்பதைக் கண்டு பெரும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர் அந்த தம்பதியர். இருப்பினும் அசரீரி ஒலிக்கு கட்டுப்பட்டது போல், வானத்தை நோக்கி நிமிர்ந்து பார்க்காமல், வேக வேகமாக செயல்பட்டு ஒவ்வொரு எள் குவியலைச் சுற்றிலும் மண்ணால் தடுப்பு அமைத்தனர். பணி முடிந்து நிமிர்ந்து பார்த்தபோது, அவர்கள் கண்ட காட்சி திகைக்கச் செய்தது.

மழை கொட்ட ஆரப்பித்தது. தம்பதியர் இருவரும் மழையில் நனைந்தனர். ஆனால், எள் குவியலைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட மண் தடுப்புக்கு வெளியில், அதாவது எள் காய வைத்திருந்த களத்திற்கு வெளியில் மட்டும் மழை பெய்துகொண்டிருந்தது. எள்ளின் மீது மழைத்துளி ஒன்றுகூட விழவில்லை.மழை வெள்ளம் மண் அணைப்பிற்கு வௌியே திரண்டு ஓடியது. மழை நின்ற பாடில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கொட்டும் மழையில் அந்த தம்பதியினர் நனைந்தபடி வீட்டுக்கு விரைந்தனர்.விடிய விடிய பெய்த மழை, மறுநாள் காலையில் நின்றதும் சிவனடியாரும் அவரது மனைவியும் வேக வேகமாக எள் களத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அங்கு எள் குவியல், மழையால் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக காய்ந்த நிலையில் இருந்தது. கடவுளின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் இருவரும். உடனே கையோடு கொண்டு வந்திருந்த கோணிப்பைகளில் எள்ளை அள்ளி அள்ளிப் போட்டனர். அப்போது எள் குவியலின் உள்ளே அழகிய சிவலிங்கத் திருமேனி ஒன்று தெய்வீகப் பிரகாசத்துடன் காட்சியளித்தது. இதைப் பார்த்ததும் தம்பதியர் இருவரும் மெய் சிலிர்த்துப் போய், கசிந்து கண்ணீர் மல்க இறைவனின் கருணையை எண்ணி எண்ணி வியந்தனர். திருமலை தம்பதியினரைப் போற்றிப் பாராட்டினர்.

மழை தரும் மேகத்தையே குடையாக, தடுப்பு திரையாக அமைத்து எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய அந்த சுயம்பு நாதருக்கு காரணப் பெயராக, ‘‘மேகம் திரை கொண்ட சாஸ்தா’’ என்று அழகிய

பெயரிட்டு அழைத்தனர். இது நடந்தது ஒரு ஆடி மாதம் 3-வது புதன் கிழமையில் ஆகும். திருமலை பொதுமக்கள் துணையுடன் சேர்ந்து சாஸ்தாவுக்கு அழகிய கோயில் எழுப்பினார்.ஆடி மாதம் 3-வது புதன்கிழமை சிவ லிங்கத் திருேமனி கிடைக்கப் பெற்றதால், ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்றைய தினத்தில் இந்தப் பகுதியில் உள்ள ‘‘மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயில்’’ சீரும் சிறப்புமாக, விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அருணாப்பேரியில் வாழும் மக்கள் சாஸ்தாவுக்கு அழகிய சந்நதியை அமைத்து விதவிதமான மரங்கள் மற்றும் பூஞ்செடி கொடிகளை ஆலயத்தை சுற்றிலும் வளர்த்தனர். பசுமை பாய்விரித்தாற்போல் வன்னிமரம், வேப்ப மரம், போன்றவை அடர்த்தியாக வளர்ந்ததால் நாளடைவில் இந்தக் கோயில்  ‘‘மரத்தடி மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயில்’’ என்றும் அழைக்கப்பட்டது.

மேகம் திரைகொண்ட சாஸ்தாவுக்கு வலப்புறம் அழகிய தோற்றத்தில் விநாயகர் சந்நதி, இடது புறம் நடராஜப் பெருமான் சந்நதியும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முன் அமைந்துள்ள மண்டபத்தின் இருபுறங்களிலும் வரிசையாக பரிவார தேவதைகள் என்ற துணை தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தனி சந்நதி கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மண்டபத்தின் முன்புறம் வலப்புறத்தில் ஆண் ஆலியும், இடது புறத்தில் பெண் ஆலியும் பதினைந்து அடி உயரத்தில் பத்தடி அகலத்தில் மிகப் பெருந்தோற்றத்துடன் காட்சி தருகின்றனர். திருக்கோயிலின் நுழைவு வாசலில் அழகிய தோற்றத்தில் சுடலை மாட சுவாமி சந்நதி உள்ளது. ஆலயத்தின் உட்பிராகார மண்டபத்தில், வலப்

புறத்தில் நவக்கிரக சந்நதியும் அமைக்கப்

பெற்றுள்ளன. ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி,

அமாவாசை போன்ற நாட்களில்

ஏராளமான பக்தர் வருகை தருகிறார்கள்.

இந்திருக்கோயிலில் நித்திய பூஜை

நடைபெறுகிறது. புதன் மற்றும் சனிக்

கிழமைகளில் நாள் முழுவதும் நடை

திறந்திருக்கும்.  

- டி. எம். இரத்தினவேல்

Related Stories: