×

அன்பின் செயலுக்கு விலையில்லை

பள்ளியில் படித்துக்கொண்டே வீடு, வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்த அவனது கையிலோ பணம் ஒன்றும் இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்த அவனது மனதிலோ தயக்கம். கேட்க மனம் வரவில்லை. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா குடிக்க? தயக்கத்துடன் கேட்கிறான். அந்தப் பெண் சிறுவனின் கண்களில் இருந்த பசி மயக்கத்தைக் கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் ‘நான் உங்களுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்? என்று கேட்டான். கடனா? அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார் என்று புன்சிரிப்புடன் கூறினாள். அந்த சிறுவன் ரொம்ப நன்றி ! எனக்கூறி மகிழ்ச்சியுடன் கடந்து சென்றான்.அச்சிறுவன், வறுமையினால் கஷ்டப்பட்ட போதும், கடினமாக உழைத்து, மருத்துவப் படிப்புப் படித்து, பின்னாட்களில் அந்த நகரிலேயே மிகப் பெரிய மருத்துவரானார்.

ஆண்டு கள் பல கழிந்தன. ஒருமுறை அந்த பெண் கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர் அப்பெண்ணின் மருத்துவ ரிப்போர்ட்டைப் பார்வையிட்டார். அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் மருத்துவர் அந்தப் பெண்ணைக் குறித்து விசாரித்தார். விரைவாக வார்டுக்கு போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவர்தான் தனது சிறுபிராயத்தில் தனது பசியை ஆற்றிய அந்த பெண் என்பதைக் கண்டுகொண்டார். ஆம்! அந்தப் பெண்ணிடம் விலையில்லா நன்மையைப் பெற்றுக் கொண்ட சிறுவன் அந்த மருத்துவர்தான்.
அந்த உண்மையைத் தெரிந்துகொண்ட அவர் அந்நேரம் முதல் தனது முழு கவனத்தையும் செலுத்தி, அந்த பெண்ணுக்கு சிகிச்சை யளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப் போகிறோமோ என்று பதற்றத்துடன் அதைப் பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில், ‘இந்தக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. ஒரு டம்ளர் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. அந்த சிறுவன் வேறு யாருமல்ல, அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய மருத்துவர் ஹோவர்டு கெல்லிதான் அவர்.

அன்பிற்குரியவர்களே, அன்பின் செயலுக்கு விலையேதுமில்லை. நாம் எந்தவொரு நற்செயல்களைச் செய்தாலும், அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதே அதன் பொருளாகும். எனவேதான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நீ விருந்துண்ணும்போது, ஏழைகளையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக (லூக்கா 14.13) எனக் கூறினார். ஏனெனில் நாம் செய்யும் நல்ல செயல்களுக்குரிய விலையை ஏழை, எளிய மக்களால் கொடுக்க இயலாது.திருமறையில் நல்ல சமாரியன் என்ற ஒரு உவமை கூறப்பட்டுள்ளது. அந்த உவமையில் கள்ளர்கள் கையில் அகப்பட்டு, அடிபட்டு, காயத்தோடு போராடிக்கொண்டிருந்த மனிதனைக் காண்கின்ற சமாரியன் ஒருவன், அவனது காயங்களைக் கட்டி, அவனை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி, விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான்; மேலும், போதுமான பணத்தை விடுதிக் காப்பாளரிடத்தில் கொடுத்து, நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் (லூக்கா 10:35) என்று கூறுவதைக் காணலாம்.இந்த நல்ல சமாரியன் செய்ததுபோல, நாமும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்ய அழைக்கப்படுகிறோம். அவ்விதம் நாம் செயல்பட்டால், ஆண்டவர் நிச்சயமாகவே நம்மீது கண்ணோக்கமாக இருப்பார்! கண்மணிபோல நம்மை நித்தமும் பாதுகாப்பார்!

- Rt.Rev.Dr.S.E.C.தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி -
நாசரேத் திருமண்டலம்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?