நபித்தோழரின் ஐயம்..!

ஹன்ழலா என்பவர் நபித்தோழர்களில் ஒருவர். இறைத்தூதரின் எழுத்தர்களில் ஒருவராகவும் இருந்தார்.இவர் ஒரு நாள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். இவரைச் சந்திக்க வந்த அபூபக்கர்(ரலி), “ஹன்ழலாவே எப்படி இருக்கிறீர்?” என்று நலம் விசாரித்தார்.உடனே அவர், “ஹன்ழலா நயவஞ்சகன் ஆகிவிட்டான்” என்றார். அதிர்ந்துபோன அபூபக்கர், “என்ன சொல்கிறீர் ஹன்ழலா? ஒன்றும் புரியவில்லையே” என்றார்.ஹன்ழலா கூறினார்:

“நாம் இறைத்தூதரின் அவையில் இருக்கும்போது நம் இதயங்கள் இறைநினைவிலேயே மூழ்கியிருக்கின்றன. நபிகளார் சொர்க்கம்- நரகம் குறித்து அறிவுரை சொல்லும்போது அவற்றை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

“ஆனால் இவையெல்லாம் நபிகளாரின் அவையில் இருக்கும்போதுதான். அங்கிருந்து வெளியேறி வந்துவிட்டால் மனைவி- மக்கள் மீதே கவனம் செல்கிறது. பிள்ளைகளைக் கொஞ்சு

கிறோம். மனைவியுடன் இன்பத்தில் ஈடுபடுகிறோம். நிலபுலன்களைக் கவனிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஈடுபடுகிறோம்.

நபிகளாரின் அறிவுரை நமக்கு நினைவில்

இருப்பதே இல்லை” என்று தம் நிலையை

விளக்கினார்.

அதாவது, நபிகளாரின் அவையில் இருக்கும் போது ஒரு மனநிலை...அங்கிருந்து வந்துவிட்டால் வேறு மனநிலை...இது ஒருவேளை நயவஞ்சகத்தனமாக இருக்குமோ என்பது ஹன்ழலாவின் ஐயம்.

இதைக் கேட்ட அபூபக்கர், “நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன். வாருங்கள், இது குறித்து நபிகளா ரிடமே கேட்டுவிடுவோம்” என்று இருவரும் இறைத்தூதரிடம் வந்தார்கள்.“இறைத்தூதர் அவர்களே, உங்கள் திருமுன் இருக்கும்போது, உங்கள் அறிவுரைகளைக் கேட்கும்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் கண் எதிரில் பார்ப்பது போல் இருக்கிறது. உங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றதும் மனைவி- மக்கள் மீதும், நிலபுலன்கள் மீதும்தான் மனம் லயிக்கிறது. இது வஞ்சகப்போக்கு இல்லையா?” என்று கேட்டார்கள். நபிகளார் (ஸல்) கூறினார்கள்:“என் உயிரைத் தன் கைவசம் வைத்திருக்கும் அந்த இறைவன் மீது ஆணையாக, என் அவையில் நீங்கள் எந்த பயபக்தியுடன் இருக்கிறீர்களோ அதே பயபக்தியுடன் நீடித்திருந்தீர்கள் எனில் வானவர்கள் உங்கள் பாதையிலும் படுக்கையிலும் வந்து கைகுலுக்குவார்கள். ஹன்ழலாவே, இப்படிச் சில நேரம், அப்படிச் சில நேரம் (இறைநினைவும்  மனைவி- மக்கள் பற்றிய நினைவும்) தேவைதானே.”

அந்த இரண்டு தோழர்களின் இதயங்களும் நிம்மதி அடைந்தன.

- சிராஜுல்ஹஸன்

Related Stories:

More