பெருமாளின் ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிவாகிவிடும்!

?என் பேரனுக்கு வயதிற்கேற்ற பேச்சாற்றல் இல்லை. சொல்வதை 75% புரிந்துகொள்கிறான். மருத்துவரிடம் காண்பித்ததில் அவன் நார்மல் ஆக சிறிது காலம் ஆகும் என்கிறார்கள். முரட்டுத்தனம் அதிகமாக உள்ளது. அவனது குறைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

- தாமோதரன், பொள்ளாச்சி.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனுடைய ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. (கடிதத்தில் பிறந்த தேதியை தவறாக எழுதியுள்ளீர்கள்) அவருடைய ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் என்பது உள்ளது. அத்துடன் வாக்கு ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் சுயசாரம் பெற்ற சனி அமர்ந்திருப்பதும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் மூன்றில் சஞ்சரிப்பதும் பேச்சாற்றலில் தடுமாற்றத்தைத் தந்திருக்கிறது. அத்துடன் 12ம் வீட்டில் சூரியன், புதன், குரு ஆகியோரின் இணைவும் தோஷத்தைத் தருகிறது. இவர் உங்கள் மகள் வயிற்றுப் பேரன் என்பதால் அவருக்காக நீங்கள் பரிகாரம் செய்வதில் பலன் உண்டாகாது. நீங்கள் பெண் கொடுத்த வீட்டில் அவர்கள் தரப்பில் இருந்து வரும் பித்ருதோஷம் என்பது இவர் மீதும் தன் தாக்கத்தை உண்டாக்கு கிறது. சம்பந்தி வீட்டில் உள்ள பெரியோர்களிடம் பேசி அவர்கள் தரப்பில் இருந்து வந்திருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்யச் சொல்லுங்கள். அதன் பின்பு உங்கள் மகளிடம் வீட்டுப் பூஜையறையில் வெள்ளியினால் ஆன வேல் வாங்கி வைத்து தினமும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். பிள்ளையை அழைத்துக் கொண்டு பெற்றோர் இருவரும் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரிடம் நேரடியாக பிரார்த்தனை செய்வது நல்லது. உங்கள் மகளிடம் தொடர்ந்து பிரதி மாதந்தோறும் வரும் கிருத்திகை அன்று விரதம் இருந்து வரச் சொல்லுங்கள். சுப்ர மணிய ஸ்வாமியின் திருவருளால் 10.04.2023 முதல் பேரனின் வளர்ச்சியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

?எனது மகன் எம்.இ., படிப்பில் கோல்டு மெடல் வாங்கியவர். தனியார் கல்லூரியில் ஐந்து வருடம் உதவி பேராசிரியர் ஆக வேலை செய்தார். அதன் பிறகு குரூப் எக்ஸாம் எழுதி எதிலும் முன்னேற்றம் இல்லை. வேலையை விட்டுவிட்டு கோச்சிங் கிளாஸ் செல்கிறார். அவருக்கு ஒரு நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- ராஜலக்ஷ்மி, கல்லை.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி என்பது நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டின் அதிபதி புதன் என்பதாலும், புதன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதாலும் தற்போது நடந்து வரும் நேரமே அவருக்கு நன்மையைத் தரக்கூடிய வகையில்தான் அமைந்துள்ளது. அதே நேரத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு வக்ரம் பெற்றிருப்பதும் ஜென்ம லக்னத்தில் சனியின் இணைவும் வேலைவாய்ப்பினை சற்று தாமதமாக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் தனியார் வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். 27.03.2022ற்குள் வேலை கிடைத்துவிடும். கிடைக்கும் வேலையில் சேர்ந்து பணி செய்துகொண்டே அரசு பணிக்கான தேர்வுகளை எழுதி வருவது நல்லது. புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி அவரது பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வாருங்கள். விரைவில் நிரந்தர உத்யோகம் கிடைப்பதோடு மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து வாழ்வார். கவலை வேண்டாம்.

?32 வயதாகும் என் மகனுக்கு கடந்த மூன்று வருடமாக பெண் பார்த்து ஏதும் அமையவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அனேக கோயில்களுக்கு சென்று வந்துள்ளோம். என் மகனின் திருமணம் எப்போது நடைபெறும்? உரிய வழி காட்டுங்கள்.

- கணேசன், மதுரை.

விசாகம் நட்சத்திரம்,  துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை திருமண யோகம் என்பது நன்றாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் நீங்கள் பெண் பார்க்கத் துவங்கவில்லை. கால நேரத்தை தவறவிட்டதன் பலனை தற்போது அனுபவித்து வருகிறீர்கள். அவருடைய ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறார். தற்போது குரு புக்தி என்பது துவங்கியிருந்தாலும் இவரது ஜாதகத்தில் குரு ஆறாம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்திருப்பது திருமண யோகத்தில் பெரிய மாற்றத்தினைத் தராது. லக்னாதிபதி சனி 12ல் அமர்ந்திருப்பதும், சனியும் குருவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தங்கள் பார்வையை செலுத்துவதும் சாதாரண பலனையே தரும். மகனுடைய ஜாதக பலத்தின்படி அவர் பணியாற்றும் துறையிலேயே மணமகள் அமைவார் என்பது தெளிவாகிறது. பிரதி மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கித் தாருங்கள். உங்கள் மகனிடம் தினமும் விநாயகப் பெருமானை கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை 16 முறை சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள்.

வருகின்ற வைகாசி மாத வாக்கில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடும்.

“நமோ நமோ கணேசாய நமஸ்தே ஹர ஸூநவே

அவிக்னம் குருமே தேவேச நமாமித்வாம் கணாதிபா.”

?பி.எஸ்.சி முடித்து அரசு அலுவலகத்தில் தற்காலிக பணியாளர் ஆக பணிபுரிந்து வரும் எனக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மாப்பிள்ளை வீட்டார் நிராகரிக்கின்றனர். செவ்வாய் தோஷம், குலதெய்வ தோஷம் போன்ற காரணங்களைக் கூறி பரிகாரம் சொல்கின்றனர். அனைத்தும் செய்தும் திருமணம் கைகூடவில்லை. எனது திருமணம் நல்லபடியாக நடக்க என்ன செய்ய வேண்டும்?

- பிரியா, தூத்துக்குடி.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் சுத்தமாக இருப்பதால் குலதெய்வ தோஷம் என்பது கிடையாது. அதே போல் எட்டில் அமர்ந்திருக்கும் செவ்வாயை இரண்டில் உள்ள சனி பார்ப்பதால் செவ்வாய் தோஷம் என்பதும் கிடையாது. திருமண யோகம் என்பது தற்போது நன்றாக உள்ளது. அதே நேரத்தில் உங்கள் மனதில் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. என்றாலும் ஏழாம் பாவக அதிபதி புதன் வக்ரம் பெற்ற நிலையில் நீசம் பெற்ற சூரியனுடன் இணைந்து அமர்ந்திருப்பது திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த மணமகனாகத் தேடுங்கள். நீங்கள் பிறந்த இடத்திலிருந்து வடமேற்கு திசையில் இருந்து மணமகன் வருவார். ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் வைகுண்டம் திருத்தலத்திற்குச் சென்று பெருமாளை சேவித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் வைணவ குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியருக்கு வேஷ்டி-புடவை வாங்கித் தந்து நமஸ்கரியுங்கள். பெருமாளின் ஆசிர்வாதத்தோடு வருகின்ற ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் உங்கள்

திருமணம் முடிவாகிவிடும்.

Related Stories: