சஷ்தி எனும் வட இந்தியாவின் கருக்காத்தம்மன்

வளர் பிறையிலும் தேய்பிறையிலும் சஷ்டி என்பது ஆறாம் திதி ஆகும். வங்காளத்திலும் ஒடிஷாவிலும் ஆறு முகம் கொண்ட பெண் தெய்வத்தைக் கருவளம் மற்றும் குழந்தை நலம் வேண்டி வணங்குகின்றனர். இவளுக்கு ஆறு முகம் இருப்பதால் இவளை சஷ்தி என்றனர். இந்த ஆறுமுகமும் மேலும் கீழுமாக மும்மூன்று என்றும் முன்னால் மூன்று பின்னால் மூன்று என்றும் கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் இவளுக்குக் கைகள் இரண்டு மட்டுமே உண்டு. தன் கையில் ஏழெட்டு குழந்தைகளை வைத்திருப்பாள். பூனை வாகனத்தில் வருவாள்.

சஷ்தி தோற்றமும் வரலாறும்

சஷ்திக்கென்று ஆரம்பகாலத்தில் உருவம் எதுவும் கிடையாது. அவளை ஒரு நீர் நிறைந்த கரகத்தை வைத்தும் சாணி உருண்டையைப் பிடித்து வைத்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்தும் வணங்கினர். ஆலமரத்தடியில் ஒரு சிவப்புக் கல்லை வைத்தும் வணங்கினர். கி.பி. இரண்டாம் நுற்றாண்டைச் சேர்ந்த குஷானர் ஆட்சிக் காலத்தில் சஷ்தியின் உருவம்

நாணயங்களில் பொறிக்கப்பட்டது.

சஷ்தி என்பவள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துத் [pre historic deity] தெய்வம் ஆவாள். பின்னர், கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தோன்றிய புராணங்கள் இவளைப் பார்வதியாகவும் தேவசேனையாகவும் கதைகள் சமைத்தன. சஷ்தி தேவ்யுபாக்கியானம் என்பது பின்னிணைப்பாகப் பிரம்ம வைவர்த்த புராணம் தேவி பாகவத புராணம் போன்றவற்றில் சேர்க்கப்பட்டு இவளது கதையை விரித்துரைக்கிறது. வங்காளத்தில் மங்களகாவியம் என்பதில் இவளது கதை சஷ்தி மங்கல் என்ற பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர், இத்தேவ வழிபாடு குஜராத், ஹரியானா மற்றும் பிஹாரிலும் பரவியது. ஹரியானாவில் இவளை ‘சாட்டி மாதா’ என்பர். பிஹாரின் சித்திரை மற்றும் கார்த்திகை மாத சஷ்டி அன்று ‘சாத் பண்டிகை’ என்ற பெயரில் வணங்கி மகிழ்வர்.

குழந்தைப்பேறும் நலமும் அளிக்கும் சஷ்தி  

குழந்தைப்பேறு மற்றும் சுகப் பிரசவம் வேண்டுவோர், சஷ்தியை வணங்கினர். குறிப்பாக ஆண் மகவு வேண்டியவர்கள் சஷ்திக்கு சிறப்புப் பூஜைகள் செய்து மாதந்தோறும்  வளர்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்தனர். பிரசவம் நடக்கும் அறையில் சாணி உருண்டைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சஷ்தியாக பாவித்து வழிபட்டனர். குழந்தை இறந்து பிறந்தாலோ கருவில் கலைந்தாலோ அதற்கு சஷ்தியின் கோபமே காரணம் என்று நம்பினர். குழந்தை பிறந்த ஆறாம் நாள் முதல் இருபத்தியோராம் நாள் வரை சிறப்பு வழிபாடுகள் செய்தனர். தொடக்கத்தில் துடியான தெய்வம் என்று அஞ்சப்பட்ட சஷ்தியை பிற்காலத்தில் சாந்த சொரூபியாக மாற்றி ஸ்கந்தனோடு தொடர்புபடுத்தினர்.

கருப்பை நோய் தீர்க்கும் சஷ்தி விரதம்

ஒரிசா மாநிலத்தில் சித்திரை மாத சஷ்டி அன்று அசோகா சஷ்தி என்ற பெயரில் சஷ்திக்கு விரதம் இருப்பார்கள். அன்று காலை வெறும் வயிற்றில் அசோகா மரத்தின் மொட்டுக்களைப் பச்சையாகத் தின்று தண்ணீர் குடித்து விரதத்தைத் தொடங்குவர்.  அசோகா மொட்டுகளும் இலைகளும் கருப்பையில் இருக்கும் கழிவுகளை அகற்றி கருவைத் தங்க வைக்கும் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் சஷ்டி அன்று சஷ்தி விரதம்

மாதந்தோறும் சஷ்தியை சாந்தன், ஆரண்ய, கந்தமா, லுனந்தனா, சாப்டி, துர்கா, சஷ்டி, மூலகா, அண்ணா, சீதளா, கோ ரூபினி, அசோகா என்று 12 மாதங்களிலும் சஷ்டி திதி அன்று சஷ்தி தேவிக்கு விரதம் இருந்தனர். ஆடி மாதம் ஆரண்ய சஷ்டி அல்லது ஜமாய் சஷ்டி கொண்டாடப்படும். வங்காளத்தில் புரட்டாசி மாதத்தில் சஷ்டி அன்று சீதளா சஷ்தி என்ற பெயரில் துர்கா பூஜை கொண்டாடுகின்றனர். அன்றும் பெண்கள் விரதமிருந்து தங்களின் பிள்ளைகள் ஆடு மாடுகள் மற்றும் பயிர் வளம் செழிக்க சஷ்திக்குப் பூஜைகள் செய்வர். ஐப்பசி மாதம் சுப்ரமணிய சஷ்தி என்ற பெயரில் கந்தசஷ்டி போல சுப்ரமணியருக்கும் தேவசேனைக்கும் திருமணம் நடந்த விழா கொண்டாடப்படுகிறது.

லுந்தோன் சஷ்தி அன்று பீர்க்கங்காயைப் படைத்து வணங்குவர். மூலோ சஷ்தி அன்று முள்ளங்கி நைவேத்தியம் செய்வர். ஜமாய் சஷ்தி அல்லது ஆரண்ய சஷ்தி என்பது விநோதமானது அன்று மாமியார் தம் மருமகனின் ஆயுள் தீர்க்கம் வேண்டியும் அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்காகவும் விரதம் அனுஷ்டிப்பர். தற்போது குழந்தை பிறப்பு, பூப்பு, திருமணம் ஆகிய பெண்களுக்குரிய நன்னாட்களில் சஷ்தியை வணங்கும் மரபு வளர்ந்து விட்டது.  

சஷ்தியும் கருப்புப் பூனையும்

சஷ்தி பற்றி வடநாட்டில் வழங்கும் கதை ஒன்று அவள் குழந்தை நலம் காப்பவள் என்பதை உறுதி செய்கிறது. ஒரு வீட்டில் மருமகள் தன் வயிற்றுப் பசி காரணமாக உணவுப் பொருட்களைத்  திருடி திருடித் தின்றாள். மாமியார் விசாரித்தபோது அங்கிருந்த கறுப்புப்பூனை மீது பழி சுமத்தினாள். அந்த மருமகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அனைத்தையும் அவ்வீட்டில் இருந்த அந்தக் கருப்புப் பூனை தூக்கிக் கொண்டு போய் சஷ்தியிடம் கொடுத்து விட்டது. குழந்தையைக் காணோம் என்றதும் அண்டை அயலார் அந்த மருமகளைப் பிள்ளை தின்னி ராக்கச்சியாகக் கருதி அஞ்சினர்.

அடுத்த முறை குழந்தை பிறந்ததும் பூனை மறுபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு போன போது அவளும் அந்தப் பூனையின் பின்னால் தொடர்ந்து போனாள். பூனை சஷ்தி கோயிலுக்குள் நுழைந்தது. அவளும் அக்கோயிலுக்குள் போய் சஷ்தியிடம் இறைஞ்சித் தன் குழந்தைகளைத் திரும்பத் தரும்படி வணங்கிக் கேட்டாள். சஷ்தி அவளைப் பூனையிடம் மன்னிப்புக் கேட்கும்படி சொல்ல அவளும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள். சஷ்தி தேவி அவளது ஏழு குழந்தைகளையும் அவளிடம் கொடுத்தனுப்பினாள். அன்று முதல் அவள் தன் குழந்தைகளின் நலம் வேண்டியும் இனி பிறக்கப் போகும் குழந்தை களின் நலத்துக்காகவும் வளர்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்துவந்தாள்.

சஷ்தியும் பார்வதியும்

 

சஷ்தி வணக்கம் ஆதிகாலத்தில் மக்கட்பேறு தொடர்புடைய வழிபாடாக வட நாட்டில் இருந்தது. தென்னாட்டில் இதற்கு நிகராக பிடாரி வழிபடப்பட்டாள். பின்னர்,  தோன்றிய வைதிகச் சமயங்கள் சஷ்தியை மூத்த தாய் என்ற பொருளில் ஏற்றுக்கொண்டு பார்வதியாக தமது புராணக் கதைகளில் சேர்த்துக் கொண்டன. ஆனால்,  வங்காளத்தில் மட்டும் சஷ்தியும் பார்வதியும் வெவ்வேறான தெய்வங்களாகவே போற்றப்படுகின்றனர். விநாயகர் தலை வெட்டுப்பட்டு அவருக்கு வேறு தலை வேண்டியபோது பார்வதி தேவி சஷ்தியை வணங்கியதாகவும் இங்குக் கதை உலவுகிறது.

சஷ்தியும் தேவயானையும்  

வங்காளம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் ஆரம்பத்தில் சஷ்தியை பார்வதி என்று பெயரில் வைதிகச் சமயங்கள் ஏற்றுக் கொண்டன. பின்னர், அவளது ஆறு முகத்தை கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் வளர்க்கப்பட்ட ஸ்கந்தனுக்கு ஏற்றினர். அதன்பிறகு சில கதைகளில் அவன் மனைவி தேவசேனையாக மாற்றிவிட்டனர். தேவசேனையின் பல பெயர்களுள் ஒன்றாக சஷ்தியும் விளங்குகிறது. காலப்போக்கில் சஷ்திக்கு அனுஷ்டிக்கப்பட்ட சஷ்தி வழிபாடும் அன்று மேற்கொண்ட சஷ்டி விரதமும் சிறப்பு வழிபாடும் கந்தனுக்கு மாறிவிட்டது, ஆனால், வட இந்தியக் கிராமங்களில் மட்டும் இன்றும் சஷ்தி கருக்காத்த அம்மனாகவே வணங்கப்பட்டு வருகிறாள்.

சட்டியில் இருந்தால்...

தமிழகத்தில் ஐப்பசியில் அனுஷ்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் சஷ்டி வழிபாட்டுடன் இணைந்து விட்டது. ஆறுமுகம் கொண்ட சஷ்திக்கு இருக்கும் விரதம் காலப்போக்கில் ஆறுமுகம் கொண்ட கந்தனுக்கு மாறிவிட்டது. ஆனாலும், பக்தரின் வேண்டுதலும் பலனும் ஒன்றுதான். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி சஷ்டியில் விரதம்  இருந்தால் அகப்பையில் [கருப்பையில் கரு] வரும் என்ற பொருளை உடையது. ஆக, குழந்தை வரம் வேண்டுவோர் சஷ்தி தேவிக்கு மேற்கொண்டு வந்த விரதத்தை தமிழ்நாட்டில் முருகனுக்கு மேற்கொண்டு அவன் சூரசம்ஹாரம் முடித்து தேவசேனையைத் திருமணம் செய்யும் நன்னாளை ஒட்டி நிறைவு செய்தனர். கந்தனோடு இருப்பதால் தேவசேனை சஷ்தி எனப்பட்டாள். வட இந்தியாவில் தேவசேனையை சஷ்தி என்ற பெயரால் வழங்குகின்றனர்.

நிறைவு

தென்னகத்தில் தேவசேனையை சஷ்தி  என்று அழைப்பது கிடையாது. இங்கு சஷ்தி என்ற தெய்வமே காணப்படவில்லை. மாறாக பிடாரி, நாகம்மாவாக, நாகத்தம்மனாக, சிங்கம் பிடாரி, இளம்பிடாரி, பிடாரி அரசி  என்ற பெயர்களில் கருக்காத்தம்மனாக புதிதாகப் பிறந்த குழந்தையையும் பிறக்கப் போகும் குழந்தையையும் காக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.

Related Stories: