குரு பெயர்ச்சி பலன்களை புரிந்து கொள்வோம்!

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி, சனிக்கிழமை, 13.11.2021 மாலை 6.10 க்கு வளர் பிறை தசமி திதி, சதய நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தில், கும்ப லக்கின நவாம்சத்தில், புதன் ஓரையில், மகரத்திலிருந்து கும்பத்திற்கு குரு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை சனியோடு அவர் நீசம் பெற்ற நிலையில் மகர ராசியில் இருந்தார். வக்ர கதியிலும் இருந்தார். வக்ரகதி நீங்கி நேர்கதியாக கும்பராசிக்கு முறையாக அடைகின்றார்.

அங்கும் அவர் அதிக நாட்கள் இருக்க மாட்டார். ஏப்ரல் மாதத்தில் மறு படியும் நேர்கதியில் பெயர்ச்சி அடைந்து தன்னுடைய ஆட்சி வீடாகிய மீன ராசியை அடைவார். எனவே, இப்பொழுது உங்களுக்கு குருபெயர்ச்சி பலன் என்பது ஐந்து மாத காலத்திற்கு உரியதுதான். இதுவரை இந்த உலகத்தை அலைகழித்த நோய்நொடிகள் இனி குறையத் தொடங்கும். கால புருஷனின் லாபஸ்தானத்தில்(11ம் வீட்டில்) குரு இருக்கப் போவதால் பொருளாதாரம் ஓரளவுதழைத்தோங்கும்.

கும்ப  குருவாக இருப்பதால், கும்பத்தில் எப்படி நீர் நிறைந்து இருக்கிறதோ, அதைப் போல குளங்களிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி இருக்கும். நீர் வளம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். தன்னுடைய பார்வையால் அவர் பார்க்கின்ற இடங்கள் விருத்தி அடையும்.  அரசியல் இடமான சிம்ம ராசியைப்  பார்ப்பதால் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவும். 5-ஆம் பார்வையாக மிதுன ராசியைப்  பார்ப்பதால் பய உணர்வு நீங்கி தைரியம் பிறக்கும். புதனுக்குரிய ராசியாக இந்த ராசி இருப்பதால் கல்விச்சாலைகள் முறையாக இயங்க ஆரம்பிக்கும். ஒன்பதாம் பார்வை யாக துலா ராசியைப்  பார்ப்பதால் வர்த்தகங்கள் மேம்படும். சுய  முயற்சியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகரிக்கும்.

7-ஆம் இடம் என்பது கூட்டுத் தொழிலையும் சுயமுயற்சித்  தொழில்களையும் சுட்டிக் காட்டுவதால், புதிய ஒப்பந்தங்கள் மூலமாக தொழில் வளம் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இவைகள் எல்லாம் பொதுப்பலன்கள். இது தவிர ஒவ்வொரு ராசிக்கும், ராசி பலன்களை ஜோதிட நிபுணர்கள் வெளியிடுகிறார்கள். அவரவர் சொந்த  ஜாதக சக்திக்கும், தசை புக்திக்கும்  தகுந்தவாறு  இந்த பலன்களின் சாதகங்களும் பாதகங்களும் மாறும். ஆனால், இங்கே நாம் சொல்ல வந்தது வேறு விஷயம். ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ ஆன்மீக சூட்சுமங்களும், வாழ்வியல் ரகசியங்களும் , எப்படி வாழ்ந்தால் வெற்றிபெற முடியும் என்ற நுட்பமான வழிகாட்டுதல்களும்  ஒளிந்து கிடப்பதை வாசகர்களுக்கு சுட்டிக் காட்டுவதுதான் நோக்கம்.

குரு பெயர்ச்சி குறித்தும் , அதன் பெயர்ச்சிபலன்கள் குறித்தும் எல்லோரும் கவனம் கொள்வதால்,  நாமும் குருவிடமிருந்து இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம். இன்னொரு விஷயமும் உண்டு. எதையும் தொடங்க வேண்டும் என்று சொன்னால், குருவருள் முக்கியமல்லவா. குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை. தெய்வத்தைக்  கூட குருவின் மூலமாகவே  அடைய வேண்டும் அல்லது தன்னுடன் அழைத்துச் செல்ல, அந்த இறைவனே குருவாக வரவேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு ஒரு குரு  தேவைப்படும். ஆனால் குருவுக்கான தகுதியோடு பிறந்தவர்களுக்கு இறைவனே குருவாக வந்து ஆட்கொள்வான் என்பதைத்தான் பல பெரியோர்களுடைய வாழ்க்கையில் நாம் காணுகின்றோம்.

உதாரணத்திற்கு திருஞானசம்பந்தரின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று வயது சிறுவனாக இருந்தபோது தன்னுடைய தாய் தந்தையாக சிவ பெருமானையும் பார்வதிதேவியும் நினைத்து அழுகின்றார். அழும் குழந்தைக்கு பால் தர, சாட்சாத் உமை அம்மையே வருகின்றார். அந்த ஞானப் பாலை உண்ட பாலகன் ஞானம் பெற்று சீர்காழி குளக்கரையில் நின்று,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       

காடுடைய சுடலைப் பொடிபூசி என்

உள்ளங்கவர் கள்வன்        

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள் செய்த         

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானி வனன்றே.  

 

என்று தேவாரத்தைத்  தொடங்குகின்றார். இங்கே குருவைத்  தேடி ஞானசம்பந்தர் போகவில்லை. ஆனால் ஞான சம்பந்தரைத்  தேடி குருவே வருகின்றார். அருணகிரிநாதரின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானே குருவாக வந்து அடி எடுத்துக் கொடுக்க, அவர் திருப்புகழ் பாடுகின்றார். கந்தர்  அனுபூதியில் இறைவனே தனக்குக்  குருவாக வர வேண்டும் என்பதையும் அவர் பாடுகின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

வைணவத்தில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். பெரியாழ்வார், “முறையாக நான் வேதத்தை அத்யயனம் செய்தவர்  அல்ல. ஆனால் வேதத்தின் சாரமான பொருளையெல்லாம் இறைவனே வந்து எனக்கு எடுத்துரைத்தான்” என்று பாடுகின்றார்.  பீதக ஆடை பிரானார் பிரம்மகுருவாக வந்து போதித்ததாகச் சொல்கிறார்.  திருமங்கை ஆழ்வாருக்கு, சாட்சாத் பெருமாளும் தாயாரும் குருவாக வந்து அஷ்டாக்ஷர  மந்திரத்தை  செவியில் ஓதுகின்றார்கள்.  உடனே அவர் தமிழில் பெரிய திருமொழி பாடத் தொடங்குகிறார். இப்படிச்  சொல்லிக்கொண்டே போகலாம்.

இறைவனே வந்தாலும், அவன் ஒரு குருவாக வந்து தான், உயிர்களை உயர்வடையச் செய்கிறார் என்பதுதான் இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி. எனவே,  திருவருளுக்கு குருவருள் தேவை என்பது சாரமான செய்தி. அந்த குருவருள் வேண்டும் என்பதைத்தான், சூட்சுமமாக, “குரு” என்கின்ற கிரகத்தின் குணமாக வைத்தார்கள்; செயலாக வைத்தார்கள். நாம் இந்த ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் வெறும் லௌகீ கமான விஷயங்களுக்காக குரு பெயர்ச்சியை நினைத்துக்  கொண்டிருக்கிறோம்.எந்த செயல் வழிபாடாக இருந்தாலும் குருவணக்கம் தான் முதலில் தேவை.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ

குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

ஜோதிட சாஸ்திரத்தில் பல கிரகங்களுக்கு பெயர்கள் இருக்கின்றன. சனி, சந்திரன், சூரியன். ஆனால், பிரகஸ்பதிக்கு மட்டும் “குரு” என்றே பெயர்.  குரு என்பது பொதுப் பெயர். சுக்கிரனையும்  குரு என்று அழைத்தாலும் அவர் அசுர குருவாக இருப்பதால் அவரை பொதுப் பெயரில் அழைப்பது கிடையாது. குரு  என்ற  பெயருக்கு ஏற்ப அவருக்கு காரகத்துவங்கள் வழங்கப்பட வில்லை. குரு என்றால் இருட்டை நீக்குபவர் என்று பொருள். வேறு யாருக்கும் இப் பெருமை இல்லை. இருட்டு என்பது அச்சம், தவிப்பு, கவலை, குழப்பம் மயக்கம், வறுமை, முட்டாள்தனம்,  வேதனை, தடுமாற்றம் என்பதன் குறியீடு.

இதன் நேர் எதிர்ப்பதம் “வெளிச்சம்.”அச்சம் இருட்டு என்றால் தைரியம் வெளிச்சம் (குரு). தைரியம் உள்ளவனிடம் அச்சம் இருக்காது. அச்சம் உள்ளவனிடம் தைரியம் இருக்காது. ஆனால், இரண்டும் ஒன்றின் மறைவில் தான் ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தைரியம் குறைந்துகொண்டே போகும் போது அச்சம் தானாக வந்துவிடும். தைரியம் வருகின்ற பொழுது அச்சம் தானாகவே போய்விடும். இதைச்  சின்ன உதாரணம் மூலம் பார்ப்போம்.

எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் சாத்தி அடைத்துவிட்டால் பகல் நேரத்திலேயே அறைக்குள் இருட்டு வந்துவிடும். இப்போது தடுமாற்றம், மயக்கம், குழப்பம் எல்லாம் இருக்கும். செயல்படாத நிலையில் எல்லாம் முடங்கிக் கிடக்க வேண்டும். மீறிச்  செயல்பட்டாலும் இருட்டு என்பதால், அதிகத் தவறுகளும் பாதிப்புகளும் ஆபத்தில் முடியும்.இப்போது முதல் தேவை என்ன? வெளிச்சம் தான். இந்த வெளிச்சத்தை எங்கிருந்து நாம் அழைத்துக் கொண்டுவர முடியும்?  எது இருள் அடைய வைத்ததோ  அதனை நீக்கிவிட்டால் வெளிச்சம் தானாக வந்துவிடும் அல்லவா!  இப்போது ஒரு நுட்பம்  சொல்கின்றேன்.

ஜோதிட சாஸ்திரத்தில் இந்த விஷயத்தைத்  தான் “பரிகாரம்” என்று சொல்கிறார்கள். இதை இன்னும் விளக்கமாக பிறகு நாம் பார்ப்போம். இப்போதைக்கு பரிகாரம் என்பது இருட்டை நீக்குவது, வெளிச்சத்தை கொண்டு வருவது  என்பதை மட்டும் புரிந்து கொள்வோம். வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?மிக எளிமை. ஜன்னலைத் திறந்து விட வேண்டும். கதவுகளைத் திறந்து விடவேண்டும். அவ்வளவுதான். வெளிச்சம் தானாக வந்துவிடும். இருட்டு போயே போய்விடும். அதைவிட்டு இருட்டை நாம்  போகச் சொன்னால் போய்விடுமா? இல்லை தடிகொண்டு அடித்தால் போய்விடுமா? இல்லை முட்டி மோதினால் போய்விடுமா? இல்லை அழுது புரண்டால் போய்விடுமா? ஆனால் நாம் பரிகாரம் என்று இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலான பரிகாரங்கள் பழைய பஞ்சாங்கங்களில் இல்லை. பிரச்சினை களுக்குளேயே  இருக்கிறது. மூடி இருக்கிற கதவையும் ஜன்னலையும் திறந்தால்,   தானாகவே இருட்டு போய்விடும். வெளிச்சம் வந்துவிடும். இந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது ? அங்கேயே இருந்து வந்தது. இருட்டையும் நாம் போக்கவில்லை. வெளிச்சதையும் கொண்டு வரவில்லை.ஒரே ஒரு காரியத்தைச் செய்தோம். இரண்டும் ஒரு நேரத்தில் தானாகவே நடந்து விட்டன, இப்பொழுது முடங்கிய காரியங்கள் எல்லாம் மள மள என்று நடக்க ஆரம்பித்து விட்டன,

“இதைத்தான்  குருவின் அருள் கிடைத்து விட்டது.  வெளிச்சம் வந்து விட்டது”என்கிறோம்.

அதனால் வெளிச்சத்தின்  குறியீடாக, இருளை நீக்கி வெளிச்சத்தை தருபவர் குரு என்று சொன்னார்கள். நம்முடைய ஆத்மா ஜீவன் இருக்கிறதே , இது சுயம்  ஒளிமயமானது. சுய வெளிச்சம் உடையவன்  “ஜீவன்” என்றும் அழைக்கிறோம் . இது பற்றிய விளக்கத்தை பகவத்கீதையில் மிக அற்புதமாக விளக்குகின்றார் கண்ணன். ஆன்மா ஒளி மயமானவன். அவனிடம் இருட்டு என்கிற அஞ்ஞானம் இல்லை .

அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா

அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா

நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய:

அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய:

அதோ’ஸ்தி மந்தா நான்ய:

அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா

அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம் .

என்கிறது உபநிடதம்.(பிரகதாரண்யக உபநிடதம் 3 - 7 - 23.) பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்ப வரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு என்று நீண்ட விளக்கம் சொல்கிறார்கள்.

ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ

மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிரகதாரண்யக உபநிடதம் 2 - 4- 5.

ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.

ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-

விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ

நிர்க்குணம் குணபோக்த்ரு ச. (பகவத் கீதை 13-14).

எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது. அப்படியானால் இந்த ஆன்மா ஏன் தன்னை உணரவில்லை? காரணம் அதன் மீது படர்ந்த அஞ்ஞானம். இருட்டு. இவை பிராகிருத சம்பந்தத்தால் வந்து விட்டபடியால், சூரிய ஒளியை மேகங்கள் மறைப்பது போல, தன்னை அறியாமல் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது.  இதை “அஞ்ஞானம்” என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கு பவனுக்கு குரு என்று பெயர்.  

இந்த ஆன்மா எதனால் மறைக்கப்பட்டு இருக்கிறது? அதற்கு மாசு என்று பெயர்.  தன்னை உணரா தன்மைக்கு இந்த மாசுதான் காரணம். இந்த மாசு இல்லாத நிலையே ஞான நிலைவெளிச்ச நிலை. இதை வள்ளுவனார் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” என்கிறார். இந்த மாசு  நீக்குதல் என்பதே குருவின் பணி. இதைத்தான் குரு பார்க்க கோடி புண்ணியம் என்று  சொன்னார்கள். குரு வந்துவிட்டால் மாசு நீங்கி விட்டது என்று பொருள். இருள் விலகி விட்டது என்று பொருள். கதவைத் திறந்தால் வெளிச்சம் தானே வருவது போல குரு வந்து விட்டால் வெளிச்சம் தானாகவே வந்துவிடும் .

ஜோதிட சாஸ்திரத்தில் குரு மட்டுமே பூரணமான சுபர் என்று அழைக்கப்படுகிறார். அசுரர்களுக்கு சுக்கிரன் குரு. அசுர குருவாக  சுக்கிரன் இருந்த போதிலும் அவரை குரு என்கிற பொதுப் பெயரில் யாரும் அழைப்பதில்லை. “அ” என்ற வார்த்தையைச்  சேர்த்து அசுரகுரு என்று அழைப்பார்கள். உலகியல்  செல்வங்களை (நகை,பணம், வண்டி,வீடு) என  அள்ளித் தருவார் சுக்கிரன். ஆனால், குரு ஞானச்செல்வத்தை அள்ளித் தருவார். குரு, தன் சீடனுக்கு பலவிதமாகஅருளைத் தருவார். அதில் இரண்டு விஷயங்கள் முக்கியம்.

ஒன்று நயன தீட்சை.

இரண்டு ஸ்பரிச தீட்சை.

நயனம் என்பது  பார்வை. ஸ்பரிசம் என்பது சேர்க்கை. குரு சேரும் பொழுது பாவ கிரகங்கள் சுபத்துவம் அடைகின்றன. குரு பார்க்கும் பொழுது, பார்க்கப்படும் கிரகங்கள் சுபத்துவம் அடைந்து, சுப வழியில் பலன் கொடுக்க ஆரம்பிக்கின்றன. இதனை ஜோதிட சாஸ்திரத்தில், குரு சேர்ந்த இடமும், பார்த்த   இடமும் பலம் பெறுகின்றன என்றார்கள். வேறு கிரகங்களுக்குச் சொல்லப்படாத ஒரு விஷயம் குருவுக்குச்  சொல்லப்படுவதாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மங்களகரமான காரியத்திற்கு குரு பலம் வேண்டும் என்பார்கள். செவ் வாய் பலம், சூரிய பலம் என்றெல்லாம் சொல்லும் வழக்கம் இல்லை.

அந்தப்  பலம் எல்லாம் தேவை என்றாலும் கூட, குரு பலம் என்பது முக்கியம். பெரியோர்களின் ஆசிர்வாதபலமும் வேத வல்லவர்களின்  ஆசிர்வாதமும் இருக்கும்பொழுது எந்தத்  தடைகளும்

வருவதில்லை. வேதம் என்ற வார்த்தையை பிரதிநிதித்துவப்படுத்தவே  ஜோதிட சாஸ்திரத்தில் குருவை “அந்தணன்” என்ற சொல்லால் அழைக்கின்றனர். மற்ற கிரக பலன்கள் தடுத்தாலும் கூட, குருபலன் கூடி நிற்க காரியம் தடைகளை கடந்து நடந்து முடிந்துவிடும்.

ஆனால் குரு தடுத்தால், எல்லா கிரகங்கள்  கூட்டு சேர்ந்து நின்றாலும்  அக்காரியம் நடைபெறாது.

தோஷங்களை விலக்கும் தன்மை குருவிற்கே உண்டு. அதனால் அமலத்துவம் உடையவர் குரு என்று சொல்வார்கள். “ஆசு” யெனும் குற்றத் தையும் “மாசு” எனும் அசுத்தத்தையும் நீக்கும் வல்லமை குருவிற்கே உண்டு. மற்ற கிரக தோஷங்கள் குருவினால்  நீங்கும் என்பது  ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை விதி. ஆனால், குரு தோஷம் மற்ற கிரகங்களால் நீங்காது.

குருவினால் ஏற்பட்ட தோஷம் குருவினால் மட்டுமே நீங்கும்.

உங்களிடம் கூர்ந்த மதி, சரியாக சிந்தித்தல், அறிவுபூர்வமாக ஆராய்தல், உணர்ச்சி வசப்படாது  முடிவெடுத்தல், நிதானம், சாதுத்  தன்மை, மன உறுதி, தீட்சண்யமான கண்கள், உறுதியான உடல், பிறருக்கு உதவும் தன்மை, தவம், தானம், நிதானம், பக்தி, மங்களகரமான பேச்சு இவைகளெல்லாம் இருப்பின், குருவின் பூரண அருள்இருப்பதாக பொருள் கூறலாம்.குரு, வான வெளியில் சூரியக் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு கிரகம் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். இதற்கென்று நாம ரூபமும், குண ரூபமும் உண்டு. நாம்  எந்த கிரகத்தின் ஆளுமையில் வர வேண்டும்? எந்த கிரகத்தின் ஆளுமையில் இருக்கிறோம்  என்பதைப்  புரிந்து கொண்டால்தான், ஜோதிடம் என்னும் கலையில் உள்ள ஆன்மீகச் சூட்சுமங்களைப்  புரிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு நுட்பம் பாருங்கள். ஜோதிடவியலில் 12 ராசிகள் 9 கிரகங்களுக்குக்  கொடுத்திருக்கிறார்கள். இந்தப்  பங்கீடு ஏதோ மனம் போன படி செய்ததில்லை. ஆன்மீகத்தின் அழுத்தமான ஞானம் இருந்தால் தான் இது சாத்தியம். விஞ்ஞானமும் மெய்ஞானமும் இரண்டிலும் ஞானம்  இருந்தால் மட்டுமே இப்படிச்  செய்ய முடியும். குரு பகவானுக்கு இரண்டு ராசிகளுக்கு பட்டிருக்கின்றன. ஒன்று தனுசு. இரண்டு மீனம். காலச்சக்கரத்தின் 9 வது ராசி தனுசு. காலச்சக்கரத்தின் 12வது  ராசி மீனம். ஒன்பதாவது ராசிக்கு தர்மஸ்தானம் என்று பெயர்.

12வது  ராசிக்கு மோட்ச ஸ்தானம் என்று பெயர்.
தர்மப்படி வாழ்வதற்கும், எது தர்மங்கள் என்று சொல்வதற்கும்  சாஸ்தி ரங்கள் தேவை. அந்தச்  சாஸ்திரத்துக்கு அதிபதி குரு. இந்தச் சாத்திரங்களைச்  சொல்லித் தருபவருக்கு குரு  என்று பெயர். குரு சொன்னபடி வாழ்ந்தால் மோட்சம். அந்த மோட்சத்துக்கு இட்டுச் செல்பவர் குரு. அதனால்தான் தர்ம சாஸ்திரங்களை குறிக்கக்கூடிய ஒன்பதாவது ராசியையும், மோட்ச சாஸ்திரத்தை குறிக்கக்கூடிய 12 ராசியையும் குருவுக்கு  ஒதுக்கி வைத்தார்கள்.

குரு இல்லையேல் சாஸ்திரங்கள் இல்லை.

குரு இல்லையேல் மோட்ஷம் இல்லை.

9 மற்றும் 12ஆம் பாவங்களின்  காரகத்துவதற்கு குரு காரணமாகிறார். தெய்வீகத் தன்மையை நோக்கி இவ்வுலகத்தில் சாஸ்திரப்படி  வாழ வைத்து அழைத்துச் செல்கிறார். இதை வள்ளுவரும் குறட்பாவில் சொல்கிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

இதில் வாழ வழி காட்டுபவர் குரு (9ஆம் இடம்) தெய்வ நிலைக்கு அழைத்துச் சென்று அமர வைப்பவர் (12ம் இட குரு). குருவைப்  பற்றிச் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஜோதிடம்  என்பது காலக்கணிதம் மட்டுமல்ல, அது ஞானக்  கணிதம் . அதில் தேடினால் வைரங்களும் கிடைக்கும். சாதாரண கூழாங்கற்களும் கிடைக்கும்.  நாம் வைரங்களைத்  தேடுவோம்.

Related Stories: