அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

378. கர்ப்பாய நமஹ (Shreegarbhaaya namaha)

 (திருநாமங்கள் 362 முதல் 385 வரை - திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)ராம பாணத்தால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்த வாலி, பாணத்தில் இருந்த ராம நாமத்தைக் கண்டு, தன்னைத் தாக்கியவன் ராமன் என உணர்ந்தான். தன் எதிரே ராமனைக் கண்ட வாலி, பலவாறாக ராமனை ஏசினான். ராமனின் செய்கையைக் குறித்துப் பல கேள்விகளும் கேட்டான். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே நின்ற  ராமன், வாலியைப் பேச விட்டுவிட்டு, பின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து நியாயத்தை எடுத்துச் சொன்னான்.

ராமனை நிந்தித்த போது வாலியின் கூற்றாகக் கம்பர் ஒரு பாடல் அமைத்துள்ளார்:

“கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்

ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ?

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை

அமிழ்தின் வந்ததேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை!”

ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! -

சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு மிக்க வடிவம் கொண்ட ராமா!

கோவியல் தருமம் - அரச நீதி என்பது

உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் - உங்கள் சூரிய குலத்தில் பிறந்த

எல்லோருக்கும்

உடைமை அன்றோ? - பரம்பரை சொத்து அல்லவா?

அந்த தர்மத்தை நீ மறந்து என்னைத் தாக்கி இருக்கிறாய் என்றால், இது சீதையின் பிரிவினால் நீ குழம்பிப் போய் செய்த காரியம் போல் தெரிகிறது.ஆவியை - உயிரான சீதையைப் பிரிந்து வெற்று உடல் போல் நீ ஆகிவிட்டாய்.சனகன் பெற்ற அன்னத்தை - தண்ணீர், பாலைப் பிரித்து அறியும் அன்னம் போன்ற சீதையை இழந்ததால் தர்மம், அதர்மத்தைப் பிரித்து அறியத் தெரியாமல் என்னைத் தாக்கிவிட்டாய்.அமிழ்தின் வந்த தேவியை - பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய மகாலட்சுமி என்னும் அமுதை இழந்தபடியால், நீ நஞ்சாக மாறிவிட்டாய்.

பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை - அவளைப் பிரிந்த திகைப்பில் மனம் குழம்பி நீ செய்த செயல் இது. சீதை உன்னோடு இருந்திருந்தால், இச்செயலை அனுமதித்திருக்க மாட்டாள்.இவ்வாறு வாலி பேசவே, ராமன் தலை குனிந்தானாம். அவமானத்தாலா? நிச்சயமாக இல்லை! ஆனால் ராமன் தலைகுனிந்து விட்டு மீண்டும் நிமிர்ந்தவாறே, வாலி தனது தவறை உணர்ந்து, “ராமா! என்னை மன்னித்தருள வேண்டும்! நான் என் தம்பியின் மனைவியை அபகரித்தது என் தவறு! அதற்கான தண்டனையை நீ எனக்குச் சரியாகத்தான் வழங்கி இருக்கிறாய்!” என்றான். அதெப்படி ராமன் குனிந்து நிமிர்ந்தவுடன் வாலியின் மனம் மாறும்?

ராமன் அவமானத்தால் தலைகுனியவில்லை. “சீதையைப் பிரிந்ததால் குழம்பிப் போய் என்னைத் தாக்கினாய்!” என்று வாலி சொன்னான் அல்லவா? “சீதை எங்கும் போகவில்லை! இதோ என் மார்பில் இருக்கிறாள் பார்!” என்று வாலிக்குக் காட்டவே ராமன் தலை குனிந்து தனது திருமார்பைப் பார்த்தான். திருமகளும் திருமாலும் என்றும் பிரிவதே இல்லை. சீதை ராமனைப் பிரிந்து இருப்பதெல்லாம் அவதாரத்தில் அவர்கள் செய்யும் நாடகமே என உணர்ந்தான் வாலி.

மேலும், திருமார்பில் திருமகள் இருக்கும் போது ராமன் தன்னைத் தாக்கி இருக்கிறான் என்றால் அது நூற்றுக்கு நூறு சரியான செயலே என்றும் உணர்ந்தான் வாலி. ஏனெனில் தவறான செயலைத் திருமால் செய்ய முற்பட்டால் திருமகள் தடுத்திருப்பாளே! அதனால்தான் தன் தவறை உணர்ந்து ராமனிடம் மன்னிப்பும் கோரினான்.

இச்சம்பவத்தில் இருந்து, திருமகள் திருமாலை என்றுமே விட்டுப் பிரிவதில்லை என்று அறிய முடிகிறதல்லவா? எப்போதும் மகாலட்சுமியைத் தனது திருமார்பில் கொண்டு, தனது செய்கைகளால் அவளை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார் திருமால். இப்படி மகாலட்சுமியைத் திருமார்பில் வைத்துக் காப்பதால் திருமால் ‘கர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார். ‘:’ என்றால் மகாலட்சுமி. ‘கர்ப்ப:’ என்றால் கருவிலுள்ள குழந்தை. மகாலட்சுமியைத் திருமார்பில் தாங்கிக் கருவில் உள்ள குழந்தையைத் தாய் காப்பது போல் அவளைத் திருமால் காப்பதால், அவர் ‘கர்ப்ப:’ என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 378-வது திருநாமம்.

“கர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இல்லங்களில் என்றென்றும் லட்சுமி கடாட்சம் நிறையும்படித் திருமாலும் திருமகளும்

அருள்புரிவார்கள்.

379. பரமேச்வராய நமஹ (Parameshvaraaya namaha)

திருக்கோவில்களில் திருமால் ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வதை நாம் கண்டிருப்போம். அதன் தாத்பரியம் என்ன என்பதைத் திருவரங்கக் கலம்பகம் எனும் நூலில் பிள்ளைப் பெருமாள் சுவாமி தெரிவிக்கிறார்:

“உருமாறிப் பலபிறப்பும் பிறந்தும் செத்தும்

ஊசல் ஆடுவது அடியேன் ஒழியும் வண்ணம்

கருமாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கிக்

கருணை எனும்  ஊஞ்சலில் திருமாலுக்கு

அருகிலே திருமகள் வந்து அமர்கிறாளாம். திருமகளிடம் திருமால், “தேவி! நீதான் என்னை இப்போது வழிநடத்த வேண்டும். மனிதர்களின் மனமாகிய ஊஞ்சலில்

அவர்களுக்கு அருள்புரியவே நாம் இப்போது அமர்ந்திருக்கிறோம். ஆனால் இவர்களின் தவறுகளைப் பார்த்துத் தண்டிப்பதா? அல்லது கருணையால் இவர்களை

மன்னித்து ஏற்பதா? என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

அதற்குத் திருமகள், “சுவாமி! உலகில் தவறு செய்யாதவர் என்று எவருமே இலர். தவறு செய்யாதவர்க்கு மட்டுமே அருள்புரிவது என்று நீங்கள் முடிவெடுத்தால், யாருக்குமே அருள்புரிய முடியாது. எல்லாரையும் தண்டிப்பது என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது!” என்கிறாள். திருமாலோ, “அப்படியானால் எல்லாரையும் மன்னித்து விட்டுவிட்டால் அது முறையாகுமோ?” என்று கேட்கிறார்.

திருமகள், “அப்படிச் செய்ய வேண்டாம்! எல்லோரும் தவறு செய்வார்கள். ஆனால் அவர்களுள் யாரெல்லாம் தவறை உணர்ந்து நீங்களே கதி என்று சரணாகதி செய்கிறார்களோ, அவர்களிடம் கருணையைக் காட்டுங்கள். தண்டிக்காதீர்கள். மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்து வருபவர்களைத் தண்டித்துத் திருத்தி நல்வழிப்படுத்துங்கள்!” என்கிறாள்.இதுவே சரியான யோசனை என்று சொல்லி, மனம் திருந்திச் சரணடையும் அடியார்களிடம் கருணையைக் காட்டுவது என்று முடிவெடுக்கிறார் திருமால். நம் உள்ளங்களாகிய ஊஞ்சலில் இப்படி மகாலட்சுமியோடு சேர்ந்து அமர்ந்து நம்மைக் காத்தருள்கிறார்.

இதை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வசுமதி சதகத்தில்,

“மான் தண்டதர: ஸ்வயம் ஜகத் இதம் ப்ராய அபராதை: யுதம்

சிக்ஷ்யம் வா அத நு ரக்ஷ்யம் இதி அதிதராம் ஆரூட டோலோ ஹரி:

அந்த்யம் ஸாது ததோ விசார்ய பவதீம் அஸ்மின் ஸ்தலே ஜாக்ரதீம்

அங்கீக்ருத்ய ததோசிதாம் ப்ரணயினீம் நித்யம் க்ஷமாம் க்ரீடதி”

என்று வர்ணிக்கிறார்.

உலகை எல்லாம் ஆளும் திருமாலின் காக்கும் தொழில், மகாலட்சுமியின் ஆலோசனையைப் பெறுவதால்தான் முழுமை பெறுகிறது என்பதை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா? திருமாலின் ஆளுமையும் திருமகளின் அருளும் இணைந்திருப்பதால்தான் உலக நிர்வாகம் சரியாக நடைபெறுகிறது.

முன்சொன்ன திருநாமத்தின் விளக்கப்படி, கர்ப்பனாக மகாலட்சுமியுடன் கூடி இருந்து இவ்வுலகை ஆண்டு நிர்வகிப்பதால், திருமால் ‘பரமேச்வர:’ என்று அழைக்கப் படுகிறார். ‘பரமேச்வர:’ என்றால் உலகை ஆள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 379-வது திருநாமம்.“பரமேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பிறவியெனும் ஊஞ்சலிலிருந்து திருமால் காத்தருள்வார்.

380. கரணாய நமஹ (Karanaaya namaha)

ராம தூதனாக இலங்கைக்குள் நுழைந்த அனுமன், அங்கே பற்பல இடங்களில் சீதையைத் தேடினார். சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு, அரக்கர்களின் வீடுகள் தோறும் சென்று சீதை இருக்கிறாளா என்று பார்த்தார். தேவலோகப் பெண்கள் போல் இனிமையாகப் பாடும் பல பெண்களைப் பார்த்தார். ராவணன் சேனையைச் சேர்ந்த பல ஏவலாட்கள் ராஜவீதியில் செல்வதைப் பார்த்தார்.

ஒற்றைக் கண்ணுடையோர், ஒற்றைக் காதுடையோர், கோணிய முகமுடையோர், வித்தியாசமான அவயவங்கள் உடையோர், பலவித நிறமுடையோர் இப்படிப் பலரையும் கண்டார். ராவணனின் யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட்படை உள்ளிட்டவற்றைக் கண்டார். எத்தனையோ பெண்களைப் பார்த்தபோதும், அனுமனால் சீதையை மட்டும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

பிரகஸ்தன், கும்பகர்ணன், மகோதரன், விரூபாட்சன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன், சுகன், சாரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி உள்ளிட்டோரின் மாளிகைகளுக்குள் எல்லாம் சென்று தேடிப் பார்த்தார் அனுமன். பின் ராவணனின் அரண்மனையை அடைந்து அங்கும் தேடினார். அங்கிருந்து புஷ்பக விமானத்தின் உள்ளே சென்று அந்த

விமானம் முழுவதும் தேடிப் பார்த்தார்.

ராவணனது அந்தப்புரத்தில் பித்ரு தேவதைகளின் பெண்கள், தைத்திய வனிதைகள், கந்தருவ சுந்தரிகள், ராட்சச கன்னிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் சீதை இருப்பதாகத் தெரியவில்லை. அதன்பின், அங்கே மேலான மஞ்சத்தில் மிகவும் பேரழகி யான ஒரு பெண் துயில்கொண்டிருப்பதை அனுமன் கண்டார்.அவள் ராவணனின் பட்டத்து அரசி மண்டோதரி. அவளைச் சீதை என்றே எண்ணிய அனுமன் தோள்களைத் தட்டி வாலுக்கு முத்தமிட்டுக் கூத்தாடத் தொடங்கினார். ஆனால் வெகு விரைவிலேயே, “அடடா! என்னே என் மதி மயக்கம்! பெருமாளைப் பிரிந்த பிராட்டி இப்படி நிம்மதியாகப் பஞ்சு மெத்தையில் உறங்குவாளோ? இவள் நிச்சயமாகச் சீதையாக இருக்கவே முடியாது!” என்று தீர்மானித்தார் அனுமன்.

இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சீதை கிடைக்காத நிலையில், அனுமன் சிந்திக்கத் தொடங்கினார். “ஒருவேளை ராவணன் கடத்தி வந்தபோது கடலில் அன்னை விழுந்துவிட்டாளோ? அல்லது வழியில் வேறெங்காவது கீழே விழுந்தாளோ? ராவணன் வேறு ஊரில் அடைத்து வைத்துள்ளானோ? ராவணன் அவளைக் கொன்று தின்றுவிட்டானோ? அல்லது அன்னையே தன் உயிரை மாய்த்துக்கொண்டாளோ? சீதையைக் காணாமல் நான் எப்படி வானரர்களின் முகத்தில் போய் விழிப்பேன்?” என்று சிந்தித்தார் அனுமன்.

அப்போது தான் அவர் மனதில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது. “அடடா! நான் பெரும் தவறு செய்துவிட்டேன். சீதா தேவியை ‘நான் தேடுகிறேன், நான் கண்டுபிடிக்கப் போகிறேன்’ என்ற எண்ணத்துடன் இவ்வளவு நேரம் தேடினேன். அதனால்தான் அன்னையின் தரிசனம் கிட்டவில்லை. சீதா ராமர்களே! நீங்கள் அருள்புரிந்து எனக்குத் தேவியின் தரிசனத்தை அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார்:

“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய நமோஸ்து தேவ்யை ஜனகாத்மஜாயை

நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய:”

(இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், காணாமல் போன பொருள் உடனே

கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.)

சீதா ராமர்களிடம் அனுமன் பிரார்த்தித்தவாறே, அவர் கண்ணெதிரே அசோகவனம் தெரிந்தது. அதன் உள்ளே நுழைந்தார். அங்குள்ள ஒரு சிம்சுபா மரத்தின் மேலே அமர்ந்து நாற்புறமும் பார்த்தார். அதே அசோக வனத்தில், அரக்கிகளால் சூழப்பட்டு, மெலிந்த நிலையில், அழுக்கு படிந்த ஆடையோடு எழுந்தருளியிருந்த சீதா தேவியைத் தரிசித்தார். தனது காரியத்தில் வெற்றி அடைந்தார் அனுமன்.

“வீடினது அன்று அறன் யானும் வீகலேன்

தேடினன் கண்டனன் தேவீயே எனா

ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து

ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்”

என்று கொண்டாடத் தொடங்கினார்.தன் முயற்சியால் சீதையைத் தேடுவதாக அனுமன் எண்ணிய வரையில் அவரால் சீதையைக் காண முடியவில்லை. “சீதா ராமர்களே!  உங்கள் அருளால் காட்டுங்கள்!” என்று அனுமன் பிரார்த்தித்தவாறே உடனே சீதை கிடைத்து விட்டாள். இதிலிருந்து நாம் அறியும் செய்தி என்னவென்றால், இறைவனை அடைவதற்கு மற்ற விஷயங்கள் எதுவுமே சாதனமாகாது. இறைவனை அடைய இறைவனே சாதனம் ஆவான். அதாவது, அவனது அருளால் மட்டுமே அவனை அடைய முடியும். அவன் அருளைத் தவிர அவனை அடைய வேறு வழி இல்லை.

‘கரணம்’ என்றால் சாதனம் என்று பொருள். தன்னை அடையத் தானே சாதனமாக இருக்கும் திருமால் ‘கரணம்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 380-வது திருநாமம். “கரணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேற்கொள்ளும் முயற்சிகளில் பெருவெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

381. காரணாய நமஹ (Kaaranaaya namaha)

விபீஷணன் வந்து ராமனிடம் சரணாகதி செய்த போது, அவனை அங்கீகரிக்கும் முகமாக ராமன் சொன்ன ஸ்லோகம்:

“ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே

அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”

இதன் பொருள்: “ஒரே ஒரு முறை சரணம் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் என்னை வந்து பணிந்து விட்டால், அனைத்து உயிர்

களிடம் இருந்தும் அவனைக் காப்பாற்றி அருள வேண்டும் என்பதை எனது விரதமாக நான் கொண்டிருக்கிறேன்!” இந்த ஸ்லோகமே ராம சரம ஸ்லோகம் என்று அழைக்கப்படுகிறது. “ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று கீதையில் வருவது கிருஷ்ண சரம ஸ்லோகம் ஆகும்.

இந்த ராம சரம ஸ்லோகத்தைக் குறிப்பிட்டு நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அருளிய பாசுரம்:

“முல்லைப் பிராட்டி! நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை

அல்லல் விளைவியேல் ஆழி நங்காய்! உன் அடைக்கலம்!

கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே!”

‘குமரனார் சொல்’ என்று ராமனின் சரம ஸ்லோகத்தை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.அடியேனின் குருவான டாக்டர். .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் எங்களுக்கு நாச்சியார் திருமொழி விளக்கவுரையில் இப்பாசுரத்தை உபதேசித்தார். அப்போது ஒரு மாணவர் குருவான கருணாகராச்சாரியார் சுவாமியிடம் ஓர் ஐயத்தை விண்ணப்பித்தார். “குமரனார் சொல் என்று ராமனின் சரம ஸ்லோகத்தை ஆண்டாள் குறிப்பிடுவதாகச் சொல்கிறோம். ஆனால் ‘கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்’ என்று இருக்கிறதே! அதற்கென்ன பொருள்?” என்பதே அந்த மாணவரின் ஐயம்.

அதற்குக் குருநாதர், “கொல்லை அரக்கி என்பவள் சூர்ப்பணகை. அவளது மூக்கை அரிந்த குமரனார் என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்!” என்று பொருளுரைத்தார்.உடனே மற்றொரு மாணவர், “சுவாமி! லட்சுமணன்தானே சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அறுத்தான்? அப்படியானால் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் லட்சுமணன் தானே?” என்று கேட்டார்.வேறொரு மாணவரோ, “அப்படிப் பொருள் கொண்டால் பாடலின் மொத்த பொருள் ஒட்டாமல் போய்விடுமே! ‘குமரனார் சொல்’ என்று அந்தக் குமரனார் ஒரு சரம ஸ்லோகம் சொன்னதாக ஆண்டாள் பாடி இருக்கிறாள். லட்சுமணன் அப்படி எந்த சரம ஸ்லோகமும் சொன்னதாகத் தெரியவில்லையே! அதனால் குமரனார் என்பது ராமன்தான்!” என்றார்.

அடுத்த மாணவர், “இல்லை! இல்லை! ராமன் எப்போது சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தார்?” என்று கேட்டார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமி, “வால்மீகி பகவானே ராமாயணத்தில் தெளிவாக லட்சுமணனை ‘ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘லட்சுமணன் ராமனின் வலக் கரமாக விளங்குகிறான்’ என்பது இதன் பொருள். ஒருவரின் வலக்கரம் ஒரு காரியத்தைச் செய்தால் அதை அவரே செய்ததாகத் தானே நாம் சொல்வோம்? ஒருவர் வலக்கையால் கவிதை எழுதினால், வலக்கை கவிதை எழுதியது என்றா சொல்வோம்? அவரே எழுதியதாகத் தானே சொல்கிறோம்? அதுபோல் ராமனின் வலக்கையான லட்சுமணன் செய்த செயலை ராமனே செய்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நெருங்கிய தொண்டர்களாக இருப்ப வரை, ‘தலைவரின் வலக்கை’ (Right Hand) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது!” என்று விடையளித்தார்.

மேலும், “இது லட்சுமணன் ஒருவனுக்கு மட்டுமில்லை. நாம் ஒவ்வொருவருமே நாராயணனுக்கு உடலாக இருக்கிறோம். நாம் செயல் செய்வதற்குரிய கருவிகளையும், அதற்குத் தேவையான சக்தியையும் ஞானத்தையும் தந்து நாம் செயல்படக் காரணமாக இருப்பவன் நாராயணனே என்பதை நாம் உணரவேண்டும்! அதனால் தான் எல்லாம் அவன் செயல் எனச் சொல்கிறோம்!” என்று விளக்கினார்.‘காரணம்’ என்றால் காரணமாக இருப்பவர் என்று பொருள். நாம் செய்யும் செயல்களுக்குத் தேவையான கருவிகள், சக்தி, அறிவு அனைத்தையும் தந்து, நாம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கும் திருமால் ‘காரணம்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 381-வது திருநாமம்.“காரணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நல்ல வழியில் திருமால் வழிநடத்திச் சென்று நல்ல வெற்றிகளை அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: