×

அன்னாபிஷேகம்

அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக் கொள்வதைக் குறிக்கிறது.

அன்னாபிஷேகம் என்பது இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கிக் காய் கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதேயாகும். காலப்போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லைக் கொண்டு இறைவன் திருமேனியில் அதைச் சாற்றும் வழக்கம் வந்ததென்பர்.  ஆகமங்கள் நவ நைவேத்தியம் எனும் புத்தமுதூட்டும் விழாவே பல பரிமாணங்களைப் பெற்று அன்னாபிஷேகம் ஆனதென்பர்.

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

உச்சிக் காலத்தில் அக்னி திரட்டி (அக்னியை வளர்த்து) அடுப்பிலிட்டு அதை மூட்டுவர். உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவர். அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொறியல், அவியல் முதலியவற்றை செய்வர். முறுக்கு, அதிரசம், தேன்குழல் சுகியன் முதலியவற்றைச் செய்து கொள்வர்.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபின் (நன்கு துடைத்தல்) அமுதை (அரிசிச் சோறு) இறைவன் திருமேனியை மூடும் படி சார்த்துவார். அதன் மேல் அலங்காரமாக வடை, முறுக்கு, அதிரசம், அப்பம் ஆகியவற்றை அணிவிப்பர். பாகற்காயை அப்படியே வேகவைத்து புளிகார மிட்டு கோர்த்து உருத்திராட்ச மாலைபோல் அணிவிப்பர். நீண்ட புடலங்காயை அப்படியே அவித்து பாம்புபோல் அணிவிப்பர். சுவாமிக்கு முன்புறம் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள் பணியாரங்கள், கறிகள், கூட்டுகள் பழங்கள், பானங்கள் பாயசங்களை இட்டு நிவேதனம் செய்வர். பிறகு, தீபாராதனை செய்யப்படும். அதன்பிறகு மிளகுநீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்து திரையிடப்பட்டும். முகவாசம் எனப்படும் தாம்பூலம் நிவேதிப்பர். மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர்.

பிறகு அந்த அலங்காரத்தைக் களைந்து சிறிதளவு அன்னத்தை (சோற்றை) எடுத்து லிங்கம்போல் செய்து பூசித்து தட்டில் வைத்துப் பரிசாரகன் தலையில் ஏந்திவர குடை, மேளதாளம், தீவட்டியுடன் சென்று ஊரில் சிறப்பு பெற்று விளங்கும் குளம், ஏரி, ஆறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அதை விடுவர். அப்படிச் செய்வதால் நன்கு மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகும் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆலயத்திற்கு வரும் எல்லோருக்கும் பிரசாதமாக அன்னமும், படைக்கப்பட்ட காய்கறிகளும் அளிக்கப்படும்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய அளவில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஏறத்தாழ 100 மூட்டை அரிசியைச் சோறாக்கி அன்னாபிஷேக விழா நடத்துகின்றனர். சிதம்பரத்தில் தினமும் அழகிய திருச்சிற்றம்பலமுடையாரான லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. (இதில் காய்கறிகள், குழம்புகள் படைப்பதில்லை. அன்னத்தைக் கொண்டு லிங்கத்தை மூடி வில்வம் அணிவித்து தீபாராதனை செய்கின்றனர்.)

புத்தமுது ஊட்டும் திருநாள் -
நவ நைவேத்திய உற்சவம்

முதன்முதலாக விளையும் நெல்லை அறுத்து குத்தி அரிசியாக்கிச் சுவாமிக்குப் படைப்பதைப் புத்தமுது ஊட்டுதல் என்பர். அதை வடமொழியில் நவ நைவேத்திய உற்சவம் என்பர். நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. மக்கள் இன்பமாக வாழ உணவு அவசியம். உணவைத் தருவது பயிர்த் தொழிலான விவசாயம். அதனால் பயிர்த் தொழில் தெய்வீகம் கொண்டதாகப் போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் உழவு என்ற தலைப்பில் விவசாயத்தின் மேன்மையை விளக்கிக் கூறுகின்றார்.

விவசாயத்தில் விதைத்தலும் உழைப்பும் மட்டுமே நம் கையில் உள்ளது. விதை விளைய வேண்டியதற்குத் தேவையான தண்ணீர், இதமான பருவம் முதலிய யாவும் இயற்கையின் பக்கத்தில் உள்ளது. இயற்கை ஒத்துழைக்க ஆண்டவன் அருள் கூடினால்தான் நல்ல விளைச்சலைக் கண்டு பயன் பெறமுடியும். எனவே, விவசாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனையும் இயற்கையையும் போற்றி வணங்கித் துணைபுரிய வேண்டுவது இன்றியமையாதது.

பயிர்த் தொழிலுக்கு முன்பு நிலத்தை உழுது சமன் செய்ய வேண்டும். முதன்முதலாக ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டுதல் என்னும் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்
படுகிறது. இதில் நில மகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன் பூதங்களிடம் விளையப் போகும் தமது பயிர்களைக் காத்துப் பயன்பெறச் செய்யும்படி வேண்டுவர். விதைத்தல் நாற்று எடுத்தல், நடுதல், பயிர் கதிர்பிடிக்கத் தொடங்குதல் முதலியவற்றின் போதும் வழிபாடு செய்வர். பயிர்களை நன்கு விளைவிக்கச் சூரிய சந்திரரிடம் பிரார்த்தனை செய்யப்படும்.

முதன்முதலாக அறுவடை தொடங்கும் வேளையிலும் சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்வர். ஆலயத்திலிருந்து சூலதேவர். சண்டீசர் ஆகியோரையும் அரிவாளையும் பூசித்து அவர்களுடன் ஊர்வலமாகச் சென்று முதல்பிடி கதிர் அறுப்பர். இதன் பிறகே வயல்களில் அறுவடை துவங்கும். பின்னர் கூடையில் நெற்கதிர்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வருவர். கோயில் முற்றத்தில் அதைக் காயவைப்பர். மீண்டும் ஒரு நல்ல நாளில் உலக்கை உரலுக்குப் பூசை செய்து நெல்லைக் குத்தி அரிசியாக்குவர். அரிசியைச் சுத்தம் செய்து களைந்து உலையிலிட்டு அமுதாக்குவர்.

புத்தரிசி அமுதுடன் கற்கண்டு, கரும்புச்சாறு, வாழைப்பழம் முதலியவற்றை வைத்து நிவேதிப்பர். அந்த அமுது எல்லோருக்கும் பிரசாதமாக அளிக்கப்படும். இந்த விழா இறைவன் தானே நேரில் மக்களுடன் வந்து அறுவடையைத் துவக்கி வைப்பதாகக் கருதும் விழாவாகும். முதல் அரிசியை இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும் அமைகிறது. முன்னாளில் மூன்று போகம் விளையும். முதல் போக
அறுவடையான புரட்டாசி மாதம் இந்தத் திருவிழா நடை பெற்று வந்துள்ளது. ஒவ்வொருவரும் தம் நிலத்திலிருந்து கொஞ்சம் நெற்கதிர்களை ஆலயத்தில் குவித்து வைக்காமல் தோரணம் போல் வைக்கும் வழக்கம் இருந்தது. நெற்கதிர் என்று இல்லாமல் விளைபொருள் அனைத்தையுமே கோயிலில் கொண்டு வந்து கட்டினர். அதுவே நிறைமணிக்காட்சி விழாவாக இப்போது நடைபெறுகிறது. கதிராகக் கொண்டு வந்து நெல்லைப் பதப்படுத்தி அரிசியாக்கி அமுதூட்டும் விழாவின் மறு வடிவமே இந்நாளைய அன்னாபிஷேகம் ஆகும். முன்னாளில் ஆலயங்களில் பழைய அரிசியே அமுதாக்கப் பயன்பட்டு
வந்துள்ளது. கல்வெட்டுகளில் போனகப் பழவரிசி என்ற சொல் ஆளப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஆகமம் காட்டும் நவ நைவேத்திய விழா உத்தர காமிக ஆகமம் மார்கழி, ஆடி, மாசி தவிர ஏனைய மாதங்களில் இந்த விழாவைச் செய்யலாம் என்று கூறுகிறது. கொடி, விதானம் ஏந்தி
வாத்யங்கள் முழங்க அஸ்திரதேவர் சண்டேசுவரருடன் அறுவடைக்குரிய வயலுக்கு அனைவரும் செல்ல வேண்டும். வயலை விளைவிப்பதும் காப்பதும் பூதங்கள் என்பதால் அவற்றிற்கு தயிருடன் கூடிய ஹவிஸை எட்டுத் திக்கிலும் பலியாக அளிக்க வேண்டும். அவற்றிற்கு பூக்களைத் தூவி சந்தனம் தெளித்து புகையிட்டு வணங்கவேண்டும். அரிவாளை எடுத்து கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து பூசித்தபிறகு கதிர்களை அறுக்க வேண்டும். புதிய நெல் கதிர்களை அரிசி, தேங்காய், மிளகு, வெல்லம், கரும்பு, காய்கனிகள், ஊறுகாய், கிழங்குகள் இவற்றுடன் பூசித்து ஊர்வலமாக ஆலயத்திற்குக் கொண்டு வர வேண்டும். மாவிலை, தோரணம், வாழைமரம் ஆகியவற்றைக் கட்டி ஆலயத்தை அலங்கரிக்க வேண்டும்.

கருவறையில் பெருமானுக்கு முன்பாகப் புதிய நெல்லைப் பரப்பி அதன் மீது இலைபோட்டுத் தேங்காயுடன் அரிசி சேர்த்துச் சமைத்த நிவேதனத்தையும் கருப்பஞ்சாறில் வேக வைத்த அரிசியாலான நிவேதனத்தையும் வைத்துத் தூப தீபங்களுடன் கற்பூர தீபாராதனை முதலான உபசாரங்களைச் செய்ய வேண்டும். பிறகு அம்பிகைக்கும் பரிவாரங்களுக்கும் நிவேதனம் செய்து தண்ணீர் நிவேதனம் செய்து தாம்பூலம் அளிக்க வேண்டும். முடிவில் வருபவர்களுக்குப் பிரசாதம் அளிக்க வேண்டும். இதன்பிறகு உற்சவம் செய்யவேண்டும். இவ்வாறு செய்பவன் புண்ணிய கதியை அடைகிறான்.


Tags :
× RELATED நம்பினோருக்கு இழப்பில்லை