×

பசிப்பிணி போக்கும் ஓதனவனேஸ்வரர்

சோழநாடு சோறுடைத்து என்பது இத்தலத்தை மையமாக கொண்டு சொல்லப்பட்டதுதான் எனில் மிகையில்லை. இத்தலம் திருவையாறு சப்த ஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார். அதுபோல கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் சோறுடையான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் அந்த வாய்க்காலில் ஒரு கதிர் மட்டும் அரிசியாகவே விளைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.    
 
கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதி யினர் அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு அமுது செய்தீரா என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்றகோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழுகிறார் ஓதனவனேஸ்வர் (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) எனும் தொலையாச் செல்வர்.

சமயக்குரவர் மூவர் பாடி பரவசித்திருந்த தலம் இது. கௌதமர் ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகளித்தது. ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத்  துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால்  துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல் மணிகள்  வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது  பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமசிவாய...நமசிவாய...என விண்பிளக்க கோஷமிட்டனர். பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்களுக்கு  மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ் விடம் ஒளிர்ந்தது. ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப் பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது. இன்றும் ஐப்பசி அன்னாபிஷேக பெருவிழா இங்கு சிறப்பாக நடக்கின்றது.

தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது. சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப் பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியாற் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார். முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். சோற்றுத்துறைநாதர் சோர்வை நீக்கி புத்தொளி பரப்புவதில் சமர்த்தர். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன். இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.  

- எஸ்.கிருஷ்ணஜா

Tags : Othanavaneswarar ,
× RELATED செங்குன்றம் அருகே காலபைரவர் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை