×

புண்ணியங்களை அள்ளித் தரும் புனித மஹாளயபட்சம்

பதினைந்து தினங்களைக் கொண்டது ஒரு பட்சம். மஹாளயபட்ச 15 நாட்களும், மறைந்த நமது முன்னோர்கள் (பித்ருக்கள்), தர்மராஜரின் அனுமதியைப் பெற்று, சுவர்ண (தங்க) மயமான விமானங்களில் சூரியனின் கிரணங்கள் (Sun’s Rays)  மூலம் பூவுலகிற்கு வந்து, நமது இல்லங்களில் தங்கி, நம்மை ஆசிர்வதிப்பதுடன், நம் குடும்பங்களில் கடன், நோய், வறுமை, ஒற்றுமையின்மை,வழக்குகள், விவாகம் தடைபடுதல், குழந்தைப்பேறு இன்மை, உத்தியோகப் பிரச்னைகள் போன்ற கஷ்டங்கள் இருப்பின்,  தங்கள் தவ வலிமையினால், அவற்றைப் போக்கி அருளுகின்றனர் என மிகப் புராதனமான சூட்சும கிரந்தங்கள் விளக்கியுள்ளன.

மகத்தான புண்ணியத்தைத் தரும் இந்த 15 நாட்களும் நம்முடன், நமது இல்லத்தில் எழுந்தருளியிருந்த பித்ருக்கள், மஹாளய அமாவாசையன்று, மீண்டும் தங்க விமானங்களில், சூரிய கிரணங்கள் மூலம், தாங்கள் வசிக்கும் பித்ருக்களின் உலகிற்கோ அல்லது மறுபிறவி எடுத்துள்ள, வேறு பல உலகங்களுக்கோ திரும்பிச் செல்கின்றனர் எனவும் அந்த ரகசிய நூல்கள் விவரித்துள்ளன. ஆதலால், இந்த 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு வகையறாக்களைக் கண்டிப் பாகத் தவிர்த்தல் அவசியம். உடலுறவும் கூடாது. பகல் உணவு ஒருவேளை மட்டும் ஏற்கவேண்டும். இரவில் உபவாசம் இருத்தல் வேண்டும்.

உடல்நிலை அனுமதிக்காவிடில், பால், பழம் அல்லது சிற்றுண்டி மட்டும் சாப்பிடலாம். எக்காரணத்தைக் கொண்டும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும். ஒற்றுமை வேண்டும். இரவில் பாய் அல்லது மரப் பலகையில் படுத்து உறங்குவது சாலச் சிறந்தது. பொய் பேசக்கூடாது.பித்ருக்கள் வாழ்ந்த காலத்தில் நம்மிடம் காட்டிய அன்பு, பாசம் ஆகியவற்றை நினைத்து, நினைத்து மனதால் அவர்களுக்கு நன்றி கூறல் வேண்டும்.

எப்பொழுதாவது, அறியாமையாலோ அல்லது கோபத்தினாலோ, சூழ்நிலை காரணமாகவோ, அவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தாலோ அல்லது நடந்துகொண்டிருந்தாலோ, அதற்காக மனம் வருந்தி, அவர்களிடம் மன்னிப்பு கோரல் வேண்டும். தினமும் ஸ்ரீ மத் சுந்தர காண்டம், ஸ்ரீ மத் பாகவதம்,ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம், திருவிளையாடற் புராணம், ஸ்ரீ மந் நாராயணீயம், அனுமன் சாலிஸா, விஷ்ணு ஸஹஸ்ர நாமம், மகான்களின் சரித்திரங்கள் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைப் படித்து வரலாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரயாக்ராஜ், காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடி, அவற்றின் கரையில் மஹாளய பட்ச 15 நாட்காலத்தை அனுசரிப்பவர்கள் தேவர்களின் உலகில் பலகாலம் இன்புற்றிருப்பார்கள் என “கருட புராணம்” கூறுகிறது.

மஹாளய பட்ச பூஜையின் மற்றோர் சிறப்பு!!

மஹாளய பட்சத்தில் மறைந்துள்ள மற்றொரு பெருமையையும் புராதன சூட்சும நூல்கள் குறிப்பிடுகின்றன!நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் காலத்திலும், ஏதாவது ஒரு தருணத்தில், ஏதோ ஓர் பிரச்னை ஏற்பட்டிருக்கக்கூடும். அத்தகைய சமயங்களில் எவரோ ஒருவர் நமக்கு உதவியிருக்கலாம். பிறர் உதவியின்றி,  மனிதப் பிறவி எடுத்த எவரும் வாழ முடியாது.ஆதலால்தான் வள்ளுவப் பெருந்தகையும், “காலத்தினாற்செய்த நன்றி சிறி தெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது”என அருளியுள்ளார். அத்தகைய தருணங்களில் கருணையினால், நமக்கு உதவியவர்களை “காருண்ய பித்ருக்கள்” எனக் கூறுகின்றன, நீதி நூல்கள். அவர்களுக்கும் நாம் மஹாளய பட்சத்தில் எள்ளும் தீர்த்தமும் விடுகிறோம்.

இதே போன்று மற்றொரு சமூக சேவையும் மஹாளய பட்சத்தில் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள், பிள்ளைகள் இருந்தும் பித்ரு பூஜைகளைச் செய்யாமல் விட்டுவிட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கும், மூதாதையர்களுக்கும்கூட, நாம் மகாளய பட்சத்தில் எள் கலந்த தீர்த்தம் சமர்ப்பிக்கின்றோம். அதனால், அவர்கள் அளவற்ற திருப்தியை அடைகிறார்கள்.
இது மட்டுமல்ல!! நமக்குத் தெரிந்தவர், தெரியாதவர்கள்,  வேறு பல உலகங்களிலும் துன்புறுவோர்களுக்கும் மஹாளயபட்சத்தில், நாம் எள் கலந்த நீரைச் சமர்ப்பிப்பதால், பசிதாகம் அடங்கி, நம்மை அவர்கள் அன்புடன் ஆசிர்வதிக்கின்றனர்.

இந்தப் புண்ணியம்,  வளர்ந்துகொண்டேயிருக்கும் எனவும் கருடபுராணமும்,  “பூர்வ ஜென்ம நிர்ணய சாரம்” என்ற மகத்தான ரகசிய கிரந்தமும் விவரித்துள்ளன.மரணம்என்பது வாழ்க்கையின் முடிவல்ல! அதற்குப் பிறகும் ஜீவனுக்கு ஓர் வாழ்க்கை உண்டு என்ற ரகசியத்தைத் தங்கள் தவ வலிமையினால் அறிந்து நமக்குக் கூறியுள்ளனர், வேதகால மகரிஷிகள்! சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன்களுக்கும் (பித்ருக்கள்) நமக்கும் தொடர்பு நீடிக்கிறது என்ற சூட்சுமத்தையும் வேதகால மகரிஷிகள் அறிந்துள்ளனர். இவற்றின் காரணமாக ஏற்பட்டதே மஹாளயபட்சம் பித்ரு பூஜை என்னும் தன்னிகரற்ற சடங்காகும்.

இதன் பலன், அளவற்றது. நாம் அறிந்தோ அறியாமலோ செய்துள்ள பாபங்கள் அனைத்தும், நமது முன்னோர்களின் ஆசியினால் நீங்கிவிடும்.முற்பிறவிகளில் செய்துள்ள தவறுகளின் காரணமாகவே நமக்கு, இப்பிறவியில், நோய்களாகவும், வறுமையாகவும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவாகவும், பிறதுன்பங்களாகவும் வடிவெடுத்து, நம்மை வருத்துகின்றன. மஹாளய பட்சம் போன்ற புண்ணிய கடமைகளைச் செய்வதன் மூலம், பூர்வஜென்ம பாபவங் களிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, நல்வாழ்வு பெறுகிறோம், ஆதலால், நமது வசதிக்குட்பட்டு, புண்ணிய நதிக் கரைகளிலோ அல்லது சமுத்திரக் கரையிலோ அல்லது திருத்தலம் ஒன்றிலோ அல்லது நமது வீடுகளிலோ மஹாளய பட்சபித்ரு பூஜைகளை நாம் செய்து வரவேண்டும். இதன் பலன் முழுமையாக விவரிப்பது கடினம். வழியிருக்க, நாம் ஏன் வருந்தவேண்டும்? பித்ருக்களுக்கான கடமைகளைச் செய்து நல்வாழ்வு பெறுவோம்.

A.M. ராஜகோபாலன்

Tags : Mahalayapatsam ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்