×

வலதுகாலை எடுத்து வைத்து வா... வா...

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி - திருமண வீடுகளில் அந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம்.
“மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்துவைத்து
வா வா”

நன்மையான எந்தச் செயலையும் வலதுபுறமிருந்தே தொடங்குவது எல்லா மதங்களிலும் காணப்படும் பொதுவான மரபாகவே இருக்கிறது.“மறுமை நாளில் யாருடைய வினைப்பட்டியல் அவருடைய வலக்கையில் தரப் படுமோ அவர் வெற்றி அடைந்துவிட்டார்” என்கிறது இறுதி வேதம் குர்ஆன்.இஸ்லாமிய வாழ்வியல் வலப்புறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. நபிகள் நாயகம்(ஸல்), சின்னச் சின்னச் செயல்களைக்கூட வலப் புறமிருந்தே தொடங்குவார்கள்.அங்கத் தூய்மை செய்வதாக இருந்தால் முதலில் வலப்புறமிருந்தே தொடங்குவார். செருப்பு அணிவதாக இருந்தால் முதலில் வலது காலில்தான் அணிவார். தலை வாரும்போது வலது பக்கத்திலிருந்துதான் தொடங்குவார். இப்படி எந்த ஒரு செயலையும் வலப் பக்கத்திலிருந்தே தொடங்குவதுதான் நபிகளாருக்கு விருப்பமாக இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

“நீங்கள் செருப்பு அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள். அதைக் கழற்றும்போது இடதுகாலிலிருந்து கழற்றுங்கள்” என்று கூறுவார் நபிகளார்.நபிகளார் அருந்துவதற்காக ஒருமுறை பால் குவளை தரப்பட்டது. இறைத்தூதரின் வலப்புறம் ஒரு தோழரும் இடப்புறம் ஒரு தோழரும் இருந்தனர். நபிகளார் முதலில் வலப்புறத்தில் இருந்த தோழருக்கே அதைப் பருகத் தந்துவிட்டு, “வலதுதான் சிறந்தது” என்றார்.
தொழுகைக்காக அணிவகுத்து நிற்கும்போது முதலில் வலப்பக்க வரிசையை நிறைவு செய்துவிட்டுப் பிறகுதான் இடப்பக்க வரிசை நிரப்பப்படும்.“நிச்சயமாக இறைவனும் அவனுடைய வானவர்களும் தொழுகை வரிசையில் (ஸஃப்) வலப்புறம் நிற்பவர்கள் மீது வாழ்த்துகளைப் பொழிகிறார்கள். அவர்களுக்கு இறைவன் தன் அருளை வழங்குகிறான்” என்று கூறினார் நபிகளார்.இதிலிருந்து எந்த ஒரு நற்செயலையும் வலப்புறமிருந்தே தொடங்குவது இஸ்லாம் காட்டுகின்ற,  நபிகளார் வலியுறுத்துகின்ற சிறப்பான வழிமுறையுமாகும்.இதைத்தானே அந்தப் பாடல் வரியும் சொல்கிறது.

“உன் வலதுகாலை எடுத்துவைத்து
வா வா”
அனைத்து நற்செயல்களையும் வலப்புறமிருந்தே தொடங்கி இறையருளைப் பெறுவோம்.
- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?