×

“அன்பு மகனே... பிள்ளைகளே...!”

“அறிவுக்கோர் அலீ” என்று வரலாறு போற்றுகின்ற கலீஃபா அலீ அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கிறார். எதிரி ஒருவன் நஞ்சு தோய்த்த வாளால் அவரைத் தாக்கியதில் படுகாயமுற்றுப் படுக்கையில் இருந்தார்.தம் அன்பு மகன் ஹஸனையும் கலீஃபாவின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளையும் அழைத்து இறுதி அறிவுரை வழங்கினார் அலீ அவர்கள்.“அன்பு மகன் ஹஸனே..! என் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளே..!  இறைவனுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம் என்று
உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

“இறைவனின் கயிற்றை வலுவுடன் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். மக்களிடையே நல்லிணக்கத்தையும் அன்பையும் மலரச் செய்வது உபரித் தொழுகை- நோன்பை விடச் சிறந்தது என்று நபிகளார் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.“நல்லிணக்கம் பேணுங்கள். உறவினர்களைச் சென்று சந்தியுங்கள். அவர்களுடனான உறவைப் பேணிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் இறைவனிடம் கணக்கு காட்டுவது எளிதாக இருக்கும்.“அல்லாஹவின் பெயரால் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அநாதைகள் மீது அன்பு காட்டுங்கள். அவர்களின் குரலை ஒடுக்கிவிட வேண்டாம். அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். இறைவனின் பெயரால் வலியுறுத்துகிறேன்.  அண்டை வீட்டாரை நேசியுங்கள். எந்த அளவுக்கு எனில் அண்டை வீட்டாரைச் சொத்தில்  வாரிசுகள் ஆக்கிவிடுவர்களோ என்று நினைக்கும் அளவுக்கு நேசியுங்கள்.

“இறைவனின் பெயரால் வலியுறுத்துகிறேன். குர்ஆனைப் பேணிக் கொள்ளுங்கள். அதே போல் தொழுகையைக் கருத்தூன்றி நிறைவேற்றுங்கள். அது உங்கள் மார்க்கத்தின் அடிப்படையாகும்.
“ஜகாத்தை நடைமுறைப்படுத்துங்கள். அது இறைவனின் கோபத்தைத் தணித்துவிடக்கூடியது.“உங்களுக்குத் தீங்கு இழைப்பவர்களுக்கும் வரம்பு மீறுபவர்களுக்கும் எதிராக இறைவன் போதுமானவன். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை இட்டபடி மக்களிடம் அன்பாகப் பேசுங்கள். நன்மையை ஏவுவதையும் தீமையை விலக்குவதையும் கைவிட்டு விடாதீர்கள். இதை நீங்கள் கைவிட்டால் உங்களில் மிகவும் மோசமானவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள்.  பிறகு இறைவனை நீங்கள்
அழைத்தாலும் பதில் வராது.

“நீதியிலும் நியாயத்திலும் பயபக்தியிலும் ஒத்துழைப்பாக இருங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒத்துழைக்க மறுத்து விடுங்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள். அவன் தண்டிப்பதில் கடுமையானவன்.
“இறைவன் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக. இறைத்தூதரின் போதனைகள் தொடர்ந்து உங்களுக்கு வழிகாட்டுவதாக. நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். சாந்தியும் சமாதானமும் இறையருளும் உண்டாவதாக.” (ஆதார நூல்-‘அறிவின் நுழைவாயில் அலீ’)கலீஃபா அலீ, மரணப் படுக்கையில் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அதற்கேற்பவே அவருடைய நீதிமிக்க ஆட்சிமுறையும் இருந்தது.அவருடைய முத்து முத்தான அறிவுரையை முடிந்தவரை பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் இறையருளைப் பெற முயல்வோம்.- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்