தினசரி தியானத்திற்குரிய திரிபுரசுந்தரியின் திருநாமங்கள்

உலகைக் காக்கும் சாமர்த்தியம், அதற்குத் தகுந்த அன்பு, கருணை…. இவையே உண்மையில் அழகானவை. இந்த அழகின் குவியல் ஜகன்மாதா. எனவேதான், அன்னையை ‘லலிதா’ என்கிறோம். ‘திரிபுர சுந்தரி’ என்று ஸ்தோத் திரம் செய்கிறோம். ‘சௌந்தர்ய லஹரி’ என்று போற்றுகிறோம். ஜகன் மாதாவை வணங்கு பவர்களின் மனதிலுள்ள அசுத்தங்கள் நீங்கி, சுத்தமான பிரம்மஞான சௌந்தர்யத்தோடு பிரகாசிப்பார்கள். ஆனால் அன்னையை எவ்வாறு வழிபடுவது? எவ்விதம் தேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்? என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டும்? இக்கேள்விகளுக்கு பதில்கள் லலிதா சஹஸ்ர நாமத்திலேயே கிடைக்கின்றன.

 அவற்றை கவனித்து அனுசரித்து நடந்தால் நாம் பிறந்த பயனைப் பெறுவோம். ஆயிரம் நாமங்கள் என்பது வெறும் பெயர்களின் கூட்டம் அல்ல. அவை சாஸ்திர மரியாதையுடன் பகவதீ தத்துவத்தை விளக்கி, அவற்றிற்குத் தகுந்த சாதனை முறைகளைக் காட்டியருள நம் வாழ்வை வளப்படுத்தும் ஒளி விளக்குகள்.

ஆயிரம் நாமங்களையும் பரிசீலிக்கையில் நமக்குக் கிடைக்கும். சாதனை மார்க்கங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. பாவனாகம்யா, 2. பத்ரப்ரியா, 3. பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவச்யா, 4. துஷ்டதூரா, 5. அந்தர்முக சமாராத்யா, 6. வீராராத்யா,

7. தீரசமர்ச்சிதா, 8. புண்ய லப்யா, 9. த்யான கம்யா, 10. ஞானகம்யா, 11. நாம பாராயண ப்ரீதா, 12. தர்மாதாரா, 13. யக்ஞ ப்ரியா,

14. ஸ்தோத்ர ப்ரியா, 15. மைத்ர்யாதி வாசனாலப்யா, 16. அப்யாசா திசயக்ஞாதா.

1. பாவனாகம்யா: தேவதைக்கும், உபாசனைக்கும் இடையிலுள்ளது பாவனை. நிரந்தரம் பாவனையுடன் வழிபடுபவர் களால் அடையப்படும் பரம தத்துவமே பராசக்தி. நினைவில் இருத்துபவருக்கே இறைவன் கிடைக்கிறான். சக்ர ஸ்வரூபத்தை, மாத்ரு தத்துவத்தை மனம் லயித்து நினைப்பதே வழிபாடு.

2. பத்ர ப்ரியா: மங்களகரமான எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் இவையே ‘பத்ரம்’ எனப்படுபவை. இவையே அன்னைக்குப் பிரியமானவை.

3. பக்திப்ரியா, பக்தி கம்யா, பக்தி வச்யா: அன்புடனும், சிரத்தையுடனும் அன்னையிடம் புகலிடம் புகுவதே ‘பக்தி’. ‘அப்படிப்பட்ட பக்திக்கு மகிழ்ந்து தன்னைத் தான் தந்தருளும் பரமதத்துவமே அம்பாள். பக்திக்கு வசப்படுபவள் ஜகன் மாதா.

4. துஷ்ட தூரா: துஷ்ட குணங்கள் உள்ள மனங்களுக்கும், துஷ்ட நடத்தை கொண்ட மனிதர்களுக்கும் தூரமாக விலகியிருப்பவள் பராசக்தி. இதன் பொருள், துஷ்டதனத்தை நீக்கிக் கொள்ளும் சாதனையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதே.

5. அந்தர்முக சமாராத்யா: இது மிகவும் ஆழமான பதம். வெளி நடவடிக்கைகளால் வெளியே தென்படும் விஷம் சுகங்களே நிஜம் என்ற பிரமையில் சிக்கி, அதற்காக அலை பவர்களுக்கு, தன் இதயத்தின் ஆழத்தில் உள்ள பரமாத்மாவை கிரகிக்கும் முயற்சி செய்யாதவர்களுக்கு உண்மை புலப்படாது. தன்னுள் உள்ள மகா சைதன்யத்தை அந்தர் முகமாக தரிசிக்கக் கூடியவர்கள்

மட்டுமே உண்மையான வழிபாடு செய்பவர்கள். அவர்களின் வழிபாட்டை ஏற்பவள் லலிதாம்பிகை.

6. வீராராத்யா: பக்தர்களே வீரர்கள். சரீர பலத்தால் யுத்தம் செய்பவர்கள் மட்டு மே வீரர்களல்லர். வாழ்க்கை எனும் போரில் எதிர்ப்படும் அனுபவங்களுக்கு சலனமடையாமல், இந்திரியங்களை வென்று தீக்ஷையுடன் சாதனை செய்வதே வீரம். அப்படிப்பட்ட வீரர்களே அன்னையை வழிபட இயலும், பிரதிகூல சூழ்நிலைகளில் கூட உறுதியாக நிற்கும் உபாசகர்களே வீரர்கள்.

7. தீர சமர்ச்சிதா: தீரர்களால் நிறைவுடன் வழிபடப்படும் அன்னை, ‘கஸ்சித்தீர : ப்ரதீகாத்மான மைக்ஷத்’ என்பது உபனிஷத் வாக்கியம். ‘பகிர்முகமான’ வெளி நோக்குப் பார்வையை விடுத்து, புத்தியை அந்தர்முகமாக்கி சாதனை செய்வது எளிதான செயல் அல்ல. எனவேதான் அதனைச் சாதிப்பவர்கள் தீரர்கள் ஆகிறார்கள். அப் படிப்பட்ட தீரர்கள் மட்டுமே முழுமையாக அன்னையை வழிபட முடியும்.

‘துன்பம் ஏற்படக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் சுற்றிலும் இருந்தபோதிலும் எந்த விதமான கஷ்டங்களுக்கும் சலனமடையாமல் இருப்பவர்களே தீரர்கள்’ என்பது காளிதாசரின் விளக்கம். அன்னையின் அருள் வேண்டி அப்படிப்பட்ட தீர குணத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.

8. புண்ய லப்யா: எதன் மூலம் நாம் பவித்ரமாகிறோமோ அதுவே புண்ணிய செயல். மனத் தூய்மையை அளிக்கும் புனித செயல்களால் பெறக்கூடியவளே

பரம சைதன்யமான மாதா.

9.  த்யான கம்யா: பரமேஸ்வரியின் சாக்ஷாத்காரத்தைப் பெற தியானம் சிறந்த சாதனை. மனதை ஒருநிலைப் படுத்துவதே தியானம். நிலையாக நிறுத்த முடிந்த

புத்தியினால் பெறப்படுபவளே பர பிரம்ம ஸ்வரூபிணி.

10.  ஞான கம்யா: பரபிரம்மனைப் பற்றிய ஞானம் முதலில் சாஸ்திர வாக்கியங்களை விசாரணை செய்வதன் மூலம் ஆரம்பமாகும். விசாரணை என்பது முதல் பகுதி. அனுபவம் என்பது சித்தி பெறுவது. விசாரணை மூலம் அனுபவத்திற்கு வரும் பிரம்ம ஞான ஸ்வரூபிணி ஜகதம்பாள்.

11. நாம பாராயண ப்ரீதா: தேவியின் நாமங்களனைத்தும், மந்திரங்களே, சக்தி பொதிந்த எழுத்துக்களே மந்திரங்கள். அந்த நாமங்களை நிரந்தரம் பாராயணம்

செய்பவரிடம் ஜகன்மாதா மகிழ்ச்சியடைகிறாள். ‘இதுவே எனக்குச் சிறந்த புகலிடம்’ என்ற சரணாகதியுடன் எப்போதும் சிந்தித்திருப்பதே பாராயணம்.

12. தர்மாதாரா: தர்மத்திற்கு அன்னை ஆதாரம். அதேபோல் தர்மத்தை ஆதார மாகக் கொண்டு அன்னை அடையப் பெறுகிறாள். தர்மத்திற்குட்பட்ட வாழ்க்கை

வாழ்பவருக்கு ஆதாரமாக அன்னை அடைக்கலமளிக்கிறாள்.

13. யக்ஞப்ரியா: தியாகமயமான செயலே யக்ஞம். தெய்வ ப்ரீதிக்காக சுயநலமின்றி செய்யும் நற்செயல்களால் மகிழ்கிறாள் அம்மன்.

14. ஸ்தோத்ரப்ரியா: தெய்வ தத்துவத்தை, மகிமையை, வைபவத்தை போற்றுவது தோத்திரம், தேவதைகள் ஸ்தோத்திரப் ப்ரியர்கள். தேவதைகளின் ஸ்தோத்திரங்களனைத்தும் உண்மையில் தெய்வ உருவங்களே. இந்த துதிகளிலுள்ள கருத்துக்களை மனனம் செய்வதால் மனதிற்கு அந்த தேவதைகளின் தத்துவம் புரிந்து, சிறிது சிறிதாக அந்த தேவதைகளுடன் மனம் ஒன்றுபடும் லயம் கிட்டுகிறது. அதைப் போன்று தோத்திரங்களின் வழியாக தேவதேவிகளை மகிழ்ச்சியுறச் செய்ய முடியும்.

15.  மைத்ர்யாதி வாசனாலப்யா: அனைவரிடமும் நட்புடன் பழகுவது, தன்னைவிட எதிலாவது சிறந்திருப்பவரைப் பார்த்து மகிழ்ச்சியடைவது, தன்னைவிடத் தாழ்ந்திருப்பவரிடம் தயையுடன் நடந்து கொள்வது, தன்னை வெறுப்பவரிடம் உதா சீனம்- இந்த நான்கு குணங்களே ‘மைத்ர்யாதி வாசனைகள்’. நற்குணங்களால் பெறக்கூடிய பரம கருணமூர்த்தி ராஜராஜேஸ்வரி அம்மன். மனித உறவுகள் இந்த நான்கு நற்குணங்களால் புனிதமடைகின்றன.

16. அப்யாசாதிசயக்ஞாதா: பரமேஸ்வரியின் தத்துவம் அனுபவித்திற்கு வரவேண்டு மென்றால் சிறிதளவு சாதனை செய்தால் போதாது, அதிசயிக்கத்தக்க அப்யாசம் மூலமாக மட்டுமே ஆத்ம தத்துவத்தை அறியமுடியும். நீண்ட காலம், நிரந்தரம், உறுதியாகத் தொடர்ந்து சாதனை செய்வதன் மூலம் தேவியின் சாக்ஷாத்காரம் கிடைக்கிறது.இந்த பதினாறு நாமங்கள் கூறும் அம்சங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் அன்னையின் கைவல்யத்தை நிச்சயம் அடைவர். அவற்றைப் பரிசீலித்துப் பார்த்தால் ‘உண்மையான வழிபாடு என்றால் என்ன என்பது புரியும். வாழும்

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

ராஜிரகுநாதன்

Related Stories: