நீத்தார் வழிபாட்டை தவற விட வேண்டாம்

மஹாளயம் (மகாளயம்) குறித்த மகத்தான உண்மைகள்

கால சக்கரத்தின் ஆறாவது ராசி கன்னி. புதனுக்கு உரிய அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் தேய்பிறை முழுவதும் மஹாளய சிரார்த்தத்திற்கு உரிய காலமாகும். கன்னி ராசி ஆறாவது ராசி என்பதால் அது கடன்களைக் குறிப்பது. மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கடமைகள் பல உண்டு.

ஒன்று தேவ கடன்;

இரண்டு ரிஷி கடன்

மூன்று பித்ரு கடன்.

அதில் முக்கியமானது பித்ரு (பிதுர்)கடன்.

இதில் பித்ரு கடன் குறித்து மட்டும் ஒருவன் தன் தகப்பனார்  இருக்கும் வரையில் கவலைப்படத் தேவையில்லை. தந்தை காலமானதும் அதுநாள்வரை அவர் கடைப்பிடித்துவந்த பித்ரு கடன் மகனுக்கு உரியதாகிவிடும். தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது. கடன்களை அடைக்க, கடன் எனும் ஆறாவது ராசியான கன்னியில், சூரியன் பிரவேசிக்கும் புரட்டாசி மாதத்தை

ஒதுக்கினார்கள்.

புரட்டாசி  பௌர்ணமிக்கு அடுத்த நாளான  ப்ரதமையிலிருந்து சுக்ல பட்சம் ப்ரதமை வரை 16 நாட்கள் “மஹாளய காலம்” என்று நிர்ணயித்தார்கள்.

‘மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் வீடு தேடி வரும்   காலமே மஹாளய பட்சம். “பட்சம்” என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்கள் நம்மோடு தங்குகிறார்கள். இயன்றால், இந்த மஹாளயத்தில்,  முன்னோர்களுக்கு ஹோமத்துடன் பார்வண விதியாக சிரார்த்தம் செய்வது உத்தமமாகும்.

தெய்வங்களுக்கு வழிபாடு  செய்யும்போது பக்தியுடனும், பித்ருக்களுக்கு வழிபாடுகளைச் செய்யும்போது சிரத்தையுடனும் செய்யவேண்டும்.

சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம் என்பதாலேயே ஆண்டுக்கொரு முறை செய்யும், முன்னோர்களுக்கான சடங்கை `சிரார்த்தம்’ என்கிறோம்.

மஹாளய சிரார்த்தத்தில் மட்டும் சிரார்த்த கர்தாவிற்கு சம்பந்தபட்ட எல்லோருக்கும் ஹவிர் பாகம் உண்டு. ஆனால், இதர சிரார்த்தங்களில் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் தான் ஹவிர்பாகம்.

பொதுவாக மூன்று முறைகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிரார்த்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்கு பாத பூஜை செய்து  தட்சிணை கொடுப்பது. மூன்றாவது ஹோமங்கள் செய்வது அன்ன சிரார்த்தம். இவை மூன்றுமே சிறப்பானவை  என்றாலும், குறைந்தபட்சம் எளிமையாக முன்னோர்கள் பெயர் சொல்லி, தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.

 மஹாளயம் முழுதும் 15 தினங்களும் வழிபாடு செய்வது சிறப்பானது.

இதற்குச் சக்தியோ, நேரமோ இல்லாவிட்டால், பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற் கொண்டு அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவன்  15 நாட்களில் விலக்க முடியாத  ஒரு நாளில் செய்யலாம். இதனை செய்யாமல் விட்டால் செல்வத்திற்கும், ஆயுள், ஆரோக்கியம் புத்ர, பெளத்ராதிகளுக்கும் குறைவு ஏற்படுகிறது. பித்ருக்களுக்கு  தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வத்துக்கான பூஜைகளை செய்யக்கூடாது.

வாசலில் கோலமிடுவதும் கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்ய வேண்டும். மஹாளய புண்ய காலத்தில், விஸ்வே தேவாதி தேவர்கள், இந்த வழிபாட்டிற்கு என்று பூவுலகில் வந்து தங்குகிறார்கள். விஸ்வே தேவர்களே நாம் செய்யும் தர்ப்பணத்தை ஏற்று  எள்ளையும் தண்ணீரையும்  உரிய ஆத்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். ஒருவர், தன்னுடைய தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’ என  பகவான் சொல்லியிருக்கிறார்.

மஹாளய சிராத்த வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. வைத்தியனாத தீக்ஷிதீயம் என்ற நூலில் சிராத்த காண்டம் உத்தர பாகம் 225ம் பக்கத்தில் பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

முதல்நாள் - பிரதமை: பணம் சேரும்

இரண்டாம் நாள் - துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

மூன்றாம் நாள் - திரிதியை: நினைத்தது நிறைவேறும்.

நான்காம் நாள் - சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.

ஐந்தாம் நாள் - பஞ்சமி: செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.

ஆறாம் நாள் - சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.

ஏழாம் நாள் - சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், தலைமைப் பதவி தேடி வரும்.

எட்டாம் நாள் - அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.

ஒன்பதாம் நாள் - நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

பத்தாம் நாள் - தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.

பதினோராம் நாள் - ஏகாதசி: படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி உண்டாகும்.

பன்னிரண்டாம் நாள் - துவாதசி: விலையுயர்ந்த ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

பதிமூன்றாம் நாள் - திரயோதசி: பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை - தொழில் அமையும்.

பதினான்காம் நாள் - சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.

பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் ஸித்திக்கும்.

மஹாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிராத்த மானது, கயா சிரார்த்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், த்வாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிக மாகவும்  மஹாளய அமாவாஸ்யை 1000 மடங்கு அதிகமாகவும் புண்யத்தை கொடுக்கக் கூடியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஏதோ ஒரு காரணத்தினால்,மஹாளய பட்சத்தில், மஹாளய சிரார்த்தம் செய்ய முடியாவிடில் , பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், ப்ரதமை, ஷஷ்டி, ஏகாதசி,, சதுர்த்தசி, வெள்ளிக்கிழமை கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மஹாளய பட்சத்தில் தீட்டு(சுப அல்லது அசுப)  நேர்ந்தால் தீட்டு  போன பிறகு நாள் பார்த்து செய்யவும்.

ஒரு நாள் மஹாளய விஷயத்தில், பிள்ளை, மனைவி இரண்டும் இல்லாதவர்கள், சந்ததி இல்லாத விதவைப் பெண்கள்,திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் என இம்மூவரும் அமாவாசை அன்று செய்யலாம். சிரார்த்தம், தர்ப்பணம் செய்வதற்கு உசித காலம் 10-30 மணியிலிருந்து 3-30 மணிக்குள் செய்யலாம். பட்ச மஹாளய தர்ப்பணம் செய்பவர் அமாவாசை தர்ப்பணத்திற்கு பிறகு மஹாளய தர்ப்பணம்செய்ய வேண்டும். காருணீக பித்ருக்கள் குறித்து நாம் செய்யும் தர்பணம் மஹாளயத்தில் முக்கியமானது.  

பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகை .அதாவது தந்தை வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம். தாயார் வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் முதலானோர் காருணீக பித்ருக்கள் எனப்படுவார்கள்.பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிளைகள், அக்கா, தங்கைகள், அத்திம்பேர்கள், மனைவி, மாமனார், மாற்று பெண், மைத்துன ன்,குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், நண்பர்கள்  கோத்திரம், பெயர் சொல்லி ‘‘க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி” என்ற மந்திரம் சொல்லி  தர்ப்பணம் செய்யலாம்.

மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்ற மடைகிறார்கள். இந்த ஆண்டு மஹாளய பட்சத்தின் திதி விவரங்கள்

21-9-21 - செவ்வாய் - பிரதமை திதி

22-9-21 - புதன்- துவிதியை

23-9-21 - வியாழன் - திருதிதியை

24-9-21-வெள்ளி-சதுர்த்தி

 (மஹாபரணி)

25-9-21 - சனி - பஞ்சமி

26-9-21 - ஞாயிறு - ஷஷ்டி

28-9-21 - செவ்வாய் - ஸப்தமி

        (மஹா வியதீ பாதம்)

29-9-21 - புதன் - மத்யாஷ்டமி

30-9-21 - வியாழன் - நவமி

1-10-21 - வெள்ளி - தசமி

2-10-21 - சனி - ஏகாதசி

3-10-21 - ஞாயிறு - துவாதசி

4-10-21 - திங்கள் - திரயோதசி

5-10-21 - செவ்வாய் - சதுர்த்தசி

(போதாயன அமாவாசை)

6-10-21- புதன் - மஹாளய அமாவாசை,

ஆஸ்வலாயன கிருஹ்ய ஸுத்ரம் முன்னோர் வழிபாட்டின்   அவசியத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்கிறது.

ஆயு: புத்ரான் யச: ஸ்வர்கம்

கீர்த்திம் புஷ்டிம் பலம் ச்ரியம்

பசூன் சுகம் தனம் தான்யம்

ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்

இதன் பொருள்  : நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுள், நல்ல குழந்தைகள், புகழ், ஆரோக்கியம், பலம், செல்வம், பசுக்கள், இன்பம், தான்யங்கள், சொர்க்கம் போன்ற அனைத்தும் நமக்குக் கிடைக்கும். இறந்துபோன நம் முன்னோர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அவர்கள் எப்போதும் பித்ரு லோகத்திலேயே இருப்பதில்லை.  

பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பார்கள். அவர்கள் எங்கு இருந்தாலும் இருந்தாலும் அவர்களுக்கு நாம் இடும் தர்ப்பணம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கிறது சாஸ்திரம். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தியே நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. அவர்கள் ஏமாற்றமே சாபமாக அமைகிறது .இதைப் புரிந்து கொண்டால் மஹாளயத்தின் முக்கியமும் ,நீத்தார் வழிபாட்டின்  முக்கியமும் புரிந்துவிடும்.

Related Stories: