×

வேங்கடவனின் வெள்ளக்குளம் அண்ணன்!

வெள்ளக்குளம் திருத்தலம்தான் திருமங்கையாழ்வார் தோன்றக் காரணமாக இருந்தது என்பது வியப்பளிக்கும் தகவல்!வானவீதியில் தன் தோழிகளுடன் சென்ற கந்தர்வப் பெண் ஒருத்தி வெள்ளக் குளத்தில் மலர்ந்திருந்த குமுத மலர்களிடம் மனம் பறிகொடுத்து அதைப் பறிக்க கீழிறங்கினாள். நேரம் கடந்துவிட்டதால் திரும்ப தேவருலகம் செல்ல முடியாத சாபத்தில் ஒரு மானிடப் பெண்ணாக இங்கேயே தங்க வேண்டியதாகி விட்டது அவளுக்கு! குமுதவல்லி என்று பெயர் கொண்டாள். இத்தல பெருமாளை வணங்கி வந்தாள்.அந்த வழியாக வந்த சிற்றரசன் நீலன் அவளைக் கண்டதுமே காதல் கொண்டான். அவன் எண்ணம் அறிந்த குமுதவல்லி திகைத்தாள். உடனே இதுவும் இந்தத் தலத்துப் பெருமாளின் திருவுளமே என்று நினைத்துக் கொண்டாள். தான் அவனை மணக்க வேண்டுமானால், அவன் பஞ்ச சம்ஸ்காரங்களை மேற்கொண்டு ஒரு வைணவனாக மாற வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு அமுது படைத்திட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்தாள்.

சம்மதித்தான் நீலன். தன் கஜானாவிலிருந்து செல்வங்களை வாரி இறைத்தான். தினமும் ஆயிரம் அடியார்களுக்கு அமுது செய்தான். ஒருநாள் 999 பேர் குழுமிவிட ஒரு நபர் குறைவால் மனம் பேதலித்தான் நீலன். அமர்த்தப்பட்ட பிற அனைவரும், ஆயிரமாவது நபருக்காகக் காத்திருக்கப் பொறுமையில்லாமல், தமக்கு உணவு பரிமாறப்படாத கோபத்தால் எழுந்து போய்விடுவார்களோ என்ற பயம் உந்த, ஒரு தவம் போல, உளமாற திருமாலை தியானம் செய்தான்.ஆனால் அடியார்கள் அனைவரும் அந்த அமுதை ருசித்து மகிழ்ந்தார்கள். சந்தேகத்தோடு, பந்தியில் அமர்ந்திருப்பவர்களை எண்ணினான்... ஆயிரம்! எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? பெருமாளின் பேரருளில் கரைந்து போனான் நீலன். இவ்வாறு அன்னதானமிடப்பட்ட அந்தப் பகுதி இன்றளவும் ‘மங்கை மடம்’ என்றஅழைக்கப் படுகிறது.

கஜானா காலியானது. 1000 பேருக்கு தினசரி உணவிட தேவையான திரவியம் இல்லை. இனி கொள்ளையடிக்கத்தான் வேண்டும். காட்டுப் பகுதிக்குச் சென்று வழிப்பறியில் இறங்கினான்.
அவனை முற்றிலுமாக ஆட்கொள்ள நினைத்த பெருமாள், பூர்ண மகரிஷியின் மகளாக வளர்ந்துவந்த பூர்ணவல்லி என்று அழைக்கப்பட்ட திருமகளை மணந்துகொண்டு, மிகப் பெருஞ்செல்வமாக சீர் வகைகளுடன், மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்தபடி பெருமாள், மனைவியுடன் வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த நீலன், தனக்குப் பெருந்தனம் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் திருமண கோஷ்டி முன் பாய்ந்தான். கத்தி காட்டி மிரட்டி, அவர்கள் கொண்டுவந்திருந்த எல்லா நகைகளையும், பொருட்களையும் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டினான். அவன் கண்களில் மணமகன் காலில் அணிந்திருந்த மெட்டி தென்பட்டது. அதையும் கழற்றிக் கொடுக்குமாறு மிரட்டினான் நீலன்.

ஆனால், தன்னால் அதனைக் கழற்ற இயலவில்லை என்றும், முடிந்தால் அவனே கழற்றிக்கொள்ளலாம் என்றும் திருமால் தெரிவித்தார். கீழே குனிந்து திருமாலின் பாதத்தை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு மெட்டியைக் கழற்ற முனைந்தான் நீலன். இறுதியாகத் தன் பற்களால் கடித்து இழுக்க முனைந்தான்.அவன் உதடுகள் அந்தப் பாதத்தில் பட்ட அந்த விநாடியே பேரானந்த மின்னலால் தாக்கப்பட்டான். இப்படி ஒரு இன்ப உடலதிர்ச்சியை தான் இதுவரை அனுபவித்ததேயில்லையே என்று திடுக்கிட்டு நிமிர்ந்து திருமாலைப் பார்த்தான். அவரோ, புன்னகையுடன் அவனை நெருங்கினார். ‘‘இந்த நகை மூட்டையைத் தூக்க இயலாமல் தவிக்கிறாயே, ஒரு மந்திரம் சொல்கிறேன், அதைக் கேட்டால் இந்த மூட்டை லேசாகிறதோ இல்லையோ, உன் மனசு லேசாகிவிடும். அதில் கனத்துக் கொண்டிருக்கும் மாசுகள் நீங்கிவிடும்,’’ என்று சொல்லி அவன் காதருகே தன் பவள வாயால் திருமந்திரத்தை ஓதினார்.அந்த மந்திரச் சொல் அவன் உள்ளத்தை அப்படியே உருக்கியது. திடுக்கிட்ட அவன், தன்முன் சங்கு சக்ரதாரியாக திருமால் நெடிது நின்றிருந்ததைக் கண்டான். அவ்வளவுதான், கரகரவென்று கண்கள் நீர் சொரிய, மளமளவென்று உதடுகள் பாசுரத்தை உதிர்த்தன:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துய ரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேனோடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!
 ‘ஓர் இளம்பெண்ணுடன் காணும் சுகமே உலகத்தின் பேரானந்தம் என்று நினைத்து இதுநாள்வரை ஏமாந்து போனேனே. பகவானே, உன் திருநாமம் உலக இன்பங்களுக்கெல்லாம் எவ்வளவோ மேன்மையானது என்பதை இப்போதுதானே உணர்கிறேன்!’ என்று ஆனந்தக் கூத்தாடினான் நீலன். இவ்வாறு பாசுரம் பாடிய அவன், அக்கணத்திலிருந்தே திருமங்கை ஆழ்வார் ஆனார். குமுதவல்லியால் ஈர்க்கப்பட்டு அவளாலேயே திருமாலின் கருணையை நேரடியாகப் பெற்றவர் என்பதால், அந்த மங்கை உருவாக்கியவராதலால், திருமங்கை ஆழ்வார்!

இந்த அபூர்வ சம்பவத்துக்குக் காரணமான வெள்ளக்குளம் இன்றும் மௌன சாட்சியாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. (சுவேதன் என்ற இளவரசன் இத்தலத்திலுள்ள குளத்தில் நீராடி பெருமாளின் அனுக்ரகத்தால் தன் ஆயுள் நீட்டிக்கப் பெற்றான். இவன் நீராடியதால் (சுவேதம் என்றால் வெண்மை என்று பொருள்) இந்த தீர்த்தம் வெள்ளைக் குளம் என்றழைக்கப்பட்டு, பேச்சு வழக்காக வெள்ளக்குளமாகி விட்டது என்றும் இன்னொரு புராணத் தகவல் உண்டு.)இந்தப் பொய்கைக் கரையில் ஆஞ்சநேயர் சிறு சந்நதி கொண்டிருக்கிறார். துவஜஸ்தம்பத்தின் கீழ் கருடாழ்வார் காட்சியளிக்கிறார். கருவறையில் தேவிபூமிதேவி சமேதராக அண்ணன் பெருமாள் கம்பீரமாக நின்றிருக்கிறார்.

இவர் ஏன் அண்ணன் பெருமாள்
எனப்படுகிறார்?

‘விண்ணோர் தொழுதேத்தும் வேங்கட மாமலையானே, அண்ணா, என் துயரைத் துடைப்பாயாக’ என்று திருமங்கையாழ்வாரே இந்தப் பெருமாளை, திருவேங்கடமுடையானின் அண்ணனாக பாவித்து, போற்றிப் பாடி நெகிழ்ந்தரே, அதுதான் காரணம்.அதனாலேயே வேங்கடவனுக்கு நேர்ந்து கொண்டதை இந்த அண்ணன் பெருமாளுக்கு நிறைவேற்றலாம் என்கிறார்கள். இத்தலம் சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags : Venkatavan ,Vellakkulam ,
× RELATED வேங்கடவனின் வெள்ளக்குளம் அண்ணன்!