விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனைக் கொண்டுபோய் கடலில் கரைக்கும் பழக்கம் உண்டானது எப்படி?

விநாயகர் சதுர்த்தி பூஜையை பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் வகையில் பொது விழாவாக மாற்றியவர் லோக்மான்யர் என்று போற்றப்படும் பாலகங்காதர திலகர். ஆங்கிலேயர் தங்களது ஆட்சிக் காலத்தில் இந்திய மக்களிடையே இருந்த ஜாதிப் பிரிவினையைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. பிரித்தாளும் கொள்கையின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு எதிராக மக்களிடையே ஒற்றமையுணர்வு உண்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் திலகரால் கி.பி. 1893ல் உருவாக்கப்பட்ட நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. ஒரு பொது இடத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகப்பெருமானின் திருவுருவத்தை அமைத்து, அதற்கு பத்து நாட்கள் பூஜை செய்து சதுர்த்தசி நாளன்று கடலில் கரைக்கும் பழக்கத்தினை உருவாக்கினார்.

இதனால் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பேதம் நீங்கி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் வழிமுறை பிறந்தது. ஆன்மிக வழியில் உண்டான சமுதாயப் புரட்சியாகவே இதனை வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்றழைக்கப்படும் வேதிப்பொருட்களால் தற்போது விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு அதனை கடலில் சென்று கரைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற உங்கள் வருத்தம் நியாயமானதே. களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துங்கள். பொதுமக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் இதுபோன்ற திருவிழாக்களால் மக்களிடையே ஒற்றுமை உணர்வு கூடும் என்பதில்

மாற்றுக்கருத்து இல்லை.

Related Stories: