×

சிற்பமும் சிறப்பும்-கணங்களின் அதிபதி

ஆலயம்: புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்.

காலம்: முதலாம் பராந்தகச்சோழனால் (கி.பி. 907-955) திருப்பணி செய்யப்பட்டது.

புதிய தொடக்கம், தடைகளைத் தகர்த்து முயற்சிகளை நிறைவேற்றுதல், ஞானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான வழிபாட்டு தெய்வமாகிய விநாயகருக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆலயங்கள் உண்டு. பெரிய விமானங்களும், கோபுரங்களும் கொண்ட கோயில் கட்டுமானங்கள் எதுவுமின்றி, குளக்கரை, அரசமரத்தடி, தெருமுனை சந்தி என கூரை கூட இல்லாமல் வானம் பார்த்து அமர்ந்து அருள் பாலிக்கும் எளிய கடவுள். யானையின் தலை கொண்ட முகம், பெரிய தொந்தி என வித்தியாசமான உடல் அமைப்பினால் குழந்தைகளையும் ஈர்ப்பவர். பூதகணங்களிற்கெல்லாம் அதிபதி என்பதால் “கணபதி” என்றழைக்கப்படும் பிள்ளையார், இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.

சிவபெருமானுடைய சேவகர்களாக தொன் மவியலில் குறிப்பிடப்படுகின்ற பூதகணங்கள், குள்ள உருவம், பெரிய வயிறு, அகோரமான முக அமைப்பு, ஆனால், உள்ளுக்குள் குறும்புகள் கூடிய குழந்தைத்தனம் போன்ற குணாதிசயங்களுடன் சிவாலயங்களில் சித்தரிக்கப்படுகின்றன. பூதகணங்களின்  விளையாட்டுத்தனம், குதூகலம், பழிப்பு, சுழிப்பு காட்டும் முகபாவங்களுடன் கூடிய சிற்பங்களை பூதவரியில் அமைப்பது சிற்ப மரபு. பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் இந்தப் பேரழகு கணபதி, தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்றான  திருவாலந்துறை மகாதேவர் என்றழைக்கப் படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் தெற்குப்பகுதியில் அழகிய மகரதோரணத்துடன் அமைந்த அர்த்தமண்டப கோட்டத்தில்
வீற்றிருக்கிறார்.

இந்த ஆலயத்தின்  இறைவன் ஆலந்துறைநாதர் (பிரம்ம
புரீஸ்வரர் - புள்ளமங்கலத்து மகாதேவர்)
இறைவி   அல்லியங்கோதை (சௌந்தரநாயகி)
கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டில் இருந்துள்ள இக்கோயில்,
திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.
‘‘மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவான்னிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே’’

இமவான் மகளாகிய பார்வதிதேவியின் கணவனும், இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறவித் துயர் நீக்குபவனும்  ஆகிய சிவபெருமானது இடமும் கலைகள் அறிந்த அறிவார்ந்த மறையவர்கள் தொழுதேத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்து அலைகளோடு வரும் காவிரிக் கரையில் (குடமுருட்டி ஆறு) உள்ள ‘புள்ளமங்கை’ என்று சொல்லப்படும் ‘ஆலந்துறை’ என்னும் கோயில் இதுவே ஆகும்.சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ள இக்கோயில், முதலாம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-955)பின்னர் திருப்பணி செய்யப்பட்டு கலைக்கோயிலாக திகழ்கிறது.

மூலவரின் கருங்கல் விமானத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிவனின் பல்வேறு வடிவங்கள், நாட்டியச் சிற்பங்கள், சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றி நம்மைப் பரவசப்படுத்துபவை. அடித்தளத்தில் சுமார் 65 சிற்றுருவச் சிற்பங்களும், சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண குறுஞ்சிற்பங்களும் கலை நுணுக்கம் மிக்கவை.தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மது ஜெகதீஷ்

Tags :
× RELATED சுந்தர வேடம்