×

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

ஸ்காந்த புராணம் நந்திகேசுவர - ஸநத்குமார ஸம்வாதத்தில் “ஸ்யமந்தகோபாக்யானம்” என்ற தலைப்பில்  இரண்டு அபவாதமாக மிக்க சிறப்பாக விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை சொல்லி இருக்கிறது.அது துவாபறயுகம். கண்ணன் துவாரகையில் திருவிளையாடல் புரிந்த நாட்களில் ஸத்ராஜிதன், விரசேனன் என்னும் இரண்டு அரசகுமாரர்கள் வாழ்ந்து வந்தார்கள். சத்ராஜிதன் கடற்கரையில் நின்று பல காலம் உணவு உண்ணாமல் சூரியனை நோக்கி கடுந்தவம் புரிந்து வந்தான். அவருடைய தவத்திற்கு  பணிந்து சூரியபகவான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் சத்ராஜிதனே என்றார்.

அதற்கு சத்ராஜிதன் எனக்கு ஸ்யமந்தக மணியைக் கொடுத்தருள வேண்டும் என்றார். சூரியனும் அவ்வாறே மணியை அவனிடம் கொடுத்து, இந்த ரத்தினம் ஒவ்வொரு நாளும் எட்டு பகரம் பொன் கொடுக்கும். இதை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். அசுத்தமாக இதை வைத்திருந்தால் ஒரே கணத்தில் இதை வைத்திருந்தவனை கொன்று விடும் என்று கூறி சூர்ய பகவான் மறைந்தார்.

சத்ராஜிதன் அழகிய ஒளிவீசும் அந்த மணியை அணிந்து கொண்டு கண்ணன் உள்ள துவாரகைக்குச் சென்றான். இத்தகைய உயர்ந்த மணியைக் கண்ட கண்ணன் தனக்கு வேண்டுமென்று ஆசையாய்க் கூறினார். அவருடைய ஆசையை உணர்ந்த சத்ராஜிதன் கண்ணன் இதை எப்படியாவது எடுத்துக் கொள்வாரோ என்று பயந்து அந்த மணியை தன் தம்பியான பிரசேன்னின் கழுத்தில் அணிவித்து அனுப்பிவிட்டான்.பிரசேனன் ஒரு சமயம் கண்ணனுடன் வேட்டையாடச் சென்றான். சென்ற இடத்தில் ஒரு சிங்கம் பிரசேனனைக் கொன்று அந்த மணியை எடுத்து சென்றது. அந்த சிங்கத்தை ஜாம்பவான் என்ற கரடியரசன் கொன்று தன் குகைக்கு எடுத்து சென்று தன் மகனின் தொட்டிலில் உயரே தொங்க விட்டான்.

கண்ணன் தன் நகருக்கு திரும்பினார். வெகு காலமாகியும் பிரசேனன் நாடு திரும்பாமல் போகவே, கண்ணன் தன் பிரசேனனைக் கொன்று அந்த மணியை எடுத்திருப்பான் என்ற சந்தேகம் அவர் மேல் ஏற்பட்டது. இந்த பழியைக் கேட்டு மனம் வருந்திய கண்ணன் மக்களுடன் பிரசேனனைத் தேடி காட்டிற்குச் சென்றான். அங்கு பிரசேனனின் குதிரையும், அவனும் சிங்கத்தால் கொன்று இருப்பதைக் கண்டார். பிறகு சிங்கத்தின் காலடியை தொடர்ந்து செல்ல அது ஒரு குகை அடிவாரத்தில் அவரைக் கொண்டு விட்டது. அந்த குகைக்குள் பல தூரம் சென்ற பிறகு அழகான மாளிகையைக் கண்டான்.

அதில் ஒரு தொட்டிலில் ஜாம்பாவின் மகன் தூங்குவதையும், அத்தொட்டிலின் மேலே அந்த ஸ்யமந்தக மணி தொங்குவதையும் கண்டான். அந்தத் தொட்டிலை ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி ஆற்றிக் கொண்டிருந்தாள்.சிங்கம் பிரசேனனைக் கொன்றது, அந்த சிங்கம் ஜாம்பவனால் கொல்லப்பட்டது. குமாரனே அழாதே. இந்த சியமந்தகம் உனக்குத்தான் என்று அழகாக பாடிக் கொண்டிருந்தாள் அவள்.

தன் அருகில் அழகே உருவாய் நின்ற கண்ணனைக் கண்டு காதல் கொண்டாள். ஆனால் அவன் தந்தைக்கு பயந்து சியமந்தகத்தை எடுத்துக் கொண்டு சென்று விடுங்கள். இங்கிருந்தால் என் தந்தை உங்களைக் கொன்று விடுவார் என்றாள். கண்ணன் சற்றும் அசையாமல் புன்னகை செய்து தனது சங்கை ஊதினான். அந்த ஒலியைக் கேட்டு சினத்துடன் ஜாம்பவான் வந்தான்.
இருவருக்கும் மிகப் பெரிய போர் நடந்தது.

இதற்கிடையில் குகைக்கு வெளியே கண்ணனுடன் வந்தவர்கள் ஏழு நாட்கள் வரை கண்ணன் வராமல் போகவே அவர் இறந்து விட்டார் என்று நினைத்து ஊருக்கு திரும்பி சென்று அவருக்கு உத்தரக் கிரியைகளையும் செய்தனர்.இருவருக்கும் 21 நாட்கள் பெரும் போர் நடந்தது. இதில் களைத்துப் போன ஜாம்பவான் கண்ணனைப் பார்த்து நான் பலபேருடன் போர் செய்துள்ளேன். எந்தப் போரிலும் நான் களைத்ததில்லை. உன்னிடம் நான் தோற்றேன். நீங்கள் மஹாவிஷ்ணுவே என்பதில் சந்தேகமில்லை என்று பலவாறு கண்ணனைப் போற்றி அவருக்கு ஸ்யமந்தக மணியையும் தன் மகளான ஜாம்பவதியையும் ஒப்படைத்தார்.

கண்ணன் ஜாம்பவதியை அழைத்துக் கொண்டு துவாரகையை அடைந்து மக்களிடம் நடந்த கதைகளை கூறி ஸ்யமந்தக மணியை சத்ராஜித்திற்குக் கொடுத்தார். மக்கள் மகிழ்ந்தனர். சத்ராஜிதன் உண்மையை அறிந்து வீண் சந்தேகத்தை கண்ணனுக்கு ஏற்படுத்திய பயம் மற்றும் வெட்கத்தாலும் தன் மகளான சத்யபாமாவை அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்.
இரண்டாவது அபவாதம்யாதவர்களான சத்தன்வா அக்ருரன் ஸ்யமந்தக மணியை அபகரிக்கும் நோக்கத்துடன் சத்ராஜிதனுடன் பகை கொண்டார்கள். துராத்மாவான சுதன்வா கண்ணன் பாண்டவர்களிடம் சென்றிருந்த போது சத்ராஜித்தைக் கொன்று மணியை அபகரித்துச் சென்றான். இந்த செய்தியை சத்தியபாமா கண்ணனுக்கு தெரிவித்தாள்.

கபடநாடக வல்லுனரான கண்ணன் மனதில் மகிழ்ச்சி கொண்டாலும் வெளியில் கோபம் உடையவர்போல் நடித்து பலராமனை பார்த்து அண்ணா அந்த துர்ஷ்டன் சத்தன்வா என் மாமனைக் கொன்று மணியை அபகரித்து விட்டான். அவனை துரத்திச் சென்று கொன்று மணியைக் நமதாக்கிக் கொள்வேன் என்றார்.இந்த செய்தியைக் கேட்ட சத்தன்வா அக்ரூரன் என்ற யாதவனிடம் ஸ்யமந்தக மணியை கொடுத்துவிட்டு தான் ஒரு குதிரை மேல் ஏறி தெற்கு நோக்கி விரைந்தான். பலராமனும், கண்ணனும் அவனை பின் தொடர்ந்தார்கள். 100 மைல் தூரம் சென்றது சத்தன்வானின் குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது. உடனே கண்ணன் ரதத்திலிருந்து குதித்து ஓடுகின்ற சத்தன்வாவை பிடித்து தன் வாளால் கொன்றுவிட்டார். ஆனால் இரத்தினத்தை தேடியபோது அவனிடம் இல்லை.

இதைக் கண்ட பலராமன் கண்ணனைப் பார்த்து நீ துஷ்டன், மாயாவி, பேராசைக் காரன் பணத்துக்காக வீணாக உன் சொந்தங்களை கொன்றாய். உன்னை எவன் தான் சொந்தம் கொண்டாடுவான் என்றெல்லாம் திட்டி பலராமன் கண்ணனை வெறுத்து நாட்டிற்கு சென்று விட்டான். கண்ணனும் துவாரகைக்கு திரும்பினான்.கண்ணனும் நாடு திரும்பியதும் மக்கள் அவரை பேராசைக் காரன் என்றும் ரத்தினத்திற்காக சொந்தங்களை கொன்றவன் என்றும், இதனால் பலராமன் இவறை துறந்து விட்டார் என்றும் பலவாறு பேசினார்கள். கண்ணனும் இந்த பேச்சுக்களுக்கெல்லாம் உள்பட்டு பாவம் செய்தவன் போல் வெளியே செல்லாமல் அரண்மனையிலேயே தங்கி விட்டார்.

இதனிடையில் சியமந்தக மணியுடன் அக்ரூரன் தீர்த்த யாத்திரை சென்று அந்த மணி அளித்த செல்வத்தால் காசியில் பல வகையான யாகங்களைச் செய்து பல கோயில்களை கட்டி அமைத்தான். அந்த மணியின் மகிமையால் அங்கு நோய் இல்லாமல், சண்டை எதுவும் இல்லை.அதே சமயத்தில் நாரதர் கண்ணனைக் காண வந்தார். கண்ணன் தலை குனிந்து வருத்தத்துடன் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று நாரதர் வினவ, கண்ணன் நடந்ததை எல்லாம் நாரதரிடம் விவரித்தார்.

இதைக் கேட்ட நாரதர் சிறிது சிந்தித்து கண்ணா இதற்கு காரணம் தெரிந்து விட்டது. தாங்கள் யாத்திரயத் (ஆவணி) மாதம் சுக்லபஷ் சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்து இருப்பீர்கள். அதனால் தான் உங்களுக்கு இந்த வீண் பழி என்றார்.இதை கேட்டு கண்ணன் நாரதரே சதுர்த்தி அன்று ஏன் சந்திரனைப் பார்க்கக் கூடாது? எதற்காக மக்கள் துவிதியை அன்று சந்திரனை
பார்க்கிறார்கள் என்று கேட்டார்.

நாரதர் கூறுகிறார்:
சந்திரன் ஒரு சமயம் கணபதியைப் பார்த்து கேலி செய்தான். அதற்கு கோபம் கொண்ட கணபதி உன்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் வீண் பழி ஏற்படும் என்று சபித்தார். அதனால்தான் தங்களுக்கு இந்த வீண் பழி என்றார். உடனே கண்ணன் நாரதரே கணபதி சந்திரனை சபித்த வரலாறை விவரமாக சொல் என்றார்.சிவபெருமான் கணபதியைக் கணங்களின் தலைவராக நியமித்தார். அவருக்கு அணிமா, மகிமா முதலிய அஷ்ட சித்திகளையும் மனைவிகளாக பிரம்ம தேவன் அளித்து கணபதியை பலவாறு போற்றி வந்தார். கணேசன் மகிழ்ந்து பரம்மனே உனக்கு வேண்டிய வரன் கேள் என்றார். பிரம்மனும் என் படைப்புகளெல்லாம் எந்த வொரு தடையின்றி செயல்பட எனக்கு அருள் புரிய வேண்டும் என்று வரம் கேட்க விநாயகரும் அதற்கு வரம் புரிந்தார்.

அப்பொழுது  விநாயகர் பிரம்மன் பூஜையில் அளித்த மோதகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு உயரக்கிளம்பி உலகமெல்லாம் சுற்றி சந்திரலோகம் சென்றார். அங்கு பெருந் தொந்தியும், ஒடைந்த சந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் எடுத்து வருகின்ற விநாயகனைப் பார்த்து சந்திரன் சிரித்து கேலி செய்தான். இதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, சந்திரனே நீதான் அழகன் என்று கர்வம் கொண்டுள்ளாய். இந்த நாள் முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படியே யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் பழி ஏற்படும் என்று சபித்தார். இதைக் கேட்டு தேவர்களெல்லாம் நெகிழ்ச்சி அடைந்தனர். சந்திரன் ஒளி குறைந்து தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

இந்த சந்திரன் அழிவதைக் கண்டு தேவர்கள் எப்போதும் மனம் வருந்தி இந்திரனை முன்னிட்டு பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனும் யோசித்து விநாயகரின் சாபத்தை யாரால் அகற்ற இயலும்? நானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ எதுவும் செய்ய முடியாது. அந்த விநாயகர் பெருமானையே சரண் அடையுங்கள் என்று இந்திரனுக்கு கூறினார்.
தேவர்கள் பிரம்மனை நோக்கி சுவாமி எந்த வழியில் விநாயகர் மனம் இறங்கி சாபத்தை நீக்குவார்? என்று கேட்க பிரம்மன் சொல்கிறார்.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் - முக்கியமாக கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியன்று விரதம் கொண்டு பலவகையான பழங்கள், அப்பம், மோதகம், இவைகளுடன் மதுரான்னங்கள் முதலியவற்றால் கணபதியை பூஜித்து அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல தஷ்ணை அளித்தால் எண்ணிய வரங்களை அவர் அளிப்பார் என்றார்.இதைக் கேட்ட தேவர்கள் பிரகஸ்பதியை சந்திரன் உள்ள இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். அவர் இந்த முறையை சந்திரனுக்கு விவரிக்க, சந்திரனும் அவ்வாறே பூஜை செய்ய விநாயகரும் மகிழ்ந்து பால கணபதியாக விளையாட்டு விநாயகராக அங்கே காட்சி அளித்தார். சந்திரன் மனம் மகிழ்ந்து அவரைப் பணிந்து கீழ்க் கண்டவாறு போற்றினான்.

“த்வம் காரணம் காரண காரணநாம்
வேத்தானி வேத்யம் ச விபோ ப்ரஸ்த |
ப்ரஸித தேவஸே ஜகந்நிபரஸ
கணேச லம்போதர வக்ரதுண்ட |
விரிஞ்சி நாராயண பூஜ்யமாந
நமஸ்வ மே சர்வ க்ருதம் ச  ஹாஸ்யம் ||

இதைக் கேட்டு மகிழ்ந்த விநாயகர் சந்திரனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அந்த நேரத்தில் பிரம்மாதி தேவர்களெல்லாம் அங்கு வந்து பிரபோ சந்திரனுக்கு கொடுத்த சாபத்தை நீக்க வேண்டும் என்றார். அப்படியே சாபம் நீக்கினார். சுக்லபஷ சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பவர்களுக்கு ஓர் ஆண்டு வரை தொடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து கொண்டே இருக்கும். மாதத்தின் ஆரம்பத்தில் உன்னைப் பார்ப்பவருக்கு இந்த தோஷமில்லை. ஆகவே கிருஷ்ணரை அன்று முதல் மக்கள் சந்திரனை சதுர்த்தியில் பார்ப்பதில்லை, துதியையன்று
பார்க்கிறார்கள் என்று கூறி முடித்தார் நாரதர்.

பிறகு சந்திரன் சுவாமி எந்த முறையில் தங்களை பூஜிக்க வேண்டும் என்று விநாயகரைக் கேட்க அவரே ஒவ்வொரு கிருஷ்ணபட்ச சதுர்த்திலும் மோதகம், அப்பம் முதலானவற்றுடன்
என்னை பூஜித்தபின் ரோகிணியுடன் கூடிய உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்டங்களை போக்குகிறார். (இது சங்கடஹர சதுர்த்தி என்று கூறப்படுகிறது)பாத்திரபத(ஆவணி) சுக்ல சதுர்த்தியன்று மிருத்திகையால் மண்ணால் என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து, பல மலர்களால் பூஜை செய்து பிரம்மரை போஜனம் செய்து, இரவில் ஜாகரமும் செய்து, என்னை முறையாகப் பூஜை செய்பவர்களுக்கு சகல வெற்றிகளையும் அளிக்கிறேன் என்று சந்திரனுக்கு விநாயகர் கூறினார் என்று நாரதர் கண்ணனுக்கு சொல்ல, கண்ணனும் அம்
முறைப்படி விநாயக பூஜை செய்து தனக்கு நேர்ந்த வீண் அபவாதம் நீங்கப் பெற்று எல்லோராலும் போற்றப்பட்டனர்.இந்த விநாயகர் சதுர்த்தி விரதக் கதைகளைக் கேட்பவர்களுக்கும் சகல நன்மைகள் கிடைப்பதில் ஐயமில்லை.

 அருள் பெருகும்...

குடந்தை நடேசன்

Tags : Ganesha ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்