மாரக (கண்டம்) திசையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 7

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ்.கோகுலாச்சாரி

பதினோரு வருடங்களுக்கு முன் பதட்டத்தோடு நம்முடைய உறவினர் ஒருவர் ஒரு ஜாதகத்தோடு வந்திருந்தார். அது அவருடைய துணைவியார் ஜாதகம். அவர் முகத்தில் மிகப்பெரிய கவலை குடிகொண்டிருந்தது. அவர் இந்த ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி இருக்கிறார். அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு நடக்கின்ற தசாபுத்திகள் அனைத்தும் எதிரிடையாக இருப்பதால், அவருக்கு மிகப்பெரிய உயிராபத்து இருக்கிறது . தப்பிப்பது கடினம்  என்று சொல்லி இருந்தார். நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது.

ஜோதிடரா? வைத்தியரா?

சில வருடங்களாகவே இருதய நோயினால் உடம்பில் நீர் கோர்த்து, கால்கள் வீங்கி, பலவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். வேலை செய்ய முடியவில்லை. நடக்கவும் முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஜோதிடர் சொன்னது போல், அவருடைய உடல்நிலை இருந்தது. அதனால் அவர் பயம் அதிகமாகியது. அப்பொழுது அவரிடம் கேட்டேன்.

‘‘இப்பொழுது எதற்காக நீங்கள் அவசரமாக ஜோதிடரைப் பார்க்கச் சென்றீர்கள்?’’ அவர் சொன்னார்.

‘‘உடல்நிலை மோசமாக இருந்தது. கொஞ்சம் தீவிரமான வைத்தியம் பார்த்தால் தான் பிழைக்க முடியும் என்று டாக்டர்களும் சொன்னார்கள். அதனால் தான் போனேன். அவரும் எதிர்பார்த்தபடி சொன்னர்.”‘‘இதைத்  தெரிந்து கொள்ளத்தான் போனீர்களா?’’‘‘ஆமாம். இப்பொழுது தசாபுத்திகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? வைத்தியம் செய்தாலும் பிழைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் போனேன்.’’‘‘நீங்கள் எதிர்பார்த்தபடி ஜோதிடர் சொல்லிவிட்டார்.’’‘‘ஆமாம். கடினமான காலம்என்று சொல்லிவிட்டார்.’’

என்னுடைய மனதில் அப்பொழுது எழுந்த சிந்தனை இது. பெரும்பாலும் நாம் செய்கின்ற தவறு என்று கூட சொல்லமாட்டேன், தேவையில்லாத ஒரு செயல் என்றுதான் சொல்லுவேன். ஒருகால் வைத்தியம் பார்த்தும் பிழைக்காது என்றால், ஏன் வைத்தியம் பார்த்து செலவு செய்யவேண்டும் என்ற எண்ணமா? இதைப் போன்ற மனநிலையும் பலபேர் இடத்திலே இருக்கிறது. இது மிகவும் கொடுமையான விஷயம். இப்படிப்பட்ட நேரங்களில் பார்க்க வேண்டியது மருத்துவரைத்தானே தவிர, ஜோதிடரை அல்ல.

மரணத்தை மாற்றும் சக்தி இறைவனுக்கு உண்டு

ஜாதகம் பார்த்து மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டால், மேற்கொண்டு வைத்தியம் பார்க்காமல் வீட்டில் வைத்துக்கொண்டு நாமே மரணத்தை ஏற்படுத்துவது என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செயல். அந்த ஜாதகம் மாரகம் தரட்டும்; தராமல் இருக்கட்டும் .அது வேறு விஷயம். கிரகங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு மரணத்தைத் தந்தாலும் தரட்டும் . ஆனால், தப்பிக்கும் முயற்சி வேண்டாமா? மரணத்தை மாற்றும் சக்தி இறைவனுக்கு உண்டு. ஒரு வைத்தியரின் மூலமாக இறைவன் நிச்சயமாகக் காப்பாற்றுவான் என்கின்ற  நம்பிக்கை வேண்டும்.

நீங்கள் ஜோதிடத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள்.

1.  யதார்த்தமாக என்ன செய்யவேண்டும் என்கின்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

2. உங்களுடைய பிரார்த்தனையைவலுப்படுத்துங்கள். இரண்டும் இணைய வேண்டும். அதுதான் பலிக்கும்.

பரீக்ஷித்து மாதிரி இருந்துவிட முடியாது

இதைத்தான் சொன்னேன். ‘‘நீங்கள் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து ஆலோசனை செய்யுங்கள். ஜோதிடத்தில் மாரகத்தை உறுதி செய்து கொள்வதால் உங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் நமக்கு மரணம் வந்துவிடும் என்று தெரிந்து கொள்வதன் மூலமாக, நாம் முன்கூட்டியே உறவினர்களுக்குச் சொல்லி விடவா முடியும்?’’அவர் விரக்தியாகச் சிரித்தார்.

“அடுத்து, எல்லோரும் பரீக்ஷித்து மாதிரி இருந்துவிட முடியாது. இன்னும் ஏழு நாட்கள்தான் வாழ்க்கை என்று சொல்லிவிட்ட பிறகு, அவன் அந்த ஏழு நாட்களுக்குள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்கின்ற ஆத்ம விசாரணை செய்தானாம். பாகவதத்தைக் கேட்கின்றான். மோட்சமடைகின்றான். இதெல்லாம் புராணங் களில் இருக்கின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இங்கே பகவத் சிந்தனையோடு நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்கின்ற முயற்சியைச்  செய்ய வேண்டும்.

இறைவனை வணங்கிவிட்டு வைத்தியரிடத்திலே சென்று வைத்தியம் பார்ப்பது கூட பரிகாரம்தான். இந்த பரிகாரத்தின் பலன், அந்தத் தெய்வத்தின் அனுக்கிரகம் இரண்டும் இணைந்து, அந்த வைத்தியர் செய்கின்ற  வைத்தியத்தில்  பலன் தெரியும் இது அனுபவப்பூர்வமான உண்மை.”

ஜோதிடர் சொன்னது உண்மை

இப்படிச் சொல்லிவிட்டு அந்த ஜாதகத்தையும் பார்த்தேன். ஜாதகத்தின் பிரகாரம் ஜோதிடர் சொன்னது உண்மை. ஏனென்றால், அந்த ஜோதிடர் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். மிகத் துல்லியமாகச் சொல்லக் கூடியவர். ஆனாலும், அதிலும் பத்தில் இரண்டு மூன்று தவறாகும். ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு ஜாதகங்களையும் பார்த்தார். பலன் சொன்னார்.

ஒரு ஜாதகத்துக்கு அப்படியே பலித்தது. ஒரு ஜாதகத்துக்கு அப்படியே பலிக்கவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர் அந்த விதிகளின் பிரகாரம் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.

நமக்கு என்ன கஷ்டம் என்று பிரத்யட்சமாகத் தெரிகிறது. அது கவனத்தில் கொள்ள வேண்டும். பிரம்ம ரகசியமான மரணத்தின் தேதியை யாராலும் சொல்லிவிட முடியாது. சில கெட்டிக்காரர்கள் நான் சொல்லி விடுவேன் என்கிறார்கள். அவர்கள் சொன்னது நடந்தும் விடுகிறது. நல்லது. அவர்கள் திறமைக்கு வாழ்த்து சொல்லுவோம். அவர்கள் கற்றுக்கொண்ட கலைக்கு வாழ்த்து தெரிவிப்போம். ஆனால், அதை வைத்துக்கொண்டு நாம் உறவினர்களுக்குச் சொல்லி விடமுடியுமா?

நேர்மறையும் எதிர்மறையும்

எனவே, யதார்த்தத்தோடு பொருந்தாத துல்லியமான ஜாதகக்கணிப்பு கூடதேவையில்லை. ‘‘முயற்சி செய். இறைவனை நம்பு. பிழைத்து விடலாம்’’ - இது நேர்மறை. ‘‘என்ன முயற்சி செய்தாலும் விதி வலியது. என் ஜோதிட சாஸ்திரம் பொய்யா காது’’ என்பது எதிர்மறை. ஒரு ஜோதிடர் நேர்மறை விளைவுகளைச் சொல்லும்பொழுது, ‘‘இது நடக்க வேண்டும்’’ என்ற பிரார்த்தனையோடு சொல்ல வேண்டும். எதிர்மறை விளைவுகளைச்  சொல்லுகின்ற பொழுது, மிகவும் அழுத்திச் சொல்லாமல், ‘‘என் சாஸ்திரம் பொய் ஆனாலும், இவர் இந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிட வேண்டும்’’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

எத்தனை சாஸ்திர நுட்பங்களாலும் ஜோதிட சாஸ்திரங்களில் கிரகங்களின் விளைவுகளை அவ்வளவு எளிதில் தீர்மானித்து விட முடியாது. எட்டு ஜாதகங்களில் நம் ஊகங்களும் கணக்குகளும் சரியாக வரும். இரண்டு ஜாதகங்கள் வழுக்கிக் கொண்டு செல்லும். நாம் எதிர்பாராத பலன் நடந்த பிறகு, மறுபடியும் அந்த ஜாதகத்தை ஆராய்ந்தால், அப்போதுதான் ஏன் நடக்கவில்லை என்பது பளிச்சென்று தெரியும். இந்த விஷயம், எப்படி நம் கண்களில் மறைந்தது என்றால், நம் கண்களுக்கும் மனதிற்கும் ஒரு எல்லை உண்டு.

அந்த அளவுதான் சொல்ல முடியும். அந்த ஜோதிடர் மிகவும் நுட்பமாகத்தான் சொல்லியிருக்கிறார். அவர் எழுதிக் கொடுத்த குறிப்பு இது . ‘‘மாரகாதிபதி திசை மாரகாதிபதி புத்தி நடைபெறும் காலத்தில் மாரகம் ஏற்படும் என்பது விதி. மாரகாதிபதி திசையையோ மாரகாதிபதியின் புத்தியையோ செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால் ஆபரேஷன் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அந்த திசையை குரு பார்வை செய்தால் ஆபரேஷன் செய்யும் நிலை ஏற்படாது.’’இந்த ஜாதகம் பார்த்த தேதி 11:10:2011. அப்பொழுது ஜாதகருக்கு சனி திசை சூரிய புத்தி நடந்ததாக அந்த ஜோதிடர் குறிப்பிட்டிருந்தார்.

ஏன் மாரகம் கொடுக்கவில்லை?

இதில் இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஜோதிடர்கள் முதலில் ஜாதகத்தைச் சரிபார்க்க வேண்டும். இதைச் செய்யாமல், வாடிக்கையாளர் கொடுத்த கட்டங்களைக் கொண்டு பலன் சொல்லுகின்ற பொழுது, அது தவறுதலாக முடியும் வாய்ப்பு அதிகம். வாடிக்கையாளர்கள் அசல் ஜாதகத்திலிருந்து, கட்டத்தில் உள்ள கிரகங்களை எழுதுகின்ற பொழுது, கட்டம் மாற்றி எழுதி விடுவார்கள். இதிலும் அப்படித்தான். அசல் ஜாதகக் கட்டத்தில் குரு தனுசு ராசியில் போட்டிருந்தது.

தனுசுவிலிருந்து, மாரக தசை நடத்துகின்ற சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் ஆபரேஷனுக்கு வாய்ப்பு இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் பிறந்த நாற்பத்தி எட்டாம் வருஷம் செப்டம்பர் மாதம் குரு விருச்சிகத்தில்தான் இருக்கிறார். தனுசுக்கு மாறவில்லை. அசல் ஜாதகத்திலிருந்து பிரதி பண்ணும்பொழுது மாறி இருக்கலாம். எனவே, பிறந்த நேரத்தையும் தேதியையும் ஆண்டையும் கொண்டு ஜாதகத்தை கணித்துப் பார்த்துவிடுவது நல்லது. இனி இந்த ஜாதகத்தை சற்று ஆராய்வோம்.

சனி திசையில் தான் இந்த நோய் வந்தது என்பது உண்மை. அது விசாரித்த பொழுது தெரிந்தது. சனி திசை 2000ல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட அப்போதுதான் இந்த நோயும் ஆரம்பித்து படிப்படியாக பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. 2010ல் அதிதீவிரமாகியது. காரணம், அப்போது ஏழரை சனியும் நடந்து கொண்டிருந்தது. தசைக்கு ஆதரவாக கோசாரம் வந்து நிலையை சிக்கலாக்கியது. சாதாரண சிகிச்சை அவ்வப்போது எடுத்தார்கள். மேல் சிகிச்சை அப்பொழுது கவனிக்கவில்லை.

பத்து வருடங்களில் அது தீவிரமான பிறகுதான் தெரிய வந்தது. கடக லக்னத்திற்கு சனி எதிர்மறை பலன் செய்யும் கோள் என்பது அடிப் படையான விஷயம். ஏழு, எட்டாம் இடத்திற்கு ஆதிபத்தியம் கொண்டவராக சனி இருக்கிறார். இரண்டுமே மாரக ஸ்தான கணக்குக்கு வந்துவிடும். அடுத்து அவர் லக்னாதிபதிக்கு கடும் பகை என்பதால், கடக, சிம்ம லக்னகாரர்களுக்கு சனி உயர் பலன்களைத்  தருவதில்லை. இருதய ஸ்தானமான ஐந்தாம் இடம் இருதய  நோயையும் குறிக்கும் இடம் .

ஒவ்வொரு ஸ்தானமும் ஒவ்வொரு நோயைக் குறிப்பிடும்.அதில் 5ம் இடம் பலகீனமானாலோ, அந்த இடத்தில்,நோய் ஸ்தானாதிபதி அமர்ந்தாலோ இருதய நோய் வரலாம். இந்த ஜாதகத்தில், ஆறாம் இடத்திற்கான (நோய் ஸ்தானாதிபதி) குருபகவான் 5ல் அமர்ந்திருப்பது, உடம்பில் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளையும், இருதய நோய்க்கான சாத்தியக்கூறுகளையும், உடல் பருமன் தொடர்பான சிக்கல்களையும் காட்டும். சரி விஷயத்துக்கு வருவோம். ஜோதிடர் சொன்னது தவறா என்றால் நிச்சயம் தவறில்லை. ஜாதகத்தைப் பாருங்கள்.

கடக லக்னம். அஷ்டமாதி சனி மாரக ஸ்தானத்தில் அதாவது இரண்டாம் இடத்தில் பகைகொண்ட சூரியனோடு அமர்ந்திருக்கிறார். இங்கே இன்னொன்றும் கவனிக்க வேண்டும். சனி சூரியனோடு ஏழாம் இடத்திற்கு, எட்டாம் இடமான, இரண்டாம் இடத்தில் அமர்ந்து, கணவருக்கும் உடல் ஆரோக்கிய சிக்கலைத் தருகின்றார். ஆயினும் எட்டில் சனி இருப்பது ஒரு விதத்தில் கணவருக்கு ஆயுள் தீர்க்கத்தைத் தருகிறது. ஆயினும் போராட்டமான வாழ்வினைத் தருகிறது. கடக லக்னகாரர்களுக்கு புதன், சுக்கிரன், சனி மாரகர்கள். இவர்கள் மாரக

ஸ்தானம் ஆகிய 2,3, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் மாரகமோ அல்லது அதற்குச்  சமமான கண்டத்தையோ தருவார்கள் என்பது விதி.

விதிப்படி சனி மாரக ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் இருக்கிறார். அவர் திசையும் நடக்கிறது. இன்னொரு மாரக ஸ்தானமாகிய  மூன்றில் புதன் ஆட்சி பெற்று பலத்தோடு இருக்கிறார். மாரகாதிபதி பலம் பெறுவது நல்லதல்ல. இந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை குருபகவான் தான்.  6, 9 க்குரிய குரு கடக லக்னத்திற்கு யோகக்காரகன். அவர் திரிகோண ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இருந்து இன்னொரு சிறப்பான திரிகோண ஸ்தானமாகிய லக்னத்தைப்  பார்வையிடுவது, பிரச்சனைகளை மிக ஆபத்தான இடத்திற்குக்  கொண்டு செல்லாமல், சற்று தணிய வைக்கக்கூடிய விஷயம்.

இந்த ஒரு நேர்மறை விஷயம் கண்ணில் பட்டது. நான் உறவினரிடத்தில் சொன்னேன். “குரு பார்க்க கோடி புண்ணியம் என்று சும்மாவா சொல்லி இருக் கிறார்கள். எல்லா கதவுகளும் அடைத்த ஜாதகத்தில் கூட சுபக் கோளான குரு பார்த்து தோஷங்களை விலக்கி இருக்கிறார் என்பது அனுபவபூர்வமான உண்மை. எனவே குரு பார்த்துக்கொள்வார்” என்று சொன்னவுடன், அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

காலத்தை வீணடிக்கக் கூடாது

‘‘நீங்கள் இப்பொழுது ஜோதிட ஆலோசனை பெறுவதை விட, மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். இது அப்படி அது அப்படி என்று ஜோதிடம் சொல்லலாமே தவிர, மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது. எனவே, காலத்தை வீணாக்காமல், இன்னும் நோயைச் சிக்கலாக்கி கொள்ளாமல், உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஜோதிடம் என்பது ஒரு லேப் ரிப்போர்ட் போல. அது முடிவைத் தெரிவிக்காது. இருக்கும் நிலையைத்தான் தெரிவிக்கும். நோயின்  தீவிரத்திற்கு ஏற்ப வைத்திய வழிமுறைகள் செய்து வெளிவர வேண்டும். இதிலும் தெய்வ பக்தி தான் பிராயச்சித்தம். நம்பிக்கையை தளர விட வேண்டாம்’’ என்று சொல்லி அனுப்பினேன்.

அது மட்டும் இல்லை. நெருங்கிய உறவு என்பதால், வேறு சில நண்பர்களைப் பிடித்து, இருதய சிறப்பு மருத்துவரைப் பார்த்தோம். அவர் உடனே சென்னையில் ஒரு மருத்துவமனையைப் பரிந்துரை செய்து, உடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். இப்பொழுது வேறு ஒரு நண்பரின் மூலம் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை செய்தோம். பரிசோதித்த மருத்துவர் மிகத் திறமையானவர்.

அவர் நிதானமாகப் பரிசீலித்து, ‘‘இப்பொழுது இவருக்கு இருதய அறுவை சிகிச்சை பலன் தராது. அது வேறு சில பிரச்னைகளை உண்டாக்கும். எனவே, இப்பொழுது சில மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துவோம். சோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள். அப்படியே உடம்பை பராமரித்தால் ஓரளவு சிக்கலில்லாமல் இருந்துவிட முடியும். சிரமமான வேலை செய்வதோ, அதிகமாக வேலை செய்வதோ கூடாது.’’

சில மருந்துகளை அவர் பரிந்துரைத்தார். மூன்று மாதத்திற்கு ஒரு தரம் அவ்வப்பொழுது மருந்துகளை  மாற்றுவார். இடையில் பத்து ஆண்டுகளில் மரணத்திற்கு இணையான கடும் சூழல்கள் இரண்டு மூன்று முறை ஏற்பட்டது. இருந்தாலும் கூட அது மாரகத்தைத் தரவில்லை. மரணத்திற்குச் சமமான கண்டங்களைத் தந்தது. அதிலெல்லாம் தப்பித்துக் கொண்டு, இன்றைய தேதி வரை நன்றாகவே இருக்கிறார்.  அதாவது சனி திசை 2019 ஆம் ஆண்டு போய்விட்டது. அடுத்து புதன் திசை. அதிலேயும் சுயபுத்தி போய்விட்டது. இனி புதன் திசை எப்படி என்பதை வாசகர்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

இதில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து.

1. மாரகம் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரத் தேவையில்லை.

2. அதுகுறித்து எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம்.

3. இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும்பொழுது ஜாதகத்திற்கு அதீத முக்கியத்துவம் தந்து, நம்பிக்கை இழந்து விட வேண்டாம் .

4. தெய்வத்தை நம்புங்கள். கண்ணுக்குத்  தெரியாத தெய்வமும், கண்ணுக்குத் தெரிகின்ற வைத்திய சாஸ்திரமும் இணைகின்ற பொழுது அனேகமாக தப்பித்து விடலாம் . அதுதானே நமக்கு வேண்டும்.

(இதம் சொல்வோம்!)

Related Stories: