×

வயலும் வாழ்வும் சிறக்க என்ன தீர்வு?

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 3

சேத்தியாதோப்புக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. காவிரித் தண்ணீர் நன்றாக வரும். கீழணைத் தண்ணீர் வீராணம் வந்து, அதில் ஒரு பகுதி வெள்ளாறு குறுக்கே பாய்ந்து, வாலாஜா ஏரிக்கு ஓடி விழுந்து, கொளக்குடி ஏரி,கொத்தவாச்சேரி ஏரி என்று சின்ன சின்ன ஏரிகளை எல்லாம் பல கிராமங்களின் ஊடே புகுந்து  நிரப்பி, கடலூருக்கு அருகில் பெருமாள் ஏரிக்குப் போய் கடலில் கலக்கும். அவ்வளவு அற்புதமான பாசன  ஏற்பாட்டை அக்காலத்தில் பெரியவர்கள் செய்திருந்தனர். வீராணம் எரிக் கரையில் ரெண்டு வேலி  நிலம் என்றால், அவர் பெரிய பண்ணையார் தான். அத்தனை நிலங்களும் நன்றாக விளையும்.வெற்றிலைக் கொடிக்கு அவ்வளவு மதிப்பு.
நெல்  இரண்டு போகம் குறையாது. மூன்று போகமும் நடந்த காலம் உண்டு.

ஆனால் அது ஒரு காலம். இப்பொழுது ஒரு போகத்துக்கு விவசாயம் தள்ளாடுகிறது. கிரக நிலையா? அல்லது கிரகங்களின் போக்கை அறியாத மனிதர்களின் அறியாமையா? கிரகங்கள் என்பது வேறு ஒன்றுமில்லை.இயற்கை சூழலை பிரதிபலிப்பவைதானே கிரகங்கள். ஜோதிட அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். விதி, மதி  என்று இரண்டு விஷயங்கள்.விழுந்த சீட்டு விதி.அதை வைத்து விளையாடுவது மதி. அற்புதமான சீட்டு விழுந்து ஆட்டத்தை விட்டுத் தோற்றவர்கள் உண்டு. கவிழ்த்து விட்டு எழுந்து போகலாம் என்ற சீட்டை ஆடி ஜெயித்தவர்கள் உண்டு. விழுந்த சீட்டை “இப்படி இப்படி இருக்கிறது, இதை தைரியமாக இப்படி இப்படி விளையாடினால் ஜெயிக்கலாம்” என்று வழி காட்டுவதுதான் ஜோதிடம்.

இதற்கு மிக முக்கியமானது ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் நேர்மறை சிந்தனைகளையும் தைரியத்தையும் உருவாக்குவது. தைரியத்தை உருவாக்குவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; அதைரியத்தைத் துடைப்பது அவசியம். அழுது கொண்டே வந்தவன் சிரித்துக் கொண்டே போக வேண்டும். “நீ பலகீனமானவன் என்று சொல்வதை விட இந்த பலம் உன்னிடம் இருக்கிறது என்று சொல்வது நேர்மறை ஜோதிடம்”.ஒரு காலத்தில் ஜோதிடம் என்பது அனேகமாக  குடும்பத்தில் ஒருவருக்குத் தெரிந்திருந்தது. “வாக்கிலே சனி இருக்கிறார். நாக்கு புரட்டிப் புரட்டிப் பேசி மாட்ட வைத்து விடும் என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்து பேச்சை கட்டுப்படுத்தி பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.
விதி என்பது நாக்கில் சனி இருப்பதைக்  காட்டுகிறது.

அதை எப்படிக்  கட்டுப்படுத்துவது என்று அறிவுப்பூர்வமாக எச்சரிக்கிறது மதி. இது ரெண்டுமே ஒரு மனிதர்களுக்கு இறைக்  கொடையாக வழங்கப்பட்டது தான். உலகறிந்த பெரும் பணக்காரர் அவர். அவர் ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. ஆனால் அத்தனைத்  தொழில்களையும் வெற்றிகரமாக  எப்படி அவர் ஜாதகம் செய்கிறது என்கின்ற வியப்பு வரும். ஒருவர் ஜாதகத்தில் அத்தனை கிரகமும் பலமாக  இருக்குமா? இல்லை. பலகீனமான கிரகங்களை வெற்றிகரமான கிரகங்களாக மாற்றவேண்டுமா? இவர்களுக்குத் தெரியாத அறிவையும் ஆற்றலையும் அது உள்ளவர் களிடமிருந்து இவர்கள் பெறுகிறார்கள் என்பது  ஜாதகர்  வெற்றி அடையும் வழி. விதி அதனுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கும். மதியின் வேலை அதை முறையாகத் தடுத்து ஆட வேண்டியது.

அதுதான் மனிதர்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய கடமை. சேத்தியாத்தோப்பு அருகே ஒரு கிராமத்தைப் பற்றிச் சொன்னேன் அல்லவா.அங்கே ஒரு நண்பர். அவர் தன்னுடைய தாத்தா காலத்திலிருந்து விவசாயம் செய்து வருபவர். ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்தார். ஒருமுறை சந்தித்தபோது சோகமே வடிவாக, “அசோகவனத்து சீதை”  போல் உட்கார்ந்திருந்தார். அந்த வருடம் நல்ல மழை பெய்து வெள்ளம் வடியவில்லை. பயிர்கள் மூழ்கி ஏராளமான நஷ்டம். அதற்கு முதல் வருடம் பெரிய வறட்சி. தண்ணீர் இல்லை. மழையே பெய்யவில்லை.  விளைந்த பயிர்கள் சோம்பிப் போய் இருந்ததால் விலை போகவில்லை. மகசூலும் பாதிக்குப் பாதியாகக்  குறைந்து விட்டது. இப்படி அடுத்தடுத்த இரண்டு வருடங்களில் பாதிக்கப்பட்டவர் சோகமாகத் தானே உட்கார்ந்து இருப்பார்.

அவர் ஜாதகம் லேசாக நினைவுக்கு வந்தது . விருச்சிக லக்கினம். விருச்சிக ராசி. லக்னத்தில் செவ்வாய் ஆட்சி. கூடவே சந்திரன்.சந்திரனும் செவ்வாயும் லக்ன கேந்திரத்தில் இணைகின்ற இணைவு ஒரு விவசாயிக்கு உரியது. அதிலும் சந்திரன் பாக்கியாதிபதி அல்லவா. சந்திரன் விருச்சிகத்தில் நீச்ச பங்கம் பெறுகின்ற அமைப்பு அபாரமானது. ராசி விருச்சிகம். அங்கே நில காரகன் செவ்வாய். ஆட்சி. கூடவே நீர் காரகனும் பயிர் வளர்ச்சிக்கு உதவும் அமுதத் தாரைகளுக்கு  அதிபதியான சந்திரன். மற்ற கிரகங்களைத்  தள்ளுங்கள், 1க்கும் 9க்கும்  உடைய  கிரகங்கள் வெற்றிகரமாக லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பது ஒரு இயல்பான விவசாயியின் அடிப்படையான கிரக அமைப்பு அல்லவா.
யோகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது.

தசா  புக்தியின் வேகமும் கோசாரத்தின் அமைப்பும் அவ்வப்போது தடைகளையும் தளர்ச்சிகளையும்  உருவாக்கும். அப்போது  அவரவர் சுதாரித்துக் கொண்டு அதிலிருந்து மீள வேண்டுமே தவிர ஓடக்கூடாது. மஹாபாரதப் போர். படைகள் திரண்டு அணி வகுத்து நிற்கின்றன. சண்டைக்கு வந்து விட்டு “நிலவரம் சரியில்லை” என்று சோகத்தோடு உட்கார்ந்து விடுகின்றான் அர்ஜுனன்.அவனைத் தட்டிக் கொடுத்து, “ஆமாம் நீ சொல்வது சரிதான்...வா  ஓடி விடுவோம்” என்று கண்ணன் விலகச்  சொல்லவில்லை. “அடேய் அர்ஜுனா, உன்னை நம்பி இத்தனை பேர் அணிவகுத்து நிற்கிறார்கள்.இப்போது வந்து ஒப்பாரி வைக்கிறாய். நீ செத்தாலும் சரி, உன்னால் மற்றவர்கள் செத்தாலும் சரி, இது கர்மபூமி, யுத்தம் செய்தே ஆக வேண்டும்.”

“நீ இறந்தாலும் உனக்கு மோக்ஷம்  கிடைக்கும். உன்னால் போரில் மற்றவர்கள் இறந்து போனாலும் மோட்ஷம்  கிடைக்கும்.யுத்தத்தை செய். எடு வில்லை தொடு அம்பை” என்று உற்சாகப்படுத்தி போர் புரிய வைக்கிறான். அர்ஜுனனின் ஜாதகம்  குறித்து வியாச பாரதத்தில் இல்லை. ஆனால்  அர்ஜுனனின் மனம் தெரிந்தது.மனம் தெரிந்ததால் மனம் தெளிந்தது. இங்கே கண்ணன்தான் ஜோதிடர். மீண்டும் இங்கே விவசாய நண்பருக்கு வருவோம்.  “விவசாயிக்கு இனி வாழ்வில்லை.. பேசாமல் விற்று விட்டுப் போய்விட வேண்டியதுதான்”.

“போய் என்ன செய்வீர்கள்?”
“வேறு ஏதாவது வேலை பார்க்க வேண்டியதுதான்”.
“விவசாயத்தின் ஒரு வேலையை நன்கு நுட்பமாக தெரிந்த நீங்கள் இதனை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போவதால் என்ன ஆகிவிடப் போகிறது?” என்றேன்.
ஒரு விவசாயி விவசாயத்தைத்  தூக்கிப் போட்டு விட்டால், இதற்கென்று வேறு ஒருவர்  வந்தா  விவசாயத்தைப் பார்ப்பார்? நான் ஆறுதலாகச் சொன்னேன்.
“உங்களுக்கு இப்போது நேரம் சரியில்லை”என்று சொன்னேன்.
“எப்படிச்  சொல்கிறீர்கள் ?”
“அதுதான் கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்களே. நேரம் சரியிருப்பவன் சுறு சுறுப்போடு இருப்பான். இடிந்து போய் உட்கார மாட்டான்”.அவர் சிரித்து விட்டார்.

கவலையிலிருந்து முதல் விடுதலை.

இனி மனம் முறையாகச்  சிந்திக்கும். கழுத்தைப்  பிடித்து அழுத்திய ஒரு கிரகத்தை மெல்ல விலக்கியாயிற்று. அடுத்துக்  கேட்டேன்.
“நீங்கள் நிலத்தை விற்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டீர்களே?”
“ஏன், நான் சொல்வதில் என்ன தவறு?”
“தவறு இல்லை. இரண்டு வருடங்களாக விளைச்சல் இல்லை. உங்களுடைய எண்ணம் நியாயமானதுதான். ஆனால், உங்கள் தாத்தா காலத்திலும், உங்கள் அப்பா காலத்திலும், இதைப்போல சிரமங்கள் இருந்ததா, இல்லையா?”
அவர் அகன்று ஒருவித மலர்ச்சியோடு சொன்னார்.
“ஆமாம்... ஆமாம் இதை விடக் கூடுதலாகவே வந்திருக்கிறது.”

“அப்பொழுது உங்களைப் போல அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கவில்லையே? நிலத்தையும் இழக்கவில்லையே. இன்னும் சொல்லப் போனால், நான்கு ஏக்கராக இருந்த நிலத்தை, உங்கள் தந்தையார் ஐந்து ஏக்கராக வைத்துவிட்டு அல்லவா போயிருக்கிறார்... எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் அவர்கள் விவசாயத்தை விட்டு போகவில்லையே... அது மட்டுமில்லை. உங்கள் நிலத்துக்குப் பக்கத்தில் முக்கால் ஏக்கர் நிலம் வைத்து பயிர் செய்கிறாரே ...அவருக்கு அந்த எண்ணம் வந்ததா?அவருக்கும் மழை தானே.. நஷ்டம் தானே...?” என்றேன். அவர் “அதெல்லாம் சரி, இப்பொழுது என்ன செய்யலாம்?” என்று கேட்டார். அவருக்கு கோசாரப்படி ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தது. அதனால் ஏறுக்கு மாறாக எண்ணங்களும் எதிர்மறை சிந்தனைகளும்  வலுவடைந்து  இருக்கின்றன. நான் சொன்னேன். “இப்பொழுது உங்கள் மனது தான் ஜோதிடம். அது சொல்வதைக் கேளுங்கள். இதோ பாருங்கள் இந்த நிலையும் கடந்து போகும். இது தற்காலிக மானதுதான்.

நடைமுறைக்கு ஏற்ற சில யோசனைகளை நீங்கள் பரிசீலிக்கலாம்.

இப்பொழுது உங்களுக்கு கொஞ்சம் கடன் இருக்கிறது. காரணம் லக்னா திபதி ஆறாம் ஆதிக்கம். வலு பெற்று இருக்கிறார். லக்னாதிபதி லக்ன கேந்திரத்தில் அதைவிட பலம் அடைந்திருப்பதால் எப்படியும் வாங்கிய கடனை அடைத்துவிடச் செய்வார். இப்போது ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நல்ல விலைக்கு வந்தால் விற்று விடுங்கள். பாதகமில்லை. ஆனால், எல்லா நிலங்களையும் தர வேண்டாம். அதில் ஒரு பகுதி கடனை அடைத்துவிட்டு, ஒரு பகுதியை வைத்து சிறிய அளவில் வியாபாரம் செய்யுங்கள். ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும்  போட்டு வைப்பதை விட, இரண்டு கூடைகளில் வைப்பது சிறந்தது. ஏதாவது ஒன்று கைகொடுக்கும். இதற்குப் பிறகு நிலத்தில் முன்னிலும் கவனமாகப் பயிர்  செய்யுங்கள். தண்ணீருக்கு மற்ற நிலக்காரரோடு  பேசி மோட்டார் இணைப்பு அல்லது பம்பு இவற்றை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

அதை விட முக்கியம்,

1. விதைக்கும் பொழுதும், நாற்று நடும் போதும், வேறு முக்கிய விவசாய வேலை ஆரம்பிக்கும்  போதும் உங்களுடைய நட்சத்திரத்திற்கு தாரா பலம் உள்ள நாளாகப் பார்த்துச் செய்யுங்கள்.
2. உங்கள் ஜாதகத்திற்குத்  தோஷம் இல்லாத நாளாகப்  பார்த்துச்  செய்யுங்கள்.‘‘நாள்  பார்த்து நடு; கோள் பார்த்து இடு” என்பது சாஸ்திரம். இப்படி சில விசயங்களை அவருக்குச்  சொல்ல உற்சாகமாகி விட்டார். அவருக்கு மனதில் ஒரு தெளிவு பிறந்தது. எப்படியும் தப்பித்து விடலாம் என்று நினைப்பு பிறந்தது. உற்சாகத்தோடு தலையாட்டினார். சில வருடங்கள் கழித்து சந்தித்தேன். அவர் முன்னிலும் தீவிரமாக விவசாயத்தைச்  செய்து கொண்டிருந்தார்.  ஏற்கனவே விற்ற நிலத்தோடு இன்னும்  3 ஏக்கர் வாங்கியிருந்தார். ஒரு ட்ராக்ட்டர் வாங்கியிருந்தார். உரக்கடை வைத்திருந்தார். முந்திரி தோட்டம் ஒன்றும் வாங்கியிருந்தார்.

நம் வாசகர்களுக்குச் சாரமாக சொல்வது இது தான்

1. எதற்கும் அச்சப்படாதீர்கள்.
2. நன்கு தெரிந்த வேலையை விட்டு எளிதாக விலகாதீர்கள். அதை காலத்திற்கு ஏற்றவாறு செய்யமுடியுமா என்று பாருங்கள்.
3. எல்லாவற்றிலும் மாற்று யோசனையைச்   செய்யுங்கள். நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருங்கள்.
4.நாம் நேர்மறை எண்ணங்களோடு உற்சாகமாக இருந்தால், கிரகங்கள் நிச்சயமாக தங்கள் தீமையைக்  குறைத்துக் கொள்ளும்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?