×

விவசாயத்திற்குக்கூட ஜோதிடம் உண்டா?

கேள்வி: விவசாயத்திற்கு கூட ஜோதிடம் உண்டா?

பதில்:
எல்லாவற்றுக்கும் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தானியத்தைக்  குறிகாட்டும்.

கேள்வி: அது நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா?

பதில்: ஏன் பின்பற்றப்படவில்லை ? வாழ்வியலோடு இணைந்ததல்லவா விவசாயம். காலம் பார்த்து தானே பயிர் செய்கின்றோம். காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட்டால்தான் நன்கு விளைச் சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை,‘‘பருவத்தே பயிர் செய்’’, ‘‘ஆடிப்பட்டம் தேடி விதை’’ என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.

கேள்வி: விவசாயத்தில் தானியங்களை தீர்மானிப்பது எது?

பதில்: நவக்கிரகங்கள், 12 ராசிகள், ஐந்து பூதங்கள், தீர்மானிக்கின்றன. நம்முடைய உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது. நாம்  வசிக்கும் பூமி பஞ்சபூதங்களால் ஆனது. ஆகாயம்  விட்டுவிட்டால் மீதி உள்ள நான்கும் 12 ராசிகளில் உண்டு. அவை அனைத்தும் வனத்தில் தானே இருக்கின்றன. நெருப்பு, நீர், காற்று, பூமி  இப்படி ஒவ்வொன்றுக்கும் 3 ராசிகளாக 12 ராசிகளைப் பிரித்திருக்கிறார்கள். இந்த ராசிகளின் பலத்தோடு சேர்த்து விவசாய முடிவுகளை தீர்மானம் செய்யும் பொழுது நல்ல பலனைச் செய்யும். இயல்பாகவே அப்படித்தான் நடந்து வருகிறது. பயிர் வளர்வதற்கு வெளிச்சம் வேண்டும். இருட்டறையில் வளராது. உஷ்ணம் வேண்டும். அது சூரியன் தருகின்றான். நிலவின் ஒளி வேண்டும். மழை வேண்டும். விதைகள் மகரந்தச்சேர்க்கை செய்வதற்கு காற்று வேண்டும். ஆனால் இதில் மிக முக்கியமானது பூமி.

பூமியின் அடிப்படையில் தான் பாக்கி விஷயங்களெல்லாம் செயல்பட வேண்டும். பூமிக்கு காரகன் செவ்வாய். ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று விட்டால் அவர் நிச்சயமாக விவசாயத்தில் வெற்றி பெறுவார். செவ்வாய் நல்ல பலத்தில் தன  லாபதிகளோடு சம்பந்தப்பட்டு இருந்தால் அவருக்கு விவசாயத்தால் நல்ல பலன் கட்டாயம் கிடைக்கும். யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு’’என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

கேள்வி: வேறு எந்த கிரகம் பலம் பெற்றிருக்க வேண்டும்?

பதில்: பயிர்கள் வளர்வதற்கு சந்திர ஒளி அவசியம். சந்திரனின் அமுதம் தான் பயிர்களுக்கு உயிர் அளிக்கின்றன. ஜோதிட அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒரு தானியம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது ஜோதிட மருத்துவ சாஸ்திரத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

கேள்வி: எந்தெந்த உணவுகள் எந்தெந்த கிரகத்துக்கு சொல்லலாம்?

பதில்: சூரியன்: சோளம், சிவப்பு அரிசி, கோதுமை போன்றவை.

சந்திரன்: ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். நீர், நெல், பச்சரிசி, பால், தயிர் போன்ற  உணவுகள் சந்திர ஆதிக்கம் பெற்றவை.

செவ்வாய்: ஆட்டு கறி, ஈரல், பீட்ருட், கேரட், மல்லிச்செடி, புதினா செடி, துளசி, அனைத்து கீரை வகைகள், முக்கியமாக அகத்திக் கீரை, குதிரை வாலி தானியம், மாதுளை,பேரீச்சை, செவ்வாழை, பழங் களும் செவ்வாய் பலத்தை கூட்டி விடும்.

புதன்: பச்சை நிற காய்கறிகள், பச்சை பயறு,சுண்டல் வகைகள், கற்றாழை, வெங்காயம், போன்ற உணவுகள்.

குரு: மஞ்சள் நிற வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி பழம், உலர்ந்த திராட்சை, கொண்டைக் கடலை, இனிப்பு வகைகள், பழங்கள்.

சுக்கிரன்: சூரிய காந்தி விதைகள், பசும்பால், தேங்காய் பால் பாதம் பருப்பு, சிவப்பு பூசணி விதைகள், சுரைக்காய் விதைகள், நிலக்கடலை.

சனி: கிழங்கு வகைகள், எள்ளு, எள்ளுருண்டை, கருப்பட்டி, பனைமர பதநீர், நொங்கு,

ராகு : உளுந்து போன்ற கரு நிற பயறுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள்.

கேது : கொள்ளு   மற்றும் மருந்து ரீதியான தானியங்கள்.

கேள்வி: கிரகங்களுக்கு உரிய மரங்கள் இருக்கிறதா?

பதில்: அதுவும் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன் ஆக் மரம், அடர்ந்த மரங்கள், கோதுமை பயிர்கள், பில்வா மரம், ருத்ராட்க்ஷம்.சந்திரன் வாழை மரம், மோளக் குச்சி, கரும்பு, சந்தன மரம், நெல் பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ மூலிகைகள். செவ்வாய் (குஜன்) வேப்ப மரம், முள் மரம், பாரசீக லீலாக், அலரி. புதன்   துளசி, கொடிகள், பச்சை இலைகள், நெல்லி.
வியாழன்  தென்னை மரம், வெற்றிலைகள், இனிப்பு, பழ மரங்கள், அரசமரம், ஆப்பிள் மரம், மலர் செடிகள். சுக்கிரன்  மா மரங்கள், எலுமிச்சை மரங்கள், புளிப்பு சுவை பழ மரங்கள், ஆரஞ்சு, திராட்சை, சிறு நெல்லிக்காய், புளி, நெல்லி, பைன் ஆப்பிள். சனி  மூங்கில், பனை மரங்கள், கசப்பான பழ மரங்கள், எண்ணெய்த் தாவரங்கள், சூரியகாந்தி, எள், கடுகு. ராகு  கருவேலம், மர ஆப்பிள், சர்பகாந்தி. கேது  ஆலமரம், அத்தி மரம், அசோக மரம், கற்றாழை, கோரைப்புல்.

கேள்வி: விவசாயத்திற்கு 12 ராசிகளில் எந்தெந்த ராசிகள் பலமடைய வேண்டும்?

பதில்: மிக முக்கியமாக மண் ராசிகள் நீர் ராசிகள் பலமடைய வேண்டும்.

கேள்வி: அப்படியானால் மற்ற ராசிகள் தேவை இல்லையா?

பதில்: கட்டாயம் தேவை.

கேள்வி: ஆன்மிகத்தோடு வாழ்வியலும் விவசாயத்திற்கு தொடர்பு உண்டா?

பதில்: மனிதனின் வாழ்வியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பிணைந்தது தான்..ஜோதிடத்தின் அடிப்படை விவசாயத்தில் இருந்துதான் தொடங்கியது. காரணம் மனிதர்களுக்கு உணவு முக்கியம். இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. அதனால்தான் திருமண வைபவங்களை நடத்துகின்ற போது “பாலிகை தெளித்தல்” சடங்கை வைத்திருக்கிறார்கள். அதேபோல கோயில் விழாக்களிலும் “முளைப்பாரி எடுத்தல்” சடங்கை வைத்திருக்கிறார்கள்.

மரங்கள் இருந்தால் மழை பெறலாம் என்று மரங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். சமய மரபில் மரங்களை தெய்வமாக வழிபடுகிறோம். கோயில்களிலே அதன் அங்கமாகவே மரங்கள் (தல விருட்சம்) இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

கேள்வி: அப்படியானால் விவசாயமும் ஒரு வழிபாடு தானா? நிச்சயமாக...ஒரு விவசாயி தான் இந்த உலகத்துக்கு உணவு தருகிறான் என்பதால், தெய்வத்துக்குச் சமமானவன். அவன்  செய்கின்ற விவசாயம் ஒரு கோயிலுக்குச்  சமமானது. ஒரு விவசாயின் ஏர் பின்னால் தான் இந்த உலகமே போய்க்கொண்டு இருக்கிறது என்பார் வள்ளுவர். கிரக தோஷங்களைப் பற்றியும், கிரகங்களுக்கு பிரீதி செய்வது. அவசியம்  என்றும் சொல்லுகின்றோம். அதில் மிக முக்கியமான பிரீதி ஒரு மரம் வைப்பது. அந்த மரங்களுக்கு நீர் ஊற்றுவது.  

6 கோடி பேர் அவரவர்கள் நட்சத்திரத்திற்கு பிறந்தநாளன்று ஒரு மரம் வைத்து பராமரித்தால் எத்தனை கோடி மரங்கள் வளர்ந்து விடும். இங்கே விவசாயம், ஆன்மிகம், ஜோதிடம் இணைந்து விடுகிறதே.

கேள்வி: நெருப்பு, மண், காற்று, நீர் ராசிகள் என்னென்ன?

பதில்: 1. மேஷம், சிம்மம், தனுசு முதலிய மூன்று ராசிகள் நெருப்பு ராசிகள்.

2. ரிஷபம், கன்னி, மகரம் முதலிய மூன்று ராசிகள் மண் ராசிகள்.
3. மிதுனம், துலாம், கும்பம், மூன்றும் காற்று ராசிகள்
4. கடகம், விருச்சிகம், மீனம் மூன்றும் நீர் ராசிகள்.

Tags :
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்