×

மிதுன ராசி முதலாளி

என்னோட ராசி நல்ல ராசி

வார்த்தை ஜாலமும் செயல் திறனும் மிக்கவர் மிதுன ராசி புதன் ஆட்சி செலுத்தும் ராசி. மே மாதம் பிற்பாதியில் இருந்து ஜூன் முதல் பாதி வரை பிறந்தவர்களும் இந்த ராசியில் அடங்குவர். சில மிதுன லக்கினகாரர்களுக்கும் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் இந்த குணாதிசயங்கள் இருக்கும். ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் சிலருக்கு இந்த குணங்கள் அமைத்திருப்பதைக் காணலாம்.

இரட்டை மனிதர்

மிதுன ராசி இரட்டை ராசி எனப்படுவதால் இவர்களுக்கு ஆணின் குணமும் பெண்ணின் குணமும் கலந்து இருக்கும். கோபமும் நளினமும் கொண்டவர்கள். விருப்பம் இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் வெறுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதில்லை. ஆனால் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகத் தான் உரைப்பார்கள். இவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதால் இவர்கள் நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அர்த்தமாகாது. காது கொடுத்து கவனிக்கின்றனர். அவ்வளவு தான். ஆனால் காதில் விழுந்த ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்வதில் நடவடிக்கை என்றாவது திருப்பி கிடைக்கும். மிதுன ராசிக்காரரிடம் கவனமாக பேச வேண்டும். யானை படுத்தால் குதிரை மட்டம் என்பது போல இவர்கள் இளைத்தாலும் சுயமரியாதையுடன் இருப்பார்கள். கூழை  கும்பிடு போட்டு காரியம் சாதிப்பவர்கள் கிடையாது. அதே சமயம் தனது கௌரவம் பாதிக்கப்படாத வகையில் விட்டுக்கொடுத்து போவார்கள் என்பது உண்மை.

பணியும் பாராட்டும்

பணியிடம் மிதுன ராசி முதலாளி கிடைப்பது பெரும் புண்ணியம். இவர் அந்தக் காலத்து முதலாளி போல முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு விறைப்பாக நடக்க மாட்டார். எல்லோருக்கும் ஹாய், வணக்கம், நலமா என்று வாழ்த்தி விசாரிப்பார். நட்புணர்வுடன் பழகுவார். பணியாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பார். ஒரு ஆர்டர் கிடைத்தால் அல்லது ஒரு ப்ராஜக்ட் முடித்தால் அழைத்து மது விருந்து கூட நடத்துவார். அப்படியே பணியாளரின் உள் மனதின் ரகசியங்களை பேச வைத்து தெரிந்துகொள்வார். நல்ல யோசனைகளை சொல்லும்போது அந்தப் பணியாளருக்கு உடனே பணப்பரிசு அளித்து அனைவரது முன்னிலையிலும் பாராட்டுவார். தன்னைப் போன்ற முதலாளிகள் இருக்கும் இடத்தில் அந்த யோசனை தன்னுடையது என்று கூசாமல் பொய் சொல்லி பாராட்டுக்களைப் பெறுவார்.
 
தப்பும் தவறும்

அவர்களுக்குள் ஒரு தேவனும் உண்டு ஒரு அரக்கனும் உண்டு. பெரும்பாலும் தர்மத்துக்கு விரோதமான செயல்களில் மிதுன ராசிக்காரர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் புத்திசாலிகள் என்பதால் வழக்கை சிவில் வழக்கா வைத்து அபராதம் கட்டி தப்பித்துவிடுவர். கிரிமினல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணுவதில்லை. வெற்றிக்கும் லாபத்துக்கும் நற்பெயருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

கூட்டாளிகள்

மிதுன ராசிக்காரர் தமது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்குவார். நண்பர்கள் தமது கருத்துக்கு ஒத்து வரவில்லை என்றால் அவர்களை கழட்டி விட்டு தானே தனியாக அத்தொழிலை நடத்துவார். அல்லது இவர் பிரிந்து சென்று விடுவார். இவருக்கு நல்ல நண்பர்கள் பங்குதாரர்கள் கிடைக்கும். இவர் வாய் பேச்சுக்கு மகுடிக்கு ஆடும் பாம்பு போல பங்குதாரர் கட்டுப்படுவர். நல்ல லாபம் காட்டுவார். யாரையும் ஏமாற்ற மாட்டார். பாவ காரியங்கள் செய்து மாட்டிகொண்டால் அசிங்கமே என்று அஞ்சுவார். மாட்டிக்கொள்ள மாட்டோம் என்றால் எது வேண்டும் என்றாலும் செய்வார். நற்பெயர் வாங்குவதில் கருத்தாக இருப்பார். பொதுவாக இவர் துரோகம் ஏமாற்று வேலைகள் செய்பவர் கிடையாது.

ஆனால் இவ்வளவு பாடுபட்டும் நாம் நஷ்டப்படப் போகிறோம் என்று தெரிந்தால் தன நலனுக்காக எதைச் செய்யவும் அஞ்ச மாட்டார். தன அறிவும் தொழில் நுட்பமும் உழைப்பும் யோசனையும் வீணாவதை விரும்ப மாட்டார். ‘என்ன செய்ய எல்லாம் என் தலை எழுத்து’ என்று விதியை நொந்து கொண்டு தோல்வியை ஏற்றுக்கொள்பவர் இவர் கிடையாது. ஆயிரம் யானை பலம் கொண்டு தாக்குவார். அது யாராக இருந்தாலும் நண்பனோ எதிரியோ. தன உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். இவரை அனுசரித்து செல்லும் நண்பர்கள் பலன் பெறலாம். அவர் களுக்காக  இவர் சிந்திப்பார் செயல்படுவார் லாபம் சம்பாதித்துக் கொடுப்பார்.
 
பணியாளர்களுடனான தொடர்பு

மிதுன ராசி முதலாளி பணியாளர்களை தம் குடும்பத்தினர் போலவும் நண்பர்கள் போலவும் நடத்துவார்.  இவரிடம் பணி செய்பவர் பல உத்திகளையும் டெக்னிக்குகளையும் தந்திரங்களையும் கற்றுக்கொள்வர். தான் சொந்த தொழில் ஆரம்பிக்க போவதாக பணியாளர் சொன்னால் வாழ்த்தி அனுப்புவார். பொறாமைப்பட மாட்டார். இவர் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பிசினஸ் செய்வதால் இவர் தொழிலாளிகளும் பல்வேறு திறமைகளைக் கொண்டவராக இருக்க வேண்டுமென்று விரும்புவார். அப்படிப்பட்ட ஆட்களையே தேர்வு செய்து பணியமர்த்துவார்.

இவரைப் போல நாமும் வர வேண்டுமென்ற எண்ணம் வரும் வகையில் மற்றவர்களுக்கு இவர் முன் மாதிரியாகத் திகழ்வார். இவரோடு இருக்கும் பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பணியாளருக்கான நன்மைகள் திட்டங்கள் எங்கிருந்தாலும் இவர் அவற்றை பணியாளருக்கு தெரியச் செய்து அந்த நன்மைகளைப் பெற செய்வார். இவர் ஒரு தனி ஆள் அல்ல. இவருக்குள் இவர் முதலாளி என்றாலும் உள்ளே ஒரு தொழிலாளியும் உறங்கிக்கொண்டிருப்பான். அவ்வப்போது அந்தத் தொழிலாளி விழித்து பணிக் களத்தில் இறங்கி கடுமையான பணிகளை அசாத்தியமாக செய்வார்.

இரவு முழுக்க விழித்திருந்து ஒரே இரவில் அரிய பெரிய பணிகளை முடித்து பணியாளர்களுக்கு உத்வேகம் ஊட்டுவார். கடுமையான உழைப்பாளி. அதே சமயம் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவார் அதனால் பணியாளர்களுடன் சரி சமமாக அமர்ந்து விருந்துகளில் சாப்பிடுவார். குழு விவாதங்களில் அவர்களை பேச விட்டு கவனிப்பார். அடிக்கடி பணியாளர்களுடன் இயற்கை கொஞ்சும் இடங்களுக்கு சென்று விடுமுறை நாட்களைக் கொண்டாடுவார்.
 
பணியிடம்

மிதுன ராசி முதலாளியின் பணியிடம் சுத்தமாக அழகாக காணப்படும். இவர் தன அறிவை நம்புகிறவர். ஆனாலும் தெய்வ பக்தி மிகுந்தவர் போல சாமி படங்கள் எல்லாம் வைத்து பத்தி சூடம் காட்டி பூ மாலைகள் எல்லாம் அணிவிப்பார். இவரது அறை பக்தி மணம் கமழும் அறையாக தோன்றும். மூட நம்பிக்கைகள் அறவே கிடையாது. ஆனால் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளவர். பணியாட்களிலும் பணியிடத்திலும் அதிர்ஷ்டம் பார்ப்பார். மிதுன ராசி முதலாளி ஒரே பணியிடத்தில் மூன்று வேலைகள் செய்வார். அவர் போனில் பேசிக்கொண்டே எதிர் சுவரில் இருக்கும் டிவியும் பார்ப்பார். கொண்டு வரும் கோப்புகளில் என்ன ஏது என்று கேட்டு கையெழுத்தும் இடுவார். அப்படியே கண்ணாடி வழியே எதிரே இருக்கும் பணியாளர்கள் வேலை செய்கின்றனரா யாரும் யாரையும் சைட் அடிக்கிறாரா என்பதையும் லைட்டாக கவனித்து மனதில் வைத்துக்கொள்வார். கேட்க மாட்டார். பணியாட்களின் முழுத் திறமையையும் முழு சக்தியையும் பயன்படுத்துவதில் கில்லாடி. வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். எதையும் யாரையும் முழுமையாகப் பயன்படுத்துவார். ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார் பாடிக் கறப்பதை பாடிக் கறப்பார். அவருக்கு outcome அல்லது result தான் முக்கியம்.  ஆட்கள் அல்ல. வழிமுறைகள் அல்ல.

(தொடரும்)

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags :
× RELATED முத்துக்கள் முப்பது-கோவிந்தா கோவிந்தா கும்பிட்டேன் ஓடி வா...