×

அகிலம் காக்க ஆடியில் தவமியற்றிய அன்னை

சங்கரன்கோவில் ஆடித் தபசு: 23-7-2021


ஸ்ரீ கோமதி அம்மன் உடனுறை ஸ்ரீ சங்கர நாராயணர் கோயிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்தாலே போதும். உக்கிர பாண்டிய மன்னர் 943 வருடங்களுக்கு முன் இக்கோயிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகின்றது. கோயில் ஐம்பூதத் தலங்களில் முதல் தலமாகும்.

ஸ்ரீ ஹரனும், ஸ்ரீ ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கும் இந்த அற்புத ஆலயம் ராஜபாளையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும், கோவில்பட்டியிலிருந்து தென்காசி - கொல்லம் சாலைக்குமான சந்திப்பில் உள்ளது. புன்னை மரத்தைத் தலமரமாகப் பெற்ற இவ்வாலயம், ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சந்நதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சந்நதி அமைந்துள்ளது.

அன்னையின் தவப் பயனே இவ்வாலயம் உருவாகக் காரணம். ஒற்றை விரலை ஊன்றி தவம் செய்தாள், அம்பிகை! எதற்காக அவள் தவம் செய்தாள்? பக்தனுக்கு பதிலளிக்கும் விதத்தில், நம் எல்லோருக்கும் அந்த உண்மை தெரிய, அம்பிகை அந்த தவத்தை மேற்கொண்டாள்! ஒரு முறை சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது.

சங்கன் தன் கடவுளான சிவபெருமானே அதிக ஆற்றல் படைத்தவன் என்றும், பதுமன் தன் இஷ்டதெய்வமான திருமாலே மிகுந்த ஆற்றல் உடையவர் என்று வாக்குவாதம் செய்து முடிவில் இதற்கு ஒரு விடை காண அம்பிகை யிடம் சென்று முறையிட்டனர். அம்பிகை தனக்கு அந்த பதில் தெரிந்தாலும் அதைத் தன் பக்தனிடம் காட்டிக் கொள்ளாமல், சிவபெருமானிடம் சென்று வேண்டினார்.

ஈசன் அம்பிகையை பொதிகை மலைப் பகுதியில் புன்னைவனத்தில் தவமியற்றச் சொன்னார். அம்பாள், அப்பொழுது புன்னை வனமாக இருந்த, தற்பொழுது சங்கரநாராயணர் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் ஆடி மாதத்தில் அருந்தவமியற்றினாள். ஒற்றைக் கால் விரலில் தவம்! அம்பிகையின் தவத்திற்கு மெச்சிய இறைவன் ஸ்ரீ சங்கர நாராயணராகக் காட்சி தந்தருளினார்.

சிவனும், திருமாலும் ஒன்றே என்ற தத்துவத்தை நாம் அனைவரும் அறியவே அம்பாள் நமக்குத் தவமியற்றி புரிய வைத்தாள். கடவுளர் இருவரும் சமம் என்றும், சிவனும், திருமாலும் இணைந்த இந்தத் திருவடிவால் அன்பினாலும், தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்ற தத்துவமும் புலனாகின்றது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு அம்பாளுடனேயே இங்கு தங்கினர்.

அம்பிகையின் அருந்தவத்திற்கு இணங்க, சிவபெருமான் சங்கரநாராயணராக அம்பிகைக்குக் காட்சி தந்ததைக் கண்டோம். இனி இத்தலம் உருவான வரலாற்றைக் காண்போம்.  
உக்கிர பாண்டியர், அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மனையும், சொக்கநாதப் பெருமானையும் வழிபடும் வழக்கமுள்ளவர். திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டு கொண்டிருந்தார். மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் புன்னைவனக் காவலனாக இருந்தான்.

புன்னைவனத்தில் பூந்தோட்டம் ஒரு புறமும், மற்றொருபுறம் புற்றும் வளர்ந்திருந்தது. காவல் காப்பவன் புற்றை அப்புறப்படுத்த நினைத்து அதனை வெட்ட, அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டப்பட்டது. அப்போது அவன் புற்றின் அருகில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். பாவம்! தெரியாமல் செய்து விட்ட அவன் மிகவும் வருத்தமுற்றான்.

நல்லவேளை! அச்சமயம் உக்கிர பாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து அவரிடம் விவரம் சொல்ல ஓடினான். காவல் காப்பவன் விஷயத்தைச் சொல்லும் முன்னரே பாண்டியரின் யானை தனது கொம்பால் தரையில் குத்தி கீழே விழுந்து புரண்டது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் செய்வதறியாது திகைத்து நின்ற பொழுது தான் காவல் காப்பவன் வந்து விவரம் சொல்ல, உடனே அவர் சிவனைக் காண வந்தார். புற்றையும், சிவலிங்கத்தையும், வால் அறுபட்ட பாம்பினையும் கண்டார்.

அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது. காட்டைச் சரிசெய்து அங்கு கோயில் எழுப்புமாறு! சிவபெருமானின் சொல்கேட்டு அவ்வண்ணமே அவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதி செல்லும் போது பலிபீடம், கொடி மரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிர பாண்டியரையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காண முடியும். யானை தனது கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாகியிருக்கிற ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது.

உக்கிரபாண்டியர் கோயிலுக்கு நிறைய நில, புலன்களைக் கொடுத்தார். தான் சிவபெருமானைக் காணக் காரணமாயிருந்த யானையின் மீது ஏறி பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டு வந்து பெரும் திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றளவும் நடைபெறுகின்றது. முத்துராமலிங்கத் தெருவில் காவல் புரிந்தவருக்கு ஒரு சிறுகோயில் அமைக்கப்பட்டு பூஜைகளும் நடைபெற்று வருகின்றது. சித்திரைத் திருவிழா ஆரம்பிக்குமுன் இக்கோயிலில் பூஜைகளும், சிறப்பு வழிபாடு களும் செய்த பின்னர் தான் பெரிய கோயிலில் கொடி
ஏற்றம் நிகழும்.

ஆடித்தபசு என்கின்ற பிரம்மோற்சவம் இத்திருக்கோயிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்னை கோமதி தவமியற்றி ஹரியும், ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்த திருநாள் ஆடி மாதம் பௌர்ணமி திதி உத்திராட நட்சத்திர நன்நாள். அன்றுதான் சங்கர நாராயணராக அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி தந்தார். சுவாமி காட்சி அருளிய நன்நாளைக் கொண்டாடும் பொருட்டே இத்திருவிழா நடைபெறுகின்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் விழா 12 நாட்கள் நடைபெறுகின்றது. ஆடித் தபசுக்கான கொடியேற்றம், ஆடி பௌர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் செய்யப்படுகிறது. ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால், அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.

கொடியேற்றும் அதே வேளையில் அம்பிகை சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

முதல்நாள் தங்க சப்பரத்திலும், இரண்டாம் நாள் காமதேனு வாகனத்திலும் மூன்றாம் நாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் நான்காம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் ஜந்தாம் நாள் வெள்ளி சப்பரத்திலும், ஆறாம் நாள் கனக தண்டிகையிலும் ஏழாம் நாள் பூப்பல்லக்கிலும், எட்டாம் நாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்வாள்.

 ஒன்பதாம் நாள் காலையில் ஸ்ரீ கோமதி அம்பிகை திருத்தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு, ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா வருவாள். பத்தாம் நாள் காலையில் ஸ்ரீ கோமதி அம்பிகை முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தி்லும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா வருகிறாள்.

11ம் நாள் காலையில் யாக சாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரமும் சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுக் கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள். ஆடிப் பௌர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாக,

தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதைத் தனது இரு கரங்களால் பிடித்துத் தபசுக் கோலத்திலுள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின்னிரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார். பின்னர், அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். பன்னிரெண்டாம் நாள், ஸ்வாமியும் அம்பிகையும் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவர்.

ஸ்ரீ கோமதி அம்மன் ஸ்ரீ சங்கர நாராயண ஸ்வாமி திருக் கோயில் வளாகத்திலேயே தனிக் கோயில் கொண்டு விளங்குகிறாள். சக்தி பீடத் திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகின்றது. கோயிலின் உட்புறம் தங்கக் கொடிமரத்துடன் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனி நந்தி, பலிபீடம்  அமைந்துள்ளது.

அழகே உருவான அம்பிகை ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது கையில் மலர்ப் பாணம் மற்றும் பூச்செண்டு ஏந்தியவளாக, இடது கையைப் பூமியை நோக்கி தளர விட்டவளாக புன்னகை முகத்துடன், சர்வாலங்கார பூஷிதையாக, கருணை ததும்பக் காட்சி தருகின்றாள். இது தசமஹா வித்யா பீடத்தில் (ஷோடஷி) பீடமாகும்.

அன்னை ஸ்ரீ ஷோடஷி ரூபமாக ஸ்ரீலலிதா மகா
திரிபுர சுந்தரியாக, ஸ்ரீகாமேஸ்வரியாகக் காட்சி தருகின்றாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம், அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும், மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன. அவற்றை நாம் நம் கண்ணால் காண முடியாது.

தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே காண முடியும் என்றும், யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கின்றதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகின்றது. நாம் நம் அகக்கண்களால் கண்டு களிக்கலாமே!

நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால் இந்தத் தேவியை வணங்குவதன் மூலம் பயத்தைப் போக்கலாம். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலேயே வாழ்ந்து அம்பிகையின் பெருமைகளை எடுத்துரைத்தார். சர்ப்ப தோஷம் நீக்கும் சங்கரன் கோயில் என்றே சொல்லலாம். ஸ்வாமி ஸ்ரீ சங்கரநாராயணரை வணங்க வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லைகள் நீங்கும்.
கோமதி அம்மனுக்குச் செவ்வரளிப் பூக்களின் நடுவில் போடப்படும் மாவிளக்கு மிகவும் விசேஷமானது.

ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் தங்கப் பாவாடை கொண்டு அருள்புரிகின்றாள். கோமதி அம்மனுக்குப் பெரிய அளவில் பூஜைகள், ஹோமங்கள் நடத்தத் தேவையில்லை. மனதார அவளது நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாளே அவள் என்றென்றும் நம்முடன் இருந்து அருள்புரிவாள்.

புத்திர தோஷம் உள்ளவர்கள் மாவிளக்கில் நெய் தீபமேற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைத்திடும். இவள் சந்நதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும். இத்திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் பால் அபிஷேகம் செய்ய ராகு, கேது தோஷம் நீங்கும். வீடுகளில் உள்ள பூச்சி, பல்லி, பாம்பு தொல்லை நீங்க அதன் வெள்ளி உருவம் காணிக்கை ஸ்ரீசங்கர நாராயணருக்குச் செலுத்த தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்மன் சந்நிதி பிராகாரத்தின் வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை இட்டுக் கொள்ள கெடுபலன் குறையும். சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர். இங்குள்ள நாக சுனைக்கு பல அற்புதங்கள் உண்டு. இந்தச் சுனையில் மூழ்கி எழுந்தால் நற்கதி அடையலாம்.

இத்திருக்கோயிலில் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றது. சுவாமிக்கும், அம்பாளுக்கும் ஒரேவிதமான பூஜைகளும், உபசாரனைகளும் நடைபெறுகின்றது. பள்ளி எழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே! ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் அம்பிகைக்குத் தங்க ரத உலா. அம்பிகைக்குத் திங்கட் கிழமை மலர்ப்பாவாடை, செவ்வாய் வெள்ளிப்பாவாடை, வெள்ளிக் கிழமை தங்கப் பாவாடை சார்த்தப்படுவது கண்கவர் தரிசனமாக உள்ளது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நவாவரண பூஜையும், தினமும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகின்றது. அம்பாளுக்கு நான்கு வேளை அபிஷேகம், விசேஷ நாட்களில் சந்தன காப்பு அலங்காரம் நடக்கின்றது. அன்பர்கள் தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவது, முடி காணிக்கை கொடுப்பது, மாவிளக்கு ஏற்றுதல் போன்ற நேர்த்திக் கடனைச் செய்கின்றனர்.

அம்பிகையின் சுற்றுப் பிராகாரத்தில்தான் புற்றுமண் சேமிக்கப்படுகின்றது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்தப் புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய்கள் தீர்ந்து விடுகின்றன. புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

அதிக விளைச்சல் கிடைக்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை. புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டித் தொங்க விட்டால் தீவினைகள், தீய சக்திகள் அண்டாமல் குடும்பத்தைக் காக்கும். கோமதியன்னையின் கருணையும் கடாட்சமும் சொல்லில் அடக்க முடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டினார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.

அம்பிகை மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம் தெரியுமா? அம்பிகையின் அண்ணன் மகாவிஷ்ணு சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் அவரை எப்படி மணப்பது? எனவே தான் அம்பாள் மீண்டும் தவமியற்றி ஈசனை வேண்டிச் சங்கரலிங்கமாகக் காட்சி அருள வேண்டுகின்றாள்.

அவ்வாறே ஈசன் சங்கரலிங்கமாக அம்பிகைக்குக் காட்சி கொடுக்க, அம்பாள் ஈசனுக்குத் திருமண மாலை மாற்றி, மணந்து கொள்கின்றாள். ஐப்பசி மாதத்தில் சங்கரலிங்கரை கோமதியன்னை மணந்து கொள்ளும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பின்னர் ஊஞ்சல் சேவை அற்புதமாக நடைபெறுகின்றது.

மஹாசக்தி பீடமாக விளங்கும் இந்த கோமதி அம்மன் திருக்கோயில் ஆடித்தபசு விழாவை நம் வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்டு தரிசித்து அம்மை, அப்பரின் அருள் பெற வேண்டும். உலகுக்கே தாயான அவளை அம்மா! கோமதி! என்று நினைத்தாலே போதும்! நம் துன்பமெல்லாம் பறந்தோடிப் போகும்! அம்பிகை ஓடோடி வந்து காத்திடுவாள்!

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

Tags : Audi ,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...