×

வேளாண் மரபில் ஆடி மாதம்

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14, 15, 16, 17 தேதிகளில் பிறக்கும். மேலை நாடுகளில் இந்நாளை ஜூன் 21 எனக் கணக்கிட்டுள்ளனர். அன்று கதிரவன் தன் பயணத்தின் திசையை மாற்றுகிறான் என்று அங்கு கணித்துள்ளனர். இந்நாளை அவர்கள் Solar solstice என்பர். அன்று மேலை நாடுகளில் கோடை காலம் தொடங்குகிறது. ஐ.நா.சபை ஜூன் 21 என்ற நாளை நிலத்தின் வளமை, வேளாண்மை - உணவு உற்பத்தி முறைகள், பண்பாட்டுப் பாரம்பரியம் ஆகியவற்றுக்குரிய சிறப்பு நாளாக அறிவித்துள்ளது.

[International day of Celebration of solstice]. இந்நாளை அண்டை நாடுகளுடனான அன்புறவு, பரஸ்பர மதிப்பு, ஒற்றுமை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் போற்றும் நாளாக அறிவுறுத்தியுள்ளது. கதிரவன் தென் திசைப் பயணத்தைத் தொடங்கும் இந்நன்னாள் உலகெங்கும் வேளாண் சிறப்பு மிக்க நாளாகப் போற்றப்படுகிறது.

வேளாண் சிறப்பு என்பது வளமைச் சடங்குகளால் பொலிவடைகிறது. கீழை நாடுகளில் மண் மாதா தரும் விளைச்சலும் மேலை நாடுகளில் மனித குலம் தழைக்க திருமணமும் இக்காலகட்டத்தில் உறுதி செய்யப்படுகிறது. இந் நன்னாள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நாளாக அமைந்தாலும் விழாவும் கொண்டாட்டங்களும் வேளாண் செயல்பாடுகளும் ஏறத்தாழ ஒன்றாகவே தோன்றுகின்றன.

வேளாண் சடங்கு

ஆடி மாதப் பிறப்பன்று கதிரவன் தன் தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறான். இதனைத் தட்சிணாயனம் என்பர். தட்சிணா என்றால் தெற்கு அயணம் என்றால் நகர்தல் அல்லது பயணம். இராமனின் அயணம் இராமாயணம் எனப்பட்டது. இத்திசை மாற்றத்தின்போது கதிரவன் கடக ரேகையின் மீது நிற்கிறான். இனி வேளாண் குடி மக்கள் விதைப்பு, நாற்று நடுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல், கதிர் அறுத்தல், தூற்றுதல், பதரடித்து நெல் மூட்டைளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்வர். இவை முடிய தை பிறக்கும். கதிரவன் தன் பாதையை வடக்கு நோக்கி திருப்புவான். அப்புறம் வேளாண் குடிகளுக்கு ஓய்வு காலம் அல்லது கொண்டாட்ட காலம் ஆகும். தை முதல் வைகாசி வரை விழாக்கள் நடைபெறும்.

விதையும் முளையும்

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிகேற்ப வயல்களில் ஆடி மாதம் பிறந்ததும் விதைப்புப் பணிகள் தொடங்கி விடும். ஏர் பூட்டி உழுது போட்ட நிலத்தில் ஆடி மாதம் பிறந்ததும் அதுவரை பாதுகாத்து வைத்திருந்த விதை நெல்லை எடுத்துக்கொண்டு வந்து விதை தூவுவர். விதைத்தல் தொடர்பான வளமை சடங்கு [fertility ritual] அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுத்தல் ஆகும். முளைப்பாரி என்பதை திருமணங்களில் முளைப் பாலிகை என்பர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் நடை பெறும் விழா முளைக்கொட்டு திருவிழா எனப்படும். இத்திருவிழாவின் போது அன்னை மீனாட்சி திருக்கோயிலுக்குள் வீதி உலா வருவாள். அந்த வீதி ஆடி வீதி எனப்படும்.  இவ்விழாவில் முளைப்பாரி மீனாட்சி சந்நதியில் வளர்த்து கும்மி கொட்டி பெண்கள் கொண்டாடுவர். கிராம தேவதைக் கோயில்களில் முளைப்பாரி கொட்டுவதுபோல அன்னை மீனாட்சி அம்மன் கோயிலிலும் முளைப்பாரி கொட்டுவர் அதை முளைக்கொட்டு விழா என்பர்.

முளைப்பாரி எடுத்தல்

தமிழகக் கிராமங்களில் குறிப்பாக ஆற்று நீர் பாசனப் பகுதிகளில் நதிக்கரை நாகரிகம் செழித்த வேளாண் குடி மக்கள் வாழும் ஊர் களில் முளைப்பாரி எடுத்தல் என்பது ஆடி, தை, மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறுகிறது. ஆடி மாதம் அதிக ஊர்களில் நடைபெறுவது மரபு. அம்மன் கோயில்களில் தென்னங்கீற்றால் தனி அறை அமைத்து அங்கு கதிரொளி புகா வகையில் மண் ஓடுகளில் மூங்கில் குச்சி நட்டு அதில் விதையோடு பிசைந்த களிமண்ணைப் பூசி வைப்பார்.

அந்த விதைகள் இருட்டில் நீண்டு பொன்னிறமாக வளரும். இது ஒரு முன் சோதனை முயற்சி. முளைகள் பொன்னிறமாக மஞ்சள் பூத்து இருந்தால் அந்த ஆண்டு நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம் என்று வேளாண் குடியினர் அறிந்து கொள்வர். விதை போடும் போது முளைப்பாரி கொட்டும் பெண்கள் பின்வரும் பாட்டைப் பாடி கொட்டுவர். பயறு வகைகள் நீண்டு வளரும் என்பதால் பெரும்பாலும் பயறு வகைகளை முளைக்க விடுவர். விதைகளை முத்து போடுதல் என்பர். விதையை முத்து என்று அழைப்பதும் மதிப்பதும் வேளாண் குடிப் பண்பாடு.

அவர துவர மொச்ச
அஞ்சுவகை ஆமணக்கு
எள்ளு சிறுபயறு
ஏத்த மணிப்பயறு
கடல சிறுபயறு
காராமணிப் பயறு
வாங்கிவந்த பயறுகள
வாளியில ஊறப்போட்டு
கொண்டுவந்த பயறுகள  
கொடத்துல ஊறப்போட்டு

பெண்கள் விதைகளை ஊறப் போட்ட பிறகு மண் ஓடுகளில் வளர்ப்பதற்காக மண்பானையை வாங்கி வந்து அதில் பாதியை உடைத்து ஓடு தயாரித்து வைப்பார். தற்காலத்தில் மண் தொட்டி களிலும், சில்வர் ஓடுகளிலும் வளர்க்கின்றனர். இவற்றை ஆண்டுதோறும் மாற்றாமல் கோயிலில் வைத்துப் பாதுக்காத்து ஒவ்வோர் ஆண்டும் திரும்பத் திரும்ப எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.  விதைகளை போட்டு வளர்க்க ஓடு தயாரிப்பதையும் பாட்டாகப் பாடுகின்றனர்.

ஆசாரி அழச்சு வந்து
அழகா ஓடொடச்சி
கொசவனோட கொல்லையில
கொடத்தோட ஓடொடச்சி  

ஓடு தயாரித்து முத்துக்களை போட்டதும் அதற்கு இரு அல்லது உரம் போட ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்களை அணுகி ஆட்டுப்புழுக்கையும் காய்ந்த மாட்டு சாணத்தையும் கொண்டு வந்து தரவேண்டுமென்று கேட்கின்றனர். அதற்கும் பாட்டு பாடுகின்றனர்.

ஆட்டாம் சிறுவர்களே;
ஆடு மேய்க்கும் பாலர்களே
ஆட்டாந்தொளி தொறங்க ;
ஆட்டெருவெ வாரிவர
மாட்டாஞ்சிறுவர்களே ;
மாடு மேய்க்கும் பாலர்களே
மாட்டாந்  தொளிதொறங்க ;
மாட்டெருவெ வாரிவர
வாரிவந்த எருவுகள
வயசுப்பிள்ள தானிடிச்சி
கொண்டுவந்த எருவுகள
கொழந்தப்புள்ள தானிடிச்சு

இவ்வாறு ஆடி மாதம் விதைப்பு சடங்கு  நிறுவனச் சமயக் கோயில்களிலும் நாட்டுப்புறக் கோயில்களிலும் இறை வழிபாட்டுச் சடங்குகளிலும் வயலிலும் நடக்கின்றன.
ஆடிக் காற்றும் மழையும் ஆடி மாதம் தென்னிந்தியாவில் தென் மேற்கு பருவக் காற்று வீசும் காலம் ஆகும். கேரளாவில் காற்று முடிந்து மழை தொடங்கிவிடும். அங்கு காற்று வீசத் தொடங்கியதும் பொதிகை [குற்றாலம்] மலையில் தென்றல் வீசத் தொடங்கும். அங்கு மழை தொடங்கியதும் குற்றாலத்தில் சாரல் விழும்.

அருவிகளில் நீர் கொட்டும், தேனி பள்ளத்தாக்கு வழியாக தென்மேற்கு பருவக்காற்று உள்ளே புகுந்து நல்ல மழையைப் பொழியும். தமிழகத்தின் மற்ற பகுதிகள் மழை மறைவுப் பிரதேசங்கள் ஆவதால் அங்கு பேய்க்காற்று வீசும். ஆவணி அமர்ந்து விடும். புரட்டாசியில் மழை பெய்யத் தொடங்கும். பயிர் பால் பிடிக்கும் அலறும் ; ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்ற பழமொழிகள் இந்தக் காற்றின் தன்மையை உரைக்கின்றன. ஆனி மாதத்தில் கொம்பு சுற்றி காற்றடிக்கும். காற்று வழி மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்ற பருவம் இது. ஆடி மாதம் காற்று பொருட்களை வீசி அடிக்கும். ஆவணியில் காற்று அமர்ந்து விடும்; அடுத்த மாதமான புரட்டாசி தமிழகத்துக்கு மழை கொண்டு வரும்.

காவிரி வைகை பாசனத்துக்கு ஆடி மழைதமிழகத்தின் வேளாண் நிலங்கள் எதிர்பார்த்திருப்பது ஆடி மாதம் கேரளாவிலும் கர்நாடகாவிலும் பொழியும். தென்மேற்கு பருவ மழையைத்தான் என்றால் மிகையில்லை. தென்மேற்கு பருவமழை நீரால் கேரளாவில் உள்ள பெரியாறு [பெரியார் டேம்] பெருக்கெடுத்து ஓடும். அந்தத் தண்ணீர் தமிழ் நாட்டிலுள்ள வைகை அணைக்கட்டுக்கு வந்து மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் விளைநிலங்களில் வேளாண் பணிகளை ஊக்கப்படுத்தும். இம்மாவட்டத்து வேளாண் குடியினர் ஆடியில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையை எதிர்பார்த்து இறைவனை வணங்கி நிற்பர். பெரியாற்றுப் பாசனத்தை இந்நிலங்களும் வயல்களும் நம்பியுள்ளன.

ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழை அடை மழையாக வட கேரளம் மற்றும் கர்நாடகம் பகுதியில் பொழியும் போது தலைக்காவிரியில் வெள்ளம் பெருகி காவிரியில் நுரை புரள கரை தொட்டுப் பாய்ந்து வரும். காவிரிக் கரைப் பகுதியில் ஆடி பதினெட்டாம் நாளன்று ஆடிப் பெருக்கு கொண்டாடப்படும். அன்று மக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று தாலி பெருக்கிப் போட்டு காவேரியம்மனை வணங்கி மகிழ்வர். புது மணமக்கள் வீட்டுப் பெரியவர்களுடன் அன்று காவிரிக் கரைக்குச் செல்வது பண்டைய மரபு. தமிழக நதிகளான வைகைக்கும் காவேரிக்கும் ஆடி மாதம் பொழியும் தென்மேற்குப் பருவ மழை நீர் அருங்கொடையாகத் திகழ்கிறது.

உலக வேளாண் மரபினரின் ஆடிக் கொண்டாட்டம் கதிரவன் திசை திரும்பும் நாளை மேலை நாடுகளில் வாழும் வேளாண் மரபினரும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அவர்கள் ஜூன் 21 என்றும் சில பகுதிகளில் அதற்கு ஒரு வாரம் முன்னதாகவும் பின்னதாகவும் கொண்டு கொண்டாட்டத்தை நடத்துகின்றனர். கதிரவன் திசை திரும்பும் நாளை சில கோடையின் சரி பாதி காலம் [MID SUMMER] என்றும் வேறு சிலர் கால் பகுதி [QUARTER DAYS] என்றும் அழைப்பதுண்டு.

ஸ்வீடனில் இந்நாளில் ஸ்ட்ராபெரி பழம் பறிக்கும் நாளாகக் கொண்டாடுவர். அந்த ஸ்ட்ரா பெரி பழத்தின் மீது கிரீம் வைத்து குழந்தைகள் உண்பது வழக்கம். ஜூன் மாதப் பௌர்ணமி நாளன்று தோன்றும் முழு நிலவை ஸ்ட்ராபெரி மூன் நேரே என்று அழைப்பார்கள்.  தமிழகத்தில் ஆனி பௌர்ணமி அன்று கோயில்களில் முப்பழ சேவை என்று முக்கனிகளால் அபிஷேகம் செய்வர். ஆனி மாதத்தின் முழு நிலா அன்று ஆனித் திருமஞ்சனமும் தமிழகத் திருக்கோயில்களில் விசேஷமாக நடக்கும்.

நோய்க் காரணிகளை விரட்டுதல் ஐரோப்பிய நாடுகளில் வேளாண் குடியினர் இக்காலகட்டத்தில் தன் இணைகளைத் தேடித் திருமணம் செய்வதும் உண்டு. அங்கு கோடை காலம் தொடங்கிவிட்டபடியால் திருமண நாட்டமும் அதிகரிக்கும். ஜூன் 21 அன்றைக்கு முதல் நாளிரவு BON FIRE என்ற பெயரில் தீ வளர்த்து அதைச் சுற்றிலும் ஆடிப் பாடி சில சடங்குகளை நடத்தி மகிழ்வர். இது ஏறத்தாழ நமது சித்ரா பௌர்ணமியைப் போன்றது அல்லது இந்திர விழா போன்றது எனலாம்.

மறு நாள் பெரனி பூக்களை பறித்து மகிழ்வர். பேரணி பூக்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்புகின்றனர். இக்காலகட்டத்தில்  சூனியக்காரிகளும்  மந்திரவாதிகளும் இரவில் வெளியே வந்து வசிய மற்றும் மாரக் மூலிகைகளை விடியும் முன்பே பறித்து செல்லுவது வழக்கம். விடிந்த பிறகு பறித்தால் அம் மூலிகைகளின் பண்பு மாறிவிடும்.

தீ வளர்த்தலின் தத்துவம் இளம் பருவத்தினர் சூனியக்காரிகளை விரட்ட வைக்கோல் மற்றும் துணிகளைக் கொண்டு அவர்களைப்போல ஒரு பொம்மை செய்து தங்கள் பகுதிகளில் வைப்பர். டென்மார்க்கில் சூனியக்காரிகள் அன்றிரவு கூட்டம் கூட்டமாக வெளியே வருவதுண்டாம். ப்ரோக்கேன் மலையில் இளைஞர்கள் எழுப்பும் தீ அவர்களைத் துரத்திவிடும் என்பது நம்பிக்கை. அங்கு அவர்கள் சூனியக்காரிகள் என்பது நோயின் அறிகுறி ஆகும்.

இங்கும் இதே பழக்கம் நம்மிடையே உள்ளது. டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகளில் அவர்களைத் துரத்தி அடிக்க தீ வளர்ப்பதுபோல நாமும் ஐப் பசியில் அடைமழை முடிந்த பிறகு கார்த்திகையில் காண மலை கொட்டும் நாட்களில் பெரிய கார்த்திகை அன்று சொக்கப்பனை வளர்த்தல் சுளுந்து சுற்றுதல் போன்ற தீ வரப்பு சடங்குகளைச் செய்கிறோம். இவை தீ நுண்கிருமிகளைப் பொசுக்கிவிடும். தீ வளர்த்தல் என்பது நோய் காரணிகளை விரட்டிட இங்கும் அங்கும் பயன்பட்ட ஒரு சடங்கியல் மருத்துவமுறை ஆகும்.

பூ பறித்தல் ஓர் வளமைச் சடங்கு வேளாண் குடியினர் விளைச்சலை பூ என்றும் போகம் என்றும் குறிப்பிடுவர். பூ என்பது வளமையை குறிக்கும் சொல் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் மே மாதத்திலேயே மே கம்பம் [May pole] என்ற கம்பத்தை நட்டு இளைஞர்கள் அதனைச் சுற்றி சுற்றி வந்து நடனமாடுவர். அப்படியே தங்களின் வாழ்க்கைத் துணைகளை முடிவு செய்வர். இந்த கொண்டாட்டத்திலும் பெண்கள் பூ சேகரித்து வந்து தங்களை அழகுபடுத்திக் கொள்வதுண்டு. பிரேசில் நாட்டிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. நல்ல மாப்பிள்ளையும் அதிர்ஷ்டமும் தேடிவரும் என்ற நம்பிக்கையால் சுவீடனில் வீட்டு வாசலில் இந்தப் பூக்களைத் தோரணமாகக் கட்டித் தொங்க விடுவர். நார்வே நாட்டில் பூக்களை தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்துக் கொள்வது மரபு அப்போது இளம் பெண்களின் கனவில் அவர்களுக்கு வரப்போகும் மணமகனது முகம் தெரியும் என்பது நம்பிக்கை.

மணமகன் தேடல் தமிழகத்தில் மணமகன் தேடல் என்ற சடங்கு வாழ்க்கைத் துணை தேடுதலும் ஆடி மாதத்தில் நடப்பது இல்லை. இங்கு திருமணமான தம்பதிகளை பிரித்து வைக்கும் மாதம் இது. சித்திரையில் குழந்தை பிறப்பதைத் தவிர்க்க மக்கள் விரும்பினர். சித்திரை செறுக்கன் பிறக்கில் அத்தர அக்குடி கெடும் என்று மலையாளத்திலும் பழமொழி உள்ளது. சித்திரையில் பிறந்த தலைமகன் வளர்ந்து நிலையில் அவன் தலை தட்டும் போது தகப்பனைப் பிரிவான் என்று ஒரு நம்பிக்கை தமிழகத்திலும் உள்ளது.  

ஆனால், மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சில சடங்குகள் செய்வதில் சில வாரங்கள் வித்தியாசம் காணப்படுவதால் அங்கு கோடை பிறந்தவுடன் நடக்கும் வாழ்க்கைத் துணை தேடுதல், திருமணம் போன்றன இங்கு சற்று முன்னர் மே மாதத்தில் அதாவது வைகாசியில் நிகழ்கிறது. இது தட்ப வெப்ப மாற்றத்தினால் ஏற்படும் பண்பாட்டு மாற்றம். இரண்டு பகுதியில் வேளாண் தொழில் செய்பவர்கள் கோடை காலத்தில் திருமணம் செய்தனர் என்பது மாறாத உண்மையும் நடைமுறையும் ஆகும்.

நிறைவு

ஆடி மாதமும் வேளாண் மக்களின் விதைப்பு சடங்கும், பூப்பறித்தல், பழம் பறித்தல், முப்பழ சேவை போன்ற வளமைச் சடங்குகள் மற்றும் மேலை நாட்டின் திருமணத் தேடலில் மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் வசிக்கும் வேளாண் மரபினரிடம் ஒற்றுமைகள் காணப் படுகின்றன. இந்த ஒற்றுமைகளுக்குக் காரணம் அவர்களின் வேளாண்மைக்கு வெயிலின் தேவை அதிகம் என்ற காரணமே ஆகும். வெயில் காலத்தை உழவர்கள் கொண்டாடுகின்றனர். நல்ல மழையையும் அவர்கள் எதிர்பார்த்து வரவேற்கின்றனர்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags :
× RELATED விதியை, மதியால் வெல்ல முடியுமா?