×

வேலைக்காரனாகச் சென்ற வைணவ வித்வான்


இந்தியாவின் இரண்டு பெரும் சமய நெறிகள் சைவமும் வைணவமும். இதில் வைணவ நெறியை குலசேகரஆழ்வார் “தீதில் நன்னெறி” என்றே
குறிப்பிடுகின்றார். வைணவ நெறியின்  வாழ்வியல் தத்துவங்களை, நாம் நேரடியாக நூல்களைப் படித்து புரிந்து கொள்வதை விட, அந்த நெறிப்படி வாழ்ந்து காட்டிய வைணவ வழிக்குறவர்களின் (ஆசாரியர்களின்) வாழ்க்கை வரலாற்றைத்  தெரிந்து கொள்வதன் மூலமாக எளிதில் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு வைணவ மகான் தான், சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த முதலியாண்டான்.

அவருடைய அவதார திருநட்சத்திரம் வைணவக் கோயில்களிலும், வைணவர்களின் திருமாளிகைகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  ராமாவதாரத்தில் பரம்பொருள் மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தார். அவருக்கு எப்பொழுதுமே ஒரு நிமிடம் கூட விலகாது தொண்டு செய்துவரும் ஆதிசேஷன் இலக்குவனாக  அவதரித்தார்.  “அகம் சர்வம் கரிஷ்யாமி” என்று ராமாவதாரம் முழுக்க தன்னுடைய தேவைகளை மறந்து, தன்னுடைய குடும்பத்தை மறந்து, ராமனுக்குக்  கைங்கரியம் செய்தார்.

ராமன் இலக்குவன் செய்யும் தூய  கைங்கரியத்தினால் மகிழ்ச்சி அடைந்தார்.  பதிலாக தாம் ஆதிசேஷனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டார். அடுத்த அவதாரத்திலேயே பகவான் கண்ணனாகவும் ஆதிசேஷன் பலராமன் என்ற அண்ணனாகவும் அவதாரம் செய்தனர். இருந்தாலும் தான் நினைத்தபடி பலராமனுக்கு கண்ணனால் உத்தமமான கைங்கரியங்களைச் செய்ய முடியவில்லை.

அந்த ஏக்கத்தைத்  தீர்த்துக் கொள்ள, மறுபடியும் முயன்றார். கலியுகத்திலே ஆதிசேஷ அவதாரமான ராமானுஜருக்கு கைங்கரியம் செய்வதற்காக முதலியாண்டான் என்ற பெயரில் ராமன் அவதரித்தார். இருவர் பிறந்த மாதமும் சித்திரை மாதம். இருவரின் நட்சத்திரம் புனர்பூசம். இருவருடைய திருநாமமும் தாசரதி. ( “தாசரதி” என்றால் தசரதனின் புதல்வன் என்று அர்த்தம்.)

இதனை பின்வரும் ஸ்லோகம் உறுதி செய்கிறது
மேஷே புனர்வசஸுதிநே தாசரத்யம்ஸ
ஸம்பவம் |
யதீந்த்ரா பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும் ||

ராமபிரான் இவ்வுலகில் வந்து அவதரித்த அதே “சித்திரை புனர்வஸு” நன்னாளில் தாசரதியான (தசரதன் மகனான) ராமபிரான் அம்சமாக வந்துதித்து, யதீந்த்ரபாதுகைகளாக போற்றப்படும் தாசரதிமஹாகுருவை (முதலி யாண்டானை) வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
தாசரதி என்னும் பெயரை உடைய முதலியாண்டான் ராமானுஜருக்கு உறவினர். ராமாநுசருக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர்.  மூத்தவர் நாச்சியாரம்மை (கோதாம்பிகா); இளையவர் கமலை.  இவைகளில் முதல் சகோதரி  திருமழிசைக்கு அருகிலுள்ள புருஷமங்கலம் என்ற ஊரில்அநந்தநாராயண தீக்ஷிதருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தார். இவ்வூர் அந்த காலத்தில் “தாசரதிப்பேட்டை” என்றே அழைக்கப்பட்டு வந்தது.  பின்னர், இது மருவி மருவி  இப்போது “நாசரத்பேட்டை” என்றே அழைக்கப்படுகிறது.

ஆண்டானின் பெற்றோருக்கு பல ஆண்டுகளாகியும் புத்திரப்பேறு இல்லை.  எனவே அவர்கள் புத்திரப்பேறு வேண்டி, திருவேங்கட யாத்திரை துவங்கினர். வழியில் திருநின்றவூரில் பக்தவத்சல பெருமாளை தரிசித்து விட்டு அவ்வூரில்  ஒரு இரவு தங்கினர். மதுராந்தகத்தில்  எப்படி  ஏரி காத்த பெருமாள் இருக்கிறாரோ, அதைப்போலவே  திருநின்றவூரில் ஏரி காத்த பெருமாள் இருக்கிறார்.

அந்த ஏரிகாத்த  ராமபிரான் ஸன்னதியில் உறங்கும்போது, அப்பெருமானே இவர்கள் கனவில் தோன்றி , “திருவேங்கடம் செல்லவேண்டாம்; நாமே உமக்கு மகனாக வந்து பிறப்போம்” என்று சொல்லி மறைந்தான்.  அந்த எம்பெருமான் திருவாக்குப் படியே இவர்களுக்கு அடுத்த ஆண்டுசித்திரையில் புனர்வஸுவில்  ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராமன் தானே பிள்ளையாய்ப்  பிறப்பேன் என்று சொன்னதால் ராமன் பெயரான தாசரதி என்கிற பெயரை இந்த பிள்ளைக்குச் சூட்டினர்.

நல்ல முறையில் கல்வி கேள்விகளில் வல்லவரான இவருக்கு சரியான வயதில் திருமணமும் நடந்தது.  தன் தாய்மாமனான ராமானுஜர் இடமே பஞ்சஸம்ஸ்காரங்களை யாசித்துப்பெற்று, அவரைவிட்டுப் பிரியாமல் அந்தரங்க  கைங்கர்யங்கள் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்.எம்பெருமானார் சன்யாசம் புகும்போது, “நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம்” என்று அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.  
ராமானுஜரிடம் முதல்முதலாக சீடர் களாக ஆனவர்  இருவர். ஒருவர் கூரத்தாழ்வான். மற்றொருவர் முதலியாண்டான்.
வைணவ மரபில் இவர்களை ஆழ்வான், ஆண்டான் என்று  சேர்த்தே அழைப்பர் பெரியோர்.  

இவர்களை சுவாமி ராமானுஜரின் தண்டும்  பவித்ரமுமாகச் சொல்வது வழக்கம். வைணவத்தின் நிறைவான கொள்கை ஆசாரிய கைங்கரியம். அந்தக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தவர் முதலியாண்டான். அதற்கு இந்த நிகழ்வே எடுத்துக்காட்டு.ஒரு சமயம் ராமானுஜரின் ஆச்சாரியரான பெரிய நம்பிகளின் பெண்ணான அத்துழாய்க்கு திருமணம் ஆனது. பெரியநம்பி ஏழை என்பதால் அத்துழாயின்  புகுந்த வீட்டில் அவளை மதிப்புடன் நடத்த வில்லை. அவ்வப்போது அவள் ஏழ்மையைச்  சுட்டிக்காட்டி இழித்துரைத்தனர்.

ஒரு முறை அவள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்ற பொழுது, தன்னுடைய மாமியாரிடம் துணைக்கு வரும்படி அழைக்க, ஏற்கனவே அத்துழாய் வீட்டார் மீது கோபம் கொண்டிருந்த  மாமியார், ‘‘நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா நீ துணைக்கு அழைத்துச் செல்ல? வேண்டுமென்றால் உன் வீட்டிலிருந்து யாராவது வேலைக்காரியை அழைத்து வந்திருக்க வேண்டும். அதற்கு தகுதி இல்லாத வீட்டில் இருந்த அல்லவா நீ மருமகளாக வந்திருக்கிறாய்? துணைக்கு வேண்டுமென்றால் உன் தந்தையிடம் சென்று உனக்கு ஒரு சீதன வெள்ளாட்டி (வேலைக்காரி)யை அனுப்பச் சொல்லு” என்று ஏளனமாகப்  பேச, கண் கலங்கிய படியே தன் தந்தையான பெரியநம்பிகளிடம்  அத்துழாய் நடந்ததைச் சொன்னாள்.
பெரிய நம்பிகள் இதைப்போன்ற லௌகீக விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்.

எனவே அவர்,” இதை என்னிடம் ஏன் அம்மா சொல்லுகின்றாய். உன் அண்ண னான ராமானுஜனிடம் சென்று சொல்” என, உடனே அவள் ராமானுஜருடைய மடத்திற்குக் கிளம்பிவிட்டாள். ராமானுஜர் அப்பொழுது முதலியாண்டானுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அத்துழாய்  தன் மாமியார் வீட்டில் நடந்ததைச்  சொல்லி அழுதாள்.ராமானுஜர் குறிப்பால் முதலியாண்டானைப் பார்த்தார். அடுத்த நிமிடம்,” இதோ உனக்கு ஒரு சீதன வெள்ளாட்டியைத் தந்து விட்டேன். அழைத்துச்செல்” என்றார்.

ஆறு மாத காலம் அத்துழாய்  வீட்டில் அவர் அனைத்து வேலைகளையும் செய்தார். கிணற்றில் தண்ணீர் இறைப்பது, வீட்டைத்  தூய்மைப்படுத்துவது, மாடுகளை மேய்ப்பது, துணிகளைத் துவைப்பது,மடப்பள்ளி கைங்கரியங்களைச்  செய்வது என்று அவர் செய்யாத வேலை இல்லை. அத்தனையும் உகப்புடன் செய்தார். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு சில வித்வான்கள் வந்தனர். அவர்களோடு அத்துழாயின் மாமனார் உரையாடிக்கொண்டிருந்தார்.
வந்த வித்வான்கள் ராமாயணத்தின் ஸ்லோகங்களுக்குத்  தவறான விளக்கங் களைக்  கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து முதலி யாண்டான் கண்ணீர் வடித்தார். அத்துழாயின் மாமனார் இவருடைய கண்ணீரைக்  கண்டு தன் வீட்டில் வேலைகள் கடுமையாக இருப்பதால், செய்ய முடியாமல் கண்ணீர் வடிக்கிறார் என்று நினைத்து,‘‘உனக்கு வேலை செய்வதற்கு கஷ்டமாக இருந்தால் நீ போய்விடு'' என்று கடுமையாகச் சொன்னார். அப்பொழுது முதலியாண்டான் என்னை அனுப்பியவர் அழைத்தால் அல்லவா நான் போக முடியும் என்று சொல்ல, அப்படியானால்  ஏன் நீ அழுகிறாய் என்று அத்துழாயின்  மாமனார் கேட்டார்.

அப்போது முதலியாண்டான் ‘‘ராமாயணச் ஸ்லோகங்களுக்கு இந்த வித்வான்கள் தப்பும் தவறுமாக பொருள் சொல்ல அதை கேட்டு நான் வேதனை அடைந்தேன்” என்றார். அப்பொழுது வந்திருந்த வித்வான்கள் “சமையல் செய்பவனுக்கு ராமாயணம் வருமா?” என்று கேலியாகச்  சொல்ல. அத்துழாயின் மாமனார் “நீ பெரிய மேதையோ?உனக்கு இதன் சரியானப் பொருள் தெரியுமோ?” என்று கேட்க, அடுத்த அரை மணி நேரம்முதலியாண்டான் ஸ்லோகங்களைப்  பதம் பிரித்து, மிக மிக நுட்பமாக விவரித்தார்.

அவர் அபார ஞானத்தைக்கண்ட ராமாயண வித்வான்கள் திகைத்தனர். முதலியாண்டானைக்   கைகூப்பி வணங்கினர். அத்துழாயின் மாமனாரிடம், ‘‘என்ன பாவம் செய்து கொண்டிருக்கிறீர்? மகா வித்வான் ஒருவரை நீங்கள் வேலைக்காரனாக வேலை வாங்குவதன் மூலம் பாவச் சுமையை ஏற்றிக் கொண்டு இருக்கிறீர்?” என்று சொல்லி விட்டுச் சென்றனர். அத்துழாயின் மாமனாரும் உடனே பெரிய நம்பிகளிடம் சென்று “உடனடியாக நீங்கள் அனுப்பிய வேலைக்காரரை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று வேண்டினர்.

பெரிய நம்பிகளுக்கு இது ஒன்றும் தெரியாது என்பதால்,‘‘ எதுவாக இருந்தாலும் நம் ராமானுஜரிடம் சென்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று அவர்களை அனுப்பி விட்டார். ராமானுஜரிடம் சென்ற அத்துழாயின் மாமனார், ‘‘ஐயன்மீர் நீங்கள் அனுப்பியவரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்ல, ஸ்ரீ ராமானுஜர் சிரித்துக்கொண்டே, ‘‘சரிதான், அவர் சரியாக வேலையைச் செய்யவில்லை போலிருக்கிறது.

இப்பொழுது அவருக்கு மாற்றாக அனுப்ப மடத்தில் யாருமில்லையே? சரி, போகட்டும். அவருக்குப் பதிலாக நானே வருகின்றேன்” என்று சொல்ல,
அத்துழாயின் மாமனார் நெடுஞ்சாண்கிடையாக அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.’’ தாமும் தம்முடைய மனைவியும் அத்துழாயை  கேவலமாக பேசி இருக்கக் கூடாது; அதனுடைய விபரீதம் தான் இது: மன்னிக்கவேண்டும்” என்று மன்னிப்பு கேட்க, அதன் பிறகு, முதலியாண்டான் ஒரு ஆசாரியன் விரும்பியபடி கைங்கரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்து திரும்பினார்.

இந்த நிகழ்வின் மூலம் பெரும் பண்டிதரான முதலியாண்டான், எவ்வித கல்விச்  செருக்கும் இல்லாது, ஆசாரியன் கட்டளையிட்டால், எந்தவிதமான கைங்கரியங்கள் செய்யவும் தயங்காதவர் என்பது விளங்குகிறது.வைணவத் துறவிகளை முக்கோல் பகவர் என்கிறது சங்க நூல்கள். அவர்கள் விடக்கூடாத அடையாளங்களுள் ஒன்று “த்ரிதண்டம் (முக்கோல்)”. முக்கோல் விஷ்ணு ரூபமானது.“என்றும், நீ எனது நண்பனாய் இருந்து சகல விதத்திலும் என்னைக் காக்க வேண்டும்” என்று பொருள்படும் மந்திரத்தைச் சொல்லி இக்கோலை வைணவத் துறவிகள் ஏற்றிருப்பார்கள்.இந்த முக்கோல் போல சுவாமி ராமானுஜர் முதலியாண்டானைப் பிரியாது இருந்தார். “த்ரிதண்டத்தைக் கைவிட்டாலன்றோ நாம் முதலியாண்டானைக் கைவிடுவது?” என்று ஸ்வாமி ஸாதித்ததாக பிரசித்தம்.

 அப்படிப்பட்ட முதலிஆண்டானின் வழித் திருநாமம் இதோ.
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள்
ஊழிதொறும் வாழியே.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?