×

எது பாவம்?


இறைத்தூதரிடம் ஒருவர் வந்து, “இறைவனின் தூதரே எது பாவம்?” என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபிகளார்(ஸல்) பதிலளித்தார்: “எது உன் உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு.” (நூல்: அஹ்மத்)இந்த நபிமொழிக்குப் புகழ்பெற்ற விரிவுரையாளர் மௌலானா முஹம்மது பாரூக் கான் விளக்கம் அளித்துள்ளார். எது பாவம்? பாவத்தின் உண்மையான அடையாளம் எது? பாவத்தின் இயல்போடு இயைந்து போவது எது? பாவங்களிலிருந்து விலகி இருப்பதற்கு பாவத்தைப் பற்றிய அறிமுகமும் தேவை.பாவச் செயல்களில் ஈடுபடுவதால் எக்காலத்திலும் மனங்கள் நிம்மதி அடையாது. இதுதான் பாவத்தின் இயல்பு ஆகும். அண்ணல் நபிகளாரின் அமுதவாக்கிலிருந்து நமக்குத் தெரிகின்ற செய்தி இதுதான்.இதயத்தில் இறைநம்பிக்கை இருக்குமேயானால் பாவம் புரிவதால் நிம்மதி பறிபோவது இருக்கட்டும், பாவத்தைப் போன்ற தோற்றம் கொண்ட, பாவப் படுகுழியில் மனிதனைத் தள்ளிவிடக்கூடிய, தீமைகளின் அருகில் உங்களைக் கொண்டு சேர்த்து விடக்கூடிய அனைத்துமே நெருஞ்சி முள்ளாய் உறுத்தும். நெருடலாய் மனத்தைத் தைக்கும்.எனவே மனத்தை உறுத்துகின்ற எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் விலகி இருப்பதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பான கொள்கையாக இருக்க முடியும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அனைத்து விதமான தீமைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் இன்னொரு நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது:

“உங்களை எது ஐயத்தில் தள்ளிவிடுகிறதோ அதைக் கைவிட்டு விடுங்கள். எது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளதோ அதை மட்டும் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சத்தியம் எல்லா நேரங்களிலும்முழுக்க முழுக்க மனநிம்மதியும் மனநிறைவும் தருவதாகும். பொய்யோ முழுக்க முழுக்க ஐயத்திலும் உறுத்தலிலும்தான் தள்ளிவிடும்.”சத்தியத்தையும் அசத்தியத்தையும் எப்படிப் பிரித்தறிவது என்பதை நபிகளார்(ஸல்) மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். சத்தியத்தின் தனிச் சிறப்பு என்னவெனில் அது எப்போதும் நிம்மதியையும் அமைதியையும்தான் தரும். அதற்கு மாறாக அசத்தியத்தையும் பொய்யையும் மேற்கொள்கிறவர்களுக்கு எந்நேரமும் உறுத்தலும் நெருடலும் ஐயமும்தான் வாட்டிக் கொண்டிருக்கும்.அழுக்கையும் அழகையும் பிரித்தறிவதற்காக நபிகளார் வகுத்துத் தந்துள்ள இந்த வழிமுறை இறையச்சம் என்கிற பண்பால் தங்களின் இதயங்களை அழகுபடுத்திக்கொண்டவர்களுக்கே உரியதாகும்.
- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்