அனைவரும் தூய்மையாய் இருங்கள்!

இயேசு கிறிஸ்து கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற இவ்வுலகில் வந்தார்.

கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுள் தன்மை கொண்டவராகவும், மனிதத் தன்மை கொண்டவராகவும் இருந்தார். கடவுள் பணியைச் செய்வதில் நோக்கமாக இருந்தார். கடவுள் நம்மோடு இருப்பதை எப்போதுமே இயேசு உணர்ந்திருந்தார். இவ்வாறு கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு மனிதரோடும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டார். கடவுளின் அன்பை மனிதருக்கும் வெளிப்படுத்தினார். இத்தகைய உண்மையை இயேசு நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆகவே, நாம் நம் வாழ்வில் கடவுள் என்றும் நம்முடன் இருக்கிறார். நாம் அவரது குரலுக்குச் செவிமடுப்பது தேவை என்ற உணர்வு நம்மில் பிறக்க வேண்டும். அவரது குரல் நம் உள்ளங்களில் ஒலித்தெழவும், அவருக்கு உகந்தவற்றையே செய்திடவும் முனைவோம்.

‘‘பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தைவிட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அவரை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவு உணவு வேளையில், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பிச்செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய் இயேசு பந்தியிலிருந்து எழுந்ததும் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து சீடர்களுடைய கால்களைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ‘‘ஆண்டவரே! நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?’’ என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ‘‘நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது, பின்னரே புரிந்துகொள்வாய்’’  என்றார். பேதுரு அவரிடம், ‘‘நீர் என் காலடிகளைக் கழுவ விடமாட்டேன்’’ என்றார். இயேசு அவரைப்பார்த்து, ‘‘நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை’’ என்றார். அப்போது சீமோன் பேதுரு, அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டுமல்ல என் கைகளையும், தலையையும் கூடக் கழுவும் என்றார். இயேசு அவரிடம், குளித்துவிட்டவன் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும், அவர்  தூய்மையாகி விடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள், ஆனாலும் அனைவரும்  தூய்மையாய் இல்லை என்றார்.

தம்மைக் காட்டிக்கொடுப்பவர் எவன் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. எனவே தான், ‘‘உங்களில் அனைவரும் தூய்மையாய் இல்லை’‘ என்றார். - (யோவான் 13: 1-11)

இயேசு சீடர்களின் பாதம் கழுவிய நிகழ்வும், அன்புக் கட்டளையும் நாம் வாழ்வாக்க வேண்டிய அரிய கருவூலங்களாகும். தாழ்ச்சியின் ஆழத்தை சீடர்களின் பாதங்களைக்கழுவி செயலில் புரிய வைக்க இயேசு முயன்றாலும்கூட இதன் உள்ளார்ந்த பொருளை நாட்கள் செல்லச்செல்லத்தான் அவர்கள் புரிந்துகொள்கின்றனர். தாழ்ச்சியும், மன்னிப்பும் நிறைந்த அன்பை வாழ்வோடு இழையோடச் செய்ய வேண்டும் என்பதற்காக இயேசு விடுக்கும் சவால் இது! இதனை நம் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் தழைக்கச்செய்யும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

உண்மையான தலைவன் எப்படி இருக்க வேண்டும், அப்படியே சீடர்களும் இருக்க வேண்டும் என்ற கருத்தின் செயல் வடிவமே இந்தக்காலடிகளைக் கழுவும் நிகழ்வாகும். பாதம் கழுவுவதில் தொடங்கி தம் வாழ்வையும்

பலியாக்க இயேசு துணிந்துவிட்டார். இயேசு காட்டும்

தலைமைத்துவம் வேறுபட்டதாகும்.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: