காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : விகர்ணன்

அது நூற்றுக்கணக்கான பேர்கள் கூடியிருக்கும் சபை. அவ்வளவு பேர்களும் பலம், அறிவு, தீவிரம், வீரம், அறிவு, வயது என அனைத்திலும் பெரியவர்கள். அதுவும் தீயவர்களே நிறைந்திருக்கும் சபை; அந்தச் சபையில் அவர்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒரு நற்கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அதற்குத் தனியாக ஒரு துணிவு வேண்டும்.

அதற்கும் மேலாக, தீயோர்கள் நிறைந்து ஆபாச வெறியாட்டம் ஆடும்போது, அங்கிருந்த அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவர்கள் கூட, ஒவ்வொரு காரணத்திற்காக வாய்மூடி மௌனிகளாக இருந்தபோது; அவர்கள் அனைவரையும் விட அறிவு, ஞானம், வயது என அனைத்திலும் சிறியவனாக இருந்த ஓர் இளைஞன், அந்தச் சபையில் நடக்கும் தீயவர்களின் ஆபாச வெறியாட்டத்தைத் தடுக்க முனைகிறான் என்றால், அந்த இளைஞனுக்கு எவ்...வளவு தர்ம ஆவேசம் இருக்க வேண்டும்! அதனால்தான் அந்த இளைஞனை பகைவர்களில் ஒருவனாகக் கருதிக் கொலை செய்த மாபெரும் வீரன்கூட, தன்னைத்தானே நொந்து கொண்டு அழுதான்.

இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த இளைஞன் உப்புக் கடலில் முத்து பிறப்பதைப்போலப் பிறந்தவன்; இருண்ட வானத்தில் தோன்றும் வால் நட்சத்திரம் வருவதைப் போல வந்தவன்! அவன் கர்ணனைவிடத் தலைசிறந்தவன்; திகைக்க வேண்டாம். மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில் பாதி நாட்கள் தாண்டியும், கர்ணன் போரில் கலந்து கொள்ளவில்லை. பத்து நாட்கள் கழித்துப் பதினோராவது நாளில் இருந்துதான், அதாவது பீஷ்மர் கீழே விழுந்த பிறகு தான், கர்ணன் போரில் கலந்து கொண்டான். பீஷ்மர் ஏதோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்பதற்காகக் கர்ணன், அந்த முடிவை எடுத்தான். கர்ணனுக்கு முடி சூட்டி, அவனை அங்கதேசத்திற்கு அரசனாக்கி, அவனுடைய பெருமைக்கெல்லாம் காரணமாக இருந்தது துரியோதனனா? இல்லை பீஷ்மரா?

கர்ணன், துரியோதனனால் அடைந்த நன்மைகள் பலப்பல. இவ்வாறு கர்ணனைப் பற்றிப் பலவிதமாகப் பட்டியல் இடலாம். ஆனால், இவ்வாறு எந்தவிதமாகவும் சொல்ல முடியாதபடி, கர்ணனைப்போல அல்லாமல் துரியோதனனை இடித்துத் திருத்த முயல்வான் என்பதற்காகத்தானோ என்னவோ, அந்த இளைஞனுக்கு ‘விகர்ணன்’ எனப் பெயரிட்டார்கள். துரியோதனனின் தம்பிகளில் ஒருவன் விகர்ணன். இவன் மிகவும் நல்லவனாகவும் தர்மம் அறிந்தவனாகவும் இருந்தும், துரியோனனிடம் இவன் எதையும் பெறவில்லை; ஏச்சும் பேச்சும்தான் பெற்றான்.

 துரியோதனனும் அவன் கூடப் பிறந்தவர்களும் (விகர்ணனைத் தவிர) பீஷ்மர், துரோணர் முதலானவர்களிடமிரு ந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருந்தாலும், நல்லவற்றைக் கடைபிடிக்க வில்லை. பரிட்சையில் ‘சாய்ஸில்’ (விருப்பத்திற்கு இணங்க) விடுவதைப்போல விட்டு விட்டார்கள். ஆனால், துரியோதனனின் தம்பிகளில் ஒருவனான விகர்ணன் நல்லவற்றை மட்டுமே கடைபிடித்தான். அதை வியாசர் வெளிப்படுத்தியிருக்கும் காலம், இடம், சூழல் முதலியவை அற்புதமானவை.

கௌரவர்களும் பாண்டவர்களும் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த நேரம்; தர்மர் செல்வங்களையெல்லாம் தோற்றுத் தான் உட்பட பாண்டவர்களையும் வைத்துத் தோற்றார். அதன்பின் திரௌபதியையும் சூதாட்டத்தில் இழந்தார். வீட்டிற்கு விலக்காக இருந்த, ஒற்றை ஆடையுடன் இருந்த திரௌபதியைத் துரியோதனன் ஏவலால், துச்சாசனன் பலாத்காரமாகப் பிடித்து இழுத்து வந்து சபையில் நிறுத்தினான்.

துயரத்தின் எல்லை காணாத திரௌபதி, சபையிலிருந்த அனைவரையும் நோக்கிப் பலவிதமாகவும் தர்மங்களைச் சொல்லி, அழுது-தொழுது சோர்ந்து போனாள்.

பொல்லா வசையே புகழ்பூணாப்

புல்லன் புகல இதற்கொன்றும்

சொல்லாதிருந்த பேரவையைத்

தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள்

மல்லார் திண்டோள் மாமா ஓ

மந்தாகினியாள் மதலாய் ஓ

எல்லா நெறியும் உணர்ந்தவர்க்கு

மண்ணில் இதுவோ இயல்பென்றாள்

 ஊஹும்! திரௌபதி என்னதான் கதறினாலும் யாரும் வாய் திறக்கவில்லை. பதில் சொல்ல முடியாததற்கான காரணத்தையே பதிலாகச் சொன்னார், பீஷ்மர். அவையே வாய் மூடிக் கிடந்த அந்த நேரத்தில் விகர்ணன் எழுந்தான்; அரசர்களே! சபையில் இவ்வளவு பேர்கள் இருக்கிறீர்களே! திரௌபதியின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்! யாராவது பதில் சொல்லாவிட்டால் நம் அனைவருக்கும் நரகம்தான் கிடைக்கும்.

அல்லார் கூந்தல் விரித்த மயிலனையாள்

அரற்றுவதற்கு ஒன்றும்

சொல்லாது ஊமர் கணம்போலத்

தொல்போர் வேந்தர் சூழ்ந்திருப்ப

மல்லார் தடந்தோள் விகருணனாம்

வாய்மைக்கடவுள் வாள்வேந்தர்

பொல்லா நெறியில் அனைவீரும்

போகா வண்ணம் புகலீரோ?

(வில்லி பாரதம்)

“பீஷ்மர், திருதராஷ்டிரன் அறிவாளியான விதுரர் ஆகியோர் கூட, ஒன்றும் சொல்லவில்லையே! ஆசாரிய புருஷர்களும் அந்தண உத்தமர்களுமான துரோணர் - கிருபர் முதலானோர் கூட வாயைத் திறக்கவில்லையே! ஏன்?“எல்லாத் திசைகளில் இருந்தும் எல்லா அரசர்களும் வந்திருக்கிறீர்கள். யாராவது ஒருவராவது உங்களுக்குத் தெரிந்த தர்மத்தைச் சொல்லுங்கள்! யாருக்கும் எதற்கும் பயப்படாதீர்கள்!” என்றான். அதர்மம் நிறைந்த அந்தச் சபையில் விகர்ணனின் வாக்கு எடுபடவில்லை. அதற்காக விகர்ணன் மனம் தளர்ந்து போகவில்லை; மறுபடியும் மறுபடியும், ‘‘இங்கு நடக்கும் அக்கிரமத்தைத் தட்டிக் கேளுங்கள்!” என்று கூவினான்.

அவன் வார்த்தைகள் மட்டும் அங்கே சபையில் வெளிப்பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தனவே தவிர, அங்கிருந்தோர் யாரும் ஒரு வார்த்தை கூடப் பதில் சொல்லவில்லை. அதாவது விகர்ணன் சொன்னதை ஆமோதிக்கவும் இல்லை; மறுத்துப் பேசவும் இல்லை. அந்த அளவிற்குச் சபையில் இருந்தவர்கள், துரியோதனனிடம் பயந்து கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்ததும் விகர்ணனுக்கு ஒரு

மாதிரி ஆகி விட்டது; சற்று சலித்தான்; கை

களைப் பிசைந்துகொண்டு பெருமூச்சு விட்டான்.

“அரசர்களே! இவ்வளவு பேர்களும் பயந்து விட்டீர்களே! நீங்கள் இப்படி இருந்தால், நீங்களும் உங்களை நம்பியிருக்கும் நாடும் மக்களும் என்ன ஆவார்கள்? வலிமையுள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் என்று வாய்மூடி இருப்பதா தர்மம்?(இன்று வல்லரசு என்கின்ற பேரில் அமெரிக்கா, எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. ஐ.நா. சபை உட்பட அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் செயல்படுகிறது.

யாரும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவும் இல்லை. மாறாக அமெரிக்காவால் பலன் பெற்றவர்கள் அல்லது அமெரிக்காவின் தயவினால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எதிர்ப்பாளர்களின் குரலையும் அடக்கி, அமெரிக்காவிற்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.

 நல்லவர்களின் குரல்வளை நொறுங்கிப்போ கிறது. மகாபாரத காலத்திலேயே நடந்தது இது. இதைத்தான் வியாசர் வெளிப்படுத்துகிறார்)

விகர்ணன் அங்கே, துரியோதனன் சபையில் பயந்து வாய்மூடி இருந்தவர்களை வார்த்தைகளால் இடித்துவிட்டு, தன் உள்ளத்தில் இருந்ததைத் தெளிவாக வெளியிட்டான்.

முறையோ என்றென்று அவனி தலம்

முழுதும் உடையான் முடித்தேவி  

நிறையோடழிந்து வினவவும் நீர்

நினைவுற்றிருந்தீர் நினைவற்றோ

இறையோன் முனியும் என நினைந்தோ

இருந்தால் உறுதி எடுத்தியம்பல்

குறையோ கண்கண்டது நாளும்

குலத்துப் பிறந்தோர் கூறாரோ?

(வில்லி பாரதம்)

“அரசர்களே! நீங்கள் எல்லோரும் என் கேள்விக்குப்பதில் சொன்னாலும் சரி! பதில் சொல்லாவிட்டாலும் சரி! நான் கவலைப்படப் போவதில்லை. கௌரவர்களே! எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதைச் சொல்லத்தான் போகிறேன்.“வேட்டை, கள், சூதாட்டம், சிற்றின்பத்தில் மிகுந்த பற்று எனும் நான்கும் அரசர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) மிகவும் துன்பத்தை உண்டாக்கும். இவற்றின் மேல் ஆர்வம் கொண்ட மனிதன், தர்மத்தை விட்டு விலகிவிடுவான்.

“அது இங்கும் அப்படியே நடக்கிறது. சூதாட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட தர்மர், அதில் பற்றுவைத்த தர்மர், திரௌபதியைப் பந்தயமாக வைத்து இருக்கிறார். அதை இங்கிருப்போர் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே தவறு! “அதற்கும் மேலாக; திரௌபதி என்ன தர்மருக்கு மட்டுமா சொந்தம்? குற்றமற்றவளும் யாகத் தீயில் இருந்து தோன்றியவளுமான திரௌபதி, பாண்டவர் ஐவருக்கும் அல்லவா சொந்தம்? ஐவருக்கும் பொதுவானவளைத் தர்மர் மட்டும் தன் இஷ்டப்படி, எப்படிப் பந்தயப் பொருளாக வைக்கலாம்?

தன்னே ரில்லா நெறித் தருமன்

தனவென் றுரைக்கத் தக்கவெலாம்

முன்னே தோற்றுத் தங்களையும்

முறையே தோற்று முடிவுற்றான்

கொன்னே ருரைக்குத் தான் பிறர்க்குத்

தொண்டாய் விட்டுச் சுரிகுழல்

பின்னே தோற்க உரிமையினாற்

பெறுமோ என்று பேசீரோ?

(வில்லி பாரதம்)

“சரி! அவர்தான் வைத்துவிட்டார்;

சகோதரர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள்! அவராகவா செய்தார்? அந்த நிலைக்குத் தருமரைத் தள்ளி, அவரைத் தூண்டி விட்டவர்கள் யார்? திரௌபதியைப் பந்தயமாக வை என்று சகுனியல்லவா தூண்டினார்?

இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் காரணம் சகுனியே! தெரிந்தும் வாய்மூடி இருக்கிறீர்களே! சரி! அதையும் விட்டு விடுவோம்.

தர்மர் சூதாட்டத்தில் தன்னைத் தோற்று, அதன்பிறகே திரௌபதியை வைத்துத் தோற்று இருக்கிறார். தானே அடிமையான பிறகு, அந்தத் தர்மர் எப்படி அடுத்தவரை அடிமையாக்க முடியும்? அது செல்லுபடியாகாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆகையால், இந்தத் திரௌபதி அடிமையில்லை. சூதாட்டத்தில் அவளை வைத்துத் தர்மர் தோற்றது செல்லுபடியாகாது. திரௌபதியை அடிமையாக நினைத்து யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுவே என் கருத்து. இதைத்தான் திரௌபதியும் கேட்கிறாள். பதில் சொல்ல வேண்டியது இந்தச் சபையின் பொறுப்பு” என்று கர்ஜித்து முடித்தான், விகர்ணன்.

அத்திபூத்தாற்போல, எப்போதாவது நல்லவைகளுக்கு ஆதரவு கிடைக்கும் போலிருக்கிறது. தர்ம ஆவேசத்துடன் விகர்ணன் பேசி முடித்ததும், சபையில் ஒரு மாபெரும் மாறுதல் உருவானது. விகர்ணனைப் புகழ் வதும் சகுனியை இகழ்வதுமாகப் பெருங்கூச்சல் உண்டானது. விகர்ணன் பற்ற வைத்த தர்மம் எனும் சின்னஞ்சிறிய தீப்பொறி, பரவத் தொடங்கி விட்டதைப்போல இருந்தது. ஆனால்,

அதை ஒரு பெருவெள்ளம் வந்து அணைத்து விட்டது.

விகர்ணனால் சபையில் உண்டான மாறுதலைப் பார்த்தான் கர்ணன். உடனே அவன் கைகளைத்தூக்கி, சபையில் எழுந்த கூச்சலை அடக்கிவிட்டு விகர்ணன் பக்கம் திரும்பினான். “விகர்ணா! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! திரௌபதியின் கேள்விக்கு இங்கு யாரும் பதில் சொல்லாமல் இருந்ததில் இருந்தே, அவள் அடிமைதான் என்பதை இங்கு எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? சிறுபிள்ளைத்

தனமாக இவ்வளவு பெரிய சபையில் அடக்கமில்லாமல் பேசுகிறாய். உனக்குத் தர்மமும் தெரியாது; அறிவும் கிடையாது.

ஐவருக்கும் பொதுவான தாசியான திரௌபதி, ஒற்றை ஆடையுடன் இருந்தால் என்ன?

அல்லது ஆடையே இல்லாமல் இருந்தால்தான் என்ன? ஆச்சரியப்பட அதில் என்ன இருக்கிறது?

சிறுபிள்ளை நீ! மூடு வாயை!” என்று விகர்ணனை அடக்கிய கர்ணன், துச்சாசனன் பக்கம் திரும்பினான்.“துச்சாசனா!  பாண்டவர்களின் மேல் உள்ள ஆடைகளையும் திரௌபதியின் ஆடையையும் கொண்டு வா! போ!” என்று ஏவினான். கர்ணனின் அந்த வார்த்தைகள் விளைவித்த விபரீதம், எல்லோருக்குமே தெரியும். தன்னுடைய வாக்கு சபையில் இவ்வாறு கர்ணனால் அடித்துத் தூக்கி வீசப்பட்டதை அறிந்த விகர்ணன் மனது என்ன பாடுபட்டிருக்கும்? அவன் மனது பாடுபட்டதோ, இல்லையோ; அவனைக் கொன்ற வனின் மனம் அழுதது. ஆமாம்! விகர்ணனைக் கொன்றவன் விகர்ணனுக்காக அழுதான்.

துரோணர் தலைமையில் கௌரவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தபோது, ஜயத்ரத வதத்திற்குப் பிறகு போர்க்களத்தில் பீமன், துரியோதனனின் தம்பிகளில் ஏழு பேர்களை ஒட்டு மொத்தமாகக் கொன்றான். சத்ருஞ்சயன், சத்ருசகன், சித்ரன், சித்ராயுதன், த்ருடன், சித்ரசேனன், ‘விகர்ணன்’ என்னும் அந்த ஏழு பேர்களும் மாபெரும் வீரர்கள். அவர்களில் ஒருவனான விகர்ணனைக் கொல்ல நேர்ந்ததற்காகப் பீமன் அழுதான்.

“தம்பி! விகர்ணா! எங்கள் நன்மையில் பற்று கொண்டவன் நீ! விசேஷமாகத் தர்மரின் நன்மையில் பற்று அதிகமாகக் கொண்டவன்; தர்மவானான அப்படிப்பட்ட உன்னைக் கொன்று தரையில் தள்ளும்படியாக ஆகிவிட்டதே! சே! க்ஷத்திரிய தர்மம் எத்தனை கொடியது!” என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் பீமன். ஆஞ்சநேயரை நேருக்கு நேராகத் தரிசித்து, அவர் அருளை முழுமையாகப் பெற்ற மாபெரும் வீரனான பீமனையே அழவைத்த ஒரு கதாபாத்திரம் - விகர்ணன்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும் செய்த தீமைகளையெல்லாம் விவரித்த வியாசர், அவர்களில் நல்லவன் ஆன விகர்ணனின் தர்ம ஆவேசத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே அக்கிரமம் நடக்கும்போது, ஒரே ஒருவன்தான் அதைத் தட்டிக் கேட்டிருக்கிறான் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார், வியாசர்.

(தொடரும்)

பி.என். பரசுராமன்

Related Stories: