×

எம்மைப் பேணும் அம்மையே வருக

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனம் இல் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.

கடற்கரைப்பட்டினமாகிய காரைக்கால், வணிகர் குலம் நிறைந்து வளமுடன் விளங்கிய காலம். அங்கே தனதத்தர் என்ற ஒரு பெரிய வணிகர் வாழ்ந்து
வந்தார். அவருக்கு புனிதவதியார் என்பவர் பெண்ணாகப் பிறந்தார். இளம் பருவத்திலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த அன்பு பூண்டு அவரையே நினைந்து வாழ்ந்து வரலானார் புனிதவதியார். விளையாடும் பொழுது கூடச் சிவபெருமானைப் பற்றிய பாடல்களைப் பாடி அவர் நினைவாகவே இருந்துவந்தார்.

திருமணப் பருவத்தை அடைந்த புனிதவதியாருக்கு மணம் செய்விக்கக் கருதினர் அவர் பெற்றோர்கள். .நாகப் பட்டினத்தில் இருந்த பரம தத்தன் என்ற வணிககுல இளைஞனுக்கு அவரை மணம் முடிக்கத் தீர்மானித்தனர். திருமணமும் நடந்தேறியது. ஆனால், புனிதவதியார் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணானதால் அவளைப் பிரிந்திருக்க அவருடைய தாய் தந்தையர் விரும்பவில்லை. அதனால் தம்முடைய மருமகனைக் காரைக்காலிலேயே தங்கும்படி வேண்டினர். அவர்கள் விருப்பப்படி பரமதத்தனும் காரைக்காலிலேயே தன் வியாபரத்தைக் கவனித்துக் கொண்டு அங்கேயே தங்கி அவர்கள் சொந்தப் பிள்ளையைப்போல் வளைய வந்தான்.

திருமண வாழ்வில் புகுந்த பிறகு, புனித வதியார் சிவபெருமானிடம், ஆராத அன்புடையவராக இருந்ததோடு இல் வாழ்க்கைக்குரிய கடமைகளையும் ஒருசேரச் செய்து வந்தார். யாரேனும் சிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து   அவர்களுக்கு அமுது படைத்து, ஆடை அணிகலன்களையும் வழங்கி அவர்களுக்கு வேண்டிய பிற பண்டங்களையும் அளித்து வழிபட்டுவந்தார். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருந்தபோது ஒரு அன்பர் பரமதத்
தனிடம் இரண்டு அருமையான மாங்கனிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவற்றை வாங்கிக்கொண்ட அவன் ஓர் ஆள் மூலமாக அவற்றை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அந்த இரண்டு கனிகளையும் புனிதவதியார் அவனிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டார். அப்போது பார்த்து ஒரு சிவனடியார் பசியுடன் புனிதவதியார் வீடு வந்து சேர்ந்தார். அவர் பசியால் வாட்டமுற்றிருப்பதை அறிந்த புனிதவதியாரும் உடனே, அவர் பசியை ஆற்றவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டார். ஆனால், அப்போது அன்னம் மாத்திரம் சித்தமாக இருந்தது. மற்றவகைப் பண்டங்கள் தயார்நிலையில் இல்லை. கறியமுதும் ஆகவில்லை. இருப்பினும் அடியவர் பசியை அறிந்தவராகையால் இலையைப் போட்டு உணவு பரிமாறத் தொடங்கினார். தம் கணவர் அனுப்பிய மாம்பழம் ஒன்றை நடுநாயகமாக இலையில் வைத்தார். மிக்க சுவையாக  இருந்த மாம்பழத்தை வயிறார உண்ட அந்த அடியார் அம்மையாரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

இல் ஆளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டுவல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.நண்பகலில் வழக்கம்போல் உணவு உண்பதற்கு பரமதத்தன் கடையிலிருந்து தன் வீட்டுக்கு வந்தான்.

நீராடி விட்டு உணவு உண்ணுவதற்கு இலைமுன் உட்கார்ந்தான். இலையில் அழகாக சமைத்தவைகளைப் பரிமாறிவிட்டு எஞ்சி இருந்த ஒரு மாம்பழத்தையும் வைத்தார், புனிதவதியார். அந்தக் கனியை உண்ட கணவன் அதன் சுவையைப் பாராட்டி, ஓ! நான் அனுப்பிய மாம்பழமா? மிகவும் சுவையாக உள்ளதே! மற்றுமொன்று இருக்குமே அதையும் கொண்டு வந்து இலையில் வை’’ என்றான்.

அம்மையார் அதை எடுத்து வருவதுபோல் உள்ளே சென்றார். உள்ளே பழம் ஏது? அதைத்தான் அடியவருக்குக் கொடுத்துவிட்டாரே! “இவர் ஆசைப்பட்டுக் கேட்கிறாரே! நான் என் செய்வேன்!’’ என்று புனிதவதியாரின் உள்ளம் தத்தளித்தது. அன்பரின் துன்பம் கண்டு இறைவன் சும்மா இருப்பானா? புனிதவதியாரின் நிலை கண்டு இரங்கினான். அவனுடைய அருளால் புனிதவதியாரின் கையில் ஒரு மாம்பழக்கனி வந்திருந்தது.
“ ஆஹா! இறைவனுடைய திருவருள்தான் என்னே!’’ என்று ஆச்சரியம் பொங்க அக்கனியைத் தன் கணவருடைய இலையில் பரிமாறினார்.

அதனை பரமதத்தன் உண்டான். அப்படிப்பட்ட பழத்தின் சுவையை இதுவரை அவன் அனுபவித்ததில்லை. அதில் ஏதோ தனிச்சுவையைக் கண்டான். “முன்னால் நான் உண்ட பழத்தைப் போன்று இது இல்லையே! இது ஏதோ உயர்ந்த ராசிபோல் தெரிகிறதே! இதை யார் கொடுத்தார்கள். எங்கேயிருந்து பெற்றாய்?” என்று கேட்டான். மற்று அதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்உற்ற சுவை அமுதினும் மேற் பட உளதாயிட இது தான்முன் தரு மாங் கனி அன்று மூ உலகில் பெறற்க்கு அரிதால்பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.

தூக்கிவாரிப் போட்டது புனிதவதியாருக்கு. இறைவன் கொடுத்தான் என்று கூறுவதற்கு விரும்பவில்லை. அந்த
அற்புதம் இரகசியமாகவே இருக்கட்டும் என்பது அவர் எண்ணம். ஆனால், கணவன் கேட்ட கேள்விக்கு உண்மையை உரைப்பதுதான் கற்புள்ள மங்கையருக்கு அழகு என எண்ணித் தடுமாற்றமடைந்தார். பிறகு, ஒரு தீர்மானத்திற்கு வந்து நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து எல்லாவற்றையும் பரமதத்தனிடம் விளக்கமாகக் கூறினார்.

“இறைவன் அருளால் மாம்பழம் கிடைப்பதாவது! இது என்ன உலகில் நடக்கிற காரியமா?” என்று அவன் மயங்கினான்.“அப்படியானால் இறைவன் அருளால் மற்றொரு மாம்பழத்தைத் தருவித்து இலையில் போடு பார்க்கலாம்’’ என்று புனிதவதியாரிடம் கூறினான். அம்மையார் என்ன செய்வார்? உள்ளே சென்று இறைவனிடம் மன்றாடுவதைத்தவிர வேறு வழியில்லை. “இறைவனே! இவருடைய விருப்பத்தை இப்பொழுது நிறைவேற்றாவிட்டால், நான் சொன்னது பொய்யாகி விடுமே!’’ என்று மனம் நைந்து வேண்டினார்.

இப்போதும் இறைவன் அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி இருந்தது. அதையும் கணவர் கையில் தந்தார். கணவன் பரமதத்தன் வியப்புடன் அதனை வாங்கிக் கொண்டான். ஆனால், அது உடனே மறைந்துவிட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகவே அம்மையார் தெய்வீகம் நிரம்பியவர் என்ற உண்மையை உணர்ந்தான். “இவள் மற்ற பெண்களைப் போன்றவள் அல்லள். தொழுவதற்கு உரியவள் ஆவாள்’’ என்ற நினைப்பினால் அவளிடம் மதிப்பும் அதே சமயம் அவளோடு வாழ்வதற்குப் பயமும் உண்டாகி இன்ன செய்வதென்று அறியாது தடுமாற்றம் அடைந்தான். “இனி இவளோடு வாழ இயலாது எனத் தீர்மானித்து, அவளுடன் நெருக்கமின்றி நீங்கியே வாழலானான்.

எப்படியும் அவ்விடத்தை விட்டு நீங்க வேண்டும் என முடிவு செய்து அதற்கு என்ன வழி என ஆராய்ந்தான். அவன் உறவினர்களிடம், “இங்கே இருந்து வியாபாரம் செய்வதை விடக் கடல்கடந்து வியாபாரம் செய்தால் அதிக ஊதியம் பெறலாம், அதனால் இவ்விடத்தை விட்டு விலக எண்ணுகிறேன்’’ என்று கூறினான். அவர்களும் அவன் கூறுவது சரிதான் என்று சம்மதம் தெரிவித்தனர். அவனுக்காக ஒரு கப்பலைக் கட்டித் தந்தனர். அதில் அவன் ஏறி வேற்று நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்து, அதிகச் செல்வம் ஈட்டினான்.

மீண்டும் தாய்நாடு வர எண்ணிய அவன் காரைக்கால் திரும்பாது ஓர் கடற்கரைப் பட்டினம் அடைந்து அங்கு தன் வியாபாரத்தைத் தொடங்கி  வாழலானான். அங்கே கப்பல் வியாபாரம் செய்யும் ஒரு வணிகருடைய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தான். ஆனால், தனக்கு  முன்பே திருமணம் ஆகிவிட்டது என்பதையும், தன் மனைவி யார் என்பதையும் ஒருவருக்கும் தெரியாமலே மறைத்து வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவிக்கு ஒரு பெண் பிறந்து அவளுக்கு புனிதவதி என்ற பெயர் இட்டு அன்புடன் வளர்த்துவந்தனர், தம்பதியர்.

காரைக்காலில் இருந்த புனிதவதியார் தன் கணவரின் போக்கை உணரவில்லை. தன் இல்லத்திலிருந்து அறங்கள் பிறழாமல் வாழ்க்கை நடத்தி வந்தார். வெகுநாட்கள் சென்ற பின் பரமதத்தன் பாண்டிய நாட்டில் ஒர் நகரத்தில் வாழ்கிறான் என்ற செய்தி ஒரு உறவினருக்குத் தெரிய அதைப் புனிதவதியாருக்குத் தெரியப்படுத்தினார். தக்கவரை அனுப்பி அவன் நிலைமையை அறிந்துகொண்டு வரச் செய்தனர். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கண்டறிந்த பின் கலக்கமுற்றனர்.

“அவன் இருக்குமிடத்தில் புனிதவதியாரைக் கொண்டு விடுவதுதான் நல்லது’’ என்று எண்ணிய உறவினர்கள் புனிதவதியாரைச் சிவிகையில் அமர்த்தி ஆண்களும் பெண்களும் சூழப் பரமதத்தன் இருக்கும் ஊர் சென்றடைந்தனர். அங்கே சென்று பரமதத்தனுக்கு ஆள்மூலம் தாம் வந்த செய்தியைச் சொல்லி அனுப்பினர். அவன் தன் இரண்டாம் மனைவியோடும் குழந்தையோடும், புனிதவதியார் இருந்த இடம் நோக்கிச் சென்றான். தன் மனைவியையும் குழந்தையையும் புனிதவதியாரின் காலில் விழச் செய்து, பின் தானும் காலில் வீழ்ந்து வணங்கினான். ‘‘யான் உம்
முடைய அருளால் இங்கே இனிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த குழந்தைக்கும்  உம்முடைய பெயரையே சூட்டியிருக்கிறேன்” என்று பணிவுடன் சொன்னான்.   

தானும் அம் மனைவி யோடும் தளர் நடை மகவி னோடும்
மான் இளம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.

அப்போது புனிதவதியார் அஞ்சி ஒருபுறம் ஒதுங்க அருகில் இருந்த சுற்றத்தினர், ‘‘உன் மனைவியைப்போய் வணங்குகிறாயே! இது முறையாகுமா?’’ என்றனர். அப்போது பரமதத்தன், ‘‘இவரை மற்ற பெண்களைப்போல் மானிடப் பெண் என்று நினைக்காதீர்கள். இவர் தெய்வப் பிறவியாவார். இதனை உணர்ந்த பிறகே இவருடன் வாழ்வது அபசாரம் என எண்ணி விலகினேன். இவரிடம் நான் கொண்டிருக்கும் பக்தியினால் இக்குழந்தைக்கு இவர் பெயரையே சூட்டியுள்ளேன். இவர் தெய்வத்தன்மை பூண்டவர் என்பதனால்தான் நான் இவரை வணங்கினேன். நீங்களும் வணங்குங்கள்’’ என்றான். அதைக் கேட்ட உறவினர்கள் ஒன்றும் அறியாமல் விழித்தனர்.

ஆனால், புனிதவதியார் பரமதத்தனுடைய கருத்தை உணர்ந்து கொண்டார். “ இவர் எண்ணிய எண்ணம் அதுவானால் இந்த உடம்பை நான் தாங்குவதில் பயனில்லை. இவருக்காக அமைந்த இந்த உடம்பு இனி எனக்கு வேண்டாம். சிவபெருமானே! இனி நின் தாளினைப் போற்றும் பணியையே மேற்கொள்வேன். எனக்கு வேறு பணி ஒன்றும் வேண்டாம்.

அதனால் எனக்குப் பேய் வடிவைத் தயை செய்து அருள வேண்டும்’’ என்று இறைவனைத் துதித்து நின்றார். அவர் வேண்டியபடியே , கண்டார் விரும்பும் கனியை  முன்பு அருளிய இறைவன், இப்போதும் அவர் விரும்பியபடியே கண்டார். அஞ்சி ஒதுங்கும் பேய் வடிவினைத் தந்து அருளினார். புனிதவதியார் உடலில் இருந்த தசைகள் மறைந்தன. எலும்புருவம் பூண்ட பேயாக மாறினார். தேவர்களும் போற்றும்படியான பேய் உருவைக்கண்டு பரமதத்தனும், மற்ற உறவினர்களும் வணங்கி அஞ்சி அவரவர் இல்லம் சென்றனர்.

புதிய உடம்பைப் பெற்ற புனிதவதியார், இறைவனைப்போற்றி அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மாலை என்ற இரண்டையும் பாடினார். கயிலைமலையில் உமாதேவியாருடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிக்க திருக்கயிலாயமலை செல்ல வேண்டும் என்ற ஆசை உந்த திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

அவரைப் பார்த்தவர்கள் யாவரும் அவருடைய உருவத்தைக் கண்டு அஞ்சி, ‘‘பேய்! பேய்!’’ என்று அலறி ஓடினர்.
“அதைக் கண்ணுற்ற புனிதவதியார் மனதிற்குள் நகைத்துக் கொண்டு, “ எம்பெருமானுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு நான் எப்படி இருந்தால் என்ன?’’ என்று அவர் கயிலை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். தமிழ்நாட்டைக் கடந்து, பின் வடநாட்டையும் கடந்து கயிலைமலை பக்கம் அணுகினார். கயிலையை நெருங்கும்போது தன் காலால் நடப்பதைத் தவிர்த்து கைகளால்
நடக்கத் தொடங்கினார்.  

கயிலைமலை வரை காரைக்கால் அம்மையார் என்புருவம் படைத்தவராய் தலையினால் மலை ஏறுவதைக் கண்ட உமாதேவியார், சிவபெருமானை நோக்கி, ‘‘இதோ இந்த என்புருவம் படைத்த உடம்பு தலையாலே ஏறுகிறதே! இதற்கு நம்மிடம் உள்ள அன்புதான் என்னே!’’ என்று வியந்து கூறினாள்.
அப்போது எம்பெருமான் உமாதேவியாரிடம், ‘‘இங்கே வரும் பெண்மணி நம் அன்புக்குரிய அம்மையாவார். இந்த என்புருவத்தைத் தாம் வேண்டுமென்றே பெற்றுக் கொண்டாள்’’ என்றான். அச்சமயத்தில் காரைக்கால் அம்மையார் சிவபெருமானை அணுக, சிவபெருமானும், “அம்மா!” என்று அழைத்தருளினான்.

தனக்கு அம்மையே இல்லாதவனும், தாமே எவ்வுயிர்க்கும் அம்மையாக இருப்பவனுமான சிவபெருமான் “ அம்மா!’’ என்று அருளியதைக் கேட்ட பேயார் உடனே, “அப்பா!’’ என்று கூவியபடியே ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாது அவன் திருவடித் தாமரையில் விழுந்தார். வீழ்ந்து எழுந்த அவரை நோக்கி அப்பனும், ‘‘இப்போது உமக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டான்.

உடனே, மனம் உருகி, “இறைவனே! என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். இனி மீண்டும் இவ்வுலகில் பிறவாமல் இருக்கும்படி அருளல் வேண்டும். ஒருகால் பிறக்கும்படி நேர்ந்தால் உம்மை மறவாமல் இருக்கும் மனம் வேண்டும். எப்போதும் தங்கள் புகழையே பாடித் தங்கள் திருவடி நீழலில் உறையும்படி இருக்கத் திருவருள் புரிதல் வேண்டும்’’ என்று கூறி வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டார்.

இறைவனும் அவ்வாறே அருளி, ‘‘தென்னாட்டில் பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் நாம் ஊர்த்துவ தாண்டவம் செய்கின்றோம். அந்தத் தாண்டவத்தைக் கண்டு களித்து அங்கேயே இருந்து கொண்டு எம்மைப் பாடுவாயாக!’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

அதனைக் கேட்ட அம்மையாரும் புளகாங்கிதம் அடைந்து, இறைவன் திருவருளை எண்ணி உருகி அவனை வணங்கிப் பிறகு திருவாலங்காடு நோக்கிப்
புறப்பட்டார். தலையாலேயே நடந்து வந்து அந்த நற்பதியை அடைந்தார்.

அங்கே அண்டமுற நிமிர்ந்து ஆடும் அப்பனின் ஆடலைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார். பின், இரண்டு திருப்பதிகங்கள் பாடினார். அவருடைய ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பேய்கள் சூழ எம்பெருமான் நடனம் ஆடிய திறத்தையும், பேய்களின் திறத்தையும் அப்பாடல்களில் எடுத்துரைத்தார். காரைக்கால் அம்மையார் அந்தத் தாண்டவ மூர்த்தியின் திருவடிக்கீழ் என்றும் உறையும் பேறு பெற்றார்.

காரைக்கால் அம்மையாரின் அன்பும், திடமும் யாருக்கு வாய்க்கும்?
ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர்வயல் சூழ் திங்களூரில் அப்பூதியார் ஆம்
போத மாமுனிவர் செய்த திருத்தொண்டு புகலல் உற்றேன்.

உ.மா.பாலசுப்ரமணியன்

Tags :
× RELATED மிதுன ராசி முதலாளி