மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது? : தெளிவு பெறுஓம்

?மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது?

- ஆர்.கே.லிங்கேசன்,

மேலகிருஷ்ணன்புதூர்.

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது விதி. இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே யிருக்கும். மறுபிறவி அல்லாத வீடுபேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்நியாசிகள் மட்டுமே. ஆசை என்பதை முற்றிலும் துறந்தவர்களுக்கு மட்டுமே வீடுபேறு என்பது கிட்டும். மற்றபடி ஆசை என்ற எண்ணம் எவர் ஒருவர் இடத்தில் உள்ளதோ அவர் யாராக இருந்தாலும் மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. ஆசை என்பது இவ்வுலகில் நாம் விதைக்கின்ற விதை. அது மரமாகி கனி தரும் நேரத்தில் நாம் அதை அனுபவிப்பதற்கு மறுபிறவி எடுத்திருப்போம். இதில் ஒரு சிலர் புண்ணியம் எனும் நல்ல விதையை விதைத்து அதற்குரிய பலனை மறுபிறவியில் அடைகிறார்கள். இன்னும் சிலர் பாவம் எனும் விதையை விதைத்து அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள்.

நடைமுறை வாழ்வினில் ஒருவர் சகல சௌபாக்யங்களுடன் வாழ்வதையும் மற்றொருவர் தரித்திர நிலையில் கஷ்டப்படுவதையும் காண்கிறோமே, இவை அனைத்தும் முற்பிறவியின் பலனே. ‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே..’ என்று ஜோதிஷ சாஸ்திரமும், ஆயுர்வேத சாஸ்திரமும் ஒரே குரலில் சொல்கின்றன.

முன்ஜென்மத்தில் செய்த பாபத்தின் தண்டனையை இந்த ஜென்மத்தில் வியாதியாக அனுபவிக்கிறோம் என்பது இதன் பொருள். அவ்வாறு முன்ஜென்ம பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என்பது உண்மையாகில் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கான பலனை அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுவதால் மனிதருக்கு மறுபிறவி உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசை என்பது எவர் ஒருவரிடத்தில் உண்டோ அவருக்கு மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. இதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.

?சிலர் கை மீது வைத்து சத்தியம் செய்கிறார்கள். சிலர் தலையில் அடித்தும், இன்னும் சிலர்

கற்பூரத்தை ஏற்றி அதனை அணைத்தும்

சத்தியம் செய்கிறார்கள். எது சக்தி வாய்ந்தது?

-    வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பேசுகின்ற வார்த்தையிலேயே சத்தியம் என்பது நிறைந்திருக்க வேண்டும். வாக்கு தவறாதவர்கள், நேர்மையானவர்கள் யாரும் இதுபோன்று சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒற்றைச் சொல்லே போதுமானது. தவிர்க்க முடியாத சூழலில் சத்தியம் செய்ய நேரிடும்போது  கைமீது வைத்து சத்தியம் செய்வது என்பது நல்லது. தலையில் அடித்து சத்தியம் செய்வது என்பது மிகவும் பலம் வாய்ந்தது. இவ்வாறு தலையில் அடித்து சத்தியம் செய்யும்போது பொய் யுரைத்துவிட்டால் அது நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

இந்த இரண்டையும் விட கற்பூரத்தை ஏற்றி அதனை அணைத்து சத்தியம் செய்வது என்பது அசாத்திய பலம் பொருந்தியது. அக்னி (நெருப்பு) என்பது ஜனனம் முதல் மரணம் வரை நம்மைத் தொடர்ந்து வருகின்ற ஒன்று. வாழ்வினில் நாம்  அனைவரும் பொதுவாக செய்கின்ற சத்தியப்பிரமாணம் என்பது திருமண பந்தத்தின்போது நடக்கின்றது. அந்த திருமணமும் அக்னிசாட்சி ஆகத்தான் நடக்கிறது. அக்னியை சாட்சியாகக் கொண்டுதான் பெண்ணின் பெற்றோர் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்கள். அக்னியை சாட்சியாகக் கொண்டுதான் மணமகன் திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் அணிவித்து காலமெல்லாம் நீயும் நானும் இணைந்திருப்போமாக என்ற உறுதிமொழியைத் தருகிறான்.

நீர்தான் இந்த உலகத்திற்கு ஆதாரம் என்பது நாம் அறிந்ததே. அந்த நீரைத் தருவதும் இந்த அக்னிதான் என்பதை ‘அக்னேர் ஆப:’ என்று வேதம் அடித்துச் சொல்கிறது. ஆக இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் அடிப்படை சாட்சியாக இருப்பது என்பது நெருப்பு. அந்த நெருப்பினை அணைத்து சத்தியம் செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தவிர்க்க இயலாது

சூழலில் அதாவது வேறு வழியே இல்லை என்ற நிலை வரும்போது மட்டுமே கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்ய வேண்டும். சாதாரண விஷயங்களுக்கு இந்த மாபெரும் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. விளையாட்டிற்காக இவ்வாறு செய்தால் அது விபரீதமான பலனைத்

தந்துவிடும்.

?அத்தை மகன், மாமன் மகள் ஆகியோருக்கு இடையே திருமணம் செய்து வைப்பது நமது சமுதாயத்தில் வழக்கத்தில் இருந்துவருகிறது. தற்போது மருத்துவ ரீதியாக சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு வரும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தங்களின் கருத்து?

- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

இந்த கருத்தினை அடியேன் ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த பந்தத்தில் மணம் முடிக்காமல் உறவிற்கு வெளியே அசலில் பெண் பார்த்து சம்பந்தம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவதில்லையா? பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவது என்பது அவரவர் செய்யும் பாவ புண்ணியத்தை பொறுத்து அமைகிறது. நமது கர்மவினையே குழந்தை வடிவில் வந்து சேர்கிறது. ‘மாதா, பிதா மக்களுக்கு சத்ரு’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது ஒரு குழந்தை பாதிப்படைந்தால் அதற்கு காரணம் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்-தந்தை செய்த வினையே காரணம் என்பதை நம் முன்னோர்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

அதோடு மாமன் மகள் அல்லது மகன் அத்தை மகனையோ அல்லது மகளையோ திருமணம் செய்வது என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிற ஒரு பாரம்பரிய முறை. இத்தனை காலமாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் நேரவில்லை. தற்காலத்தில் மட்டும் இவ்வாறு நடக்கிறது, அதாவது சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவதன் விகிதம் அதிகரித்து வருகிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சொந்தத்தில் மட்டுமல்ல, அசலில் திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் கூட பாதிப்படைவதைக் காண முடிகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்பது நாம் உண்ணும் உணவும் நமது சமுதாய பழக்க வழக்கங்களும்தான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. சொந்தத்தில் திருமணம் செய்வதை சாஸ்திரம் எதிர்க்கவில்லை என்பதால் உறவுமுறையில் விவாகம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்பதே அடியேனின் எண்ணமும் ஆகும். ?கண்திருஷ்டி என்பதற்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கத்தான் வேண்டுமா? அடுத்தவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருக்கும்போது பாதிப்பு என்பது வராதுதானே..?

-  அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். “இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே..” என்று

அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங் களில் ஒன்று.

சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதி வாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.

இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல், எலுமிச்சம்பழம் நறுக்கிப் பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஹாரத்தி சுற்றுதல், உப்பு சுற்றி போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு என்று தனியாக ஒரு சக்தி உண்டு. இதனை எதிர்கொள்ள இறைஅனுக்ரஹம் என்பது அவசியம். பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீசுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும்.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

Related Stories: