×

பாரதமெங்கும் ராமாயண தலங்கள்

பாரததேச மக்கள் எல்லோருடைய மனத்தையும் முழுவதும் கவர்ந்து நிலை பெற்றிருக்கும் தேச காவியங்களில் முதலிடம் பெறுவது ராமாயணம்.‘மனிதன் தன் நடத்தையால் தெய்வீகத் தன்மையை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள்’’ என்பதை உலகோர்க்கு உணர்த்துவதே ராமாயணம்.மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் ராமன், தியாகச் செம்மலாக எல்லா உயிர்க்கும் ரக்கம் காட்டியவனாக வாழ்ந்திருக்கிறான். அவனுக்கு யாரும்  நிகரில்லை. இதைத்தான் சற்குரு தியாகய்யர், ‘‘ராம நீ சமானம் எவரு’’ என்று பாடிவைத்தார்.

கைகேயி ராமனை அழைத்தாள், ‘‘உனக்கு ஒரு கட்டளை அரசர் பிறப்பித்திருக்கிறார். உன் தம்பி பரதன் ஆழிசூழ் உலகம் எல்லாம் ஆளவேண்டும். நீ தாழிரும் சடைகள் தங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு, பூழி வெம் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழ் இரண்டாண்டில் திரும்பி வர வேண்டும்’’ என்றாள். இதைக் கேட்டு ராமன் அன்றலர்ந்த செந்தாமரை போல் முகம் ஒளிர மகிழ்ச்சியோடு ‘அன்னையே இது அரசன் உத்தரவு இல்லையென்றாலும் நீங்கள் சொன்னால் மறுப்பேனா? என் தம்பி பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வம்.

கானகத்துக்கு இப்போதே புறப்பட்டு விட்டேன். விடை கொடுங்கள் தாயே!’’ இலக்குவனும், சீதையும் உடன் வர பாரதநாடெங்கும் யாத்திரை மேற்கொண்டார்.அவர் பாதம் பதித்த இடங்களெல்லாம் புண்ணியத்தலங்களாயின. முக்கிய இடங் களில் எல்லாம் ராமனுக்கு கோயில்கள் உருவாயின. நாட்டு மக்கள் அனைவர் மனத்திலும் இடம்பிடித்தான். பாரதம் எங்கும் அவர் பொற்பாதம் பதித்த புனித இடங்களைப் பற்றி அறிவோம் வாருங்கள்!ராம பிரான் பிறந்த இடமான அயோத்தியில் இந்துக்களால் புனிதத் தலமாக  வழிபடப்படுகிறது. ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்ணன், சீதை, தசரதர், வசிஷ்டர், வால்மீகி ஆகியோருடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் அயோத்தியில் இருக்கின்றன.

ராமபிரானுடைய திருச்சந்நிதி சரயு நதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அதை ‘கோலாபுரம் ஸ்ரீதர்ப்ப சயன மந்திரம்’ என்று அழைக்கிறார்கள். மூன்று மைல் அளவிற்குச் சரயு  நதி  இங்கே விரிந்து ஓடுகிறது.ராமரும் தசரதரும் நீராடிய நீர்த்துறையை ‘ராஜ்காட்’ என்று அழைக்கிறார்கள். சரயுநதிக்கரையில் ‘ராமர் ஸ்நான கட்டம்’  என்று ஓரிடம் உள்ளது. அவர் தனது அவதார முடிவில் இங்குதான் நீரில் மூழ்கி நின்றதாகவும் விண்ணிலிருந்து தெய்வீக விமானம் வந்து அவரை ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து சரயு படித்துறையிலே லட்சுமண கட்டம்,
அனுமன் கட்டம் உள்ளன.

இங்கே பிர்லா அமைத்துள்ள ராமர் கோயிலில் ஐம்பது கிலோ தங்கத்தில் ராமர், சீதை ஆகியோர் திருவுருவங்கள் கருவறையில் காட்சியளிக்கின்றன. இங்கு தினந்தோறும் பூஜையும் நாம சங்கீர்த்தனமும் நடந்த வண்ணமிருக்கிறது.ராமர் வாழ்ந்த அரண்மனை, பட்டாபிஷேகம் நடந்த தர்பார் மண்டபம் ஆகியவை இன்றும் உள்ளன. சீதையின் அந்தப்புரம், கைகேயி மற்றுமுள்ள ராஜமாதர்களின் அந்தப்புரங்கள், ராமர் தனது சகோதரர்களுடன் விளையாடிய இடங்கள் இன்றும் உள்ளன. அரண்மனைக்குள் தென்னிந்திய வைணவப் பெருமக்கள் எழுப்பிய ராமர் கோயில் உண்டு. நாட்டுக்கோட்டை நகரத்தார் மடத்தில் ராமர், லட்சுமணர், சீதைக்கு கோயில் அமைந்துள்ளது. தென்னிந்திய முறைப்படி ராமநவமியை ஒட்டி மேளதாளங்களோடு பெருந்திருவிழா நடைபெறுகிறது.

பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் வழியில் ரிஷிகேசம் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு லட்சுமனனுக்கும் பரதனுக்கும் தனித்தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.ராம ராவண யுத்தம் முடிந்த பின் ராமர் இங்கே வந்து கங்கையில் நீராடி, இங்கிருந்து 40 கல் தொலைவில் உள்ள தேவப் பிரயாகையில் தவம் இருந்ததாகக் கூறுகிறார்கள். அங்கே ராமருக்குத் தனிக்கோயில் உள்ளது. ரிஷிகேசத்துக்கு அருகில் உள்ள முனிக் கேத்தி என்னுமிடத்தில் சத்ருக்ணருக்குத் தனிக்கோயில் உள்ளது.

ரிஷிகேசத்தில் உள்ள ராமகுண்டம், லட்சுமண குண்டம் என்ற நீராடு துறைகள்  புனிதமாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள லட்சுமணர் திருக்கோயிலில், அவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதற்கு அடையாளமாக, அவருடைய திரு முடிக்கு மேலே பத்து தலை நாகம் படம் எடுத்த கோலத்தில் திருவுருவம் உள்ளது.அடுத்து, சித்ரகூடம் என்பது ராமர் வனவாச காலத்தில் முதல் ஆண்டைக் கழித்த இடம். தன் அருகே உள்ள மந்தாகினி  நதிக் கரையில் ராமர் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த இடம் உள்ளது. இங்கு ராமருக்கும் சீதைக்கும் தனிக்கோயில் உள்ளது. இங்கு தான் பரதன் வந்து கிராமனிடம் உள்ள பாதுகையைக் கேட்டுப் பெற்றாராம். இந்த இடத்தைத்தான் குகனும், லட்சுமணரும் ராமனுக்காகக் காவல் காத்த  இடம் என்கிறார்கள். மேலும் இந்த நதிக்கரையில் ராமர் கட்டம், துளசிதாசர் கட்டம் என்ற பல புனித நீராடு துறைகள் இங்கு உள்ளன.
கயா புகழ் பெற்ற புனிதத்தலம்.

முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்ய ஏராளமான இந்துக்கள் இங்கே  வருகிறார்கள். இங்குள்ள மகாவிஷ்ணுவின் ஆலயத்தில் உள்ள விஷ்ணு பாதத்தை வணங்குகிறார்கள். இங்குள்ள பல்குனி நதியில் புனித நீராடி ராமபிரான், தந்தை தசரதருக்கு நீர்க்கடன் செய்ததாகக் கூறுகிறார்கள்.
புனித கோதாவரி நதிக்கரையில் நாசிக் - பஞ்சவடி என்னும் திருத்தலம் உள்ளது. இங்குதான் சூர்ப்பனகையில் மூக்கு அறுபட்டு, நாசிகை என்பது நாசிக் என்றாயிற்றாம். ராவணன் சீதாதேவியை கவர்ந்து சென்ற இடமும் இது தான் தற்போது இந்த இடம் ‘தபோவனம்’ என அழைக்கப்படுகிறது. கோதாவரி நதிக்கரையில் புனித நீராடுதுறைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமாகக் கருதப்படுவது  ‘ராம குண்டம்’ என்பது. இங்கு சிராத்தம் செய்வது மிகவும் விசேஷமானது.

இங்கே உள்ள ராமர் கோயில், முழுவதும் ஒருவகை கருங்கல்லால் வடிக்கப்பட்டவை. விக்கிரகங்கள் இருக்கின்றன. இவைகள்  கறுப்பாக இருப்பதால் ‘காலா ராமர்’ என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் அருகாமையில் ‘சீதை குகை’ ஒன்று உள்ளது. இங்கு அதிசயமாக ஐந்து ஆல
மரங்கள் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. அதனால் இத்திருத்தலத்திற்குப் ‘பஞ்சவடி’ என்ற பெயர் ஏற்பட்டது.
பஞ்சவடியில் உள்ள ராமர் கோயிலுக்கு ‘முக்திதாம்’ என்ற பெயரும் உண்டு.

இங்குள்ள ராமர் கோயில் 50 அடி அகலமும் 125-அடி உயரமும் கொண்டது. ஒரு தூண் கூட இல்லாமல் அகன்ற  அமைப்புடன் இது விளங்குகிறது. இத்திருக்கோயில் முழுவதும் சலவைக் கல்லால் கட்டப்பட்டுள்ளது.இங்கே எண்ணற்ற பக்தர்கள், அடியார்கள் பலரும் வந்து வழிபட்டிருக்கிறார்கள். இக்கோயில் பிராகாரத்தில் ராமதாசர், துளசி தாசர், துக்காராம், மீராபாய், ஸ்ரீசத்யசாய்பாபா ஆகியோரின் திரு உருவங்களைக் காணலாம். இங்குள்ள சீதையம்மன் குகைக்குள் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன.

குகைக்குள் சென்றால் உள்ளே ஒரு சிவலிங்கம், மாரீசன், சீதை, ராவணன் துறவியாக வந்த கோலம், மானைத்  தேடிச் செல்லும் ராமர், லட்சுமணர் ஆகியோரின் உருவங்களைக் காணலாம். சுவரில் ஒரு பக்கம் மான பங்கம் செய்யப்பட்ட சூர்ப்பனகை, வதம் செய்யப்பட்ட தாடகை ஆகியோரின் உருவங்களை சித்திர வடிவில் அமைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் கோதாவரியின் அக்கரையில் உள்ள ‘பஞ்சவடியில்’ உள்ளவை. மறுகரையில் ‘நாசிக்’ என்ற நகரம் அமைந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘ராமர்கோயில்’ பிரசித்தி பெற்றது. இங்குதான் ராமர் கோதாவரி நதியைக் கடந்து, சீதையை மீட்க இலங்கையை நோக்கிப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. பத்ராசலம் எனும் திருத்தலத்தின் அருகில்தான் ராமரின் பர்ணசாலை அமைந்திருந்தது. அது இன்றும் வழிபாட்டிற்கு உரியதாய் விளங்கு கிறது. இங்கு உள்ள பத்ரா சலம் ராமர் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.
கோதாவரி இது பாரத புண்ணிய பூமியின் சப்த நதிகளில் ஒன்று. இது தென்னகத்தின் மிகப் பெரிய நதி. இதன் கரையில் எத்தனை எத்தனையோ புண்ணியத் தலங்கள். அவற்றில் பெரும் பாலானவை ராமனுக்கு உகந்தவை. இந்நதிக் கரையில் அமைந்துள்ள ராமரின் ஆலயங்கள் எல்லாம் ராமாயணத் தொடர்புடையவை எண்ணற்ற ராமதாசர்கள் உலாவிய புண்ணிய தீரமீது.

கர்நாடகா மாநிலம். மைசூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கிழக்கு மேற்காகப் பரந்து கிடக்கும் மலைத்தொடர் ‘பிலிகிரி ரங்கண்ணா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு உறையும் எம் பிரானை ஸ்ரீநிவாசனாகவும், ஸ்ரீவேங்கடேசனாகவும், ஸ்ரீரங்கநாதனாகவும் வழிபடுகிறார்கள். தாயாரை
லட்சுமியாகவும், அலர்மேல் மங்கையாகவும், ஸ்ரீரங்க நாயகியாவும் தொழுகிறார்கள்.

ராமபிரான், சீதையைத் தேடிச் செல்லும் போது இம்மலைக்கு வந்து ஸ்ரீரங்க நாதரையும், தாயாரையும் தொழுது அருளாசி பெற்றுச் சென்றதாகவும் தலபுராணம் கூறுகிறது.ஹம்பி நகருக்கு அருகில் ஓடும் நதிதான் துங்கபத்ரா. ராமாயணத்தில் கூறப்படும் பம்ப்பாஸரஸ் என்ற நதிதான் இது
என்கின்றனர்.இங்குள்ள கிஷ்கிந்தை என்ற மலைப் பகுதிக்கு வந்த ராமன், விருப்பாட் கேச்வர சுவாமியைத் தொழுதார். அதன் பலனாக இங்கே அனுமன், சுக்ரீவன் ஆகிய இருவரின் நட்பும் ராமனுக்குக் கிடைத்தது. அவர்கள் துணையுடன் சீதையைக் கண்டுபிடித்துத் திரும்பப் பெற்றார் என்கிறது தலபுராணம்.

ஹம்பியின் தென்கிழக்குக் கோடியில் உள்ளது மால்யவந்த மலை. அதன் மீது இருப்பது ரகுநாதசுவாமி ஆலயம் கருவறையில் ஸ்ரீராமரும், சீதையும் அமர்ந்திருக்க சற்று ஒதுங்கி லட்சுமணர் நிற்கிறார். சற்றுத்தள்ளி கோடியில் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியும் இருக்கிறார். ராமபிரானும் லட்சுமணரும் சில நாட்கள் இம்மலையில் தங்கியிருந்தார்கள் என்று தலபுராணம் கூறுகிறது.

ஹம்பிக்கு அருகில் துங்கபத்ராவின் கரையில் உள்ளது. ஆனேகுந்தி. ராமாயண காவியத்தின் ஒரு முக்கிய கட்டத்தின் அரங்கமாக இருந்திருக்கிறது இந்தப் பகுதி வாலியும் சுக்ரீவனும் வானர சேனைகளோடு வாழ்ந்த கிஷ்கிந்தை இதுதானாம். அங்குள்ள ஒரு மலை ரிஷ்யமுக பர்வதம். அருகில் சபரி ஆசிரமம் இருக்கிறது. பம்பாசரஸ் இருக்கிறது. ஆஞ்சநேயர் இருந்த அஞ்சனகிரி இருக்கிறது. நதியைக் கடந்தால் தெற்குக் கரையில் ஹேம கூடமலை, மதங்க மகரிஷி தவம் செய்த மலை, சுக்ரீவன் மறைந்து வாழ்ந்த குகை, ராமர்சாதுர் மாஸ்ய விரத காலத்தில் தங்கியிருந்த மால்ய வந்த மலை முதலியன இருக்கின்றன. ராமனுக்கு ஆஞ்சநேயரின் துணையும், சுக்ரீவனின் நட்பும் கிடைத்த தர்மபூமி இது.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருத்தலம் சபரிமலை. ராமருக்கு சுவையான கனிகளைக் கொடுத்து மகிழ்ந்த பக்தை சபரி வாழ்ந்த இடம் இது என்று கூறுகிறார்கள். இங்கே உள்ள பம்பை நதியின் மறுகரையில் ‘ரிஷ்ய முக மலை இருக்கிறது. இங்குதான் வாலிக்கு பயந்து சுக்ரீவன் கோட்டை கட்டி மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ராமர் பிரானும் சுக்ரீவனும் சந்தித்த திருத்தலம் இதுவே இங்குள்ள ‘ராமர் பாதம்’ பக்தர்களால் வழிபடப்படுகிறது.

கேரளம் திரு சூரிலிருந்து இரிஞாலக்குடா செல்லும் பாதையில் உள்ளது. பெருவனம் இரட்டையப்பர் கோயில் ராம பிரான் ராவண வதம் முடிந்து திரும்பும் வழியில் பெருவனத்திற்கு எழுந்தருளியதாகவும், இங்கு ஒரு நாள் தங்கி சிவபூஜை செய்ததாகவும், அச்சமயம் அவர் கங்கா, யமுனா, காவேரி, நர்மதா போன்ற புண்ணிய நதிகளின் புனித நீரைத் தமது திருக்கரங்களில் வரவழைத்து அபிஷேகம் செய்ததாகவும் ‘பார்க்கவ புராணம்’ கூறுகிறது.ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா துவாரகையில் வசித்த போது ஸ்ரீராம, லட்சுமண, பரத, சத்ருக்ண விக்ரகங்களை ஆராதித்து வந்தாராம்.

அவர் சுவர்க்கம் சென்ற பின்னர் துவாரகை கடலில் மூழ்கிய போது, அந்நான்கு மூர்த்திகளும் நீரில் அடித்துக் கொண்டு போய் விட்டனவாம். வெகு காலம் கழித்து, மேற்குக் கரையில் வலை வீசிக் கொண்டிருந்த மீனவர்களுக்கு அவை கிடைத்தன. அவற்றை என்ன செய்வது என்று புரியாமல் திருப்ரையார் தலத்திற்கு ஐந்து மைல் தெற்கே ‘கைப்பமங்கலம்’ என்னும் ஊரில் இருந்த ‘வாய்க்கல் கைமள்’ என்ற சிற்றரசரிடம்  ஒப்படைத்தார்களாம். அவர் ஜோதிடர்கள், தந்திரிகள் முதலியோரின் ஆலோசனைப்படி அந்த மூர்த்திகளை வெவ்வேறு இடங் களில் பிரதிஷ்டை செய்தார். அதன்படி திருப்ரையார் எனும் தலத்தில் ராமனுக்கும். இரிஞ்ஞால குடாவில் பரதனுக்கும், திருமுழிக்குளத்தில் லட்சுமணனுக்கும், பாயம்மலில் சத்ருக்கனனுக்கும் கோயில்கள் உள்ளன.

தமிழகத்தில் ராமாயணத் தொடர்புள்ள இடங்கள்  பல உண்டு. தஞ்சை மாவட்டத்தில் கிழக்குக் கரையில் - கோடிக் கரையில்  நின்று  இலங்கையின் தூரத்தை அளவிட்டதாகக் கூறுகிறார்கள். இங்கே அடையாளமாக ராமர்பாதம் உள்ளது.அகத்திய முனிவரால் நிறுவப்பட்ட சிவலிங்கத்தை தன்னகத்தே கொண்ட அழகிய, புராதன சிவன் கோயில் பஞ்சேஷ்டி எனும் திருத்தலத்தில் உள்ளது. ராவண சம்ஹாரத்திற்காக இலங்கை செல்லும் வழியில் ராமனும் இலக்குவனும் அகத்திய முனிவரை இத்தலத்தில் தரிசித்து, ஈசன், அம்பிகை அருள்பெற்றுச் சென்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

ராமர் வாலியைச் சந்தித்ததாகக் கூறப் படும் ‘வாலி நோக்கம்’ எனும் இடம் கீழ்க்கடற்கரைச் சாலையில் ராமநாதபுரம் செல்லும் இடத்தில் உள்ளது. உட்பூர் விநாயகர் கோயிலில் ராமர் சீதையை நலமே திரும்பிப் பெற வழிபட்டதாகக் கூறுகிறார்.இங்கே ராமபிரான் சமுத்திர ராஜனின்  கர்வத்தை அடக்கத் தர்ப்பைப் புல்லை அம்பாக ஏவிய தலம் திருப்புல்லணை எனும் பிரசித்தி பெற்ற தலம். இங்கே புகழ் பெற்ற ராமர் கோயில் இருக்கிறது.ராமேஸ்வரம் தீவில் ராமபிரான் இலங்கையை நோக்கி நின்று கணிப்பு செய்த கந்தமாதன பர்வதம் உள்ளது. இங்கே ராமர் நின்றதற்கு அடையாளமாக ராமர் பாதம் உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ் கோடி செல்லும் வழியில் கோதண்ட ராமர் கோயில் இருக்கிறது. ராவணன் தம்பி விபீஷணன் நான்கு துணைவர்களுடன் வந்து ராம பிரானிடம் சரணடைந்த இடம் இதுவேயாகும். ஆண்டுதோறும் இந்த சரணாகதி நிகழ்ச்சியை எடுத்துக் காட்டும். வைபவமும் இங்கே சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. இந்த தனுஷ் கோடியில் தான் இலங்கைக்குப் பாலம் அமைக்க வேண்டும் என்று ராமர் வில்லினால் கோடிட்டுக் காட்டினாராம். தனுஷ் என்றால் வில் என்று பொருள்படும்.

எம்பெருமான் ராமன் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது துளசி வனம் எனும் பிருந்தாரண்யம் என்ற வனத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அச்சமயம் அங்குகடும் தவம் புரிந்துகொண்டிருந்தார் பிருங்கிமா முனிவர். இன்று பரங்கிமலை என்று வழங்கப் படும் மலை தான் அன்று பிருங்கி முனிவர் தவம் செய்த இடம் என்று கர்ணபரம்பரையாகக் கூறப்பட்டு வருகிறது. ராமபிரானை தம்முடன் தமது ஆசிரமத்தில் சிறிது காலமாகிலும் தங்குமாறு வற்புறுத்திக் கேட்டிட ராமனும் அவ்வாறே சில நாட்கள் தங்கியிருந்தார். இப்படி பிருங்கி முனிவர் வாழ்ந்த ‘பிருங்கி மலை’ என்பது பிற்பாடு ‘பரங்கிமலை’யானது.

அதற்கடுத்தாற் போல சோலை வனமாக இருந்த இடத்தில் ராமர் தங்கினார். அது நந்தவனம் என்ற பெயர் கொண்டது. இன்று அது நந்தம் பாக்கம் என்று மருவியுள்ளது. ரிஷிகள் யாவரும் ராமனைப் பார்த்து வாஞ்சையுடன் இக்காட்டில் தங்குக’ என்று கூறியமையால் ‘ஈக்காட்டுத் தாங்கல்’ என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள ஊர்கள் அனைத்தும் ‘ராமாபுரம்’, ‘தேவிகுப்பம்’, ‘சீதாபுரம்’ என்று பெயர் கொண்டு விளங்குகின்றன.நந்தம்பாக்கத்தில் உள்ள புராதனமான ஸ்ரீகோதண்டராம்  சுவாமி திருக்கோயிலின் தல வரலாற்றின்  ஒரு பகுதி ராமன் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாகக் கூறுகிறது. இங்கு ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த பிரம்மாண்டமான சிவலிங்கம் ஸ்ரீகோதண்டராம் சுவாமிக்கு மிக அருகிலேயே உள்ளது.

அயோத்தியா பட்டினம் என்னும் தலத்தில் ராமன் ஒருநாள் தங்கியிருந்து அத்தலத்து இறைவனை வழிபட்டார் என்கிறது இத்தலபுராணம்.ராமராதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில் ராமன் நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சி மடம் என்ற இடம் உள்ளது. இங்கே ஏகாந்த ராமர் ஆலயம் இருக்கிறது. இந்த இடத்தில் தான் ராமர், லட்சுணர், விபீஷ்ணர், அனுமன், சுக்ரீவன் ஆகியோருடன் இலங்கை செல்வது பற்றி  ஆலோசனை செய்தாராம். ராமேஸ்வரத்தில் பெருமைமிக்கது அக்னி தீர்த்தம் தான் இங்கேதான் நீர்க்கடன் செய்கிறார்கள். இங்கேதான் ராமன் நீராடி ஈசுவரனைப் பூஜித்தாராம். இந்த இடத்துக்கு  ‘அக்னி தீர்த்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சீதை தீக்குளித்தபோது, தீக்கடவுள் அவளுடைய கற்புத்தீயினால் சுடப்பட்டுவிட்டான். அக்னி தேவன் அந்த வெம்மை தீர இங்கே நீராடினான். அதனால் இது ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ராமர், ராவணவதம் செய்து திரும்பிய பிறகு, ராமேஸ்வரத்தில் லிங்க பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுவே ராம நாதரின் ஆலயத்தில் வழிபடப்படும் சிவலிங்கமாகும்.கர்நாடகத்தில் உள்ள மைசூருக்கு தென் திசையில் நஞ்சன்கூடு எனும் திருத்தலம் உள்ளது. இங்கே பிரசித்தி பெற்ற  நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கபிலநதிக் கரையில் உள்ளது.

ராமாவதாரத்திலும் இத்திருத்தலம் மேன்மைகொண்டது. ராவணனும் கும்பகர்ணனும் அரக்கர்கள் என்று ஒரு வரலாறு இருப்பினும் அவர்கள் ‘பௌலிங்க அந்தணக் குமாரர்கள்’ என்ற வரலாறும் இருந்து வருகிறது. இதனால் ராமபிரான் அவர்களை வதைத்த போது பிரம்ம ஹத்தி அவரைப் பீடித்தது. இதலிருந்து விடுபட வசிஷ்ட முனிவர் ராமனை நஞ்சன் கூடு திருத்தலம் சென்று அங்கு அருளாட்சி புரியும் நஞ்சுண்டேஸ்வரரை வழிபடுமாறு பணித்தார்.

தட்சிணகாசி என்றும் அழைக்கப்படும் இப்புண்ணிய தலத்தில் சிவபிரானை ராமபிரான் நுதித்து ராவணனை வதைத்த பிரம்மஹத்தி நீங்கப் பெற்று, பாபத்தைப் போக்கிக்கொண்டார் என்கிறது தல வரலாறு.இப்படியாக ராமபிரான் 14 ஆண்டுகள் பாரதம் எங்கும் பாதம் பதித்தார். அவ்விடமெல்லாம் புனிதத் தலங்களாயின. ‘ராம நாமம்' ஒரு மந்திரச் சொல். பலருடைய வாழ்வையே இது மாற்றியிருக்கிறது.

டி.எம். இரத்தினவேல்

Tags : Ramayana ,India ,
× RELATED ராமாயணம் காட்டும் வாழ்வியல் தத்துவம்!